கடந்த 05.10.2012 அன்று, முதல்வர் செயலலிதாவுக்கு வாழ்த்து மற்றும் வரவேற்பு தெரிவித்து தலைநகர் சென்னையெங்கும் பெரிய அளவிலான பதாகைகளை அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் அமைத்திருந்தனர்.

சற்றொப்ப 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஹூண்டாய், நோக்கியா, ஹர்ஷா குரூப், செயின்ட் கோபைன், டி.வி.எஸ். உள்ளிட்ட 12 பன்னாட்டு மற்றும் பெரு முதலாளிய நிறுவனங்கள், தமிழகத்தில் மேலும் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்காக, செயலலிதா அரசுடன் “புரிந்துணர்வு” ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா, கிண்டியில் இயங்கும் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டதற்குத்தான் இந்த வரவேற்பு!

“தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாள் 12 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது இதுவே முதல் முறையாகும்” என பெருமையுடன் அறிவித்தார் முதல்வர் செயலலிதா.

தற்போது, முதலீடு செய்துள்ள இந்த பன்னாட்டு நிறுவனங்களால், சற்றொப்ப 1 லட்சத்து 855 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது.
 
ஏற்கெனவே கடந்த 14.05.2012 அன்று, இதே போன்று 5 பன்னாட்டு மற்றும் வடநாட்டுப் பெருநிறுவனங்களுடன் சற்றொப்ப 5700 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 9530 பேருக்கு வேலை வாய்ப்புக்கு கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்தது. 5700 கோடி முதலீட்டில், 9530 பேருக்கு வேலை வாய்ப்பாம்!
 
பல்லாயிரம் கோடிகள் முதலீட்டுடன், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைக்கும் இப்பன்னாட்டு மற்றும் வடநாட்டு நிறுவனங்கள், சில ஆயிரம் பேர்களுக்கு வழங்கும் வேலை வாய்ப்பை ஏதோ பெரும் பேராகவும், பாக்கியமாகவம் கூறிவதை கடந்த தி.மு.க. ஆட்சியும், தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்நிறுவனங்கள் அமைக்கும் தொழிற்சாலைகளுக்காக கொள்முதல் செய்யப்படும் வேளாண் நிலங்கள், அவை உறிஞ்சும் நிலத்தடி நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்தாலும் அதை நாம் திரும்பப் பெறமுடியாது.

இவை ஒருபுறமிருக்க, இந்நிறுவனங்கள் வழங்கும் சில ஆயிரம் பேருக்கான வேலைகள் கூட, தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை என்பதல்லவா நடைமுறை உண்மை. குறைந்த கூலிக்கு எத்தனை நேரம் வேண்டுமானாலும் உழைக்கத் தயாராக உள்ள வடநாட்டவர்களுக்கும், பிற இனத்தாருக்கும் தான் இவ்வேலைகள் தரப்படுகின்றனவே ஒழிய, சொந்த மண்ணில் வாழும் தமிழர்களுக்கு அல்ல.

உற்றார் உறவினர்களோடு தமிழகதில் வாழும் தமிழர்கள், குடும்ப நிகழ்வுகளுக்கும், பண்டிகைகளுக்கும் அடிக்கடி விடுப்பு எடுக்கின்றனராம். ஆனால், அயல் இனத்தாரோ தொழிற்சாலைகள் அமைத்துக் கொடுக்கும் சிறுகூடாரங்களில் தங்கி அங்கேயே உழைத்துக் கிடக்கக் காத்திருக்கின்றனராம். எனவே, நாங்கள் அதிகமாக அயல் இனத்தாரையே வேலைக்கு அமர்த்துகிறோம் என வெளிப்படையாகக் கூறுகின்றனர், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்தும் தரகர்கள்.

இதன் காரணமாகத்தான், பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் பீகாரிகள் உள்ளிட்ட வடநாட்டவர்கள் அதிகமாகக் குடியேறுகின்றனர். மண்ணின் மக்களோ வேலை மறுக்கப்பட்டு துன்பத்தில் உழல்கின்றனர்.

மேலும், அந்தந்த பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளாகவும், மேல்நிலை அதிகாரிகளாகவும், அயல்நாட்டவர்களும், மலையாளிகளும் தான் நியமிக்கப்படுகின்றனர். சென்னையில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளாக உள்ள தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களில், தொழிற்சங்கங்கள் கூட அமைக்க முடியாது. இன்றைக்கும் திருபெரும்புதூர் ஹூண்டாய் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அங்குள்ளத் தொழிலாளர்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. ஒப்பந்த ஊழியர்கள் என்ற பெயரில், ஊழியர்களை நிரந்தரமாக்காமல் உழைப்பைச் சுரண்டிவிட்டுத் தூக்கியெறிவது, எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் நடக்கலாம் என்ற பணிப் பாதுகாப்பற்ற அச்ச நிலையிலேயே தொழிலாளர்கள வைத்திருப்பது என இப்பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்குகள் சொல்லி மாளாது.

இந்த இலட்சணத்தில் செயல்படுகின்ற இப்பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசுகள் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் மிக முக்கியமானக் கூறாக தடையில்லா மின்சாரம் என்ற அம்சம் எப்போதும் இடம்பெற்று வருகின்றது.

தற்போது தமிழகத்தில் நிலவிவரும் வரலாறு காணாத மின்வெட்டு, தமிழகத்தின் சிறுதொழில்களை அழிவின்விளிம்பில் நிறுத்தியுள்ளது. திருப்பூர் சிறுதொழில் முனைவோரும், தொழிலாளர்களும் மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, “தீபாவளி”யை, கருப்பு தீபாவளியாக அறிவித்து, கருப்புக் கொடியுடன் இலட்சம் பேர் பேரணி நடத்த அழைப்புவிடுத்துள்ளனர். இவ்வாறு, சிறுதொழில் முனைவோரும், பொது மக்களும் மின்வெட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல், மின்வாரிய அலுவலகம் முற்றுகை என போராட்டம் நடத்தாத நாட்களே இல்லை எனலாம்.

இந்த இக்கட்டான நிலையிலும் கூட, பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதே நாம் கவனிக்க வேண்டியக் கூறாகும். கடந்த தி.மு.க. ஆட்சியானாலும், தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியானாலும் இருவரும் இதில் கருத்து ஒற்றுமையுடன் உள்ளனர் என்பதையும் ஆட்சியாளர்கள் இதை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டும்.

கடந்த 10.05.2012 அன்று, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது குறித்து, தமிழக சட்டப்பேரவையில் கேள்விகள் எழுந்த போது, பதிலளித்த, மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், “ரூபாய் 250 கோடி முதலீட்டுடன் யார் வந்தாலும் அவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவோம்” என பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை ஞாயப்படுத்திப் பேசினார்.

இந்நிலையில், மக்கள் செய்தி மையம் என்ற இணையதளம், கடந்த 2009ஆம் ஆண்டுவரை எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகின்றன என்ற பட்டியலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழிப்பெற்று 03.10.2012 அன்று தமது இணைய தளத்தில் வெளியிட்டது. (பட்டியல் தனியே வெளியிடப்பட்டுள்ளதை காண்க).

கடந்த திமுக ஆட்சியில், 2010 டிசம்பர் வரை திருபெரும்புதூர் பகுதியில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு, 260 மெகாவாட் மின்சாரமும், தமிழகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளையின் யோகா மையம் உள்ளிட்ட பல “தொழிற்சாலை”களுக்கு மின்வெட்டு இல்லாமல் 24 மணி நேரமும் சுமார் 320 மெகாவாட் மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்விணையம் தெரிவித்துள்ளது.

இது தவிர இப்பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கு டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டீசல் ஜெனரேட்டர் செயல்படுத்த, ஆயில் மற்றும் டீசல் ஆகியவைகளுக்கு வாட் வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத் தமிழ்நாடே மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கத் துப்பில்லாத திராவிட ஆட்சியாளர்கள், தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கூட, பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் கங்காணி வேலை பார்க்கும் இவ்வரசுகளை யார் தட்டிக் கேட்பது? நாம் தான் தட்டிக் கேட்க வேண்டும்.

Pin It