இளம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி கொடூரமாக ரசிக்கும் பணக்கார கும்பலை பழிவாங்கும், மகளை பறிகொடுத்த நடுத்தர வர்க்கத்தின் கதை யுத்தம் செய். கல்பாத்தி சகோதரர்களின் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்போடு மிஷ்கினின் 4வது படமாக வெளிவந்துள்ளது.

மழைபெய்யும் இரவு நாளில் ஆட்டோவில் 2 பெண்கள் கடத்தப்படுகிறார்கள். இருபெண்களும் யார் எனும் கேள்வியோடு படம் துவங்குகிறது. நகரின் முக்கிய பகுதியில் வெட்டப்பட்ட ஆண்களின் உடல் பாகங்கள் பொது இடங்களில் கண்டெடுக்கப்படுகிறது. இந்த இரண்டு குற்றங்களையும், துப்பு துலக்குகிறது போலீஸ். இளம் வயது மகளை பறிகொடுத்த டாக்டர் குடும்பம்தான் பெண்களை கடத்தும் கும்பலை பழிவாங்குகிறது என இறுதியில் தெரிகிறது.

முதல்காட்சியில் ஆரம்பமாகும் விறுவிறுப்பு இறுதி வரை செல்கிறது. காட்சிகளின் தொகுப்பாகவே சினிமாவை கைளாள்கிறார் மிஷ்கின். ஆகவே காட்சிகளின் நீளம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. காவல் நிலையம், உயர் அதிகாரி போலீஸ் குள்ளநரிகள் சமூகத்தில் அந்தஸ்து உள்ள வக்கிர எண்ணம் கொண்ட பணக்காரர்கள் இவர்களுக்கு அடியாளாக செயல்படும் இளைஞர்கள் என ஒரு குற்றத்தின் பின்னணியை விவரிக்க முயல்கிறது. அண்ணன், தம்பி, மகன் என எவரேனும் ஒரு ஆண்மகன் தான் தமிழ் சினிமாவில் பழிவாங்கப் புறப்படுவான். யுத்தம் செய்யில் ஒரு பெண். அதுவும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர். அய்யய்யோ..... இது அசிங்கம் என ஒதுங்கும் மனோநிலை கொண்ட இவரின் தன் மகள்போல வேறு ஒரு பெண் பாதிக்கக்கூடாது என பழிவாங்க துணிகிறார்கள்.

சேரன், ஜெயபிரகாஷ், மாணிக்க வினாயகம், லட்சுமி, ஓய்.ஜி. மகேந்திரன், இன்ஸ்பெக்டர் இசக்கி என நடிப்பில் முத்திரை பதிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகனின் கண்களாக மாறிவிடுகிறது. ஒளிப்பதிவு துப்பறியும் சினிமாவுக்கான திரில்லரோடு பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

ரவுத்திரம் பழகு, வெகுண்டெழு, பழிவாங்கு என இப்படம் சொல்கிறது. ஒரு தாயின் கோபம் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொலையில் நல்ல கொலை, கெட்ட கொலை என ஏதேனும் உள்ளதா? தனிமனித வன்முறையை ரசிக்கும் மனோபாவத்தை உருவாக்கிவரும் தமிழ் சினிமாவின் பாதிப்பும் இப்படத்தில் உள்ளது.

Pin It