சிலப்பதிகாரம் : பன்முகவாசிப்பு

பதிப்பாசிரியர்: கா. அய்யப்பன்

மாற்று,

சென்னை _ 106

பக்: 208 | ரூ. 100

நவீன இலக்கியக் கோட்பாடுகள் தமிழில் தீவிரம்பெறத் தொடங்கியதன் விளைவு, மரபு இலக்கிய வகைகள் மீது மறுவாசிப்பு என்கிற மீள் உரையாடல் சாத்தியமாகியது. தமிழ் இலக்கிய மரபினைச் சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் என அடைவுபடுத்தலாம், இதில் ஒவ்வொரு இலக்கிய வகையும் அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்ப தனித்த நிலையில் தனது பங்களிப்பை அறிவார்ந்த நிலையில் முன்னெடுத்தன. இத்தகைய இலக்கிய வகைமை முன்னெடுத்தலில் 20ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற இலக்கிய உருவாக்கம் என்பது மாற்று இயங்கியலை மொழி, பொருண்மை, எடுத்துரைப்பு எனப் பன்முகப்பட்ட நிலையில் தொழிற்படுத்தியது. இதில் வாசிப்பு படிநிலை சார்ந்து பல சுவையான நிகழ்வுகள் நேர் எதிர்த்தளத்தில் நிறுத்தி விவாதிக்கப்பட்டன. இன்று அதன் பரிமாணத்திலும் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டு வாசிப்பு மனநிலை சார்ந்து சற்று மந்தமான போக்கு நிலவிவருகிறது. இந்தப் பின்புலத்தில்தான் தமிழ்மொழி ‘செம்மொழி’ என்கிற உயர்சிறப்பைத் தனதாக்கிக் கொண்டுள்ளது. இதன்மூலம் மைய மாநில அரசுகள், தமிழ் மொழிக்கு வளமான மரபைக் கொடுத்துக் கொண்டிருக்கிற பழந்தமிழ் இலக்கியங்களின் மீது மறுவாசிப்பு - மீள்வாசிப்பு என்கிற வாசிப்பு உத்திகளைக் கட்டவிழ்த்துத் தமிழ் இலக்கிய மரபைக் கவனப்படுத்தும் வேலையில் வெகுஜோராகச் செயல்பட்டு வருகிறது.

இலக்கியங்களை மறுவாசிப்பு என்கிற பொதுப்பார்வையோடு மட்டுமல்லாது. அவ்விலக்கியங்களை எதிர்கொள்ளுதல் முறையில் செயல்பட்ட புலமையாளர்களின் அறிவுச் செயல்பாட்டையும், மறுவாசிப்பு செய்தல் என்பது சமகாலத்தில் ஆரோக்கியமான நிலையில் முன்னெடுக்கப்பட்டும் வருகிறது, இதை வாசிப்பு என்கிற ஒற்றைப் படிநிலையில் அணுகாது ‘பன்முகவாசிப்பு’ எனப் பரந்துபட்ட நிலையில் பொருள்கொண்டனர். இதனைச் சாத்தியப்படுத்துவதற்கு தேர்ந்து கொண்ட இலக்கிய வகை என்பது சில ஆதாரப்புள்ளிகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என்றனர்.

இந்த வகையில் ஒரு பிரதியின் தோற்றம், அது மையப்படுத்தும் பொருள், அது வாசிக்கப்படும் முறைமை, சமூகத்தில் அப்பிரதிநிகழ்த்தும் செயல்பாடு எனப் பல ஊடாட்டங்களை அப்பிரதி கொண்டிருத்தல் வேண்டும். தமிழில் அத்தகைய பிரதிகளாகச் சங்க இலக்கியங்கள் (முழுதும்), திருக்குறள், காப்பிய மரபில் சிலப்பதிகாரம் என்ற இம்மூவகை இலக்கிய வகைகள் பெருத்த கவனிப்பையும் வரவேற்பையும் பெற்றவையாகும். இதில் சிலப்பதிகாரம் என்ற காப்பியப் பிரதி - பதிப்பு - வாசிப்பு சார்ந்து உருப்பெற்ற புலமை மரபு, அப்பிரதியைத் தமிழ் மனம் எதிர் கொண்ட வரலாறு, அறிவுமரபில் (திராவிட இயக்கம் சார்ந்து) அது நிராகரிக்கப்பட்ட போக்குகள், சமகாலத்திற்கும் பொருந்திப் போகும் அப்பிரதியின் கனம் (தரம்) எனப் பன்முகத் தளத்தில் சிலப்பதிகாரப் பிரதிகுறித்துச் சார்பு - அ சார்பு உரையாடல்களைத் தொகுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. இனி ‘சிலப்பதிகாரம்: பன்முகவாசிப்பு’ என்கிற நூலின் தன்மை குறித்து சில உரையாடல்களை விமர்சனமாக முன்வைக்கலாம்.

சிலப்பதிகாரம் என்ற பிரதியை எப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் எதிர்கொள்ளலாம் என்பதற்கான ஒரு முன்மாதிரித் திறப்பாக இந்த நூலில் உள்ள பொருண்மைகள் உதவும் என்பது நிதர்சனமாகும். அந்த வகையில் இத்தொகுப்பில் பதிப்புலகின் முன்னோடியாகத் திகழ்ந்த உ.வே. சாமிநாதையரின் முகவுரை கட்டியம் உரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் இரண்டாவதாக அமைந்த முகவுரை, ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் முகவுரையாகும். சிலப்பதிகாரம் என்ற காப்பியப் பிரதி பற்றி ந.மு.வே. வின் ஆழங்கால் பட்ட பார்வையே அப்பிரதியின் முழுமை வடிவத்திற்குச் சான்றாகும். முத்தமிழ்க் காப்பியம், நாடகத் தொடர்நிலைச் செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பலப் பல நிலையில் பொருள் புரிந்து சிலப்பதிகாரத்தை அடையாளப்படுத்தினார்.

தமிழில் காலம் குறித்த ஆராய்ச்சிகள் தீர்க்கமான முடிவுகளை இன்னுமே எட்டாத நிலையில் ஓரளவு அதனைத் தனது புலமையின் மூலம் சிரத்தையோடு சாத்தியப்படுத்தியவர் வையாபுரிப்பிள்ளை. இந்தப் பின்புலத்தில் சிலம்பு குறித்த வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு முடிவுகள் என்பவை, காப்பியப் பெயர்மாற்றம், வடிவம் சார்ந்த உரையாடல்கள், முத்தமிழ்க்காப்பியம் நிறுவுதலில் முன்வைக்கும் விவாதங்கள், சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி.8 என்ற கால ஆராய்ச்சி முடிவுகள், போன்றவற்றை முன்வைக்கிறார், மேலும் செங்குட்டுவன் மரபில் வந்தவன் என்று குறிப்பிடப்படும் இளங்கோ பற்றிய செய்திகளை மறுத்தல், சிலம்பு காப்பியக் கதை வடிவம் பெறுவதற்கு முன்னால் அதன் பழமரபுக் கதைகள் பற்றிப் பேசுதல், பண்டைய நூல்களில் சிலப்பதிகாரக் கதை அம்சங்கள் இடம்பெற்றிருப்பதற்கான சான்றுகளை நிறுவுதல், மணிமேகலை உடனான ஒப்பீட்டு முடிவுகள் என்ற பல்வேறுபட்ட சிந்தனைப் புள்ளிகளை வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுப் பார்வையானது முன்னிறுத்துகிறது.

ஒரு பிரிவினர் எழுப்பும் தர்க்க வாதங்களை மற்றொரு பிரிவினர் அத்தர்க்கத்தின் மீதான ஆதாரமற்ற நேர்மையற்ற தன்மைகளை விளக்குவதன் மூலம் எதிர்வாதங்களை ஒரு பிரதியின் மீது கட்டமைத்து அதன் பழமையை மீண்டும் நிலைநிறுத்துதல் அல்லது நியாயப்படுத்துதல் என்பது தமிழ் அறிவு மரபில் காத்திரமாக நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. இதில் சிலம்பு குறித்த கால ஆராய்ச்சியில் செயல்பட்ட வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் கருத்துகளை மறுத்து மயிலை சீனி. வேங்கடசாமி நிகழ்த்திய உரையாடல்கள் மிகவும் ஆழமானவை. அந்த வகையில் சிலம்பில் ‘பங்கார்’ என்ற சொல் இடம்பெற்றிருப்பதனைக் கொண்டு அச்சொல்லின் வேற்றான சொற்களைச் சான்றுகாட்டி சிலம்பின் காலத்தைக் கி.பி. 8 என நிறுவிய வையாபுரிப்பிள்ளை உள்ளிட்ட மூவரின் கருத்தை நயமாக மறுத்துள்ளார் மயிலையார்.

இதனைத் ‘‘திரு வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கியங்களைப் பயின்றவர்; சாசனங்களையும் சரித்திரங்களையும் பயின்றவர் அல்லர் என்பது அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து தெரிகிறது’’ என்கிறார். எதையும் வரலாற்று முறையிலும், நுண் ஆதாரங்களுடனும் அணுகும் மயிலையாரின் பார்வை சிலப்பதிகாரம் குறித்தும் வெளிப்பட்டுள்ளதை அவரின் ஆய்வுக்கட்டுரை வழி உள்வாங்கமுடிகிறது.

சிலப்பதிகாரக் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாகக் காட்டும் முனைப்பைத் தமிழ்ச் சான்றோர்கள் அதிக அளவில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதோடு, கண்ணகி கதையின் வடிவங்கள் சங்கப்பாடல்களிலும், வாய்மொழிக் கதைகளிலும் ஏராளமாக இடம் பெற்றுள்ளதையும், புலப்படுத்துகின்றனர். இதனை மு. இராகவையங்கார் அவர்களும் தன் பங்கிற்கு ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் இனத்தின் கலாசார அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட கண்ணகியும், அவள் இடம்பெற்ற சிலப்பதிகாரமும் தமிழக எல்லை கடந்த நிலையில் பிற பகுதியில் புரிந்துகொள்ளப்பட்டதும், அவ்விடங்களில் பகவதி வழிபாடு என மாறி வழிபடப்பட்டதையும் ஆழமான வரலாற்றுத் தரவுகளோடு வெளிப்படுத்துகிறது பி.எல் சாமி அவர்களின் ஆய்வுக் கட்டுரை. அந்த வகையில் கேரளத்தில் கண்ணகி வழிபாடு பகவதிவழி பாடாக உருப்பெற்றதும், அதில் பல சாதியினர் வழிபாடு நிகழ்த்துவதனையும், பரந்துபட்ட தரவுகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் பகவதி வழிபாட்டோடு உருப்பெறும் கேரளப் பண்பாட்டு விழுமியத்தைத் புரிந்து கொள்வதற்குப் பி.எல்.சாமி அவர்களின் ஆய்வுப் பார்வை துணைசெய்கிறது. அதே போன்று சிவசுப்பிரமணியம் இரகுராம் எழுதியுள்ள ‘ஈழத்தில் கண்ணகி வழிபாடு’ ஆய்வுக் கட்டுரையானது ஈழச்சூழலில் நிகழ்த்தப்பட்ட கண்ணகி வழிபாட்டை நிறுவுகிறது.

சிலப்பதிகாரம் - செய்திகள் என்ற தலைப்பின் மூலம், க. கைலாசபதியின் ஆய்வுத்திறன் அறிவார்ந்த நிலையில் வெளிப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழ் அறிவு மரபினர் சிலப்பதிகாரத்தைப் புரிந்துகொண்ட நிலையிலிருந்து மாற்றுப்பார்வையில் அணுகியிருக்கிறார். சிலப்பதிகாரம் குறித்து முன்வைக்கப்பட்ட முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், வரலாற்றுக் காப்பியம் என்ற சொல்லாடல்கள் மீது சில நேர் எதிர்த் தன்மைகளை விமர்சனப் பூர்வமாகப் பதிவுசெய்திருக்கிறார். நாடகமரபு தமிழ்ச் சூழலில் இருந்த போக்கைச் சுட்டிக் காட்டும் கைலாசபதி, அது சிலப்பதிகாரத்தில்தான் மறுமலர்ச்சி பெற்றது என்பதைத் திடமாக மறுக்கிறார். மேலும் சிலம்பினை முத்தமிழ்க்காப்பியம் என்று தூக்கி நிறுத்துவது என்பது அதனைச் சிறையில் மாட்டி வைப்பது என்றும், காத்திரமாகத் தனது வாதத்தை முன்வைக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் புலப்படும் நாடகம் பற்றிய செய்திகள், குறிப்பாக வரிப்பாடல்களின் மூலம் முன்னிறுத்தப்படும் நாடக மரபுக் கூறுகள் போன்றவற்றை இனங்காண்பதன் மூலம் சிலப்பதிகாரத்தை ஒரு நாடக மரபுக் காப்பியமாக நிறுவுகிறார் பேரா. சிவத்தம்பி, மேலும் தமிழில் வளமான நாடக மரபு இருந்தது என்றும் அதன் மறுமலர்ச்சிக்காலமாகச் சிலப்பதிகாரம் திகழ்ந்தது என்றும் அழுத்தமாகத் தனது வாதத்தைப் புலப்படுத்துகிறார். இது கைலாசபதி முன்வைத்த நாடக மரபு, முத்தமிழ்ப் பெருமை போன்றவற்றிற்கு எதிராக, மறு எதிர்வுக் கட்டுரையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு காப்பிய அமைப்பில் அதன் பின்புலங்கள் குறித்தும், அதனுள் பொதிந்திருக்கும் வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் மதிப்பீடு செய்தல் என்பது அப்பிரதியின் மீதான கனத்தை மதிப்பீடு செய்வதாகும். இதனைச் சிலப்பதிகார வாசிப்பின் வழி ராஜ்கௌதமன் மிகுந்த சிரத்தையோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிலப்பதிகாரக் காப்பிய எடுத்துரைப்பு நிலையில் அப்பிரதி செயல்படும் பன்மைத் தன்மையைப் பத்தினின் பார்வையோடு அணுகியிருக்கும் கே. பழனிவேலு அவர்களின் முயற்சி இத்தொகுப்பில் பாராட்டத்தக்கதாக உள்ளது. இது தமிழில் எண்பதுகளுக்குப் பிறகு உருவான அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம் செயல்படுத்திய முறையை மீண்டும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதைப் பத்தினின் எடுத்துரைப்பு மூலம் சிறப்பாகப் பதிவுசெய்திருக்கிறார்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள இளம் ஆய்வாளர்களான கா. அய்யப்பன், இரா. வெங்கடேசன் இருவரின் ஆய்வுப் பார்வை வரவேற்கத்தக்கதாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்நூலின் பதிப்பாசிரியரான

கா. அய்யப்பனின் ‘சிலப்பதிகார உரைகள்’ என்ற ஆய்வுப் பொருண்மை வெளிப்பட்டிருக்கும் கட்டுரை முழுமையை நோக்கிப் பயணித்துள்ளது. வீரசோழியம் பற்றியோ அதன் உரையாசிரியர் பெருந்தேவனார் பற்றியோ எந்தப் பதிவையும் சிலப்பதிகார உரையாசிரியர்கள் செய்யவில்லை என்பதனைத் தனது ஆய்வு முயற்சியின் மூலம் கண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொதுவாக எந்தவொரு இலக்கிய வரலாறு குறித்தும் ஆய்வாளர்கள் பொத்தாம் பொதுவாகச் சில கருத்துகளை முன்வைக்கின்றனர். இதுவரை முழுமையான ஒரு வரலாறு, ஒரு பதிப்புரை, ஒரு உரைமரபு வெளிவரவில்லை என்ற இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. கிடைத்திருக்கிற இலக்கிய வரலாற்றை, உரைமரபை கொண்ட நுண்ணாய்வுகள் பல செய்ய வேண்டியது இருக்கின்றன.அவை முழுமையாகச் செய்யப்படவில்லை. அதனை விடுத்து முழுமையான வரலாறு வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர்த்தல் நல்லது. ஏனெனில் நம் முன்னோடி அறிஞர்கள் செய்துவிட்டு போனதில் கால்பகுதியைக் கூட நாம் செய்யவில்லை. எனவே அவர்கள் செய்ததை மேலும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவது நல்லது. எல்லோரும் தனது ஆதங்கத்தை மட்டுமே வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். என்பது தான் உண்மை. இந்த ஆதங்கம் கா. அய்யப்பனுக்கும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இத்தொகுப்பின் வழி சிலப்பதிகாரப் பதிப்பு வெளியீட்டுக் காலம் தொடர்பான சிலமுரண்பட்ட தகவல்கள் ஆய்வாளர்கள் மத்தியில் இருந்துள்ளது தெரியவருகிறது. உ.வே.சா. வின் சிலப்பதிகாரப்பதிப்பு வெளியான காலமாக கைலாசபதி மற்றும் வெங்கடேசன் 1892 எனக் குறிப்பிடுகின்றனர், அய்யப்பன் 1894 எனக் குறிப்பிடுகின்றார். அதே போன்று தி.க. சுப்புராயச் செட்டியார் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்தது 1872 எனக் கைலாசபதி, கொடுக்க, வெங்கடேசன் தனது பட்டியலில் 1880 எனக் கொடுக்கிறார்.

இருப்பினும் வெங்கடேசனின் பதிவே மிகச்சரியான தாகும்.. இப்படி முரண்பாடாக ‘காலம்’ பற்றிய தகவல்கள் சமகாலத்திலும் தொடர்வதுதான் அவலத்திற்குரியதாக உள்ளது. ஒருபுறம் கால ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்கள் ‘தமிழ்த்துரோகி’ ஆனதும் அதன் தொன்மையைக் கட்டிக்காக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தமிழ்க் காவலர்கள் ஆனதும் இங்கே சுவாரசியமான தகவல்களாகும்.

மொத்தத்தில் இத்தொகுப்பு சிலப்பதிகாரம் எனும் பிரதியைத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தோடு அணுகுவதற்கும் கால எல்லை கடந்து வாசித்தறிவதற்கும் பெரிதும் துணை புரியும். அந்த வகையில் இத்தொகுப்பு வரவேற்கத்தக்கதாகும்.

-ச.ஸ்ரீதர்

Pin It