தி.மு.ராஜாமணியின் சமீபத்திய படைப்பான, ஆறாத்தீ, இடுவாய் கிராம வளர்ச்சிக்கான பெரும் போராட்டத்தில், முன்னின்ற வீரனின் வரலாறு குறித்தது. ஒரு கிராமத்தில், மின்வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, மயான வசதி, தீண்டாமை எதிர்ப்பு, பள்ளிக் கூடத்தை தரம் உயர்த்துதல், வி.ஏ.ஒ விற்கும் அலுவலகம் அமைத்தல், 1500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா பெற்றுத் தருதல், சாக்கடை வசதியை உருவாக்குதல், தலித்களின் உரிமைகளைப் பெறுதல், தெரு விளக்கினை எரியச் செய்தல், ஆகிய அடிப்படைப் பணிகளில் கிராம ஊராட்சியின் பங்கினை பாங்குற சொல்கிற நாவல். ஆனால் மக்களை நேசிக்கத் தெரியாத தலைவர்களால் இது சாத்தியமல்ல என்பதையும், நாவலின் நாயகன் ரத்தினசாமிக்கு முந்தைய ஊராட்சித் தலைவரின் செயல்கள் மூலம் பதிவு செய்கிறது.

மக்களை நேசிக்கும் மனப்பக்குவத்தை, ஒரு சிலரைத் தவிர, அனைவருக்கும் சமூகத்தின் புறச்சூழலே கற்றுத் தருகிறது. ஆறாத் தீ நாவலின் நாயகன் ரத்தினசாமி, இடுவாய் கிராமத்தின் வளர்ச்சிக்காக பணிபுரிந்த இளைஞர் கூட்டத்தின் தளபதி. சுயமாக கொண்டிருந்த மனித நேய உணர்வு, வாலிபர் சங்கத்தில் சேர்ந்து பணிபுரியத் துவங்கிய பின்னர், சமூக மாற்றம் குறித்த கனவுகளுடன் வளர்த்தெடுக்கப்பட்டதை நாவல் விவரிக்கிறது. ஊரின் கிரிக்கெட் அணி, இளைஞர் நற்பணி மன்றம், நூலகம், வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி, என படிப்படியாக, ரத்தினசாமியின் கூட்டுப் பணி குறித்த வரலாறு, மிகச்சிறந்த வகையில் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய பணிகள் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியதுதான். பலரும் செய்தது தான். இதை வரலாறு எழுதுபவர்களும் பலவகைகளில் பிரதிபலித்திருக்கிறார்கள். ரத்தினசாமியின் வாழ்க்கை வரலாறு சொன்ன விதத்தை, ராஜாமணி தனது எழுத்து மூலம் புதுமையாக்கி உள்ளார். இடுவாய் கிராமத்தின் சமூக, பொருளாதாரப் பின்னணியினை ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.

ஆதிக்கம் சமூக ஒடுக்குமுறையில் மட்டும் பிரதிபலிப்பதில்லை. ஒரே சாதி என்றும், தன்னுடைய சாதி என்றும், சொல்லிக் கொண்டாலும், ஏழையாக இருந்தால் பணக்காரனுக்கு அடங்கிப் போகவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது சாதிய அமைப்பை உருவாக்கிய நிலப்பிரபுத்துவம். ஏழை செய்யும் வேலை காரணமாக அவனை தறியோட்டி என அவமானப் படுத்தும் செயலையும் செய்யும் என்பதை நாவலின் ஓட்டம் வீரியத்துடன் வெளிப்படுத்துகிறது. சாதி ரீதியில் தாங்கள் அடக்கப் படுகிறோம் என்பதை அறிந்திருந்த பின்னரும், எதிர்க்கும் துணிவு இல்லாத காரணத்தால், சகித்துக் கொண்டிருக்கும் மனிதர்களாக சக்கிலிய வளவு மக்கள்.

டே தம்பி, நீ சக்கிலிய வளவுல ஒரு கண்ணெ வெய்யி. கடைசி நாள் சாப்பாட்டோட சாராயத்தையும் சேர்த்திக்க. சத்தியம் வாங்க மறந்துராத, என்ற வரிகள் மூலம், உழைக்கும் மக்களிடம் உள்ள எஜமான விசுவாசமும், ஆதிக்கக் கூட்டத்தின் சுரண்டும் குணமும் ஒருசேர அம்பலமாகிறது. ஒடுக்கப்பட்ட பெண் மீதான பாலியல் சுரண்டல் நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் நீதிமன்றம் கூட, பிராமண சாதியைச் சார்ந்தோர் தலித் பெண்ணிடம் பாலியல் உறவு கொள்ள மாட்டார்கள், என சான்று வழங்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள் குடித்த தேனீர் குவளையில் தேனீர் அருந்துவது தீண்டாமை, தலித் ஆண்கள் முடித்திருத்தம் செய்து கொண்ட பின் தாங்கள் சவரம் செய்வது தீண்டாமை, ஆனால் தலித் பெண்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வது, தீண்டாமையல்ல, சாதி உரிமை என்றே, ஆதிக்கக் கூட்டத்தினர், தங்கள் காமவெறியைத் தீர்த்துக் கொள்கிறார்கள். நாதப்பன் பாத்திரம் அத்தன்மையுடன் நாவலில் வெளிப்படுகிறது. அண்ணன்மார் கோவில் விழாவின் போது பன்றிக்கறிக்காக, தன் அதிகாரத் திமிரை தலித் மக்களிடம் வெளிப்படுத்துவதும், தலித் மக்கள் தங்களுக்கே உரிய வகையில் நையாண்டி செய்வதும் சரியான வரிகளில் பார்க்க முடிகிறது.

ஆதிக்க சாதி வெறி பல கொலைகளுக்கு வழிவகுக்கும், என்பதை கதைகளும், வரலாறும் நமக்கு உணர்த்தியிருந்தாலும், கிராம ஊராட்சி தலைவர் பதவியை அல்லது அந்தக் கால மணியக்காரர் பதவியை ஆதிக்க சாதியினர் எப்படி பயன்படுத்தியிருந்தனர், என்பதைத் தெளிவு படுத்துகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில், அதிகாரம் தன் கை வசம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பெரும்பணக்கார விவசாயிகள், தலித் மக்களின் உழைப்பில், அவர்களுக்கு குறைவான கூலி கொடுப்பதில், என பல வகைகளில் தங்கள் வருமானத்தை உயர்த்தி கொள்ளை லாபத்திற்கும், ஏற்பாடு செய்து கொள்கின்றனர். இது கடந்த கால வரலாறு. ஆனால், ஆறாத்தீ நாவலின் கதைத்தளம், இன்றைய நவீன முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று வருகிற கொங்கு மண்டலம் சார்ந்தது. சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, நவீன ஆலை உருவாக்கம் காரணமாக, முதலாளித்துவமும், தொழிலாளி வர்க்கமும் அதிகரித்துவரும் பகுதி. பன்னாட்டு நிறுவனங்களும் உட்புகுந்து லாபமீட்ட துடிக்கும் அளவிற்கு, பணப்புழக்கம் உள்ள பகுதியாக இந்த மண்டலம் உள்ளது. நவீன முதலாளித்துவம் வளர்ந்த அளவிற்கு, சாதிய பிடிமானங்கள் உடைபடாமல், பெரும் பாறாங்கல்லாக இறுகி, இருப்பதை சொல்லும் நாவலாக ஆறாத்தீ இருக்கிறது. அதன் காரணமாகவே ரத்தினசாமி உடல்மீது நடத்திய கொலைவெறி போதாது என, தன் சாதி வெறியையும் வெளிப்படுத்தி இருந்தனர். சக்கிலியனுக்கு ஆதரவாக போராடியதால் கொலை செய்கிறோம், என எழுதி தொங்க விட்டிருந்தனர்.

நாவல் சொல்லும் குடிநீருக்கான கதை சிறப்பானது. ஏற்கனவே இருந்த தலைவர் தனது வீட்டிற்கு தனி பைப் லைன் வைத்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் ஏற்பாட்டை யாரும் கேள்விக்கு உட்படுத்த வில்லை, முதலில் கேள்வி கேட்டது, இளைஞர் இயக்கம், அதன் பின்னரே, ஊருக்குப் பொதுவான தண்ணீர் குழாய் ஏற்பாடுகள் நடந்தது. இது நாவலின் நாயகனை பெருமைப் படுத்துவதற்காக கற்பனைக்கு சொல்லப்பட்டதல்ல. உண்மையான போராட்டமேயாகும், அதன் மூலம் தலித் மக்கள் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட இதர கிராம மக்களுக்கு, குடிநீர் கிடைக்கும் ஏற்பாடு, பொதுக்குழாய் மூலம் உறுதி செய்யப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகங்களிலும் ஊழல் நிறைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். இன்றைய உள்ளாட்சி நிர்வாகங்கள் குறித்து, 1986ல் பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப் பட்ட காலத்தில், ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது நினைவில் கொள்ளத்தக்கது. யானை அளவிற்கு நிதி ஒதுக்கி திட்டம் தீட்டினால், அது கிராமத்திற்கு போகும் போது, யானை வாலில் உள்ள முடி அளவிற்குக் கூட கிராமத்திற்கு செல்வதில்லை என்று பேசியுள்ளார். அப்படி பேசப்பட்ட காலத்தில், ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் சரியான முறையில் சம்மந்தப் பட்ட மக்களைச் சென்றடையும் வகையில், இடுவாய் ஊராட்சி மன்றம் செயல் பட்டது. ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அப்பணியை செவ்வனே செய்திருந்தனர்.

நாவல் ஆசிரியர், கதைத் தளத்தின் தேவைக்காகவும், தனது தகவல் திரட்டுதலின் வலிமையை வெளிப்படுத்தும் வகையிலும், சில விவரங்களை அருமையாகத் தொகுத்திருகிறார். முதலில், பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், ரத்தினசாமி மற்றும் அவர் தோழர்கள் சென்று, ஏற்கனவே பஞ்சாயத்துத் துணைத் தலைவராக இருந்த சொக்கப்பனிடத்தில் நடத்தும் உரையாடல். கிராம ஊராட்சி என்றால் என்ன? அதன் அதிகாரம் என்ன? என்பவற்றை ஒரு பாடமாக அமைத்திருக்கிறார். இரண்டாவது, பள்ளிக்கூடத்தினை தரம் உயர்த்துவது குறித்தது. ஊராட்சியின் நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது அவ்வளவு எளிதல்ல, என்பதையும் அதிகாரவர்க்கம், ஏராளமான நிபந்தனைகளை உருவாக்கி வைத்திருப்பதையும், நாவல் கதையாக சொல்லிச் செல்கிறது. இந்த இரண்டு விவரங்களும் எழுத்தாளர் சேகரித்து அறிந்திருக்க வேண்டிய தரவுகள், ஆசிரியர் ராஜாமணி மிகுந்த சிரத்தை எடுத்து இப்பணியை மேற்கொண்டிருக்கிறார் பாராட்டுக்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் பதவியில் இருக்கிற போது கொல்லப் பட்டிருகிறார்கள். நாவல் படைக்கும் மனிதர்களாக அவர்கள் இருந்தார்களா என்பது தெரியாது. ஆனால் ஒரு கிராம ஊராட்சித் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர் செயல் பாடு மற்றும் ஊராட்சியின் செயல்பாடு ஆகியவற்றை முன் வைத்து நாவல் படைக்கப் பட்டிருப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த ராஜராஜ சோழனின் பெருமையை பேசிக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இத்தருணத்தில், கிராம ஊராட்சியை சரியாக செய்ததற்காக படுகொலை செய்யப்பட்ட ரத்தினசாமியின், நாவல் வடிவ வரலாறு புதிய தலைமுறைக்கு மிக அவசியமானது. அதிகாரம் சின்னதா, பெரியதா என்பதைவிட மக்களுக்கானது என்பதை சொல்லும் மகத்தான நாவல் இது.

Pin It