"உலக ஆயுத வணிகம்’ குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என இளம் தோழர்கள் என்னிடம் கேட்டபோது என் மனதில் சில கேள்விகள் எழுந்தன. ‘உலகம்’ ‘ஆயுதம்’, வணிகம் என்கிற மூன்று சொற்களில் முதல் சொல் மட்டுமே இன்றைய நிலையை விளக்க உதவும் என எனக்குத் தோன்றியது. இன்றைய உலகின் மூலை முடுக்குகள் வரை ஆயுத வணிகம் எட்டியுள்ளது. சிறிய கொலை ஆயுதங்கள் முதல் மிகப்பெரிய ஏவுகணைகள், விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் வரை இன்று ஆயுதச் சந்தைகளில் கிடைக்கின்றன. நாடுகள் மட்டுமின்றி ஆயுதம் தாங்கிப் போர் செய்கிற குழுக்கள், இயக்கங்கள் யாரும் ஆயுதங்களை வாங்க இயலும். இணையத் தளங்களில் “ஆர்டர்’’ கொடுத்து ஏ.கே. 47 துப்பாக்கிகளை ஒருவர் வாங்கிவிட இயலும். இந்த வகையில் ‘உலகம்’ என்கிற சொல் அடுத்த கிரகங்களில் நாம் குடியேறாத வரையில் பொருத்தமானதுதான்.

ஆயுதம் என்றால் கத்தி, துப்பாக்கி, எறிகுண்டு என்கிற நிலை எல்லாம் தாண்டி இன்று மிகப்பெரிய பேரழிவுகளை கண நேரத்தில் உருவாக்கி கோடிக்கணக்கான மக்களைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய பேரழிவு ஆயுதங்கள் உருவாகிவிட்டன. இன்றைய குறிக்கோள் இத்தகைய பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதாகத்தான் உள்ளது. எனவே வெறுமனே ஆயுதம் என்று சொல்லாமல் ‘பேரழிவு ஆயுதங்கள்’ என்று சொல்வதுதான் பொருத்தம்.

‘வணிகம்’ என்கிற சொல் கூடப் பொருத்தமாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவருக்கொருவர் பொருட்களை விற்று, வாங்கி பரிவர்த்தனை செய்துகொள்கிற விவகாரமல்ல இது. பல வணிகர்கள் மத்தியில் பொருட்களைப் பார்த்து யாரிடம் வாங்குவது எனத் தேர்வு செய்கிற சுதந்திரமும் இங்கில்லை. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் இவ்வணிகத்தில் ஒரு சிலரே வியாபாரிகள். மற்ற எல்லோரும் வாங்குபவர்கள்தான். ஆக இது ஒரு ஏகபோக வணிகம். ஏகபோகத்திற்கான அத்தனை கொடூரப் பண்புகளும், விளைவுகளும் இதில் வெளிப்படுகிறது. ஆக இதனை ‘உலகப் பேரழிவு ஆயுத ஏகபோக வணிகம்’ (Global weapons monopoly) எனச் சொல்வதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

இராணுவச் செலவுகளுக்கே உலகம் இன்று ஆண்டொன்றுக்கு 1.5 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்கிறது. உலக மொத்த உற்பத்தில் சுமார் மூன்று சதம் இப்படிச் செலவழிக்கப்படுகிறது. இந்திய அரசு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்களை “பாதுகாப்பு ’’க்கென செலவழிப்பதை அறிவோம். 2006ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய நூறு அழிவாயுத உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பு 315 பில்லியன் டாலர்கள். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் பனிப்போர் முடிவடைந்ததை ஒட்டி கொஞ்ச காலத்திற்கு அழிவாயுத விற்பனை குறைந்திருந்தது. எனினும் விரைவில் சாவு வணிகங்கள் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் என்கிற சொல்லாடலையும் அதையட்டி உலகம் மாறிப்போன கதையையும் நாம் அறிவோம். எனவே மறுபடியும் 2003 தொடங்கி அழிவாயுத விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

அமெரிக்காவின் காங்கிரசுக்கான ஆய்வுச் சேவை (Congressional Research Service) அவ்வப்போது அழிவாயுத வணிகம் குறித்து ஆய்வறிக்கைகளை அளித்து வருகிறது. இணையத் தளங்களில் இவற்றைக் காணலாம். 2008ஆம் ஆண்டு அறிக்கையின்படி அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அழிவாயுத விற்பனை ஒப்பந்தங்களின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர். இதில் அமெரிக்காவின் பங்கு 37.8 டிரில்லியன் டாலர். அதாவது மொத்தச் சாவு வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு 68.7 சதமாகும்.

சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் (1990) மொத்த அழிவாயுத விற்பனை 32.7 பில்லியன் டாலராகவும், இதில் அமெரிக்காவின் பங்கு 10.7 பில்லியனாகவும் இருந்தது. எவ்வளவு வேகமாக அமெரிக்கா இந்த அழிவாயுத விற்பனையில் வளர்ந்துள்ளது என்பதைப் பாருங்கள்.

அழிவாயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நிற்கிற நாடுகளாக உள்ளவை ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், சீனா, இஸ்ரேல், நெதர்லான்ட், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, உக்ரேன், கனடா ஆகியன. இந்த நாடுகள் எல்லாம் சேர்ந்து செய்கிற அழிவாயுத வணிகம் மொத்தத்தில் 32 சதம். சாவு வணிகத்தில் அமெரிக்கா எந்த அளவிற்கு ஏகபோகம் கொண்டுள்ளது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இந்த அழிவாயுதங்களை யார் அதிகம் வாங்குகின்றனர்? எந்தெந்த நாடுகள் இத்தகைய அழிவாயுத இறக்குமதிக்கு அதிகம் செலவிடுகின்றன? இந்த விஷயத்தில் பிற எல்லா நாடுகளையும் ‘பீட்’ பண்ணி நம்பர் ஒன்னாக நின்று அமெரிக்க விசுவாசம் காட்டிக் குழைகிற நாடு இந்தியா.

2000 த்தில் மட்டும் 911 பில்லியன் டாலர் மதிப்புள்ள அழிவாயுதங்களை அது இறக்குமதி செய்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரித்து 2003இல், 2802 பில்லியன் டாலராகவும், பின்பு சற்றுக் குறைந்து, மீண்டும் 2007இல், 2179 பில்லியன் டாலராகவும், 2009இல், 2116 பில்லியன் டாலராகவும் இருந்தது. பாகிஸ்தான் தனது ஆயுத இறக்குமதிச் செலவை 158 பில்லியன் டாலரிலிருந்து 2000 த்தில் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 2009ல் இது 1146 பில்லியன் டாலராக இருந்தது. பிற முக்கியமான ஆயுத இறக்குமதி நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, கிரீஸ், தென்கொரியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், சீனா, நார்வே ஆகியன. சீனாவைப் பொருத்தமட்டில் படிப்படியாக தனது அழிவாயுத இறக்குமதிச் செலவை 2015 பில்லியன் டாலரிலிருந்து (2009)ல் 595 பில்லியன் டாலராக 2009 ல் குறைத்துள்ளது. அதுவே ஒரு ஆயுத ஏற்றுமதி நாடாகக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

பஞ்சைப் பராரி நாடுகளெல்லாம் இத்தகைய அழிவு ஆயுதங்களுக்காகச் செலவிடும் தொகைகளைப் பார்க்கும்போது நமக்குப் பகீரென்கிறது. அமெரிக்க இராணுவ மையமான பென்டகனின் தரவுகளின்படி கம்போடியா (3.04 லட்சம் டாலர்), கொலம்பியா (256 மில்லியன் டாலர்), பெரு (16.4 மில்லியன் டாலர்), போலந்து (79.8 மில்லியன் டாலர்) ஆகியன அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கின்றன. பென்டகனின் இன்னொரு அறிக்கையின்படி 2008இல் அமெரிக்காவுடன் அழிவாயுத இறக்குமதி ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளான, சவூதி அரேபியா (6.06 பில்லியன் டாலர்), ஈராக் (2.5 பில்லியன்), மொராக்கோ (2.41 பில்லியன்), எகிப்து (2.31 பில்லியன்), இஸ்ரேல் (1.32 பில்லியன்), ஆஸ்திரேலியா (1.13 பில்லியன்), தென்கொரியா (1.12 பில்லியன்), பிரிட்டன் (1.1 பில்லியன்), இந்தியா (1 பில்லியன்), ஜப்பான் (840 மில்லியன்).

1987ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் கோஸ்டாரிகாவின் குடியரசுத் தலைவருமான ஆஸ்கார் ஏரியஸ் சான்செஸ் கூறினார். “கல்வி, வீட்டு வசதி, மருத்துவம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு அழிவாயுதங்களில் முதலீடு செய்வதென ஒரு நாடு முடிவு செய்யுமானால் ஒரு தலைமுறையினரின் வாய்ப்புகளையும், நல்வாழ்வையும் அது புறந்தள்ளுகிறது என்றே பொருள். இந்தப் புவியில் வாழ்கிற ஒவ்வொரு பத்து மனிதருக்கும் ஒரு கொலை ஆயுதத்தை நாம் உற்பத்தி செய்துள்ளோம். ஆனால் நம்மால் சாத்தியம்தான் என்றாலும் பசியை ஒழிப்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. மொத்த அழிவாயுத வணிகத்தில் முக்கால் வாசியை பின் தங்கிய நாடுகளில் கொண்டு குவிப்பதற்கு நமது சர்வதேச நெறிமுறைகள் வழிவகுக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகள் ஏதுமில்லை. இந்த ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பொறுப்புகள் எதையும் சர்வதேச நெறிமுறைகள் ஆயுத விற்பனை நாடுகள் மீது சுமத்துவதுமில்லை.’’

(அடுத்த இதழில் தொடரும்)

Pin It