“அரசு என்பது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறை கருவி.”

மாமேதை லெனினின் வாசகங்களை நினைவூட்டிக்கொள்வதன் மூலம் உணர முடிகிறது “கலைஞர் அரசு’’ ஏன் இப்படி செய்கின்றதென.

7800 தொழிலாளர்கள் பணிபுரியும் பாக்ஸ்கான் சென்னை நிறுவனத்தில் 7200 தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு பாக்ஸ்கான் இந்திய தொழிலாளர் சங்கம் உதயமாகியது. இந்திய தொழிற்சங்க மையத்துடன் (சிஐடியு), இணைந்துள்ள இந்த அமைப்பில் அங்குள்ள 1800 நிரந்தர தொழிலாளர்களில் 1200 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 6000 பேரும் உறுப்பினர்கள். நான்காண்டு காலம் பணிபுரியும் தொழிலாளிக்கு ரூ. 4800 என இருந்த ஊதியத்தை ரூ. 10000 என உயர்த்த கோரிக்கைகளை எழுப்புகிறது சிஐடியு.

இதன் பின்னர் 15 நாட்கள் கழித்து சுமார் 600 தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட ஃபாக்ஸ்கான் இந்திய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துடன் (தொ.மு.ச) ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றி உள்ளதாக அறிவிக்கிறது அந்நிறுவனம். தொழிற்சங்கங்களுக்கான அனைத்து விதி களையும் மீறிய இந்த துரோக ஒப்பந்தம் எந்த சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது?. பன் னாட்டு நிறுவனங்களை வரவேற்பதற்காக திமுக அரசு செய்திடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஓர் விதியாக இது இருக்கக் கூடுமோ!

பெரும்பான்மை தொழிற்சங்கம் எதுவென ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக் கையுடன் துரோக ஒப்பந்தத்தை எதிர்த்து தொழிலாளர்களின் போராட்டம் செப் 23இல் துவங்குகிறது. 200 பெண் தொழிலாளர்கள் உட்பட 319 பேரை கைது செய்து சிறையில் அடைத்த திமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் கடந்த கால வரலாற்றையும் மிஞ்சிவிட்டன.

தமிழக முதல்வர் கருணாநிதியா அல்லது ஃபாக்ஸ்கான் நிறுவன அதிபரா எனும் சந்தேகம் எழும் அளவிற்கு தொடர்கின்றன அராஜகங்கள். அண்ணாவை, பெரியாரை சந்தித்திராவிட்டால் நான் பொதுவுடைமைவாதி ஆகியிருப்பேன் என்று கூறிய கருணாநிதி, தொழிற்சங்கம் அமைத்ததற்காக சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ. முத்துக் குமார் உள்ளிட்ட தலைவர்களை சிறையிலிருந்து கைவிலங்கிட்டு இழுத்துவரச் செய்திருக்கிறார் உத்தரமேரூர் நீதிமன்றத்திற்கு.

அக். 09 தேதியிட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்த பின்பு, அக் 8 தேதியிட்ட வழக்கில் கைது செய்யும் அளவிற்கு தரம்தாழ்ந்த நிலைக்கு சென்ற அந்த அடக்குமுறையில் பன்னாட்டு நிறுவனத்திற்கு பாதபூஜை சேவைசெய்யும் அவரின் முகவிலாசமே திமுகவின் புதிய அவதாரமாகும். சிம்சன் தொழிலாளர் போராட்டத்தில் 1970இல் கருணாநிதி துவங்கிய இந்த தொழிற்சங்கப் பணி ஹீண்டாய், நோகியா என இப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிலாளர் போராட்டம் வரை வந்து நிற்கிறது.

செப் 19 முதல் நடைபெற்று வரும் ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, பாட்டாளி தொழிற்சங்கம், எல்.எல்.எப் ஆகிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கிய கூட்டு போராட்டக் குழுவின் தலைமை பொறுப்பை ஏற்ற தொ.மு.சவில் 5சதவிதத்திற்கும் குறைவான தொழிலாளர்களே உறுப்பினர்கள். ஆனால், ஒரு மாதகால போராட்டத்தில் அக். 10 இல் சென்னை யில் நள்ளிரவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொ.மு.ச தொழிலாளர் போராட்டம் முடிந்தது என தன்னிச்சையாக அறிவிக்கிறது. இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல தொழிற்சங்க ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்த தொ.மு.ச தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கங்கள் பெற்றுக்கொடுத்த தொழிற்சங்க உரிமைகளை இன்று பன்னாட்டு முதலாளிகளிடம் அடகு வைத்துவிட்டது. இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என மார்தட்டி முழங்கும் கருணாநிதியால் இன்று அடக்கப்பட்டிருப்பது தொழிற்சங்க சட்டங்களும், உரிமைகளும் தான். ஆனால் முத்தமிழ் அறிஞர் என்று தன்னை கூறிகொள்பவருக்கு தொழிற்சங்க இயக்கங்களின் வரலாறு தெரியாமல் இருப்பது ஆச்சிரியமாகவே இருக்கிறது.

நிதி இருக்கும் திசையில்தான் தன் கருணை இருக்கும் என கருணாநிதி உணர்த்திய மற்றொரு விஷயம் கல்வித்துறையாகும். தனியார் கல்வி கட்டண ஒழுங்குப்படுத்தும் சட்டம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, பெற்றோர்களின் நியாயமான போராட்டம் என அனைத்து நியாயங்களையும் மீறி நடந்து கொள்ளும் தனியார் பள்ளிகள் மீது திமுக அரசின் இரும்பு கரம் ஏன் பாயவில்லை? அக் 05, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் எந்தவொரு பள்ளியிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என தெளிவாக கூறிய பின்னும் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் கட்டண வேட்டை நடந்துகொண்டே தான் இருக்கிறது. பெற்றோர் போராடும்போது அவர்களை மதிக்காத அரசு சட்டம், தீர்ப்பு என எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, கல்வி முதலாளிகளிடம் ஏன் கருணையோடு நடந்து கொள்கிறது? அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்காக உருவான வன்முறை கருவி என்பது கலைஞர் அரசில் சரியாகத்தான் இருக்கிறது.

பெரியார் பெயர் தாங்கிய பள்ளியில் தீண்டாமை

சாதியப்பாகுபாட்டுடன் செயல்படும் நொய்யல் பெரியார் ஈ.வெ.ரா. அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை மாணவர்களும், வாலிபர்களும் முற்றுகையிட்டனர்.

நொய்யல் அரசு மேல் நிலைப்பள்ளியில் தலித் மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி நிர்ப்பந்தித்துள்ளார். மறுப்பு தெரிவித்த மாணவர்களை சாதியைச் சொல்லித் திட்டி யுள்ளார். நியாயம் கேட்ட பெற்றேர்களிடம் நீங்கள் மூன்று வேலை உணவுக் காகத்தான் பள்ளிக்கு அனுப்புகிறீர்களா? என்று கேட்டு அவமரியாதையாக பேசியுள்ளார். அது மட்டுமின்றி மாணவர்கள் ஆதி திராவிடர் நல அரசு விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், தலைமை ஆசிரியர் அடியாட்களை ஏவி விட்டு அவர்களை தாக்கியுள்ளார். இதனைக் கண்டித்து வாலிபர் சங்கம் கடந்த மாதம் 14ம்தேதி நொய்யலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மாவட்ட கல்வித்துறைக்கு மனுக்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து உடனடியாக தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன், வாலிபர் சங்க மாநிலப் பொருளா ளர் எஸ்.பாலா ஆகியோர் தலைமை தாங்கினர். வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இரா.முத்துச் செல்வன், மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் பாலசந்தர்போஸ், வாலிபர் சங்க கரூர் மாவட்டத் தலைவர் வி.சரவணன், மாவட்டச் செயலாளர் வி.எ.ஜெயவீரன், மாவட்டப் பொருளாளர் கே.ராஜா, ம.குணசேகரன், ஜே.பி. ராஜன், டி.தங்கவேல், சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Pin It