சினிமா விமர்சனம் - ராவணன்: 

 

ராகினியான ஐஸ்வர்யாராய்பச்சனைக் கவர்வதற்காக மலைமேலிருந்து நீரில் குதித்து செல்கிறான் வீரா என்னும் விக்ரம் முதலில். கவர்ந்த ராகினியை விடுவித்து, அவளது கணவன் எஸ்.பி.யால் சுடப்பட்டு மலை மேலிருந்து கீழே விழுந்து மரிக்கிறான் வீரா கடைசியில். இதுதான் படத்தின் ஒருவரிக் கதை. ரொம்பச் சாதாரண இந்தக் கதைக்கு மேலும் அர்த்தங் களைக் கற்பிக்கவும், ஒரு காவிய அந்தஸ்தைச் சேர்க்க வுமே ‘ராவணன்’ என்னும் பெயரிடப்பட்டு இருக்கிறது. அனுமான், விபீஷணன், கும்பகர்ணன் என்னும் இதிகாச மாந்தரோடு அடையாளம் காணும்படி பாத்திரங்கள் திணிக்கப்பட்டு இருக் கின்றன.

ரிலையன்ஸும் மணிரத்னமும் சேர்ந்து தங்கள் 120 கோடி ரூபாய் சரக்கை விற்றுத் தள்ளு வதற்கு கையாண்டிருக்கும் வியாபார யுக்தியே இது. படமோ பரிதாபகரமாய் தோற்று, பெரும் நையாண்டிக்கு உரியதாகிவிட்டது.

ஐஸ்வர்யாராய் தண்ணீரில் விழுந்து, வாட்டர் புருஃப் மேக்கப்போடு  அன்றலர்ந்த பூவாக எழுகிறார். அவருக்கும், பிரியாமணிக்கும் மேலாடை எதாவது ஒருபக்கம் எப்போதும் விலகியே இருக்க வேண்டும் என விதி இருக்கும் போலும். மலைவாசிகளின் திருமணம் அரண் மனையில் நடக்கிறது. துப்பாக்கி வெடித்து “வீரா” என பிரித்திவிராஜும், கண்களில் கோபமும் நெற்றியில் சுருக்கமும் தெறிக்க “எஸ்.பி” என விக்ரமும் காடும், தியேட்டரும் அதிர்ந்து எதிரொலிக்க கத்தி கத்தி வெறிகொள்கிறார்கள். இயக்குனர் கர்ணனின் பழைய படங்களே தேவ லாம் போலிருக்கிறது.

உடலெல்லாம் கருப்பில், மஞ்சளில், வெள்ளையில் சாந்துகளை அப்பிக்கொண்டு ஆடிக்கொண்டும், சண்டையிட்டும் கொண்டும் மக்கள் காணப்படுகிறார்கள். எப்போது பார்த் தாலும் இந்த பிரபு, ஐஸ்வர்யாராய்க்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார். பெரும் காவல் படையே கண்டுபிடிக்க முடியாத விக்ரமை, சாதாரணமாக ஒரு பஸ்ஸில் வந்து இறங்கி ஐஸ்வர்யாராய் கண்டுபிடித்து விடுகிறார். ராவணன் இருக்கும் இடம் சீதைக்குத்தான் தெரியும் போல. இது தெரியாமல் அந்த இராமன்  அனுமான்களையும், அணில்களையும் வைத்து கஷ்டப்பட்டு இருக்கிறாரே?

படம் முடிந்து வெளியே வரும்போது ஒருவர் படத்தில் ‘இலக்குவன் இல்லையே?’ என்றார், இன்னொருவர் ‘யார்தான் இருந்தார்கள்’ என்றார். உண்மைதான். சீரியசான படத்தின் பெரும்பாலான காட்சிகளும், வசனங்களும் சிரிப்பை வரவழைக்கிற அளவுக்கு மணிரத்னம் எடுத்திருப்பது காலியாய்ப்போன அவரது பெருங் காய டப்பாவை எல்லோருக்கும் காட்டுகிறது. அவரது பகல்நிலவும், மௌனராகமும் இப் போதும் நினைவுகளில் சஞ்சரிக்கின்றன. அப்புறம் பம்பாய், உயிரே, ரோஜா, கன்னத்தில் முத்த மிட்டால் என சூடான பிரச்சினைகளோடு அவரது சரக்கை கலந்து கொடுத்தார். அவைகளில் விமர் சனங்கள் இருப்பினும் அவரது கதை சொல்லும் பாங்கும், சில காட்சிகளும் மனதில் நிற்கத்தான் செய்தன. இந்தப்படத்தில் அப்படியும் எதுவு மில்லை.

படத்தில் புரிந்துகொள்வதற்கும், புரியாமல் போவதற்கும் ஒன்றுமில்லை. பெரும் ஆராய்ச்சி கள் நடத்தி, ‘அது அப்படி’, ‘இது இப்படி’ என கற்பித்து தூற்றவும், போற்றவும் எதுவுமில்லை. காதல், காமம்  என உளவியல் குறித்த ஆழமான சித்தரிப்புகள் இல்லை. இது போன்ற கதைகளை ஆக்கம் செய்யும்போது, நவீன காலத்தின் சூழ லோடு மீள்வாசிப்புச் செய்வதாக இருக்க வேண்டும். முந்தையதில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளின் மீது புதிய வெளிச்சத்தையும், சிந்தனை யையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படியெல்லாம் எந்த மெனக்கெடலும் இந்தப் படத்தில் இல்லை. படத்தில் மலைவாழ் மக்களின் பிரச்சினைகளையோ, அவர்களுக்காக போராடு பவராக விக்ரமையோ காட்சிபடுத்தவில்லை. அடிக்கடி மேட்டுக்குடி என்று ஒரு வார்த்தை வந்து போகிறது. அவ்வளவுதான். அதுவே மணிரத்னத் துக்கு புரட்சி போலும்.

படத்தில் ஒரு இடத்தில் பெருமாள் சிலை முன்பு நின்று ஐஸ்வர்யாராய் “கெட்டவர்களை ஏன் எப்போதும் கெட்டவர்களாகவே காண்பிக்க மாட்டேன்கிறாய்” என்று புலம்பும் காட்சி ஒன்று வருகிறது. படம் இதைச் சுற்றி அழுத்தமாக நகர்வதாக இருந்திருந்தால், கதையும், காட்சிகளும் சிறப்பாய் வெளிப்பட்டு இருக்கக்கூடும். இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ‘தினரத்தி ரங்கள்’ என்னும் ஒரு மலையாளப்படம் நினைவுக்கு வருகிறது.

படத்தின் ஆரம்பத்தில் டாக்டரான சுமலதாவின் குடும்பத்திற்குள் மம்முட்டி பெரும் கும்பலோடு நுழைந்து, சுமலதா வின் தந்தையை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து வெட்டி, மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொளுத்துவார். மம்முட்டியை போலீஸ் விரட்டிச் சென்று, சுட்டு, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் போட்டு காப்பாற்றச் சொல்லும். விசாரணைக்கு மம்முட்டி தேவைப்படுவார். கொடூரமான மனி தனாய் தெரியும் மம்முட்டியை காப்பாற்ற முடி யாது, சாகட்டும் என சுமலதா மறுப்பார். டாக் டரின் தர்மம் போதிக்கப்பட்டு பிறகு வேண் டாவெறுப்பாக காப்பாற்றுவார்.

மம்முட்டிக்காக ஆஸ்பத்திரிக்கு வெளியே ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கும். இந்தக் கெட்டவனுக்காக இவ் வளவு பேர் ஏன் அன்பைத் தெரிவிக்கிறார்கள் என சுமலதாவிற்கு ஆச்சரியமாய் இருக்கும். மெல்ல மெல்ல அவருக்கு உண்மைகள் தெரிய வரும். மம்முட்டி ஒரு இடதுசாரி என்பதும், விவசாயி களின் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத் தியவர் என்பதும், சுமலதாவின் தந்தை அந்தப் போராட்டத்தை கடுமையாக நசுக்கியவர் என்பதும், அங்குள்ள ஏழைப் பெண்ணைக் கற்பழித்தவர் என்பதும் அறிய, அறிய அவருக்கு மம்முட்டி மீது அன்பு வரும். போலீஸ் விதிகளை மீறி மம் முட்டிக்கு ஹார்லிக்ஸ், டானிக் என சத்தான உணவுகளைக் கொடுப்பார். சுமலதா வின் காதலன் இதைக் கவனித்து, “ச்சீ தேவிடியா” என அவரை விட்டு விலகுவான்.

உடல்நலம் தேறிய மம்முட்டியை விசா ரணைக்கு அழைத்துச் செல்லும் நாள் நெருங்கவும், சுமலதா அவரைத் தப்பிக்க வைப் பார். போலீஸ் மறுபடியும் மம்முட்டியை சுட்டுக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் வந்து சேர்க்கும் சுமலதா, இந்தக் கொடுமையை மேலும் இந்த நல்ல மனிதர் அனுபவிக்க வேண்டாம் என ‘கருணைக் கொலை’ செய்து கதறி அழுவார். படம் பார்த்து ரொம்ப நாளைக்கு அதன் பாதிப்புகள் தீராமல் கிடந்தேன். ராவணன் படத்தில் அப்படி ஒரு காட்சி கூட தாக்கம் ஏற்படுத்தவில்லை.

கதை சொல்ல வேண்டுமென இதயசுத்தி யோடு பார்த்தால், ஆயிரம் கதைகள் நம்மைச் சுற்றிலும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதை யெல்லாம் விட்டு ராமாயணத்தில் இருந்து ஒரு பிட்டை எடுத்து வைத்துக் கொண்டு ஏகமாய் பில்டப் கொடுத்து, ஏராளமாய் செலவு செய்து, கொள்ளை கொள்ளையாய் லாபம் சம்பாதிப்பதே நோக்கமாயிருக்கும்போது, அது குப்பையாகத் தான் போகும். அற்புதமான லொகேஷன், அதன் அற்புத அழகையெல்லாம் அள்ளித் தரும் காமிரா, இசை, நடிப்பு, ஏராளமானோரின் மனித உழைப்பு இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் தெரி கின்றன. அவை வேண்டுமானால் இந்த குப் பையை மக்காமல் இருக்கச் செய்யலாம்.

 

நன்றி: தீராத பக்கங்கள்

Pin It