கோபாவேசத்தோடு முழங்கிய நூற்றுக் கணக்கான ஆண்களும், பெண்களும் போராட்டத்தை வடிவமைத்துக் கொடுத்த வேலுச்சாமியை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டிருந்தனர். போராட்டம் நடந்து கொண்டிருந்த ஆரம்பசுகாதார நிலையத்துக்குள் டாக்டரும் ஊழியர்களும் சிறைப்படுத்தப்பட்டார்கள். வழக்கமாய் தடியெடுத்தவர்களெல்லாம், தண்டல் காரர்களாகி ஆளாளுக்கு சட்டம்பேசி கல்லா கட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வாயடைத்து நின்றனர். ஊமைகளாய் அடங்கிக் கிடந்த மக்கள் மட்டுமே இன்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

வேலுச்சாமி முற்றுகைப் போராட்டத்தின் முத்தாய்ப்பாய் சிறப்புரையாற்றிக் கொண்டிருந்தான். அதை போலீஸ் ஜீப்புக்குள்ளிருந்த ஸ்பெஷல் பிராஞ்ச் ஆள் டேப்பில் பதிவு செய்து கொண்டிருந்தான். பத்துப் போலீசார் அவன் பேசுவதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கொளுத்துகின்ற வெயிலில் உஸ்புஸ் என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார்களே ஒழிய மனுசமக்கள் எப்பவும் போல் வெயிலைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் தினசரி பிழைப்பே கொளுத்தும் வெயிலில் தானே!கணவனை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் கருப்பாயியின் நிலையை விவரித்துக் கொண்டிருந்தான் வேலுச்சாமி. சோகச் சுமைகூடி கனத்த இதயத்துடன் துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தார்கள் போராளிகள். நேற்றைய நிகழ்வுகளின்போது உடன் இருந்தவர்களின் மனத்திரையில் மின்னல்போல் காட்சிகளாய் வந்து போய்க் கொண்டிருந்தது.

அன்று காலை சுமார் ஒன்பது மணியிருக்கும். ஏரோட்டிய காளைகளை முளைக்குச்சிகளில் கட்டிவிட்டு வைக்கோல் பிடுங்கிக் கொண்டிருந்தான் கந்தசாமி.  பிள்ளைக்குப் பழைய சோற்றைப் பிசைந்து உருட்டி உருட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த கருப்பாயியின் காதுகளில் நாராசம் பாய்ச்சுவது போல் கந்தசாமியின் அபாயக்குரல் கேட்டது. அலறி அடித்துக்குரல் வந்த தோட்டத்துத் திசை நோககி ஓடினாள். பிடுங்கப்பட்ட வைக்கோலில் மூர்ச்சையாய்க் கிடந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த காளைகள், இப்போது இவள் ஓடிவருவதைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தன. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை கருப்பாயிக்கு. கதறிக் கூச்சல் போட்டாள். செம்பில் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து மடியில் அவனைக் கிடத்தித் துடைத்துவிட்டாள். பா.... பா... என்று ஆரம்பித்து மீண்டும் முர்ச்சையானான். அக்கம் பக்கத்திலிருந்து ஆட்கள் வந்தபடி இருந்தார்கள்.

போர்க்கால அடிப்படையில் பம்பரமாய்ச் சுழன்றார்கள். மாட்டு வண்டி தயாரானது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டவுனிற்கு உடன் போகத் தயாரானார்கள் சிலர். வழக்கமாக பொதுவான நிகழ்வுகளுக்கு போகக் கூடியவர்கள் அவர்கள் கருப்பாயியின் அழுகை ஒரே மகன் மூன்றுவயது மழலையையும் அழவைத்தது.

“விஷக்காளிதான் தீண்டியிருக்கணும்”“பா.... பான்னு கந்தசாமி சொன்னதுனால் பாம்புதான் கடிச்சிருக்கணும். உடனே கொண்டு போயாகனும்”.

“நம்ம முத்துவோட மாட்டுவண்டி கால்மணி நேரத்திலபோயிடும்.” ஆனா அந்த டாக்டர் மவராசன் ஆஸ்பத்திரியில் இருக்கணுமில்ல. ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று திக்கென்றானது கருப்பாயியிக்கு. டாக்டர். இல்லாவிட்டால் என்ன செய்வது? வண்டியில் ஏறியவள் மீண்டும் இறங்கி வீட்டுக்குள் சென்று ஒரு நிமிசத்தில் திரும்பினாள். அவளுக்கென்று இருந்த ஒரே ஆஸ்தி ஒரு பவுன் செயின் அதைவிற்றாவது வைத்தியம் பார்த்து புருசனைக் காப்பாற்ற வேண்டும். வண்டி பறந்தது. அவள் மனமும்தான். கூடவே குலதெய்வம் எட்டியம்மனை நினைத்து பிரார்த்திக் கொண்டேயிருந்தாள். ஆடிமாதம் உபயம் செய்வதாக பிரார்த்தனை தேசியமயமாக்கப்பட்ட லஞ்சம் கடவுளுக்கும் பொருந்தும் தானே.

பத்து நிமிசத்தில் பறக்க வைத்து ஆஸ்பத்திரியில் வண்டியை நிறுத்திய முத்து நன்றியோடு பார்க்கப்பட்டான். கந்தசாமியைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குள் விரைந்தனர்.

எல்லோர் கண்களும் டாக்டரின் அறையை நோக்கின. அவர் இருந்தால்தானே... இன்னும் வரலீங்க... கம்பவுண்டர் சர்வ சாதாரணமாய்ச் சொன்னார்.

டாக்டருக்காக காத்துக் கிடந்த ஜனங்கள் பெஞ்ச் மீது கிடத்தப்பட்டிருந்த கந்தசாமியையே பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தனர். நர்சம்மா கிட்டே வந்து நாடிபிடித்துப் பார்த்து...

“இப்பவும் குடி முழுகிடலை... பார்மசிஸ்ட்டுகள் சார் டாக்டர் ஸ்டாக் ரூம் சாவி கொடுத்துட்டுப் போயிருக்கார்ல.... கொடுங்க பாம்புக்கடி இஞ்சக்ஷன் மருந்து உள்ள இருக்கு. எடுத்துப் போடலாம் சார்...”  பதைபதைப்போடு கேட்டாள் நர்ஸ்.

“அட நீ ஒண்ணு... சாவியும் கொடுக்கல... மண்ணும் கொடுக்கல... வழக்கமா கொடுத்துட்டுப் போறவரு.. நேற்றுக் கொடுக்காமலேயே போயிட்டாரு”. அவர் பாட்டுக்கு ஏதோ சிரத்தையாய் எழுதிக் கொண்டிருந்தார். நேற்று டாக்டரைப் பார்க்கவந்து ஏமாந்துவிட்டுப் போன நோயாளிகள் கம்பவுண்டரை மனுதுக்குள்ளேயே சபித்தார்கள்.

கிராமத்து ஜனங்கள் பொரிந்து தன்ளினார்கள், நர்சுக்குப் புரிகிறது. கம்பவுண்டரையும் புரியவைக்க முடிகிறது. ஆனால் நிஜம்தான் என்ன? டாக்டர் வரமாட்டார். அவர் திங்கள், புதன், வெள்ளி என்று வழக்கப்படுத்திக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வரும் அவலம் இருவருக்கு மட்டுமே தெரியும். கேட்டால் டி.டி. மீட்டிங்.. அது இது என்று மழுப்புவது வாடிக்கை இந்த டாக்டர் புதியதாய் வந்து ஆறு மாதமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நொடியும் விலை மதிப்பில்லாதது என்பது நர்சுக்குப் புரிகிறது. பெஞ்சின் கீழே குழந்தையுடன் அழுது கொண்டிருந்த கருப்பாயியைப் பார்த்தாள். பரிதாபமாகப் பார்த்தாள் நர்ஸ். வந்திருந்த கும்பலில் விவரமான ஆனைத் தேடினாள் நர்ஸ். ஒருவன் பேண்ட் - ஷர்ட் போட்டுக் கொண்டிருந்தவன் வயதான நபரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

காலம் கடத்துறதுல பிரியோஜனமில்லை... இப்பவே நாம கந்தசாமியைக் கொண்டு வந்து ஒருமணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சி.. இன்னும் அஞ்சு நிமிசத்துள் பஸ் வரப்போகுது. அதில் கந்தசாமியை ஏத்திகிட்டு டவுனுக்குக் போயிருவோம். முக்கால் மணி நேரத்துள் போயிடும். பெரிய ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்த்துப் பிழைக்க வச்சிடலாம்.

தலையசைத்தார் பெரியவர். தான்சொல்ல வந்ததை அந்த இளைஞனே சொல்லியதில் திருப்தியடைந்த நர்ஸ் “பெரியவரே.. தாமதிக்காதிங்க.. மத்த கதைகளை பிறகு பார்த்துக்குவோம். இந்த ஊர்ல டாக்சி ஆட்டோ எதுவும் கிடையாது. பஸ் வர்ர டைம்” துரிதப்படுத்தினான் மாட்டுவண்டி கந்தசாமியையும் மனைவி மற்றும் சிலரையும் ஏற்றிக் கொண்டு பஸ்ஸ்டேண்டை நோக்கிப் பறந்தது.

அரசு பஸ்சாக இருந்தாலும் பஸ் டிரைவர் நிலைமையைப் புரிந்து கொண்டு வேகத்தைக் கூட்டினார். கந்தசாமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கருப்பாயிக்குக் கந்தசாமி மகனைப் பார்த்துக அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் வந்து வந்து போயின.

“நம்ம பையன் நல்லா படிச்சி டாக்டராகனும். நம்ம ரெண்டு பேர்ல யார் முன்னாடி போயிட்டாலும் எப்படியாவது அவனை முன்னுக்குக் கொண்டு வரனும்”மகனைப்பார்த்து தேம்பினாள் கருப்பாயி. மழலையின் கன்னமிரண்டிலும் காய்ந்த கண்ணீர்க் காட்டினாள். பெரியவர் நாடி பிடித்துப் பார்த்தார்.  கண் கலங்கினார். ஒன்றும் பேசாது கம்பியைப் பிடித்து நின்று கொண்டே இருந்தார். பின் சீட்டிலிருந்து ஹோமியோபதி டாக்டர் நிலமையiப் புரிந்து கொண்டு தன்பையைத் திறந்து ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதித்தார். டாக்டர் கைவிரித்துச் சப்புக் கொட்டவும் பஸ் ஸ்டேண்ட் வந்து சேர்ந்தது பஸ்.

வேலுச்சாமி இப்போது இடிபோல் முழங்கிக் கொண்டிருந்தான். “கந்தசாமியின் மரணத்துக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுரேஷ்தான் பொறுப்பாளி என்று நாங்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம். தினமும் காலை 8 மணிக்கெல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஜராக வேண்டியது டாக்டரின் முக்கியக் கடமை. அது மட்டுமல்ல. தலைமையிடத்தில் அதாவது இங்கு கட்டித் தரப்பட்டுள்ள குவார்ட்டசில் தங்காமல் 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலிருந்து வந்து போவது ஏற்றுக்கொள்ள முடியாத விசயம். வராத புண்ணியவான் ஸ்டாக்ரூம் சாவியையும் தராமல் போயிருக்கிறார். இதனால் உயிர்காக்கும் மருந்துகளை அந்த அறையிலிருந்து ஆபத்துக்கு வெளியே  எடுத்துப் பயன்படுத்த முடியாத இக்கட்டான  சூழ்நிலைக்கு ஊழியர்களைத் தள்ளிவிட்டார் டாக்டர். இங்கு அனாதையாய் நிற்கும் கருப்பாயியிக்கு மட்டும் எமனாகத் தெரியவில்லை. கூடியிருக்கும்  எல்லா மக்களுக்கும் எதிரிதான் டாக்டர். இது சாவு.. அல்ல.. அல்ல.. கொலை இரண்டாவது சம்பவம் என்பதை நினைவுக்குக்  கொண்டு வருகிறேன். கடந்த மாதம் இடைவிடாத பேதியால் இறந்துபோன 15 வயது பையன் சிங்காரம், இவனுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க அன்றைக்கும் டாக்டர் இல்லை அதை மறுக்க முடியுமா.. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இந்தப் போராட்டம் முடியாது.

தொடர்ந்து கொண்டிருந்த பேச்சுக்கிடையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் கோஷம் விண்ணைப் பிளந்தது. உள் அறைக்குள் இன்பெக்டரும், டாக்டரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“டாக்டர்.. இவ்வளவுக்கும் காரணம் இப்ப பேசிக்கிட்டிருக்கானே அந்த வேலுச்சாமி பயதான் செத்துப்போன கந்தசாமியோட உறவு கூட இல்லை ராணிப்பேட்டை சிப்காட்டில் தொழிற்சாலையில் வேலை பார்க்குறான். யூனியன் லீடர். அதுதான் சாவுக்கு வந்தவன் வச அடக்கம் பண்ணதுமே.. கூட்டம் போட்டு உடனடிப் போராட்டத்துக்குத் திட்டமிட்டு உக்கிரமாய் நடத்திக்கிட்டிருக்கான்.” “எல்லாம் சரிதான். இன்ஸ்பெக்டர் சார் எப்படியாவது இப்ப இந்தப் போராட்டத்தை நிறுத்தனும் இன்னும் கொஞ்சம் போனால் எல்லாக் கூட்டமும் உள்ளே புகுந்து என்னை அடிச்சி நொருக்கிடுவாங்க போலிருக்கே.” கவலையோடு பார்த்தார் டாக்டர்.

“நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்ன மாதிரி தடியடிப் பிரயோகம், கண்ணீர்ப்புகை மூலமாக இந்த முற்றுகைப் போராட்டத்தினைத் தடுக்க முடியாது. அரசாங்கத்தோட பாலிசிபடி தடியடி, கண்ணீர் புகையெல்லாம் டி.எஸ்.பி பெர்மிசன் வாங்காம ஈசியா செய்ய முடியாது.. பெர்மிசன் வாங்கறதும் குதிரைக் கொம்பே.. ம்.. ஒரு வழி தோணுது.”“என்ன அது சீக்கிரம் சொல்லுங்க” ஆர்வமாய்க் கேட்டார் டாக்டர்.

“பணத்துக்கு மயங்காத யூனியன் லீடர் அபூர்வம்தான் நான் பேச்சு வார்த்தைன்னு அழைச்சிகிட்டு வரேன். ஒரு தொகையை நிவாரணமாகக் கொடுக்கிறாதா சொல்லி போராட்டத்தை முடிக்கச் சொல்லலாம். ஓகேயா”“தொகைன்னா.. இஷ்டத்துக்குக் கேட்பாங்களே.. வாட் கேன் ஐ டு ” சலித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் “அட நீங்க வேற.. எனக்குக் கொடுத்தீங்கல்ல.. ஆயிரம்.. அதப்போல இவனுக்கு ஒரு ஆயிரத்தையும், கருப்பாயியிக்கு ஒரு ஆயிரத்தையும் கொடுத்தா எல்லாம் சரியாய் போயிடும்”லத்தியைச் சுழற்றிக் கொண்டே வெளியே வந்த இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தைக்கு அழைக்க மக்களின் ஒப்புதலோடு வேலுச்சாமி உள்ளே போனான். போராட்டம் தொடர்கிறது என்பதைத் தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆஸ்பத்திரிக்கு வந்த மக்களும் சங்கமமானார்கள்.

கோபத்தோடு வெளியே வந்த வேலுச்சாமி உள்ளே நடந்த விசயங்களை விளக்கிக் கொண்டிருந்தான்.

“அனுமதியோம்.... அனுமதியோம்.. இந்தப் போக்கை அனுமதியோம்..” ஆண்களும், பெண்களும் மட்டுமல்ல. சின்னஞ்சிறுசுகளும் சேர்ந்து கொண்டன. வேலுச்சாமி ஏதோ யோசனை செய்தவனாய் பெண்கள் சார்பாக கருப்பாயியின் தோழி பொன்னுத்தாயியைப் பேசக் கூப்பிட்டான். மேடைப் பேச்சு அனுபவமில்லையென்றாலும் அந்த கிராமத்தில் பெண்கள் மத்தியில் விசயங்களைப் பேசக் கூடியவள் பொன்னுத் தாயிதான்.

“இந்தப் போராட்டத்துல நமக்கு ஒரு தீர்வு கிடைத்தே தீரணும்கிற நோக்கத்தோட இந்தப் போராட்டத்தை நடத்திக்கிட்டிருக்கோம்.” தன்னோட புருசனை இழந்திட்டு இன்னிக்கி குடிசையில் குமுறிக்கிட்டிருக்கா கருப்பாயி. அவளோட நான் பேசறப்போ சொன்னது இதுதான். என்னோட நெலமை இனி ஒருத்தருக்கும் வரக்கூடாது. என் விருப்பம் இதுதான், போராட்டம் மூலமா டாக்டரைத் திருத்தப் பாருங்க திருந்தலன்ன.. வேறு டாக்டரை ஊரிலேயே தங்கி வைத்தியம் பார்க்கிற டாக்டரா  போடுங்கன்னு விடாமல் போராடுங்க.. என்னால போராட்டத்துக்கு வரமுடியாத நெலமைங்கிறது எல்லோருக்கும் தெரியும். எதிர்காலத்தில் எந்த ஒரு ஜீவனும் டாக்டர் இல்லங்கிற குறையால வைத்தியம் பார்க்க முடியாம சாகக் கூடாது. இந்தக் கருப்பாயின் கனவை நிறைவேத்தணும்னா நாமரெண்டு விசயத்துல உறுதியாக இருக்கனும். ஒன்னு... இந்த டாக்டர் திருந்தராப்பல இல்ல. வேலுச்சாமி பேசப் போனப்ப அந்த டாக்டரோட புத்தி லஞ்சம் கொடுக்கிற ரூட்லதான் போயிருக்கு.. அதுமட்டுமல்ல.. மெட்ராசில் இந்த டாக்டர் பிசினஸ் பண்றதா சொல்றாங்க. அப்படி இருக்கறப்ப.. உயிரோடு விளையாடிய இந்த டாக்டருக்குப் பாடம் கத்துத் தரனும். வேலைநீக்கம் செய்ய வற்புறுத்துவதுதான் ஒரே வழி. இந்த ஊர்லயே குடுபத்தோடு தங்கி வைத்தியம் பார்க்கிற மாதிரி வேறு டாக்டரைப் போடனும். ரெண்டாவது பாம்பு கடிச்சி செத்துப்போன கந்தசாமி இல்லாம நிர்க்கதியா நிக்கிற கருப்பாயி குடுபத்துக்குத் தகுந்த நிவாரணம் கொடுத்தாகனும்.

தூரத்தில் நின்று கேட்டுப் கொண்டிருந்த எஸ்.பி.யும், டி.டி யும் ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பொன்னுத்தாயின் அற்புதப் பேச்சுக்கு மனதிலேயே சபாஷ் சொல்லிக் கொண்டார் டி.டி ஏற்கனவே டாக்டர் பேரில் வந்த புகார் மனுக்கள் எல்லாம் போராட்டத்துக்கு நியாயம் கற்பித்தன. தங்கள் காரும் ஜீப்பும் வந்த பின்பும் கூட்டம் தங்கள் போராட்ட நடவடிக்கையிலிருந்து சிறிதுகூட பின்வாங்காமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. டி.எஸ். பிக்கும் டி.டி க்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. தகவல் அறிந்து ஓடிவந்த இன்ஸ்பெக்டர் டி.எஸ். பிக்கு சல்யூட் போட்டார். இதையெல்லாம் சட்டை செய்யாத இரண்டு மேலதிகாரிகளும் போராட்டக் களத்தில் வந்து மக்களை நோக்கி வணக்கம் தெரிவித்தார்கள்.

டி.டி. மக்கள் மத்தியில் பேசினார். எல்லோருக்கும் வணக்கம். உங்கள் போராட்டத்தை மதிக்கிறோம். நியாயமான உங்களின் உணர்வுகளை நாங்கள் புரிந்து கொண்டோம். உயிருக்கு விலைபேசிய டாக்டரிடம் சோரம் போகாத வேலுச்சாமியைப் பாராட்டுகிறேன். இனியொரு உயிரைப் பறிக்க அனுமதியோம். அதற்காக இனி வேறு டாக்டரை ஊரில் தங்கி இருக்கும்படி பணியில் அமர்த்துகிறோம். உங்கள் விருப்பப்படியும் ஏற்கனவே வந்துள்ள புகார்களின்படியும் தற்போதுள்ள டாக்டர். சுரேஷ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுகிறார். டாக்டர் தயாளன் என்பவர் நிரந்தரமாக இங்கேயே தங்கிருப்பார் என்ற உத்தரவாதமும் தருகிறேன். குறுகிட்ட தாசில்தார்...  பாதிக்கப்பட்ட கருப்பாயியின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத்தொகை விரையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

மக்களின் துயரம், கோபம் எல்லாம் திசை மாறின. நிரந்தரமாய் தங்கி சிகிச்சை செய்யப் போகும் டாக்டர் தயாளனைப் பற்றிய நினைவுகளில் மையம் கொண்டனர் மக்கள்......
Pin It