முகூர்த்த நேரம் காலை ஆறுமணியிலிருந்து ஏழரை மணிக்குள். திரும்பவும் ஒருமுறை பத்திரிகையைப் பார்த்துக் கொண்டாள் கற்பகம். ச்சே! ஒன்பது மணிக்கு மேல் வைத்திருக்கக்கூடாதா... மனதிற்குள் நினைவுகள் ஓடின. அதிகாலையிலேயே எழுந்திருந்தாலும், குளித்து முடித்து உடைமாற்றிக் கொள்வதற்குள் மணி ஆறரை ஆகிவிட்டது. பரபரப்பாக சுழன்றும் இன்னும் மேக்கப் முடிந்தபாடில்லை.

"கற்பகம்.... இந்தா டீ.... சீக்கிரம் எல்லாரும் போயிட்டாங்க".... மாமியார் ஆண்டிச்சி திண்ணையில் இருந்தபடி தனது குரலில் அவசரத்தை உணர்த்தினாள்.

"ஐத்தே, இந்தா வந்திட்டேன் ஐத்தே", அவ்வளவு அவசரத்திலும் மாமியாருக்குப் பதில் கொடுத்தாள் கற்பகம். அவசரத்திற்கு குங்குமப்பொட்டு உதவவில்லை கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிக் கொண்டாள். ஏழு முழ மல்லிகைப்பூவையும் இரண்டாக மடித்து கூந்தலில் வைத்து, அதன் மேலாக ஒரு பெரிய ரோஜாப்பூவை ஹேர்ப்பின் தெரியாதபடி செருகியிருந்தாள். மாம்பழக்கலர் பட்டுச்சேலைக்கு மேட்சாக ரவிக்கையும் இணைந்திருந்தன.

"கற்பகம்... கற்பகம்...." நேரம் கரைந்து கொண்டிருப்பதை அடிக்கடி மாமியார் ஆண்டிச்சி நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார்.

"இந்தா வந்திட்டேன் ஐத்தே....."

"என்னா இந்தா வந்திட்டேன், இந்தா வந்திட்டேனுதேன் சொல்ற. வீட்டவிட்டு வெளிய வர்றாப்புல இல்ல...." - ஆண்டிச்சியின் குரலில் எரிச்சல் கலந்துகொண்டது.

மேலத்தெரு கண்ணாத்தா, "என்ன ஆண்டிச்சி ஓம் மருமக வீட்டுக்குள்ளயா இருக்கா, தாலிகட்டப் போறாங்க வாங்கத்தா சீக்கிரம். அடுத்த தெருவுல இருந்துகிட்டு நேரத்தோடு - போக வேணாமா" என்றார்.

"ஐத்தே, யாரு கண்ணாத்தா அப்பத்தாவா, கொஞ்சம் நிக்கச் சொல்லுங்க, இந்தா அம்புட்டுத்தேன் வந்திட்டேன்" கண்ணாத்தாவையும் கற்பகம் குரல் நிறுத்தியது.

ஆண்டிச்சியோடு, கண்ணாத்தாவும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ பேசி சில நாழிகையைக் கழித்தனர்.

ஒருவழியாகத் தயாராகிவிட்ட கற்பகம், கீழே விழுந்திருந்த பத்திரிகையைக் குனிந்து எடுத்தாள், ஏற்கெனவே உடல்பருமனால் ஜாக்கெட்டின் கைப்பகுதியும், பட்டியும் பிடிப்பாக இருந்ததை உடலை குறுக்கு இறுக்கித்தான் ஜாக்கெட் கொக்கியை இணைந்திருந்தாள். அது நூல்பிரிந்து தனியாக கொக்கி தொங்கியது. அதை சேலையை வைத்து மறைத்து விடலாமா, அல்லது அதே நிறத்தில் இருக்கும் ஜஸ்மின் ரவிக்கையை மாற்றிக் கொள்ளலாமா...? நேரம் வேற ஆகுதே மனதிற்குள் ஒரு போராட்டமே நடைபெற்றது.

வீட்டுக்குள்ள என்னதேன் இருக்கோ தெரியலயே, என்ன செய்யுறா, நான் போயி பாத்துட்டு வர்றேன்" கண்ணாத்தாள் உள்ளே நுழைந்தாள்.

"என்னாத்தா கற்பகம் இப்படி ரவிக்கையும், கையுமா நிக்கிற? எம்புட்டு நேரமாச்சு, நான் போயிருந்தாலும் போயிருப்பேன். ஒரெடத்துக்கு போறதுன்னா படக்குனு போறதில்லையா......."

"கொஞ்சம் பொறுங்க இப்ப கௌம்பிடுவோம்."

"நல்லாக் கௌம்புனத்தா" கண்ணாத்தாள் முணுமுணுத்தபடி வெளியேறினாள்.

"என்ன ஆண்டிச்சி ஓம் மருமக இப்படி இருக்கா, எட்டுமாசப் பிள்ளை வயித்துல வச்சுக்கிட்டு, இம்புட்டு ஜோடிப்பு ஜோடிச்சுக்கிட்டு இருக்கா, இதென்னா நல்லாவா இருக்கு, பாக்குறவுக என்ன நெனப்பாக, ஓம் மயன் கதிரவன் வேற வெளிநாட்டுல இருக்குறான். காலம் கெட்டுப் போச்சுத்தா, கெட்டுப் போச்சு. நானெல்லாம் என் வீட்டுக்காரரு வெளிய போயிட்டாலே குளிச்சு முழுகி, தலைக்குப்பூ கூட வய்க்கமாட்டேன்... என்னா நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்குறேன், நீ பாட்டுக்குக் கேட்டும் கேக்காததுமாதிரி இருக்க" ஆண்டிச்சியைப் பார்த்து கேட்டு நிறுத்த....,

"நான் என்னத்தச் சொல்லுறது கண்ணாத்தா, அது அவுக அவுகளுக்கே தெரியணும், புருஷன் இல்லாத நேரத்தில எப்பிடி இருக்கணும், எப்பிடி நடந்துக்கிறணும், அடுத்தவுக சொல்லியா தெரியணும்......." ஆண்டிச்சியும் தன் மனதைத் திறந்தாள். தன் மாமியாரும், கண்ணாத்தாவும் பேசிக்கொண்டிருப்பது வீட்டிற்குள்ளிருக்கிற கற்பகத்திற்குத் தெளிவாகக் கேட்டது. ஆனாலும் ஒப்பனையை குறைக்கவே இல்லை, எந்தவிதமான சலனமுமின்றித் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக உடை அலங்காரங்களை முடித்துக் கொண்டு கற்பகம் வெளியே வந்தாள். திண்ணையிலிருந்த இரண்டு பெரிய மனுஷிகளும் ஆடாது அசையாது தங்களின் பார்வையைக் கற்பகத்தின் மீது பாய்ச்சி அவளை அப்படியே விழுங்கிக் கொண்டனர். கற்பகத்தைப் பின்னால்விட்டு, முன்னால் ஆண்டிச்சியும், கண்ணாத்தாவும் திருமண வீட்டை அடையவும், தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கவும் சரியாக இருந்தது.

மணமகன் சேதுபதி தலையில் பட்டுத் தலைப்பாகை கட்டி, பட்டாடையில் மணக்கோலத்தில் அச்சுஅசலாக சேதுபதி மன்னனாகவே மாறியிருந்தான். கற்பகத்தைக் கணட சேதுபதி மேடையில் இருந்தபடியே முன்வரிசைக்கு வருமாறு சைகைகாட்டி, அருகில் நின்றிருந்த தன் மைத்துனனிடம் அவர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யும்படி சொல்லி அனுப்பினான்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு கற்பகம் முன் வரிசைக்கு வந்தாள், மேடையிலிருந்த அத்தனை பேர்களின் விழிகளும் கற்பகத்தின் மீது பட்டு நிலைகுத்தி நின்றன. மணமகளும் தலைநிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலைகுனிந்தாள். மணமக்களை விடவும் சற்றுக் கூடுதலாகத் தன்னை அழகுப்படுத்தியிருந்தாலும், இயற்கையாகவே அவளுடைய உயரத்திற்கேற்ற எடையும், மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒரு விதமான சுண்டி இழுக்கும் நிறமும், பார்ப்பவர்களுக்கு நடமாடும் சிற்பமாகவே பட்டது.

வீடியோ எடுப்பவர்கள அரங்கம் முழுவதும் சுழன்று சுழன்று பதிவாக்கிக் கொண்டிருந்தனர். வரிசையில் அமர்ந்திருந்தவர்களை எடுத்துக் கொண்டே வந்த வீடியோ கிராபர், கற்பகத்தின் அருகில் வருகையில் சற்று நின்று நிதானமாக எடுத்துக் கொண்டான். இப்படி பலமுறை பல கோணங்களில் கற்பகத்தைச் சுற்றியே கேமரா சுழன்றது.

கற்பகமும், ஆண்டிச்சியும் மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க மேடையேறினர். ஆண்டிச்சிக்கு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது, பழக்கமில்லாமலிருந்தது, ஆனாலும் மருமகளை மட்டும் தனியாக விட மணமின்றி அவள் கூடவே இருக்கவேண்டிய சூழ்நிலைக் கைதியாக மாறியிருந்தாள். மணமக்களோடு நிற்கும் பொழுதுதான் கற்பகத்தின் முழு உருவமும் கேமராக்களின் மின்னொளியில் நனைந்தது, அவளது பட்டுடையில் பட்டுத் தெறித்தது, அழகிற்கே அழகு சேர்ந்திருந்தது. பெரும்பாலான பெண்களின் பார்வை கற்பகத்தை நோக்கியே வட்டமிட்டன. அவர்களது மனதில் ஏதேதோ நினைவுகள் வந்து போயின.

"நெற மாசக்காரி இப்படி என்னையும் பாரு, என் வயித்தையும் பாருனு மேடையில நிக்கலமா?" என்றாள் ஒருத்தி.

"கொண்டவன அறிந்துல கூரையில ஏறி கோழிபுடிக்கணும்" என்றாள் மற்றொருத்தி.

"அவன்தான் இங்க இல்லையே, வெளிநாட்டுல்ல இருக்கான். அப்பறம் என்ன எப்படியும் திரியலாமுல..."

ஒன்றிரண்டு பெண்கள் ஆண்டிச்சியைத் தனியாக அழைத்து, "நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷிதானா, வாயும் வயுறுமா இருக்குறவள இப்படி கொண்டாந்து நிறுத்தலாமா?" என்றார்கள். "புருஷன் வெளிநாட்டுல இருக்குறப்ப இப்படி லோத்திக்கிட்டு திரியலாமா? கொஞ்சம் கண்டிச்சி வைய்க்கக்கூடாதா.......?"-  பலரும் பலவிதமாகப் பேச அத்தனையும் கற்பகத்தையே மையங்கொண்டன. யாருக்கும் பதில் சொல்ல முடியாதவளாகவும், கற்பகத்தைக் கேள்வி கேக்க முடியாதவளாகவும் ஆண்டிச்சியின் நிலை இருந்தது.

கற்பகத்திற்கும், கதிரவனுக்கும் திருமணமாகி மூன்றாண்டுகள் ஓடியிருந்தது. திருமணம் முடிந்த இருபதாவது நாளில் சவூதி அரேபியாவிற்குப் பெயின்டருக்கான விசா வந்ததைத் தொடர்ந்து, கற்பகத்தின் கண்ணீரையும், கதறலையும் அமைதிப்படுத்தி, தான் மட்டும் மனதிற்குள்ளேயே அழுதுகொண்டுதான் சவூதிக்குப் போய்ச்சேர்ந்தான்.

சவூதிக்குச் சென்ற ஒன்பதாவது மாதத்திலேயே அவனின் தந்தை சிவராமன் காலமானார். அவரது மரணச் செய்தியைக் கூட சில மாதங்கள் கழித்துத்தான் அவனுக்குத் தெரியப்படுத்தினர். உடனே தெரிவித்திருந்தால் புறப்பட்டு வந்தாலும் வந்துவிடுவான். வந்தவன் போன உசுரையா கொண்டு வரப்போறான். போனது போனதுதானே, வீண் செலவுகளையாவது குறைக்கலாமே, ஏஜென்ட்டுக்கு கட்டிய பணத்தைச் சம்பாரிக்கவே ஒரு வருசம் பிடிக்கும். அதற்குள்ள வந்தால் கடன்பட்டதுதான் மிச்சமாக இருக்கும் என்ற நிலையில்தான் இதுபோன்ற சம்பவங்களைப் பெரும்பாலும் மறைத்து விடுவார்கள் உறவினர்கள்.

கதிரவனைப் போன்று சிறுசிறு வேலைகளுக்குச் செல்கின்ற எத்தனையோ இளைஞர்கள் இது மாதிரி சூழலை வெளிநாடுகளில் சந்திக்கின்றனர். அவர்களுக்குப் பாசமோ, பற்றோ இல்லாமலில்லை. தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்களே, அவர்கள் நேரிடையாக அறிந்திருப்பர். மனம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்ற சோகத்தினையே உணவாக்கி விழுங்கி சீரணித்துத்தான் மீதி நாட்களைக் கடத்துவர். இரண்டாண்டுகள் கழித்து இருமாத விடுப்பில்தான் கதிரவன் வந்தான், உறவினர்களைக் கண்டவுடனேயே கட்டிப்பிடித்து அழுதுவிட வேண்டும் போலத்தான் இருந்தது.

ஆனால் உறவுகளின் முகங்களில் எந்தவிதமான சோகங்களும் தெரியவில்லை. தங்களுடைய துன்ப துயரங்களை இந்த மக்களோடும், மண்ணோடும் சேர்ந்திருந்து வாழ்ந்ததில் அத்தனையும் தொலைத்திருந்தனர் அல்லது நீர்த்து கெட்டிகட்டிப்போய் அவர்களின் அடிமனதில் கிடந்தது. சிலவற்றைக் காலம் மறக்கடிக்கச் செய்திருந்தது. மனக்காயங்களுக்குப் பல நேரங்களில் காலம்தான் மருந்திடும்.

இரண்டுமாத விடுப்பு பெயரளவில்தான் இருந்தது. போக்குவரத்து அப்படி, இப்படி என்று சில நாட்கள் கரைந்தன. உறவினர்கள், நண்பர்கள் இவனைக்காண வருவதும், கதிரவனே அவர்களைக் காணச் சென்று வருவதும், கொடுக்கல் வாங்கல், கடன்பட்டுவாடா, சவூதியிலிருந்து நண்பர்கள் அவர்களின் சொந்த பந்தங்களுக்காக கொடுத்தனுப்பிய பொருட்களை உரியவர்களிடம் சேர்க்க, அவர்கள் கொடுக்கும் பொருட்களைப் பெற்றுவா என கண்மூடித் திறப்பதற்குள் முக்கால்வாசி நாட்கள் கழிந்திருந்தன. எஞ்சிய சில நாட்கள்தான் கற்பகத்திற்காக கதிரவனால் ஒதுக்க முடிந்தது.

ஒரே ஒரு நாளாவது சினிமாவிற்குச் சென்று வரலாம் என்று கற்பகத்தை அழைத்ததற்கு, வேண்டவே வேண்டாம் நாம் வீட்டிலேயே பொழுதைக் கழிப்போமெனக் கண்ணாலேயே சாடைகாட்டியதைப் புரிந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். வெளிநாடு திருப்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, தான் அப்பாவாகப் போகும் செய்தி பெரும் மகிழ்ச்சியாக இருந்தாலும், தொடர்ந்து கற்பகம் வாந்தி எடுத்துக் கொண்டு, மயங்கி மயங்கி படுத்துக் கொள்கின்ற கோலத்தைக்காண மனதுக்கு சங்கடமாகத்தான் இருந்தது. சகிக்கவில்லை. இருந்தாலும் இந்த முறை இது நடக்காவிட்டால் குழந்தைபெற மேலும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் என நினைக்கும்போது இது பெரிய வரமாகவே இருந்தது கதிரவனுக்கும் கற்பகத்திற்கும் உறவினர்கள் நீர்க்கோர்த்த கண்களோடு கற்பகத்தை அணைத்துக் கொண்டனர்.

இன்னும் இரண்டு நாளில் சவூதி சென்றாக வேண்டும், இல்லையெனில் விசா முடிந்துபோகும் என்கிற நினைவோட்டத்தில் சரிவர உணவு கொள்ளவில்லை. உறக்கத்தை மறந்தனர் அல்லது தொலைத்திருந்தனர். இறுக்க கட்டியணைத்துக் கொண்டு இரவுகளை விடியவிட்டிருந்தனர். அந்த அணைப்பு குழந்தையை விட்டுச் செல்ல முயலுகின்ற தாயை இறுகப்பிடித்துக் கொள்ளும் குழந்தையின் நிலையாயிருந்தது. இரவெல்லாம் அழுதழுது தங்களை அறியாமல் உறங்கிக் கிடந்தனர்.

பயணநாள் நெருங்க நெருங்க அவர்களது பேச்சுமொழி கண்ணீரும், தேம்பலும், விசும்பலுமாய் மாறிப்போனது. கடைசிநிமிடத்தில் கற்பகத்தின் அடிவயிற்றில் முத்தமிட்டு, "என் கற்பகமும், நம் குழந்தையும் பத்திரம். நான் அடுத்து நாடு திரும்பும்போது நம் குழந்தைக்கு இரண்டு வயதாகியிருக்கும்" என்று கதிரவன் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, கற்பகத்தின் கன்னத்தைக் கண்ணீர் நனைத்துக் கொண்டிருந்தது. மனைவியின் கண்ணீரைத் துடைத்த கையோடு சவூதிக்கு வந்தவன்தான் கதிரவன். எட்டு மாதங்கள் உருண்டிருந்தன.

அம்மா ஆண்டிச்சியும், சில உறவுக்காரர்களும் கதிரவனோடு கொண்ட தொலைபேசித் தொடர்பில், கற்பகத்தைப் பற்றிய செய்திகள், அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இவனது நெஞ்சைப் பிளந்தன. நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு யுகமாகக் கழிகிறது. ருசிக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. பல நாட்களில் பித்துப்பிடித்ததுபோலத்தான் இருக்கிறேன். என்றெல்லாம் சொல்லிய கற்பகமா இப்படி மாறிப் போனாள்... கால இடைவெளி இப்படி மாறிப் போகச் செய்யுமோ..... தனிமையின் இளமை தடம்மாறிப்போகுமோ........ நீங்கள் என் நெஞ்சமெல்லாம் நிறைந்துகிடக்கிறீர்கள், போய்வாருங்கள் என்றதெல்லாம் வெறும்பேச்சுத்தானோ..... அவளது நெஞ்சத்தில் வேறு..... நினைக்கையிலேயே கதிரவனுக்கு உலகமே இருட்டிக் கொண்டு வந்தது. அடுத்த வாரத்தில் சேதுபதியும் வந்துவிடுவான், ஊரில் நடந்ததைப் பற்றிய முழு விபரத்தையும் கேட்டுத்தெரிந்து கொண்ட பின்பு கற்பகத்தோடு பேசலாம், அதுவரைக்கும் அவளோடு தொலைபேசியில் பேசுவதைத் தவிர்க்கலாம் என்ற முடிவுக்குக் கதிரவன் வந்திருந்தான்.

கதிரவனும் சேதுபதியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சாதியில் வெவ்வேறு பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தனர். ஆனாலும், இருவரும் ஒன்றாகவே சுற்றித்திரிந்தனர். சவூதியில் வேறு வேறு கம்பெனிகளில் வேலை செய்தாலும், வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் எப்படியும் சந்தித்து தங்களின் உணர்வுகளையும் ஊரின் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்வார்கள்.

சேதுவின் திருமண நிகழ்வில் பங்குபெற இயலாமைக்காக வருந்தினாலும், தன் மனைவி கற்பகம் சென்று வருவாள் என்று நினைத்திருந்தவனுக்கு, கற்பகம் திருமணத்திற்குப் போகாமல் இருந்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது, அவளை அங்கு போகச் சொன்னதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்திருந்தான் கதிரவன். சேதுபதி வந்துவிட்ட தகவலைக் கேட்டு அவனைச் சந்திக்கச் சென்றான் கதிரவன். சேதுவைச் சுற்றிலும் ஏழெட்டுப் பேர்கள் அமர்ந்திருந்தனர். "வா கதிரு, வா இந்தப் பக்கம் வந்து உட்காரு"- சேது வரவேற்று அமர்த்தினான். அரை முழுவதும் கலகலப்பாக இருக்க, கதிரவனின் மனதில் மட்டும் அலையடித்துக் கொண்டிருந்தது.

"என்னண்ணே, வந்ததிலிருந்து பேசாம இருக்கீங்க? ஊருல அம்மா, அத்தாச்சி எல்லாரும் நல்லா இருக்காங்க. அத்தாச்சி ஒங்களுக்கு ஊறுகா பாட்டில் கொடுத்திக்காங்க, இந்தாங்க" என்றான் சேது. ஊறுகாய் பாட்டிலை வாங்கி வைத்துக் கொண்டு மீண்டும் அமைதியானான். வேறு சிலரும் அவர்களின் உறவினர்கள் கொடுத்தனுப்பிய பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். லாரன்சும், சையதும் மட்டும் சேதுவின் திருமணக் கேசட்டை தேடி எடுத்து அதைக் காண்பதில் குறியாக இருந்தனர். நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண வாய்க்காதவர்களின் கண்களை இத்தகைய கேசட்டுகள்தான் சமாதானப்படுத்தும்.

கேசட் ஓடத்துவங்கியதும் ஒட்டகங்களும், பெரும் பாலைவனங்களுமாக வந்து போனது. இந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் எழுப்பிய சிரிப்பொலியில் அறையே அதிர்ந்தது. மணமக்கள் ஏதேனும் கோவிலில் சாமிகும்பிடுகின்ற காட்சியாகத்தான் இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டனர். சவூதி ஏர்ப்போர்ட்டில் எந்தக் கேசட்டாக இருந்தாலும் சோதித்துத்தான் கொடுப்பார்கள். அப்படி சோதிக்கும்போது இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களைத் தவிர, வேறு வழிபாட்டுத் தளங்களோ, பிற மத அடையாளங்களோ, கவர்ச்சிப் படங்களோ இருந்தால் அதனை சென்சார் செய்து அந்த இடத்தில் இது போன்ற காட்சிகளை, ஒட்டகங்களை மேயவிடுவது வழக்கமாயிருக்கும்.

தாலி கட்டுவதில் தொடங்கி, சாப்பிடுகின்ற காட்சிகள் வரையில் எல்லோரும் பார்த்ததில் நிஜத்தில் எப்படி நடந்திருக்கும் என்பதோடு கலந்திருந்தனர். காட்சிகளைத் தங்கள் மனங்களில் நிரப்பிக் கொண்டனர். கதிவரன் வேண்டா வெறுப்பாகத்தான் பார்க்கத் தொடங்கினான். திருமண நிகழ்வுகள் எல்லாம் அவனின் கண்களுக்கு ஏதோ பிம்பமாய் வந்து போய்க் கொண்டிருக்க, அவனின் அம்மா ஆண்டிச்சியும், மனைவி கற்பகமும் திடீரென தோன்ற, கதிரவன் நிமர்ந்து உட்கார்ந்தான். அவர்களை பார்வையால் பின்தொடர்ந்தான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்வரிசையில் அமர்ந்ததிலிருந்து, மேடையேறி மணமக்களுக்கு கும்பிடுபணம் கொடுத்து, அவர்களின் அருகில் நின்று போஸ் பொடுத்துக் கொண்டிருப்பது வரையில் இமை மூடாது கண்களை அகலத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

வளைகாப்பிற்காகத் தான் தேடித்தேடி வாங்கி அனுப்பிய மாம்பழக்கலர் பட்டுச் சேலையில் கற்பகம் மிளிர்ந்தாள். சேதுவிடம் கொடுத்தனுப்பிய நெக்லசும், கவர்னர் மாலையும் அவளது கழுத்தினை அழகுபடுத்திக் கொண்டிருக்க, மோதிர விரல்கள் இரண்டிலும் நிச்சயார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அணிவித்த கல்பதித்த மோதிரங்கள் கண்சிமிட்டின. கற்பகத்தை பெண்பார்க்கச் சென்ற போது உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைச் சொல்லி கொடுத்துவிட்டு வந்த பூ வேலைப்பாடுடைய கைக்குட்டை அவளது வலது கையைவிட்டு வெளியே எட்டிப்பார்த்திருக்க, கரு சுமந்திருக்கும் வயிற்றை, அவளது இடதுகை சேலையை சரிசெய்து மறைப்பதாகவே பட்டிருக்கும் கதிரவனைத் தவிர மற்றவர்களுக்கு கற்பகம் தாய்மையின் முழுவடிவத்தையும் கேமராக்களின் மின்னொளியில் நனையவிட்டிருந்தாள்.

கதிரவன் டிவியை சற்று உற்றுநோக்கினான். கற்பகம் எந்த விசாவும் பெறாமலே சவூதி அரேபியாவிற்குள் நுழைந்து அவனுக்கு முன்பாக மௌனமாக நின்றிருந்தாள். அவளது கண்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டு திருண்டிருக்க கதிரவனின் கண்களின் வழியே கண்ணீர்த் துளிகள் உடைந்து விழுதுகளாய் இறங்கின.

- மருதுபாரதி

 

Pin It