தமிழ்ப் படைப்புலகில் சமீபகாலங்களில் குறும் படங்கள், ஆவணப்படங்களின் வரவு அதிகரித்துள்ளது. புதிய படைப்பாளிகள், புதிய தளங்களை, அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பதிவு செய்கின்றனர். அத்தகைய ஒரு முயற்சியே அஃறிணைகள்..? என்கிற ஆவணப்படம். கண்ணியமாய் வாழப் போராடிக் கொண்டிருக்கும் இரு திருநங்கைகளின் உண்மைக்கதை என்கிற அறிமுகமே சொல்லப்போகும் விஷயம் குறித்த புரிதலை நமக்குள் ஏற்படுத்துகிறது. அஃறிணைகள்- அது இது என்ற சுட்டுப் பெயரால் மட்டுமே அறியப் படுபவை. அவற்றின் ஓலங்கள் மனித சப்தங்களுக்கு பொருளற்றவை கையிருந்தாலென்ன காலிருந்தாலென்ன ஆறறிவு இருந்தாலென்ன என்ற கவிதையோடு துவங்குகிறது படம். தஞ்சாவூரில் உள்ள கல்லூரி மாணவனான கிளாடி, பெண் உணர்வுகள் தன்னுள் மேலோங்குவதை உணர்ந்தும், அதை வெளிப்படுத்த முடியாமல் திண்டாடுகிறான். பள்ளித் தோழியிடம் பகிர்வதும், திருநங்கை ஒருவரிடம் பேசிப் பார்ப்பதும் என உணர்வுகளின் வழி செயல்படும் போது நான் வித்யா என்கிற திருநங்கை ஒருவரின் புத்தகம் கிடைக்கிறது. அவரைத் தொடர்பு கொள்ளும்போது, அவர் தெளிவாக சிந்தித்துப் பின் முடிவெடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளாததால் சென்னையில் மனோதத்துவ நிபுணர் ஒருவரை சந்திக்கிறான். தன்னுடைய சந்தேகங்களை விவாதித்துத் தெளிவடைகிறான். பின் பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்கிறான். தமிழக அரசின் அறிவிப்பின் வாயிலாக அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து திருநங்கையாக மாறும் கிளாடி, திருநங்கை என்று முறையாகப் பதிவு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் படிப்பை மேற்கொள்கிறார். இன்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கௌரவமாகப் பணிபுரிகிறார். மேற்சொன்ன காட்சிகளுக்கு நடுவே இன்னொரு திருநங்கையான லிவிங்ஸ்மைல் வித்யா தனது அனுபவங்களை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளுமாறு காட்சியமைக்கப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரியான அவர் பிச்சை எடுத்துச் சேர்த்த பணத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டு, அதன்பின் கௌரவமான பணியைத் தேடியலைந்து, தற்சமயம் திரைப்படத்துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிவது வரை சொல்லப்பட்டுள்ளது.

எந்த ஒரு கற்பனை சம்பவத்தையும் இணைக்காமல், முழுக்க முழுக்க இரு திருநங்கைகளின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அவர்களின் வார்த்தைகள் மூலமாகவும், சித்தரிப்புக் காட்சிகளின் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் இளங்கோவன். 29 நிமிடங்களில் மிகச் சுருக்கமாக ஆனால் தெளிவாக, ஆழமாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. கிளாடியின் கற்பனையில் பெண் உருவம் கொண்டு மகிழ்ச்சியாக நடனமாடுவதும், திருநங்கையாக மாறுவது கடினமானது என்று தெரியும் பொழுது சோகமான பாவனையோடு ஊஞ்சலாடுவதும் அருமையான பதிவு. புறக்கணிப்புக்கு ஆளாகும் வித்யாவின் மனநிலையை, பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் வரிகளைக் கொண்டு வெளிப்படுத்தியது பொருத்தமாக இருந்தது. திருநங்கைகள் குறித்த பதிவு எனும் பொழுது சற்றே சறுக்கினாலும் அது ஆபாசமானதாகவோ, முகம் சுளிக்க வைக்கும் விவரங்களைக் கொண்டதாகவோ,பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதாகவோ அமைந்து விடும் ஆபத்து உள்ளது. எந்தவிதமான சறுக்கலும் இல்லாமல் மிகத் தெளிவாக, அறிவியல் ரீதியாக திருநங்கைகளின் பிரச்சனைகள் அணுகப்பட்டுள்ளது படத்தின் சிறப்பம்சமாகும். டாக்டர் ஷாலினி அவர்கள் ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்று நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது கிரேக்க வரலாற்றிலிருந்து துவங்கி திருநங்கைகளின் இருப்பு எவ்வாறு சமூகத்தில் உள்ளது என்பதைக் கூறி, மரபணு மாற்றத்தினால் ஏற்படக்கூடிய மாற்றங்களே திருநங்கைகளை உருவாக்குகிறது என்றும், தனிமனிதரின் விகார எண்ணங்களால் அல்ல என்றும் தெளிவுபடக் கூறுகிறார்.

வித்யா தனது வேலைக்கான நேர்முகத்தேர்வில் கூறும் போது பெண்கள் சென்ற நூற்றாண்டு வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை ஆனால், இப்பொழுது எல்லாத் துறைகளிலும் சாதிக்கிறார்கள். அது போல் எங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்கள். நாங்கள் சாதித்துக் காட்டுகிறோம் என்ற வாசகங்கள் திருநங்கைகள் அனைவரின் சார்பாக சொன்னதாகவே தோன்றியது. அதே போல் நான் வித்யா என்கிற வித்யாவின் சுயசரிதை நூல், குறிப்பிட்ட ஆண்டு வெளியான நூல்களிலேயே அதிகமாக விற்பனையான நூல் என்கிற செய்தி, சமூகத்தில் திருநங்கைகள் குறித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. அதை நெறிப்படுத்தும் விதமாக அஃறிணைகள்..? அமைந்துள்ளது என்றால் மிகை- யில்லை. திருநங்கையாக மாறும் வரை ஆணாக இருந்து படித்த சான்றிதழ்கள், திருநங்கையாக மாறிய பின் பயன்படுவதில்லை.

ஆண் பெயரில் உள்ள சான்றிதழுக்கு உரியவர் இன்று திருநங்கையாக உள்ளவர்தான் என்பதை அடையாளம் கூற எந்தவிதமான ஏற்பாடும் இல்லை, அதனால் ஒரு சிம்கார்டு வாங்குவதற்கு கூட அடையாள அட்டை இல்லாத நிலைதான் திருநங்கைகளுக்கு உள்ளது என்று வித்யா கூறும் பொழுது, நமது சமூக அமைப்பில் திருநங்கைகளின் இருப்பு எவ்வளவு கொடூரமாக மறுக்கப்படுகிறது என்கிற யதார்த்தத்தின் மீதான கோபம் நம்மனதில் ஏற்படுகிறது. படம் முடியும் பொழுது நமக்குத் திருநங்கைகள் குறித்த பரிதாப உணர்வு மட்டும் மேலோங்காமல், அவர்களுடைய நடைமுறைப் பிரச்சனைகளான அடையாளச்சிக்கல், தங்குமிடம், கௌரவமான வேலை போன்றவை நம்மை ஆக்கிரமிக்கின்றன. நமது வாழ்வில் யாரேனும் திருநங்கை ஒருவரைக் கடந்து செல்லும் பொழுது, நம்மனதில் நிச்சயம் இந்த நடைமுறைப் பிரச்சனைகள் தோன்றும். அதுவே இப்படத்தின் வெற்றியைச் சொல்லும். Ôசில சமயங்களில் உனக்குத் தெரிவதில்லை சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை, சில சமயங்களில் நீ உணர்வதில்லை பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை, தெரிந்தும், உணர்ந்தும் கடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தபடி.., தொடர்ந்து மிதிபட்டே வருகிறேன் நானும் இருண்ட என் எதிர்காலமும்Õ என்கிற வித்யாவின் கவிதை மட்டும் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

Pin It