எழுத்தாளர் ஜீவகாருண்யன் தனித்துவமான கவனிப்புக்குரிய முக்கியத்துவமிக்கவர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் பிறந்து, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றுகிறவர்.

கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு என்று பன்முக வகைப் பட்ட சாதனைகளை சாதித்திருக்கிற இவர், இப்போது வெளியிட்டிருக்கிற நாலு நூல்களும் நாலு வகையைச் சேர்ந்தவை.

தமிழரின் வருடப்பிறப்பான தைத்திருநாளை போற்றிப் புகழ்ந்து உழவர் புகழ்பாடிய கவியரசு கண்ணதாசனின் 'தைப்பாவை' போலவே ப.ஜீவகாருண்யன் 'தமிழ்ப்பாவை' படைத்தளித்திருக்கிறார். ஆங்கில மோகத்தில் திசை தவறிப்போன ஒருவன், திருந்திய மனநிலையுடன் தமிழ்ப்பாவையிடம் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படிக் கெஞ்சுகிற தமிழ்க்கவிதைகள்.

முப்பத்து மூன்று கவிதைகள். ஒரே நாள் இரவில் எழுதி முடிக்கப்பட்ட இத்தனை கவிதைகளும் இலக்கணம் பிறழாத எளிய இலக்கியப் பேரழகுடன் திகழ்வது பேராச்சரியம்.

தமிழின் தொன்மையும், இளமையும், அழகும், பெருமையும் அழகான பழகுதமிழில் பாடப்பட்டிருக்கின்றன. எல்லாப் பாடல்களின் இறுதிச் சொல்லாக 'தமிழ்ப்பாவையே' என்று அமைகிறது.

"புரியாத பொருட்களையும்/ புரிந்திடவே சொல்பவள் நீ/ அறிவில் சிறந்தவள் நீ/ அழகில் இமயமும் நீ/ பரிபாடல் பத்துத்தொகை/ பாரில் அறிந்தவள் நீ/"

'வெளிச்ச விழுதுகள்' என்ற கவிதை நூல் அத்தனையும் அழகான மரபுக் கவிதைகள். பழமை என்பது தகர்த்தெறிய வேண்டிய தடைச்சுவர். மரபு என்பது பற்றித் தொடரவேண்டிய வாழ்க்கைத் தொடர்சசி.

இந்த நுண்ணிய வேறுபாட்டை துல்லியமாக அறிந்து வைத்திருக்கிற ஜீவகாருண்யன், மரபுக் கவிதையை சரியாகவே புதுமைப்படுத்தி தொடர்கிறார். 'மே தினம்' பற்றியும் ஒரு நெருப்புக் கவிதை. 'தைத் திருநாள்' பற்றியும் பொங்குகிற ஒரு கவிதை. உலக மானுடனாகவும், தமிழனாகவும், நின்று முழங்குகிற வர்க்கப் பேருணர்வுக் கவிதைகள்.

எளிய மக்களின் ஒற்றுமை எழுச்சியில் புதிய உலகம் சூரியனாக எழும் என்கிற சமுதாய அரசியல் கவிதைகள் நிரம்பிய இத்தொகுப்பு முற்றிலும் நம் காலத்துக்கு வெளிச்சம் தரக்கூடிய இலக்கிய விழுது.

'சமத்துவச் சுடர் இராமானுஜர்' என்ற நாடக இலக்கிய நூல். வைணவ மதத்துக்குள் எளிய மக்களை ஈர்ப்பதற்காக ஜாதி கடந்த பரந்துபட்ட ஜனப் பகுதிக்கு மந்திரம் கற்றுத் தந்தவர் ராமானுஜர். அவரைப் பற்றிய நாடகம்.

சமூகநீதி ஆங்காங்கே பேசப்பட்டாலும், வாசித்து முடிக்கிற போது இராமானுஜர் என்கிற வைணவப் பழத்தின் கனிவே நிற்கிறது. இது பக்தி இலக்கியமாகிவிட்டது. சாதி மறுப்பு சத்தம் குறைந்த முணுமுணுப்பாக சத்திழந்து போகிறது. பக்தி சார்ந்த பண்புகளே மேலோங்கி நின்று, நாடக நூல் மூடநம்பிக்கைக்கும், வைதீக மதமான வைணவ ஆதிக்கத்துக்கும் உதவுகிறது.

ஜீவகாருண்யன் என்கிற முற்போக்குப் படைப்பாளரிடம் யாரும் இதை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

'வளர்பிறைகள் தேய்வதில்லை' என்கிற கவித்துவமான சிறுகதைத் தொகுப்பு. தினமணியும் நெய்வேலி நிறுவனமும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை உள்ளிட்ட பல கதைகளின் அணிவகுப்பு.

பத்தொன்பது சிறுகதைகளும் சமுதாயச் சிறுமைகளையும், வாழ்க்கை முரண்களையும், பசியின் பரிதவிப்புகளையும் யதார்த்தமான எளிய மொழியில் அற்புதமாக உணர்த்துகின்றன. அதே சமயத்தில், ஆழத்தில் புதையுண்டு கிடக்கிற மனிதப் பேருணர்வு, பீறிட்டு வெளிப்படுகிற தருணங்களையும் அழகாகக் காட்சிப்படுத்துகின்றன.

உலோகத்தில் உருக்கி பொம்மைகள் வார்த்துக் கொடுக்கிற ஊமைச் செவிட்டு மனிதனின் ஏழ்மையும், தொழில் நேர்மையும் மன ஆழத்துக்குள் உணர்ச்சி வேர்களாகப் படர்கின்றன.

கண்ணாடி விற்கிற ராம்கோபாலின் பசிப் பரிதவிப்பு... வீடுவாங்கிய பின்னும் மரங்களின் நிழலுக்கு ஏங்குகிற மனிதமனம் என்று சமுதாய வாழ்வின் பல்வேறு வகைப்பட்ட தருணங்களின் நுட்பத்தையும், அவற்றுள் மனிதமனத்தின் இயங்கு நிலைகளையும் உணர்ச்சிச் சித்திரமாகக் காட்சிப்படுத்துகிற அழகான மொழிநடை. படைப்பாளியின் புரட்சிகர மனிதநேயப் பேருணர்வை சான்றுகளுடன் நிரூபணம் செய்கிற மண்வாசக் கதைகள்.

வாசித்த மனசுகளை வசியப்படுத்துகிற வசீகரத்துடன் கூடிய அறிவார்ந்த சிறுகதைகள்.

- மேலாண்மை பொன்னுச்சாமி

"வெளிச்ச விழுதுகள்" - விலை ரூ.40

தமிழ்ப்பாவை - விலை ரூ.20

ஆனந்தம் பதிப்பகம்

29, ஸ்ரீராம்நகர், வடக்குத்து.

குறிஞ்சிப்பாடி வட்டம்

கடலூர் மாவட்டம் 607 803.

 

"வளர்பிறைகள் தேய்வதில்லை" - விலை ரூ.80

மணியம் பதிப்பகம்

39, இரத்தின முதலி தெரு,

குறிஞ்சிப்பாடி - 607 302.

 

"சமத்துவச் சுடர் ராமானுஜம்" - விலை ரூ.70

அருள் புத்தக நிலையம், 12, வாணியர் வீதி,

குறிஞ்சிப்பாடி - 607 302