1960களில் ஒரு வருடம். நடுக்காட்டுக் கோவில். செந்தட்டி அய்யனார்கோவில் மூன்று நாட்கள் ரொம்ப விசேஷம். திருவிழா, ஜே.ஜே. என்று நடக்கும். குலதெய்வத்தைக் கும்பிடுவதற்கு சிவகிரி, சேத்தூர், சீவலப்பேரி, தேனி, உசிலம்பட்டி என்று தமிழ்நாடெங்கிலுமிருந்து லாரிகளில் - டிராக்டர்களில் - மாட்டுவண்டிகளில் குடும்பம் குடும்பங்களாக கொத்துக் கொத்தாக கூட்டம் வந்து குவியும். ஏகப்பட்ட நிகழ்ச்சிகள், கலைகள், விருந்துகள் நிகழும்.

"கூட்டம்/கூட்டம்/கூட்டம் பார்க்க /கூட்டம்" என்று கவிஞர் மீரா எழுதிய கவிதையைப் போல... திருவிழா கூட்டம் பார்க்க... சுற்றுபட்டி பத்து ஊர்ஜனமும் வேடிக்கை பார்த்து ரசிக்க- ருசிக்க- கூடும்.

மேலாண்மறை நாடு கிராமத்தின் வடபுறத்தில் அப்போது ஓடிய ஆற்றுக்கு வடபுறத்தில் நடுக்காட்டில் அமைந்திருக்கிற அந்தக் கோவில், திருவிழாத் தருணத்தில் நகரமாக தோற்றமளிக்கும்.

நானும் வேடிக்கை பார்க்கப் போவேன். ஒரு தடவை வரகணி ஆட்டம் நடந்தது. நரிக்குறத்தி ஆட்டம் என்றும் அதற்குப் பெயர். (அந்தப் பெயர் எப்படிப் பொருந்துமோ? அது அப்போதும் தெரியாது. இப்போதும் தெரியவில்லை)

வரகணி ஆட்டத்தைப் பார்க்கப் போயிருக்கிற எனக்கு வயது பதினாறுக்குள்தானிருக்கும். அப்போது நான், திமுக பற்றாளன். திராவிட நாடு, காஞ்சி, நம்நாடு, மாலைமணி போன்ற இதழ்களையெல்லாம் விலைக்கு வாங்கி வாசிக்கிற பழக்கமுள்ள பற்றாளன். வரகணி ஆட்டம் வேஷம் கட்டி வந்தார்கள். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தின் இரைச்சல்.

ராஜபார்ட், பபூன், இரண்டு ஸ்திரீ பார்ட்கள், தனியாக ஒரு கலைஞர். இதுபோக.... உட்கார்ந்து கொட்டடிக்கிற ஒருவர்.

கொஞ்சநேரம் பார்த்துவிட்டுப்போக இருந்தேன். வரகணி ஆட்டத்தின் ஆட்டங்களும், நளினமும், பாட்டுகளும், அதன் புழுதிவாசத் தெம்மாங்கும், துள்ளும் நகைச்சுவைத் தெறிப்புகளும் கலை, களை கட்டியது. தேனில் விழுந்த எறும்பானேன்.

அதிலும்....... அந்தக் கலைஞரே பாடுகிறார், ஆடுகிறார். கிழவேஷம் போடுகிறார். வெள்ளைக்கார துரைவேஷம் போடுகிறார். அவரே அய்யராகவும் வேஷம் கட்டியாடுகிறார். ஒரே சிரிப்பாணிக் கூத்து. வெடித்து வெடித்து எழுந்து பரவுகிற சிரிப்பலைகள்.

அய்யராக வந்து அவர் பாடிய பாட்டுகள், பேசிய வசனங்கள் யாவுமே சமூக நீதிச் சிந்தனைகள். ஜாதீய எதிர்ப்பு ஆவேச முழக்கங்கள்.

நான் அந்தக் கலைஞனின் தீவிர ரசிகனாகிவிட்டேன். அவரைப் பற்றிய ரசனையான பேச்சுகளும் அவரது பாடல்களின் அர்த்தம் பொதிந்த மண்வாசனை குறித்த நினைவுகளுமாக இருந்தேன். ரொம்ப வருடங்களாக.

பல வருடங்கள் போய்விட்டன. தமுஎசவை மாநிலந்தோறும் கிளைகள் அமைத்து, மாநாடுகள் நடத்தி அமைப்பைக் கட்டி வளர்க்க ஓடியாடி நான ந்hடெல்லாம் சுற்றுகிற காலம்.

அப்போது.......... ஒரு நாள்.

கடையில் இருக்கிறேன். பீடிவிற்க... சாக்குப் பார்சலுடன் ஒரு சைக்கிளில் வந்து இறங்குகிறார், அதே கலைஞர்.

"பீடி போடுவமா?"

என்கிறார். ஒருமகத்தான மண்ணின் கலைஞன், எளியமக்களின் இதயக்கலைஞன் பீடிவியாபாரியாக வந்து நிற்கிறார்.

எனக்குள் பரவசம். மனம்கொள்ளாத மகிழ்ச்சிக் கூத்தாட்டம். அவரது கலைநிகழ்வுகுறித்த என் ரசனை நினைவுகளை பரவசமாகப் பகிர்கிறேன். மகிழ்கிறார், பூரிக்கிறார்.

"இப்போதும் கலைக்குழு இருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கும் போகிறேன். இடையிடையே இப்புடி ஏதாச்சும் ஏவாரமும் பாத்துக்கிடுறது" என்கிறார். இவரை எப்படியாவது தமுஎச இயக்கத்தில் இணைக்க வேண்டும் என விரும்பினேன். திருவேங்கடம் போகிற போதெல்லாம் அவரைத்தேடி அவர் வீட்டிற்குப்போவேன். மணிக்கணக்கில் - நாட்கணக்கில் - பேசிக் கொண்டிருப்பேன்.

என் மேற்பார்வையில் நடந்த தூத்துக்குடி மாவட்ட மாநாட்டில் (தமுஎச) அந்தக் கலைக்குழு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவது என்று திட்டமிட்டோம்.

வற்புறுத்தினேன். அதே தேதியில் அவர் ஒப்புக் கொண்டிருந்த நிகழ்ச்சி. அதற்கு கட்டாயம் போயாக வேண்டும் என்றார். ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு தவறாமல் பங்கேற்பது அவரது சுவாசத்தைப் போன்ற சுபாவம்.

அதையும் மீறி வற்புறுத்தினேன். வருவதாக ஒப்புக் கொண்டார். வந்து நிகழ்ச்சியும் நடத்தினார்.

தமுஎச மாநாட்டின் நிகழ்ச்சியாக அது முடிந்துவிடாமல், மார்க்ஸீயப் பொதுவுடைமை இயக்கத்துக்கே கிடைத்துவிட்ட ஒரு கலைச் சொத்து என்ற பட்டா எழுதும் நிகழ்வானது அந்த மாநாடு.

அந்தக் கலைச்சொத்துதான், பாவலர் ஓம் முத்துமாரி.

பிறவிக் கலைஞன், அவ்வளவாக பள்ளிப்படிப்பு இல்லை. ஆயினும் பாட்டு கட்டுவது என்பது, சுவாசத்தைப் போல அவருக்கு அத்தனை சுலபம். பாட்டுக்கான சம்பவக் கதைகள் பின்னுவது, தண்ணீர் பட்டபாடு. அதற்குள் மறக்க முடியாத நகைச்சுவை அனுபவம். அதற்குள் தீப்பொட்டலம் போன்ற சமுதாயச் சிந்தனை.

அவரது பாடல்கள், குழுவின் நிகழ்வுகள், கூத்துகள், கதைப்பாடல்கள், இடையில் வரும் வசனங்கள் இவை எல்லாமே இப்போதைய நவீன மின்னணுவியல் தொழில்நுட்பத்தால் ஆவணப்படுத்தப்பட வேண்டும். குறுந்தகடாக்கப்பட வேண்டும்.

இத்தேவையை சரியாக உணர்ந்த ச.முருகபூபதி எனும் நவீன நாடகக் கலைஞர், இவரது சுயசரிதையையும், இவரது சில பாடல்களையும் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். ச.முருகபூபதியின் முன்னுரை, நூலின் சமுதாய அரசியல் நோக்கத்தை ஆழமான அடர்த்தியுடன் கூறுகிறது.

பாவலர் ஓம் முத்துமாரியே எழுதிய சுயசரிதை, அவரது மொழியிலேயே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பாளரான ச.முருகபூபதி ஒரு துணியளவுகூட தலையீடு செய்யவில்லை. 'கை' வைக்கவில்லை. மண்ணுக்குள்ளிருந்து தோண்டியெடுக்கப்பட்ட சீனிக்கிழங்கு மாதிரி..... லைஞனின் உரைநடை மொழியில் அப்படியே சுயசரிதை திறந்து கொள்கிறது.

கலைவாழ்வின் கம்பீரத் தனித்துவம் எத்தனை உன்னதச் சிகரமாக இருக்கிறதோ..... அதே அளவுக்கு அவரது அகவாழ்வின் சோகமும், அவலமும், அலைக்கழிப்பும் இருப்பதை உணர முடிகிறது.

கண்மாயில் பிடித்த மீனின் குழம்பு போல, எளிமையின் உச்சமாகவும், ருசியின் உன்னதமாகவும் இருக்கிறது மொழிநடை.

வாழ்ந்து நொடித்த ஒரு குடும்பத்தின் வாரீசான இவர், முத்தம்மாள் என்ற மனைவியால் படுகிற அல்லல்களும், அவதிகளும் முழுமை நரகம்.

செல்லம்மாள் இவரது வாழ்வின் ஒரு பகுதி. அவளுக்கும் இவருக்கும் என்ன உறவு? காவியத் தனம் நிரம்பிய உறவு, அது. நட்பா, கலைரசனையா, காதலா? எது, இவர்களிடையே பிணைப்பு ஏற்படுத்துகிறது?

பேச்சியம்மாள் கதையும் சுவாரஸ்யம் நிறைந்த காவியம். ஐம்பது வயதுக்கும் இருபத்தைந்து வயதுக்குமான அந்த உறவில் வருகிற வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்.

எண்பதை எட்டுகிற வயதில் வாழ்கிற இந்த கலைமன இளைஞரின் சோகமிகுந்த சுயசரிதை, நம்முன் செம்போத்துப் பறவையின் கரிசல்காட்டுக் கூவலாக துயர ராகமிசைக்கிறது.

அதேபோல அவரது பல பாடல்களும், கதைப் பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல்களும் வெறும் பாடல்களாக இல்லாமல், சரித்திர ஆவணமாகிறது. காலநதி வெள்ளப் பெருக்கில் மறந்து போகிற சில முக்கிய நிகழ்வுகளை, இவரது பாடல்கள் வரலாற்றுத் தழும்பாக நிரந்தரமாக்குகிறது.

பதிப்பாசிரியர் ச.முருகபூபதியும், பதிப்பாளர் அனன்யா பதிப்பக அருளும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்.

பாவலர் ஓம் முத்துமாரி எனும் மகத்தான கலைச் சமுத்திரத்தின் ஒரு குடம் நீரை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது. இதற்கு தலைப்பு வைத்த எழுத்தாளர் கோணங்கியும் பாராட்டுக்குரியவர்.

வெளியீடு : அனன்யா பதிப்பகம்,

8/37, பி.ஏ.ஒய்.நகர்,

குழந்தை ஏசுகோவில் அருகில், புதுக்கோட்டை சாலை,

தஞ்சாவூர் - 613 005.

விலை : ரூ.100

Pin It