“முத்தமிழ்ச்சுடர் முனைவர் இரா. திருமுருகனார்” என்னும் தலைப்பில் அவர் பற்றிய ஒரு கருவூலத்தை, ஆவணத்தை ஒரு நூலாகத் தந்துள்ளார் ஆசிரியர் கலைமாமணி பூங்கொடி பராங்குசன்.

இரா. திருமுருகர் பெரியார் பற்றாளர்; சிறந்த பகுத்தறிவாளர். முத்தமிழையும் முறையாகக் கற்றுக் கரைகண்ட திரைக்கடலுக்கு நிகரானவர். தன் உடலைப் பொது மருத்துவமனைக்கு ஈந்தவர்.

“மொழிப்போர் மறவர், இலக்கணச்சுடர், தீந்தமிழ்க் காவலர்,” போன்ற சிறப்பு விருதுகள் அளித்துச் சிறப்பிக்கப் பெற்றார். இச்சிறப்புமிக்க இவரிடந்தான் புலவர் பூங்கொடி பராங்குசன் தமிழ் கற்றுத் தேர்ந்தவர்.

இரா. திருமுருகரைப் பற்றிய இந்நூல் அவருடைய தமிழ்ப்பணி- தமிழியக்கம்- இலக்கண, இலக்கிய, இசைத்தமிழ் துறைகளில் அவர் அளித்துள்ள அளப்பரிய பங்களிப்புகளை விளக்கமாகவே எடுத்துறைக்கிறது.

பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பா தம் வாழ்த்துறையில் “திருமுருகனார் மேற் கொண்டிருந்த தமிழ் வாழ்வை இதனினும் அழகுறப் படம் பிடிக்கும் வேறு நூல் இல்லை” என்கிறார். இந்நூலைப் படிப்பவர்கள் முற்றாக இவர் கூற்றை ஏற்பர்.

“முத்தமிழ் மூதறிஞர்” என்னும் சிறப்பு இரா.திருமுருகருக்கே நூற்றுக்கு நூறு பொருந்தும்” என்று பாட்டறிஞர் புலவர் இலக்கியன் வாழ்த்துரையில் கூறியுள்ளவை நூற்றுக்கு நூறு உண்மையாகும். முத்தமிழிலும் அத்துணைத் தேர்ச்சியும் தெளிவும் பெற்றவர். அவர்தம் நூல்களைப் படித்துணர்ந்து அந்நூல்களையும் துணையாகக் கொண்டு எழுதியுள்ளார் நூலாசிரியர்.

“என் வாழ்நாள் விருப்பங்கள்” எனத் திருமுருகர் எழுதியவற்றை இணைத்துள்ளார். வரவேற்கத் தக்க விருப்பங்கள்.

“தமிழ்கற்கும் மாணாக்கர்களுக்கு இசைத் தமிழ், நாடகத் தமிழ்களின் அடிப்படை நுட்பங்கள் கற்பிக்கப் பெறல் வேண்டும் என்பதற்காகப் பாடத்திட்டம் ஒன்றை வகுத்துப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

பல்கலைக் கழகப் பாடக்குழுவினரும் துணைவேந்தரும் இப்பாடத்திட்டத்தைப் பயன்பாட்டுக்கு கொணரல் வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பாகும்.

தாளமுள்ள வண்ணப் பாவுக்கு “வண்ணச்சரபம்” தண்டபாணி அடிகளாரும், சந்தப்பாவுக்கு வீரபத்திரரும் இலக்கணம் யாத்துள்ளனர். சிந்துப்பாவுக்குத் திருமுருகரே இலக்கண நூல் படைத்துள் ளார். இவை இசைத் தமிழ்க் கல்விக்குப் பயன் படுத்தலாம்.

உருப்படிக்கு(கீர்த்தனைக்கு) இலக்கணம் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் முத்தமிழ்ச் சுடர்.

“இசைத் தமிழ் நூல்களான, தேவாரம், திருவாசகம், நாலாயிர பணுவல்கள், திருப்புகழ் திருவருட்பா, காவடிச் சிந்து போன்றவற்றிற்கு யாப்புக் குறிப்பு, பண், தாளம், நடை முதலியவற்றுடன் மறுபதிப்புச் செய்ய வேண்டும். இசைக் குறிப்பு (notation) எழுதி முறைப்படி பாடுதற்குப் பயன் படுத்தவேண்டும்.

தொல்காப்பியமும் பின் வந்த இலக்கண நூல்களும் விரிவாகவிட்ட எழுத்து மயக்கத்தை ஆய்ந்து வெளியிட்டால் தமிழ் ஒலி மரபைக் காக்கவும், தமிழிற் கலந்துள்ள அயல் மொழிச் சொற்களை அகற்றவும் பயன்படும். இப்பணியில் ஈடு பட்டுள்ளேன். நிறைவடைந்தால் மனநிறைவடைவேன்.

பன்மொழியறிவும் இலக்கன அறிவும் அமைந்த அறிஞர்கள் அமர்ந்தாய்ந்து அகர வரிசை தொகுக்கப்படல் வேண்டும். இப்பயனுள்ள பெரும்பணியைச் செம்மொழி நிறு வனம் மேற்கொண்டு முடிப்பது மொழிக்காப்புப் பணியாகும்”

மேற்காண் விருப்பங்கள் தன் நலம் தவிர்த்து தமிழ்நலம் தழுவியுள்ளவற்றை நோக்கலாம்.

“ஒரு சீறிய கூழாங்கல் கூட பெரிய வெள்ளத்தின் விரைவை ஓரளவு தடுக்க முடியும் என்று நம்புகிறவன் நான்” என்கிறார்(பக்:71) எத்துணை மன உறுதி.

தன் பட்டறிவை அகர, ககர வரிசைகளில் ஆத்திசூடி போல் அழகுற அமைத் துள்ளார் (பக்:72) “அன்னைத் தமிழே முன்னறி மொழியாம்” ஊரார் மொழிக்கு முன் சீரார் தமிழ் படி” கால்கை பிடித்தே மேல் வர நினையேல்” “கூனிக் குழைதல் மானிக்கில்லை” (பக்: 72)

இந்நூலாசிரியர் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிந்து கொண்டு இந்நூலில் பாதியளவு எழுதிக் கொடுத்திருந்தாலே பட்டத்தை எளிதாகப் பெற்றிருக்கலாம். அத்துணை உழைப்பை நூல் முழுவதும் காண முடியும். அதனால் அணிந்துரையில் கலைமாமணி அரங்க நடராசர் “இதனை நூல் என்பதை விட திருமுருகனார் பற்றிய ஆய்வேடு என்பதே பொருந்தும்” எனப் பொருந்துமொழி புகன்றுள்ளார்.

“இயற்றமிழ்ச்சுடர்” “இசைத்தமிழ்ச்சுடர்” “இலக்கணச்சுடர் “என மூன்று தலைப்புகளும் இருநூற்று முப்பது உள்தலைப்புகளும் கொண்டு நூல் அமைந்துள்ளது. “தொகுப்புரை” இறுதியில் அமைந்து ஒவ்வொரு தலைப்பில் உள்ள செய்திகளைத் தொகுத்துரைத் திருப்பது மிகத் தேவையான ஒன்று. பயன்பாட்டு நூல் என்று நூலாசிரியர் எழுதியுள்ளதன் உண்மையை நூலைப் படிப்பவர் உணரலாம்.

தமிழுணர்வாளர் அனைவரும் வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் அமைந்துள்ளது.

நூல் கிடைக்குமிடம்:

இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம்,
“முத்தகம்”
23, அன்னை தெரசா தெரு,
இராசா நகர், புதுச்சேரி-3
பேச: 9843224827

பக்கம்: 392
விலை: ரூ. 350/-

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.