இயற்கைத்தாய்க் கோயில்முன்
எழுந்துநிமிர் கொடிமரமா?
வியக்கின்றோம் விண்தூசை
விரட்டும் ஒட் டடைக்கோலா?
மேகவண்ணம் தொட்டெழுதும்
மிடுக்கான ஓவியனோ!
வாகான தூண்டில் இதோ
வட்டநிலா தொட்டிழுக்க!
காற்றைக் கடைந்தபடி
கனிவான மின்சார
ஊற்றைக் கறந்துலகில்
ஒளிகாட்டத் துடிக்கின்றாய்!
பன்னாட்டுக் குழுமத்தில்
பணியாற்றும் தோழன்போல்
என்றைக்கும் விடுமுறையே
இல்லாமல் சுற்றுகிறாய்!
கவியெழுதும் போது அலுத்துக்
கைவிட்ட பூவுலகக்
கவிஞன்தன் எழுதுகோல்
காட்சிக்கு நீசாட்சி!
நிலமகளின் பாட்டுக்கு
நெஞ்சுருகிக் கசிந்தன்பால்
தலையாட்டிக் கொண்டு ஒற்றைக்
காலால் தவமிருக்கும்
எந்திர முனிவன்நீ!
எப்போதும் உழைப்புக்குச்
சொந்தம் கொண்டாடிச்
சோம்பலை விரட்டென்று
எல்லோர்க்கும் சொல்லுகிற
எழிலான வழிகாட்டி!
நல்லோய் காற்றாலை!
நாமணக்க வாழ்த்துகிறேன்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.