மார்க்ஸ் +எங்கல்ஸ் = மார்க்சிஸம். அதாவது,  இந்த இருவரின் விளைவு மார்க்சிஸம். மார்க்சியத் தத்துவத்தின் சம பங்காளியாகிய பிரடெரிக் எங்கல்ஸின் வாழ்க்கை மார்க்ஸின் வாழ்க்கையைப் போலவே

உலக மனிதகுல விடுதலைக்கான அர்ப்பணிப்பாகும். அவர்கள் உலகின் நன்மைக்காக அவதரித்த மகா ஞானிகள் என்று சொன்னால் தப்பில்லை.

எங்கல்ஸின் வாழ்வும் பணிகளும் சொல்லப்படாத மார்க்ஸின் வரலாறு இல்லை, அதுபோலவே மார்க்ஸின் வாழ்வும் பணிகளும் சொல்லப்படாத எங்கல்ஸின் வரலாறும் இல்லை. அவ்வாறு எங்கல்ஸின் சுருக்கமான வரலாற்று நூலை எழுதி வழங்கியிருக்கிறார் என்.ராமகிருஷ்ணன்.

1820-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதியன்று ஜெர்மனி நாட்டின் பிரஷ்யா பகுதியைச் சேர்ந்த பார்மென் என்ற நகரில் பிறந்தார் என்பதில் ஆரம்பித்து எங்கல்ஸின் வாழ்க்கை வரலாற்றுக் கட்டங்களை 36 பகுதிகளாகத் தனித்தனித் தலைப்புகளில் எழுதியுள்ளர் ராமகிருஷ்ணன்.

இது சுருக்கமான வரலாற்று நூலென்றாலும், எங்கெல்ஸைக் குறித்தும் அவரது தத்தவார்த்த மற்றும் ஸ்தாபனப் பணிகள் குறித்தும் அவரது குடும்ப வாழ்க்கை குறித்தும் மார்க்சுடன் இணைந்து ஆற்றிய தத்துவார்த்தப் பணிகள் , ஆராய்ச்சிப் பணிகளைக் குறித்தும் மார்க்ஸின் குடும்பத்துடனான நெகிழ்ச்சிமிக்க தோழமை உறவு குறித்தும் ஏராளமான விவரங்களை எடுத்துச் சொல்கிறது இந்நூல். அதுபோல் மார்க்ஸைக் குறித்தும்.மார்க்ஸ் வாழ்க்கையைத் தொட்டால் கூடவே எங்கல்ஸ் வாழ்க்கையும் எங்கல்ஸ் வாழ்க்கையைத் தொட்டால் கூடவே மார்க்ஸ் வாழ்க்கையும் இயல்பாகவே வரும்.இந்த இயல்பு சரியான விகிதத்தில் இந்நூலில் அமைந்துள்ளது.

கம்யூனிஸ்ட் புரட்சியின் வருகையை நினைத்து ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளுக்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை. வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள் -என்று அறைகூவல் விடுத்து -ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களை நடுங்கவைத்த - முதலாவது கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதி வெளியிட்டபோது மார்க்ஸின் வயசு 30, எங்கல்ஸின் வயசு 28. இந்நூலைப் படிக்கிறபோது இந்தச் செய்தி மனதில் எழுகிறது.

எங்கல்ஸின் தந்தை ஒரு நெசவு ஆலை முதலாளி. ஒரு பருத்தி ஆலைக்கும் உரிமையாளர். ஆனால், இளம் எங்கல்ஸோ தொழிலாளர் நிலைகண்டு மிக மனம் வருந்துபவராக இருந்தார். உப்பர் பள்ளத்தாக்கு என்று அறியப்பட்ட அந்தப் பிரதேசத்தில் ஏழை எளிய நெசவாளி மக்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு எங்கல்ஸ் உள்ளம் உருகினார்.அந்தத் துன்ப துயரங்களைப் போக்கவேண்டுமென்று விரும்பினார்-என்கிறது இந்நூல். எங்கல்ஸின் இத்தகைய உள்ளம்தான் முதலாளித் தந்தையுடன் முரண்படவும் மார்க்ஸுடன் உடன்படவும் வைக்கிறது.1844-இல் பாரிஸ் நகரில் முதன்முறையாக மார்க்ஸை எங்கல்ஸ் சந்தித்த நிகழ்வு இந்த இருவர் வாழ்விலும் பெரும் திருப்பமாக அமைகிறது. இந்தப் பத்து நாட்கள் விவாதத்தின்போது அவர்கள் தங்கள் இருவருக்குமிடையில் தத்துவம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒருமித்த கருத்து இருப்பதைப் புரிந்துகொண்டனர்...தத்துவ ஆராய்ச்சி மற்றும் புரட்சிகரப் போராட்டம் ஆகியவற்றில் இருவரும் ஒன்றுபட்டே இயங்குவதென முடிவு செய்தனர்.

இந்த இரண்டு சிந்தனையாளர்களிடையேயான கூட்டுழைப்பு இவ்வாறு உருப்பெற்றுச் செயல்படத்தொடங்கிவிட்டது-என்கிற இந்நூல், தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து உலகெங்கும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகவும் சோஷலிஸப் புத்துலகுக்காகவுமான ஆய்வுப் பணிகளிலும் தத்துவப் படைப்பாக்கத்திலும் அயர்வின்றி ஈடுபட்டனர். மார்க்ஸ்க்கு பலமொழிகள் தெரியுமென்றால்,எங்கல்ஸ்க்கு பனிரண்டு மொழிகள் தெரியும். எங்கல்ஸ்க்கு இன்னும் கூடுதலாக வட்டார மொழிகளும் தெரியும் என்பதை இந்நூலில் அறிகிறபோது மிக வியப்பாக உள்ளது. அறிவுச்சுடர் மார்க்ஸ், தாம் அரும்பாடுகள்பட்டு ஆக்கிய உலகப் புகழ்பெற்ற மூலதனம் எனும் பெரும் படைப்பை முழுமை செய்யும் முன்னே காலமாகிவிட்டதால் அவரது மறைவுக்குப் பிறகு, மார்க்ஸ் கேட்டுக்கொண்டபடி எழுதி முழுமைசெய்து உலகுக்கு வழங்கிப் பிரபலப்படுத்தினார் எங்கல்ஸ். இந்த இருவரின் வாழ்வையும் பணிகளையும் ஒருசேர அறிந்துகொள்ளமுடிகிறது என். ராமகிருஷ்ணனின் இந்த நூலில்.

 

வெளியீடு; கஸ்தூரி பதிப்பகம்

556, காந்திபுரம் 2-வது வீதி விரிவு,

100 அடி ரோடு, கோவை-641 012

விலை ரூ.50

Pin It