நாராயண் ககோட்டியின் தொண்டை வறண்டு, உலர்ந்து போயிருப்பதை உணர்ந்தது. குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு போலீஸ் காரனுக்கு அவனது மனநிலை படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் அதை அவன் விரைவில் அடக்கிக் கொண்டான். எந்த விதத்தில் யார் மீது அவன் கோபப்பட முடியும்? மேலும், இந்த சின்னஞ்சிறிய வட்டாரத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழும் என்பதை அவன் எப்போதும் எப்படி கற்பனை செய்ய முடியும்? யோசனை செய்து பார்த்தால், இந்த சிறிய கிராமத்தில் குடியிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஒரு அலுவலக கிளார்க் மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆகியவர்களைத் தவிர மீதி இக்கிராமத்தில் இருப்பவர்கள் தினக்கூலிக்கு வேலை செய்பவர்களே. ஆயினும் மேலும் மூன்று ஆசாரிகள், இரண்டு ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் வண்டிக்காரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே அதிகாலையில் வீட்டைவிட்டு வேலை தேடிக் கிளம்பிப் போய், மாலையில் வேலை முடிந்த பின்னர்தான் திரும்புவார்கள்.

அவன் இதுவரை கழித்த அரசு வேலை வாழ்க்கை அனுபவத்தில் இதுதான் புதுமையாக, இதுவரை நடந்திராத முதல் அனுபவமாக இருந்தது. நம்முடைய தேசத்தில் இது போல மிகவும் பின்தங்கிய கிராமம் இருக்கிறது என்பதை அவன் நம்பவில்லை. இந்தச் சம்பவம் உண்மை யிலேயே ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம்தான்.

குற்றவாளியைக் கைது செய்வதோ, கொண்டுவருவதோ, அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது என்று கக்கோட்டி உறுதியாக நம்பினான். அவன் கிட்டத்தட்ட இந்தச் சம்பவத்தை மறந்து போகக் கூடிய நிலைக்கு மனதை மாற்றிக் கொண்டான். ஆனால் காவல்துறை கண்காணிப்பாளரிடமிருந்து இந்த வழக்கை புலனாய்வு செய்யும்படி கண்டிப்பான உத்தரவைப் பெற்றுக் கொண்ட பின்பு, அவன் அந்தக் கிராமத்திற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

வயலின் கடைசி மூலையில் இருந்த மஹிராமின் வீட்டைப் பார்வையிட்ட பிறகு, பரந்து வளர்ந்திருக்கிற மாமரத்தின் அடியில் வந்து நின்றான். மரத்தடியில் நின்றபடி அவர்கள் ஒவ்வொருவரும் ‘பளிச்’சென்று முகத்தில் வழியும் வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டனர். பின்னர் அந்த மரத்தின் ஒரு கிளையைச் சுட்டிக் காட்டியபடி கான்ஸ்டபிள் பிமல் கக்கோட்டியிடம் “சார், இந்த மரம்தான் இவ்வளவு தொந்தரவுக்கும் காரணம். இந்த மரம் மட்டும் இங்கே இல்லாமல் இருந்திருந்தால், இந்தச் சம்பவமே நடந்திருக்காது. நீங்கள் இதை ஒப்புக் கொள்கிறீர்களா, சார்?” என்று கேட்டான்.

“நீங்கள் சொல்வது சரிதான், பிமல்” என்று கக்கோட்டி ஒப்புக் கொண்டான். நமது வாழ்க்கை யில் எதுவுமே முழுமையாக நடைபெறுவதில்லை. நமது வாழ்க்கையில் உண்மையில் ஒரு சம்பவம், மற்றொரு சம்பவத்துடன் தொடர்பு கொண்டதாகி விடுகிறது. விஞ்ஞான பூர்வமாகப் பார்த்தால் தொடர்பு உறவுகள் என்று நாம் சொல்கிறோம். யோசித்துப் பாருங்கள். இந்த மரத்திற்கும், சம்பவம் நடந்த திருட்டுக்கும் தொடர்பு உள்ளது. பின்னர் திருட்டுக்கும், காவல்துறைக்கும் தொடர்பு உள்ளது, அதாவது நமக்கும்.”

தான் சொன்னது பிமலுக்குப் புரிந்திருக்கும் என்று கக்கோட்டி அறிந்துகொண்டான். அப்படிப் புரியவில்லை என்றால் பிமலுக்கும், உடன் வந்தவர் களுக்கும் வாழ்க்கையைப் பற்றிய அறிவுரைகளைக் கூறுவது அவனது பழக்கம். நாராயண் கக்கோட்டி கல்லூரியில் பௌதிக இயல்பாடம் எடுத்துப்படித் தான், கவிதைகளும் எழுதினான். ஆகவே எப்போதும் தன் பார்வைகளைக் கூற எப்போதும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்திருந்தான். அவனது மனைவி தொலைக்காட்சியின் மீது அதிக ஒட்டுதலுடனும், அவனது வார்த்தைகளின் மீது குறைவான கவனத்துடனும் இருந்தாள். ஆகவே பிமல் போன்ற சக கான்ஸ்டபிள்களின் மீது அக்கறைகொண்டு அவர்களுக்குப் புரியாவிட் டாலும், பிரசங்கங்கள் புரிவது வழக்கம். அது அவனை மென்மையான இதயமுள்ளவனாக ஆக்கியது.

சில கணங்களில் கக்கோட்டி சுய நினைவுக்குத் திரும்பி வந்தான். ஆமாம், பிமல் சொன்னது சரிதான். அந்தக் கிராமப் பஞ்சாயத்து ஊழியர்கள் எல்லா இடங்களையும் விட்டுவிட்டு ஏன் இங்கே கொண்டுவந்து அந்த விளம்பர பானரை மாட்டினார்கள்? இந்த கல்வி அறிவு இல்லாத மக்களுக்கு இந்த விளம்பரத்தில் எழுதி இருப்பது எப்படிப் புரியும்? தற்போதுள்ள அரசு நான்காண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி புரிந்து வருவது பற்றியோ, அல்லது வேறு எதைப் பற்றியோ அவர்களுக்கு என்ன அக்கறை? அந்த விளம்பரம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி எதுவும் அறியாமலேயே யாரோ அதை எடுத்துச் சென்று எங்கேயோ உபயோகித்திருக்க வேண்டும். காவல்துறை அதை புலனாய்வு செய்யும் அளவுக்கு இந்த விஷயம் அவ்வளவு முக்கியத்துவம் உடையதா? காவல்துறை எவ்வளவு அதிகாரம் படைத்தது என்பதை, சிறிய தவறு செய்துள்ள இந்த கிராமத்து மக்களுக்கு உணர்த்த வேண்டுமென்று கண்காணிப்பாளர் கூறும்போது கக்கோட்டி எரிச்சலூட்டப்பட்டதாக உணர்ந்தான். இருந்த போதிலும் பொதுச் சொத்தை திருடிய குற்றவாளி களை கண்டுபிடித்து கைது செய்வதில் தோல்வி யடைந்துள்ளது; வரிகட்டும் மக்களின் கோடிக் கணக்கான பணத்தை ஊழல் செய்து அனுபவிப் போரைத் தண்டிப்பதில் தோல்வியடைந்துள்ளது அரசு.

தகுதியற்றவர்களுக்கும், அனுபவமற்றவர் களுக்கும், லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு, கண்ணியமான ஆசிரியர் வேலைகளை சிலருக்கு கொடுத்துள்ளது. இம்மாதிரி குற்ற நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு என்ன தண்டனை கிடைத்துள்ளது? இந்த விஷயங்களில் நிர்வாகம் கண் பார்வையற்றதுபோல் நடந்து கொள்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏன்?

கக்கோட்டிக்கு குற்றவாளிகளைக் கண்டு பிடித்து கைது செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் கண்காணிப்பாளரின் கண்டிப் பான உத்தரவு இன்று கக்கோட்டியின் மனதில் பல கேள்விகளை எழுப்பிவிட்டது. அவர் அவனிடம் இவ்வாறு கூறியிருந்தார்: ‘கக்கோட்டி, இந்த விஷயம் முழுவதையும் நீ இலேசாக எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. உனது இதயம் படிக்காத, ஏழைகளான இவர்களை ஆதரிப்பது, இயற்கையானதுதான். ஆனால் குற்றவாளி அவர்களிலே ஒருவனாக இருக்கிறான். இது ஒரு முழுமையான, அரசு வழக்கு. இதில் சம்பந்தப் பட்ட குற்றவாளியை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கண்டுபிடிக்காவிட்டால், உனக்கும், எனக்கும்தான் மிகவும் அவமானம். மேலும் உயரதிகாரிகளிடமிருந்து இடைவிடாமல் ஒலிக்கிற போன்கால்களுக்கு வேறு பதில் சொல்ல வேண்டும்’.

“சார், நீங்கள் என்ன யோசனை செய் கிறீர்கள்?” பிமல், கக்கோட்டியிடம் கேட்ட கேள்வி அவனை சுயநிலைக்குக் கொண்டு வந்தது.

“நாம் இன்னும் இரண்டு நாட்களில் குற்றவாளியைக் கண்டுபிடித்தாக வேண்டும். இந்த இழுத்தடிக்கும் வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புரிகிறதா?”

இதைக் கூறிக்கொண்டே கக்கோட்டி, அந்த மரத்தின் இரண்டாகப் பிரிந்த கிளையை உற்றுப் பார்த்தான். தற்போதுள்ள அரசு தங்கள் நான் காண்டுச் சாதனை விளம்பர  பானரை வைக்க

இந்த மரக்கிளையைத் தானா தேர்ந்தெடுக்க வேண்டும்? வேறு இடமே அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லையா? அந்த விளம்பரத் தில்தான் நான்காண்டுச் சாதனைகளை விரிவாக விளக்கமாக அறிவித்திருந்தனர். ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் இரண்டே நாட்களுக்குள் மாயமாய் மறைந்துவிட்டது. அதன் மறைவை முதலில் பார்த்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் வழக்கமான விசாரணைக்குப் பின், இந்தச் செய்தி முதலமைச்சருக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அதன் பின்னர் தான் உண்மையில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. முதலமைச்சர் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவைக் கூப்பிட்டு, “இப்படி கேவலமான நிலைமையில் உள்ள உன் தொகுதியைப் பற்றி என்ன நினைக்கிறாய்” என்று கேட்டார். அதன்பின் சீக்கிரமாகவே காவல்துறை கண்காணிப்பாளருக்கு குற்றவாளியை உடனடி யாகக் கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்கிடையே,தினசரி செய்தித் தாள்களில் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகிவிட்டது. “அரசு விளம்பரப் பானர் மாயமாய் மறைந்தது. படிப்பறிவில்லாத வட்டாரங்களில் அரசியல் சதி” என்று செய்தி பரவியது. அருகிலிருக்கும் கிராமங் களில் உள்ள சிறிய தலைவர்கள் முயற்சி எடுக்காமலிருந்தால், செய்தி இப்படி பரவி யிருக்காது. எதிர்க்கட்சித் தலைவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்ற வதந்தியும் பரவியது. மேலிடத்திலும் அப்படியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

“நாம் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதில் பயனில்லை. பக்கத்தில் சுற்றியுள்ள வீடுகளைப் பார்க்கலாம், வாருங்கள்!” என்று நம்பிக்கையிழந்த குரலில் கக்கோட்டி, கான்ஸ்டபிள்களிடம் கூறினான்.

அவர்கள் சீக்கிரமாக பள்ளி ஆசிரியரின் வீட்டை அடைந்தனர். அந்தக் கிராம மக்கள் அவரை ‘லக்கி மாஸ்டர்’ என்று அழைக்கிறார்கள். அடிக்கடி கிராமத்திற்கு பார்வையிட வந்ததாலும், கக்கோட்டி ஆசிரியருடன் மிகவும் நட்பு கொண்டு பழகியதாலும், ஆசிரியர் அவனுக்கு உட்கார ஒரு நாற்காலி அளித்தார்.

நாராயண் கக்கோட்டி அவரிடம் சொன்னான்: “நாம் வழக்கமான நடைமுறைகளை எல்லாம் பார்க்க வேண்டாம். இது எங்களின் தினசரி கடமைகளில் ஒன்று. பகலிலும் இரவிலும் இது வம்பளப்பு மாதிரி ஆகிவிட்டது. வாழ்க்கையில் பாதுகாப்பு பற்றி எந்த கவர்ச்சி அம்சமும் இல்லை”.

பிமலும், உடன்வந்த மற்றவர்களும் வீட்டுக்குள் சென்றபோது, கக்கோட்டி வெளியே முற்றத்தில் காத்திருந்தான். இரண்டு நாட்களுக்கு முன் இது நடந்தது. கிராம மக்கள் கூட்டமாகக் கூடி இருந்தனர். இந்தத் திருட்டு நடந்ததன் விளைவாக எழுந்துள்ள பிரச்சனைகள் கூட்டத்தில் அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. பள்ளி ஆசிரியரும் அவருக்குத் தெரிந்த முறையில் உதவி செய்தார். கக்கோட்டி இதுவரை ஒரு குற்றவாளியை கைது செய்ய கிராமக்கூட்டம் ஏற்பாடு செய்வது பற்றி கேள்விப்பட்டதில்லை. ஆனால் எளிமையான கிராம மக்களுக்கு இதன் அவசியத்தை விளக்கிச் சொல்ல கூட்டம் அவசியம் என்று நினைத்தான். பள்ளி ஆசிரியர் கிராமத்து மக்களை கூட்டத்திற்காக அழைப்பதில் உண்மையிலேயே உதவி புரிந்தார். அவர்கள் வெவ்வேறு விதமான உடைகளில் வந்தனர். சில மனிதர்கள் சட்டையின்றி இருந்தனர். சிலர் இடுப்பைச் சுற்றி ஒரு ஆடை அணிந் திருந்தனர். சில பெண்கள் உடலைச் சுற்றி ஒரு துணியால் மூடிக் கொண்டு வந்தனர். அவர்களுடன் குழந்தைகள் நிர்வாணமாக இருந்தன. சில குழந்தைகள் கொப்புளங்களால் பாதிக்கப் பட்டிருந்தன. அவர்கள் எல்லோருடைய முகங் களிலும் பயம் பரவி இருந்தது. கக்கோட்டி தன்னால் முடிந்த அளவுக்குத் தெளிவாக அவர் களிடம் பேசினான்:

“நீங்கள் இங்கே கூட்டமாகக் கூடியிருப்பதன் காரணத்தை அறிவீர்கள். கடந்த வாரம் முழுவதும் உங்கள் வீடுகளில் நுழைந்து காணாமல் போன விளம்பரப் பலகையைத் தேடி, விவரம் கேட்டுக் கொண்டு வந்தேன். அந்த விளம்பரம் அரசாங்கத்தின் வெற்றியைச் சொல்லக் கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது. உங்களைப் போல தேவைப்படக் கூடியவர்களுக்கு அரசு என்ன உதவிகள் செய்தது என்பது அதில் சொல்லப் பட்டிருந்தது. ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் திடீரென்று மாமரத்திலிருந்து அந்த விளம்பரம் மாயமாய் மறைந்துவிட்டது. நீங்கள் மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுடன் நீங்கள் சூழ்ச்சிக்கு பலியாகி சேர்ந்து சதி செய்திருந்தால், தயவு செய்து தண்டனை காத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள், இன்னும் நேரமிருக்கிறது. யார் இந்தக் குற்றத்தை செய்திருந்தாலும், தயவு செய்து செய்தவர்கள் அதை ஒப்புக் கொள்ளுங்கள். தயவு செய்து ஒப்புக் கொள்ளுங்கள்.”

மொத்தக் கூட்டமும் அமைதியாக இருந் தது. போலீஸுக்கு முன் பேச யாருக்கும் தைரியம் வரவில்லை. நாராயண் கக்கோட்டியின் வேண்டுகோளை ஏற்று, பள்ளி ஆசிரியரும், கிராம மக்களிடையே பேசினார். நாம் எல்லோரும் மிகவும் நெருங்கி ஒன்றுபட்டிருக்கிறோம். “நாம் எல்லோரும் ரத்த உறவு கொண்ட சகோதரர்கள்போல இருக்கிறோம். காவல்துறையிலிருந்து வந்திருக்கும் இவர்கள் பேசியதை கேட்டீர்கள். நாம் எல்லோரும் தினசரி கூலி வேலை செய்பவர்கள். வாழ்க்கை முழுதும் அப்படியே இருக்கப்போகிறவர்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும், நம்முடைய துன்பங்களைப் போக்குபவர்கள் யாருமில்லை. நமது கிராமத்தில் நடந்த சம்பவம் நமக்கு மிகவும் அவமானம். அது தினசரி செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக வந்துவிட்டது. நமது கிராமத்தை திருடர்களின் கிராமம் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே தான் உங்களைக் கெஞ்சிக்கேட்கிறேன். குற்றம் செய் தவர்கள் தயவு செய்து ஒப்புக் கொள்ளுங்கள்”.

ஆனால், கூட்டத்தினால் எந்தப் பயனும் இல்லை. கக்கோட்டி யாராவது ஆணோ, பெண்ணோ தன் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அது நடை பெறவில்லை. முதல் முறையாக இந்த எளிமை யான கிராம மக்கள் புரிந்து கொள்ள எவ்வளவு சிக்கலாக இருக்கிறார்கள் என்று உணர்ந்து ஆச்சரியப்பட்டான்.

பிமலும் அவனுடன் வந்த கான்ஸ்டபிள்களும் ஆசிரியர் வீட்டிலிருந்து வெளியே வந்தனர். விடைபெற்று எழுந்த நாராயண் கக்கோட்டி தன்னுடைய வருத்தத்தை பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்தான். “உங்களுக்கு சொல்ல முடியாத தொல்லைகளைக் கொடுத்துவிட்டேன். அதற்காக வருந்துகிறேன்!” என்றான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் கடமையைத்தானே செய்கிறீர்கள்” என்று கூறிய பள்ளி ஆசிரியர் நாராயண் கக்கோட்டியுடன் சாலையின் கடைசி வரை வந்து வழியனுப்பினார். அந்த இடத்தில் மூன்று வீடுகள் நெருக்கமாக அருகருகே இருந்தன. பிமலும், குழுவினரும் முதல் வீட்டிற்குள் நுழைந்தனர்.

முதல் வீடு, நாணல் புற்களால் வேயப்பட்ட இரண்டு குடிசைகளைக் கொண்டது. ஒன்று வைக் கோல் புற்களால் வேயப்பட்டது. இன்னொன்றும் தற்காலிகமாக வேயப்பட்ட கூரையாலானது. இரண்டு கூரைகளுமே மழைக்காலத்தில் ஒழுகக் கூடியவை.

நாராயண் கக்கோட்டி அந்த வீடுகளை இதற்கு முன் பார்வையிட்டதில்லை. பிமலுடன் சென்ற குழு திரும்பி வந்துவிட்டது. ஆனால் பலன் ஒன்றுமில்லை. முதல் தடவையாக சோதனை செய்தபோது, ஒவ்வொருவரும் பயந்தபடியும், வெட்கப்பட்டுக் கொண்டும் காணப்பட்டார்கள். சிலர் அசட்டுத்தனமான சிரிப்புடன் தங்களைப் பற்றிச் சொன்னார்கள். “ஐயா, இங்கே உள்ள ஆடைகள்தான் எங்களுடையவை. சின்னக் குழந்தைகள் படுக்கையை ஈரமாக்கிவிடுகின்றன. இந்த மாதிரி உடைகளை நீங்கள் எப்போதும் பார்த்திருக்க முடியாது”.

கக்கோட்டி அதைக் கேட்டு வருத்தப் பட்டான். துன்பப்படுவதாக உணர்ந்தான். மொத்தம் ஐந்து நபர்களில் பெற்றோரும் அவர் களின் குழந்தைகளும் ஒரே படுக்கையில் தூங்கினார்கள். உலர்ந்த துணிகளுக்கு இடையே போதுமான அளவில்லாத இரண்டு மெத்தைகள் இருந்தன.

கக்கோட்டி வீட்டு வராந்தாவில் நின்ற போது, ஒரு பெண்மணி திடீரென்று வந்து அவனது காலில் விழுந்து, அழுதுகொண்டே அவனை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினாள்.

கக்கோட்டி கேட்டான் : “இந்தாம்மா!

என்ன விஷயம்? ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?”

அந்தப் பெண் எழுந்து நின்றாள். இன்னும் விம்மி விம்மி அழுதுகொண்டே பேச ஆரம்பித்தாள். “என்னைத் தண்டித்துவிடாதீர்கள் ஐயா, இந்தச் சின்னக் குழந்தையைப் பாருங்கள். இதை யார் கவனித்துக் கொள்வார்கள்? அதற்கு யார் என்ன கொடுப்பார்கள்? அது வேலை செய்வதற்குக் கூட வயது காணாமல் சிறிய வயதில் உள்ளது”.

“நீ ஏன் உனது பிரச்சனை என்னவென்று என்னிடம் சொல்லவில்லை?” அடுத்து என்ன வரப்போகிறதோ என்று குறிப்புடன் அவளைக் கேட்டான். “உண்மையில் நான்தான் அந்த விளம்பரத் துணி பானரை எடுத்தவள். அந்தச் சம்பவம் இவ்வளவு பெரிய அமளியை ஏற்படுத்தும் என்பதை நான் உணரவில்லை ஐயா” என்று அவள் பயந்த படியே ஒப்பாரி வைத்து அழுதாள்.

கக்கோட்டி கேட்டான் : “ நீ ஏன் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தாய்?”

“ஐயா, நேற்றைக்கு முன் தினம் நான் வீட்டில் இல்லை. உங்கள் ஆபீஸ் அலுவலர்கள் அதற்கு முன் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால்........”

“நீ இவ்வளவு நாள் அதை எங்கே ஒளித்து வைத்திருந்தாய்? மேலும் நீ எதற்காக அதைத் திருடினாய் என்று முதலில் சொல்.”

“ஐயா, இந்தச் சின்னக் குழந்தையின் தகப்பன் காட்டுக்கு வழக்கமாகச் சென்று விறகு வெட்டிக் கொண்டு வருவார். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் ஒரு மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்துவிட்டார். அதன் பின்னர் நான் தினசரி கூலி வேலைக்குச் சென்றேன். நாற்று நடும் வேலை, நெல் அரைக்கும் வேலை, அரிசியை சுத்தம் செய்யும் வேலை இப்படி பல வேலைகளுக்குச் சென்றேன். ஆனாலும் தினசரி கூலி வேலை களினால் கிடைத்த சம்பளம் நீண்டநாட்களுக்குப் போதுமானதாக இல்லை. அது எனது தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. நான் குடும்ப பென்ஷன் பெறுவதற்காக விண்ணப்பம் சமர்ப்பித்து, அதற்காக அந்த அலுவலகத்திற்கு தொடர்ந்து இடைவிடாமல் எத்தனையோ முறை அலைந்தேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் கிடைக்கவில்லை. ஐயா!”

“சரி, இப்போதாவது சொல்லு, ஏன் விளம்பர பானரை திருடினாய்?”

“நான் என்னுடைய வெட்கத்தைத் துறந்து சொல்கிறேன் ஐயா... என் கல்யாணத்தின்போது எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு உள் பாவாடையைத்தான் நான் நீண்ட நாட்களாக அணிந்திருந்தேன். நான் இத்தனை வருஷங்களாக, அந்தப் பாவாடை கிழியக்கிழிய அதை பழுதுபார்த்து தையல் பண்ணி, எண்ணற்ற தடவைகள் அதைத் தைத்து, இனிமேல் அதைத் தைக்க முடியாது என்ற அளவுக்கு வந்ததும், அதை தவிர்த்துவிட்டேன். இந்த விளம்பர பானரைத் திருடி, அதை வைத்து நானே ஒரு உள்பாவாடை தைத்து தயாரித்துக் கொண்டேன் ஐயா. அதோ, அங்கே துணிகள் காயும் கொடியில் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. ஐயா, தயவு செய்து என்னை தண்டித்துவிடாதீர்கள்! உங்களுடன் வந்தவர்கள், நான் அதை அணிந்திருந்ததால் பார்த்திக்க முடியாது ஐயா” என்று சொன்னபடியே அழுது புலம்பினாள்.

கக்கோட்டிற்கு  வார்த்தைகளே பேச வரவில்லை. அவனது இதயத்தின் உள்ளே எங்கேயோ இரும்பைக் காய்ச்சி ஊற்றியதைப் போல் ஒரு வலியை அனுபவித்தான். அவனது மனவேதனை எப்படி இருந்தாலும், கண் காணிப்பாளர் அலுவலகத்தில் விளம்பர பானரை ஒப்படைக்க வேண்டும் என்பது அவனுக்கு இடப் பட்ட ஆணை. கடைசியில் பிமல் குழுவினருக்கு அந்த உள் பாவாடையை எடுத்து அதில் உள்ள தையல்களை பிரித்து எடுக்க உத்தரவு அளித்தான். நன்றாக தண்ணீரில் அலசப்பட்டு, கஞ்சிப்பசை அகற்றப்பட்ட, உறுதியற்ற அந்த விளம்பர பானரில்  கக்கோட்டியால் இப்போது மங்கலான எழுத்துக் களைப் படிக்க முடிந்தது. ‘மக்கள் நல அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனை வெற்றிகள். அறியாமையையும், வறுமையையும் அகற்றிட இதற்கு முன்னர் நிகழ்ந்திராத பயணம்! முதியோர்களுக்கும், விதவைகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள்...’- கக்கோட்டிக்கு மேற் கொண்டு அதைப் படிப்பதில் விருப்பமில்லை. தன் இதயம் கரைந்து அழுதுகொண்டிருக்கும் அந்தப் பெண்ணை நெருங்கி, கக்கோட்டி சொன்னான்: “இதோ பார்! நீ பயப்பட வேண்டாம்! நாங்கள் உன்னை கைது செய்யப் போவதில்லை. இதோ, இந்த ஐந்நூறு ரூபாயை எடுத்துக் கொள்! உனக்கு ஒரு உள்பாவாடை வாங்கிக்கொள்”

அந்த ஐந்நூறு ரூபாய் நோட்டில் இருந்த சுதந்திரப் போராட்ட அணிவகுப்பை நடத்திச் சென்ற மகாத்மா காந்தியின் படத்தை பார்க்க, நாராயணன் கக்கோட்டிக்குத் துணிவு இல்லை. அவன் அந்தத் துணி பானரை எடுத்துக் கொண்டு ஜீப்பில் ஏறிக் கொண்டான்.

நன்றி : “இண்டியன் லிட்டரேச்சர்”

அஸ்ஸாமிய மொழியில் : சஞ்சீப் பால் தேகா

ஆங்கில வழி தமிழில் : இரா.கதைப்பித்தன்

 

Pin It