ஜூன் 3 அன்று சென்னை மாநகரம் முழுவதும் கொடிகளும், தோரணங்களும், வண்ணமிகு விளக்குகளில் டிஜிட்டல் பேனர்களும் அலங்கரிக்கப்பட்டு, தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழா சிறப்புடன் நடந்து கொண்டிருந்தது. அதே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் காயிதேமில்லத்தின் மணிமண்டப வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஏன் ? விடுதலை கிடைத்த பின்பும், சமூகப் பாதுகாப்பான வேலை என்பது இந்திய இளைஞர்களின் கனவாக உள்ளது. படித்து, பட்டம் பெற்று வேலைக்கான கடும் போராட்டத்தை நடத்திட வேண்டிய சூழலை 63 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. 109 பணியிடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்வில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 541 பேர் கலந்து கொண்டு தேர்வினை எழுதினர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணைக்காக காத்திருந்தனர். இச்சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் மே 18 அன்று எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 48 நாட்கள் கழித்து இரண்டாவதாக மீண்டும் ஒரு தேர்வுப்பட்டியலை வெளியிட்டது.

முதல் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 394 பேரின் பெயர் 2வது பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த இரண்டாவது அறிவிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் ஜூன் 3 அன்று உண்ணாவிரதம் இருந்தனர். தமிழகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சில நூறு இடங்களுக்காக கடும் முயற்சி செய்து, தேர்வு எழுதி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்வினை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவது, தேர்வுகளின் மீது மிகப்பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

தேர்வு பெற்றவர்கள் தேர்வு பட்டியலில் இடம் கிடைத்ததன் காரணமாக தங்கள் சொந்த வேலையையும் விட்டுவிட்டு, இன்று நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனத்திற்காக ஒரு தேர்வு நடத்திவிட்டு அதற்கு இரண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தற்சமயம் வரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஜூன் 18 அன்று சென்னையில் பாதிக்கப்பட்ட ஆசிரிய பட்டதாரிகள் பேரணியை நடத்தினர். இப்பேரணியில் டிஒய்எப்ஐ மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன், துணைச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்று பேசிய டிஒய்எப்ஐ மாநிலச்செயலாளர் எஸ். கண்ணன், தமிழக திமுக அரசும், முதல்வரும் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணிநியமன ஆணை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே துணைமுதல்வர் ஸ்டாலினுக்கும், கல்வித்துறை உயர்அதிகாரிகளுக்கும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். எனவே, தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களை பணி நியமனம் செய்யவில்லையெனில் போராட்டம் தொடரும். இப்போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ முழுஆதரவையும் வெளிப்படுத்தும்.

- எஸ்.பாலா

Pin It