உண்மை ஒன்று சொல்வேன்- 14

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இணையத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறேன். 2009ம் ஆண்டு சிறந்த வலைப் பதிவருக்கான தமிழ்மணம் விருதை பெற்றிருக்கிறேன். இன்று, பாடகி சின்மயினால் பிரபலமாகி இருக்கும் டிவிட்டர் சமூக வலைத் தளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இணைந்து அதிகமாக எழுதியிருக்கிறேன்.

அண்மைகாலமாக சமூக வலைத் தளங்களில் இயங்குவதில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. சமூக வலைத் தளங்களில் பெரும்பாலும் விவாதிக்கப்படும் கருத்துகள், நம்பிக்கையை விதைப்பதற்குப் பதிலாக அவநம்பிக்கையை அறுவடை செய்கின்றன!

அதே நேரத்தில், சமூக வலைத் தளங்கள் முன்னை விட, இப்போது பெரும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன. சின்மயியுடன் வாக்குவாதம் செய்கிறார்கள்; அணுஉலைக்கு எதிராக விவாதிக்கிறார்கள்; ஆனந்தவிகடனில் வெளியான பெண் போராளியின் நேர்காணலை கண்டிக்கிறார்கள்; ‘ஸ்பெண்டர்’ இருசக்கர வாகன விளம்பரத்தில் ஐயர் என சாதிப் பெயரைக் குறிப்பிட்டதற்காக குமுறுகிறார்கள்.

ஆம்! இன்றைய இளைஞர்களின் வலைத்தள வாதங்களை படித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் தெருவுக்கு வந்து போராடினால் அல்லது இன்னும் உருப்படியான சங்கதிகளை விவாதித்தால் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கை துளிரத்தான் செய்கிறது.

இன்னொரு பக்கம், முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் எந் நேரமும் இணைந்திருக்க வேண்டும் என்று துடிக்கின்றவர்களால் விலை மதிப்பு மிக்க கைப்பேசிகளின் விற்பனை சூடு பிடித்துள்ளதையும், மடிக் கணினிகள் மலை போல் குவித்து விற்கப்படுவதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

அத்துடன், சமூக வலைத் தளங்களில் பகிரப்படும் தனி மனிதர்களின் தகவல்கள் பெரு நிறுவனங்களுக்கு விற்கப்படும் மறைமுக வியாபாரம் வியப்புக்குரியது. அத்தகவல்கள் பெருநிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஒரே நாளில் (7.11.2012) டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 3,1 கோடி பதிவுகள் இடம்பெற்றன. ஒரு அரசியல் நிகழ்வு குறித்து ஒரே நாளில் இவ்வளவு அதிகமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை!!

ஃபேஸ்புக் என்கிற முகநூல் சமூக வலைத் தளத்தில் மட்டும் 6.5 கோடி இந்தியர்கள் இணைந்திருக்கிறார்கள்! இது குஜராத் மாநில மக்கள் தொகையைவிட அதிகம்!!

இத்தனைக்கும் கடந்த 2010ம் ஆண்டு வரை வெறும் 80 லட்சம் பேர் மட்டுமே முகநூலில் இணைந்திருந்தார்கள். ஒன்றரை ஆண்டில் எட்டு மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சி மகிழ்ச்சி என்று, முழு மனதுடன் சொல்வததற்கில்லை.

ஏனெனில் நம் சமூகத்தில் பொதுக் கழிப்பறையில் கண்டதையும் கிறுக்கிச் செல்லும் மனப்பான்மையே சமூக வலைத் தளங்களை பயன்படுத்தும் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. பிரபலங்களிடம் வழிவது, அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க, அநாகரீகத்தை அளந்து விடுவது, கண்டதையும் பகிர்ந்து கொள்வது, மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தை ஏறி மிதிப்பது என ஏராளமான இம்சைகள் இந்த சமூக வலைத் தளங்களில் இணைந்திருக்கின்றன. ‘ஷேரிங்’ செய்வதற்கும், ’லைக்’ பெறுவதற்குமே இங்கே பலரும் ‘கருத்து கண்ணாயிரம்’ அவதாரம் எடுக்கிறார்கள்.

வீதிக்கு வந்து போராட வேண்டிய அவசியத்தை மறந்து அறைக்குள்ளே அமர்ந்து கருத்து சொன்னாலே போராளி ஆகிவிடலாம் என்கிற புதுவியாதி இவர்களை பிடித்து ஆட்டுகின்றன.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கையில் ஆயுதம் ஏந்தி பகத் சிங் போன்றவர்கள் போராடிய காலத்தில் ஃபேஸ்புக் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேலு நாச்சியார், வீரன் வேலுதம்பி, பழசிராசா, கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஃபேஸ்புக்கில் அறிவித்து விட்டு போருக்குக் கிளம்பவில்லை.

கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உள்ளது போல், எல்லோரும் வீதிக்கு வந்து போராட முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், சமூக வலைத் தளங்களில் எழுதிய சமூகப் புரட்சி வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது நல்லதல்ல.

“6.5 கோடியில் இருந்து விரைவில் 10 கோடி பேர் என்கிற மைல்கல்லை எட்டுவோம்" என்று, ஃபேஸ்புக் இந்தியாவின் தலைவர் கிருத்திகா ரெட்டி சொல்லியிருக்கிறார். இது அவரது இலக்கை. நம்முடைய இலக்கு.. ?

Pin It