பிரிட்டனிடம் அடிமைப்பட்டிருந்த 52 நாடுகள் மற்றும் அடிமைப்படுத்திய பிரிட்டனுடன் சேர்த்து 53 நாடுகளின் கூட்டமைப்பே காமன் வெல்த் அமைப்பு. அடிமைபடுத்தப்பட்ட நாடுகள் என்ற ஒற்றை அடையாளத்தைக் கடந்து, இந்நாடுகள் நிலவமைப்பு, அரசியல் நிலைப்பாடு, மக்களின் வாழ்முறைகள், சமூக அமைப்புகளில் மாறுபட்டு நிற்கின்றன. புரிந்துணர்விற்காக காமன் வெல்த் அமைப்பு என்பதை அரசியல் ஏற்பாடாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

காமன்வெல்த் எழுத்தும் இப் புரிதலுக்கு உட்பட்டதே. காமன்வெல்த் விளையாட்டு - 2010 இந்தியாவில் நடைபெறுவதை ஒட்டி, சாகித்திய அகாதெமியும் காமன்வெல்த் நாடுகளுடனான இலக்கியச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. உலகில் அதிக மொழிகளில் நூல் வெளியிடும் ஒரே அரசுத் துறை நிறுவனமான சாகித்திய அகாதெமி யின் காமன்வெல்த் எழுத்தாளர்களை ஒருங் கிணைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.

அகாதெமி இலக்கிய நிகழ்வுகளை மூன் றாகப் பிரித்து வடிவமைத்திருந்தது. காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர் கள், தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்வதற் காக வாசிப்பரங்கம் ஒன்று அக்.4 முதல் அக்.13 வரை நடைபெற்றது. இவ்வரங்கில் 14 நாடுகளைச் சார்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை பகிர்ந்துக் கொண்டனர். தினம் மாலை ஐந்து மணி முதல் 7 மணிவரை இந்நிகழ்வு நடைபெற்றது. இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், குஜராத்தி, இந்தி, காஷ்மீரி, பஞ்சாபி, வங்காளம், மணிப்புரி, கன்னடம் ஆகிய 9 மொழிகளில் இருந்து படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழில் இருந்து வாசிப்பரங்கிற்கு கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அழைக்கப்பட்டிருந் தார்.

இரண்டாவது நிகழ்வாக, “காமன்வெல்த்தின் வரலாற்று மரபுரிமையும் எழுத்தும்” என்ற தலைப்பில் மூன்றுநாள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்.8 முதல் 10-ம் தேதி வரை, சாகித்திய அகாதெமி அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கு துவக்கவிழாவும் 7 அமர்வுகளை யும் கொண்டிருந்தது.

காமன்வெல்த் நாடுகளைச் சார்ந்த எழுத் தாளர்களின் புத்தகங்களும், சாகித்திய அகாதெமி யின் வெளியீடுகளும் அடங்கிய புத்தகக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த மூன்று நிகழ்வு வடிவங்களும் நுட்பமானவை. வாசிப்பரங்கில் வாசிக்கப்படுகின்ற படைப்பு களின் பின்னணியும், முகமும், வரலாறும் அறிந்து கொள்ளும் விவாதிக்கும் இடமாக கருத்தரங்கமும், அவ்வறிதலை விரிவுபடுத்தும் தளமாக புத்தகங் களும் என பங்கேற்றப் பிரதிநிதிகளின் கைபிடித்து காமன்வெல்த்தின் முகமறியச் செய்யும் ஏற்பாடாக இது இருந்திருக்க முடியும். யதார்த்தத்தில், மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் போனது திட்டமிடுதலின் போதாமையில் நழுவி ஓடிய விடுபடல்களாக இருந்தன.

கருத்தரங்கைத் துவக்கி வைத்து, சாகித்திய அகாதெமியின் தலைவரும் மேற்கு வங்கத்தின் மூத்த எழுத்தாளருமான சுனில் கங்கோபாத்யாய சில அடிப்படைக் கேள்விகளை முன் வைத்தார். சர்வதேச கருத்தரங்குகளில் காமன்வெல்த் இலக்கியம் பற்றி பேசுவோர், தமிழ், கன்னடம், மராத்தி, மைதிலி, தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்கள் பற்றி யும் இலக்கியவாதிகள் பற்றியும் பேசுவதில்லை. லண்டன் அல்லது நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எழுதும் ஆங்கில நாவல்களைப் பற்றியே பேசுகின்றனர். அந்த நாவல்களை நாம் சிறந்த வாசிப்பிற்கான நூல்களாகக் கூட பரிந்துரை செய்யமாட்டோம். ஆனால், இந்த நாவல்களே நம் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பிரதிநிதித் துவப்படுத்துகின்றன. நாம் யார், நம் மரபு என்ன, நம்முடைய பிராந்திய மொழிகளின் செழுமையும், அறிவுத்தனமும்என்ன என்று அறியாமல், அறி யாமையாலும், சார்புத் தன்மையாலும் நம் எழுத்து கள் நிராகரிக்கப்படும்போது, நாம் “காமன்வெல்த் இலக்கியம்” என்ற வார்த்தையையே சந்தேகத்திற்கு உள்ளாக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

நம் இந்தியாவில் மட்டுமல்ல காமன் வெல்த் நாடுகள் முழுவதிலும் அற்புதமான எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதவில்லை என்பதாலும், அவர்களின் மொழி பெயர்ப்புகள் ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை என்பதாலும் நாம் அவர்களை அறியாமல் இருக்கிறோம். உண்மையான பொருளில் கூறப் போனால், பிராந்திய மொழிகளில் எழுதுபவர் களைப் பற்றி அறியும் முயற்சியே, விரிந்த பொருளே காமன்வெல்த் இலக்கியம். ஒவ்வொரு மொழியிலும் புதைந்து கிடைக்கும் இலக்கியப் பொக்கிஷங்களைக் கண்டறிவதற்காகவே, நம் எல்லோருக்கும், இக்கருத்தரங்குப் பயன்பட வேண்டும் என்றார். ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களுக்கும், மாநில மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குமான தர நிர்ணயமும், மொழி யின் மீது கட்டமைக்கப்பட்ட அதிகாரத்தையும் வெளிப்படுத்தினார் சுனில் கங்கோபாத்யா. டாக்டர் ஆனந்த குமாரசாமியின் “வசுதைய்வ குடும்பகம்” (புவிக் குடும்பம்) என்ற கருத்து மூவா யிரம் ஆண்டு இந்திய பெருமிதமாக கூறினார். தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனச் சொன்ன கணியன் பூங்குன்றனைத் தெரியுமா என்றால், தமிழ் தாண்டி, இந்திய மொழியில் எழுதும் யாருக்குத் தெரியும்?

கருத்தரங்கின் துவக்க விழா சிறப்பு விருந்தினர் பத்மபூஷன் கிரிஷ் கர்னாட். கன்னட உலகம் தந்த கலைஞன். ஒரு நாடகக் கலைஞனாக அவருக்கு அந்த மேடை அந்நியப்பட்டிருந்தது. “காமன் வெல்த்தின் வரலாற்று மரபுரிமையும் நிகழ்த்துக் கலைகளும்” என்று தான் இக்கருத்தரங்கிற்குத் தலைப்பு வைத்திருக்க வேண்டும் என அதிரடி யாகப் பேச்சைத் துவக்கினார். நிகழ்த்துக்கலையே நம் ஆதி மரபு. எழுத்தல்ல. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாடகங்கள் நம் மரபாயிருந்தன. மனப்பாடம் செய்வதின் மூலம் மட்டுமே கற்றுக் கொள்ளப்பட்ட சமஸ் கிருதத்தின் இடம் எட்டாம் நூற்றாண்டிலிருந்து இப்பொழுது வரை காணாமல் போய்விட்டது. காரணம் பிறகு சமஸ்கிருதத்தில் நாடகங்கள் உருவாகவில்லை என்பது மட்டுமல்ல, நாடகங் களை உருவாக்கி நிகழ்த்திய அடித்தட்டு மக்களிட மிருந்து அம்மொழி தன்னை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டதே ஆகும்.இன்றைக்கு எழுத்தும் நாடகமும் தனித்தனியே இயங்குகின்றன. மகாபாரதக் கதையிலிருந்து உருவாக்கப்பட்ட நாடகம் “அந்த்யோக்”. இந்த அவையில் உள்ள பேரா.அலொக்பல்லா எழுதியது. கடந்த ஆயிர மாண்டுகளில் வந்த நாடகங்களில் மிகச்சிறந்த நாடகம் அது. ஆதிவாசி மக்களின் பங்கு பற்றி பேசும் நாடகமது.

இந்திய மொழிகளின் வழியாக ஆங்கிலத் திற்கு மொழிபெயர்க்கப்படும் பொழுது நிறைய சிக்கல்கள் எழுகின்றன. கலாச்சார பின்னணி அறிய முடியாமல் மொழி பெயர்க்க முடியாது. ஆனால், நம்முடைய குழந்தைகள் இன்றைக்கு ஆங்கில வழிப் பள்ளிகளில் உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலை, சம்பளம், எல்லாம் ஆங்கிலத்தால் கிடைக் கிறது. அவர்களின்அழுகை, தேம்பல், சந்தோஷம், துக்கம் எல்லாம் தாய்மொழியில் உள்ளது. இவ்விடத்தில் மொழி செயல்படும் நுட்பமான இடமும், கடினமும் புரிபடாமல் உள்ளன. ஆங்கிலம் வழி நம் தேடல்கள் மேலோங்கும் போது, இந்திய மொழிகள் நிச்சயம் அழியும். ஆங்கிலம் நம் மொழிகளைக் கொல்லும் என்றார்.

மிகப் பெரிய கனவுகளுடன் சாகித்ய அகா தமியை நிறுவிய நேருவின் கனவு அற்புதமானது. இந்திய மொழிகளின் இலக்கியம் குறித்து மிகப் பெரிய நம்பிக்கையுடன் நேரு இருந்தார். அதனால் தான் நேரு, காமன்வெல்த் நாடுகளின் தலைமை பொறுப்பில் இங்கிலாந்து இருப்பதையும் காமன் வெல்த் நாடுகளின் இலக்கிய முகமாக ஆங்கிலமே தொடருமேயானால் இந்தியா காமன்வெல்த் நாடுகளின் உறுப்பு நாடாக தொடர்வதைக் குறித்து நிச்சயம் பரிசீலிக்கும் என்றார். இந்நிலை இன்னும் தொடர்வதே நம் சோகம்.

காமன்வெல்த் நாடுகளின் இலக்கிய முகத்தை அறிவதற்காண துவக்கப்புள்ளிகளை உள்ளடக்கியே துவக்கவிழா நடந்தது. பிறகு நடந்த ஏழு அமர்வுகளிலும், இப்புள்ளிகளின் மீதமர்ந்து ஓவியங்கள் தீட்டப்படவேயில்லை என்பதே சோகம். மூன்று நாள் கருத்தரங்கிற்கான பொதுத் தலைப்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு அமர்வுக்கென்று பிரத்யேக மான தலைப்புகள் இல்லை. காரணம் அகாதெமி மூன்று நாள் கருத்தரங்கிற்கான மையக்கருத் தொன்றை உருவாக்கவே இல்லை. முழுக்க முழுக்க கட்டுரை வாசிப்போரின் சுதந்திரத்திற்கு அமர்வுகள் விடப் பட்டிருந்தன. விளைவு, ஒரு அமர்வில் பங்கேற்கும் மூவரும், அந்த அரங்கை மூன்று திசை நோக்கி இழுத்தனர். இதனால் பிரதிநிதிகளாகப் பங்கேற்றோருக்கும் உடன் பங்கேற்ற எழுத்தாள ருக்கும் கருத்தரங்கின் போக்கை புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளின் எழுத்தின் மையமும், இங்கிலாந்து, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளின் எழுத்தின் மையமும் நிச்சயம் வேறாக இருக்கும். இவ்வேறுபாட் டிற்கான அடிப்படை சமூக அமைப்பை, அரசி யலைப் புரிவதற்கான வாய்ப்பைக் கருத்தரங்கு பங்கேற்பாளர்களுக்கு வழங்கவில்லை.

தமிழில் இருந்து பேரா.சி.டி.இந்திரா மற்றும் கனகராஜ் இவர்களுடன் எழுத்தாளர் பாமாவும் கருத்தரங்கில் பங்கேற்றனர். சி.டி.இந்திரா 1980 ஆம் ஆண்டு கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி எழுதி நாடகமாக்கிய இங்கிலாந்து நாடகத்தைப் பற்றி கட்டுரை வாசித்தார். தமிழின் நவீன நாடக அரங்கு இலக்கியப் பனுவல்களின் நாடக ஆக்கமாகவும், பெண்ணிய நிகழ் வெளி யாகவும் பரிணமித்துள்ள மாற்றத்தைப் பற்றி எந்தப் பதிவும் இல்லை. பாமா தன் சிறுகதையை வாசித்தார்.

தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் 20,30 ஆண்டுகளுக்கு முந்தையவர்களாக இருப் பதால், தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமை களாக சுப்ரமணியபாரதியாரும், பதுமைப் பித்தனுமே (புதுமைப்பித்தன்) அங்கு முன்னிறுத்தப் பட்டனர். நா. பார்த்தசாரதியை கடந்து அவர் களுக்கு யாரையும் தெரியவில்லை. இது எல்லா மாநில மொழிகளின் சோகமாக இருக்கக்கூடும். தமிழில் சோகம் அடர்த்தியானதிற்குக் காரணம்- பிறமொழிகள் இந்தி மற்றும் ஆங்கில இலக்கியங்களுடன் நேரடி உறவும், அறிமுகமும் வைத்திருக்கின்றன. தமிழ் இந்திய இலக்கியத்தில் தீவாக தனித்திருப்பதே.

இலங்கை தமிழ் இலக்கிய விமர்சகர் எம்.ஏ.எம். நுஃமான் பங்கேற்றார். இலங்கையிலிருந்து வெளியாகும் படைப்புகளின் பின்னி யங்கும் இலங்கையின் தேசிய அரசியல் மற்றும் போராட்ட அமைப்புகளின் பின்னணி குறித்து ஆண்டுவாரியான புள்ளி விபரங்களைபோல் தன் கட்டுரையை அமைத்திருந்தார். அப்படைப்புகள் குறித்து சுயவிமர்சனங்கள் அற்ற கட்டுரை ஏமாற்றமளித்தது.

சர்வதேச அளவில் நடைபெற்ற இம்மூன்று நாள் கருத்தரங்கிலும் கட்டுரை வாசித்த கட்டுரையாளர்கள் ஒருவர் கூட தங்களின் முடிக்கப் பட்ட பிரதிகளுடன் அரங்கிற்கு வரவில்லை என்பதும் பிரதிநிதிகளுக்கு கட்டுரைகளின் நகல் வழங்கப்படவில்லை என்பதும் இந்நிகழ்விற்கான மிக பெரியப் பலவீனம்.

கருத்தரங்கின் கனம் தவிர்க்க, ரவீந்திர பவனின் சாகித்திய அகாதெமி அரங்கிலிருந்து வெளியேறி நடந்தோம். முயல் தேடி நடக்கும் ஆலீஸ் கால் இடறி ஒரு பொந்துக்குள் விழுந்து அற்புத உலகை தரிசிப்பது போல், ரவீந்திரபவனின் சங்கீத நாடக அகாதெமியின் இந்திய கிராமியக் கலைகளின் திருவிழா அரங்கிற்குள் விழுந்தோம். நிகழ் கலைகளின் காலாந்திர சாட்சியமாய் அடர்ந்து விரியும் அரசமரமும், அழுத்தமான நிறங்களைக் கொண்ட துணிகளால் செய்யப்பட்ட அலங்கார மும், பரந்த அரங்கும், பார்வையாளர்களுக்கான ஆடம்பரமான திண்டுகளுமாய் அற்புதமான இந்திய நாட்டுப்புறக் கலைகளின் அரங்கு களைகட்டி யிருந்தது. அருகருகே ஒவ்வொருவரும் அமர்ந்திருந்தாலும், அற்புத உலகைப் பரவசத் துடன் கண்டு களிக்கும் ஆலிசின் பரவசத்துடன் நாட்டிய நிகழ்வுகளால் கட்டிப் போடப் பட்டிருந்தனர். உடல் முழுவதும் பீரீட்டு எழும்பிய மகிழ்ச்சியும் உற்சாகமும் மனசை லேசாக்க, ஒன்றுமே புரிபடாமல் அரங்கைப் பார்த்தோம். செடிகளைக் கூடையில் சுமந்தபடி ஒரிசா மாநிலப் பெண்களின் நடனம். ஒவ்வொரு மாநிலத்துப் பாரம்பரிய இசையும், நடனமும், ஆடை அலங்காரமும் இசைக் கருவிகளும்.....ப்பா...... ...உச்சத்தில் பறந்த கணங்கள். மிசோரம் மாநிலத்து, மூங்கில் குச்சிகளுக்கு இடையிலான நடனம் ஒருபோதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஒழுங்கான தாள லயங்களுக்கு உட்பட்டு, சேர்ந்து, பிரியும் மூங்கில் குச்சிகளுக்கு இடையே நளினமும், புன்னகையும், அழகும், வண்ணமும் சேர்ந்து, மூங்கில் காடுகளில் துள்ளித் திரியும் முயல் குட்டிகளைப் போல் துள்ளி நடனம் ஆடிய பெண்கள் (புன்னகையால் செய்யப்பட்ட முகங் களால் ஆன பெண்கள்) சேர்ந்திசைத்த அழுத்தமான இசையும், பாடலும் நிகழ்வின் மிகச்சிறந்த பாரம்பரிய நடனம். இன்னும் மனசுக்குள் மூங்கில் குச்சிகளுக்கு இடையே துள்ளியோடும் மென்மை யான பாதங்கள் நடனமாடிக் கொண்டே யிருக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநில பாரம்பரிய நடனம், கலவையான கருத்துகளுடன் இருந்தது. குலதெய்வ வழிபாடு, இசைநடனம், பாடல் என வித்தி யாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நடனத்தை தங்கள் திசைநோக்கியே இழுப்பது போல் பாடிக்கொண்டிருந்த இருவர், ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர். அந்நடனம் ஏதோ ஒரு விதத்தில் தன் இயல்புத் தன்மையை இழந்துத் தவிக்கிறது என்ற கோபம் மனம் முழுக்க சுறுசுறுவென அதிகரிக்கையில் நடனம் முடிந்து விட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மேடையில் தோன்றி அந்நடன நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தவரை அறி முகம் செய்யத் துவங்கினார். மனம் அதுவரை கட்டிக் கொண்டு சென்ற கட்டடம் சரசரவென இடிந்து நொறுங்கி பலத்த கைத்தட்டலாக மாறியது. ராஞ்சி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் சங்கீத் நாடக அகாதெமியின் உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் தயாள் முண்டா என்பவர்தான் நடனத்தின் ஒருங்கிணைப் பாளர் என்றதும், அரங்கம் கைத்தட்டலில் நிறைந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிராமிய கலை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நெகிழ்வாய் இருந்தது.

அதே வளாகத்தில் அமைந்துள்ள லலித்கலா அகாதெமியும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தது. இந்திய ஓவியர்களைக் கொண்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில், ஓவியக் கண்காட்சி ஒன்றை வைத்திருந்தனர். பல்வேறு வகையான ஓவிய வகைமாதிரிகளும், வெவ்வேறு பொருட்களால் ஆன ஓவியங்களும் அர்த்தம் பொதிந்த கணங்களைத் தந்தன. “எல்லைகளுக்கு அப்பால்’ என்ற தலைப்பில் ஓர் ஓவியம் பின்பகுதி புடைத்து மேலெழும்பி. வேகத்தின் அடையாளமாய் வால் உயர்ந்து நிற்கும் புரவியொன்றின் முன்பக்கம், புரவியின் வேகம் சுமக்கும் மனித முகம், ஆர்ப்பரித்துப் பாயும் புரவியின் வேகத்தைத் தோள் தாங்கி நிற்கும் மனித ஓவியம் வெகு அற்புதம். ஒவ்வொரு ஓவியத்தின் சிறப்புகள் பற்றி ஓராயிரம் வார்த்தைகள் சொல்லலாம். ஓவிய மொழி கற்றவர்கள் ஒரு லட்சம் வார்த்தைகளைச் சொல்லக் கூடும்.

தில்லி நகரத்தின் அடைக்கப்பட்ட சாலை களின் வழியே காமன்வெல்த் விளையாட்டின் விதவிதமான கதைகள் வழிந்தோடியபடியே இருந்தன. விளையாட்டுப் பற்றிய கதைகள் எல்லாம் தீவிரமடைந்து, தங்கமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், காமன்வெல்த் நாட்டுக் கதைகளை விளையாட்டாய் பேசி முடித்து திரும்பியாயிற்று.

Pin It