வேலையின்மை பெருக்கம் முதலாளித்துவத்திற்கு உதவுவதாலேயே, அரசுகள் வேலையின்மை ஒரு நாட்டின் பலவீனத்தை எடுத்துக் காட்டும் அடையாளம் என்பதை பொருட்படுத்தவில்லை. தற்போது உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இன்னும் முடிந்த பாடாக இல்லை. அமெரிக்காவில், வேலையின்மையின் விகிதாச்சாரம் உயர்ந்து கொண்டே செல்கிறது, 10 சதத்தையும் கடந்து விட்டது. ஐரோப்பா இது வரை கண்டிராத வேலையின்மையின் விளைவுகளைச் சந்தித்து வருகிறது. முதலாளித்துவ நாடுகளின் பிரதிநிதிகளே, நெருக்கடியில் இருந்து மீள்வது சாத்தியமா? எனச் சந்தேகம் எழுப்பும் மனநிலையில் இருப்பதைச் செய்திகள் சொல்கின்றன. அதே நேரத்தில், முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாகவும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் வலதுசாரி அரசியல் வலுப்பெறுவதும் கூட சாத்தியமாகிறது.

வலதுசாரி அரசியல் வலுப்பெறுவதில் மதத் தீவிரவாத அமைப்புகளுக்கு பங்கு இருக்கிறது. நாம் எற்கனவே விவாதித்த அடையாள அரசியலையும் முன்னெடுக்க துணை செய்கிறது. இது பிரச்சனையைத் தீர்க்க உதவுவதற்குப் பதிலாக, புதியபிரச்சனையைக் கொண்டுவருவதுடன், திசை திருப்பவும் செய்கிறது. மற்றொரு புறம், வலதுசாரி அரசியல் மேலோங்கும் போது, ஜனநாயகத்திற்கான போராட்டம் முன்னுக்கு வந்து, அடிப்படைக் கோரிக்கையான வேலையின்மை பின் தள்ளப்படுகிறது. இதுவும் முதலாளித்துவத்திற்கே லாபம் தருவதாக அமைகிறது. ஏனென்றால், எங்கெல்லாம் பிற்போக்கு அரசியல் தலையெடுத்ததோ அங்கெல்லாம், முதலாளித்துவத்தின் லாபம் பறிக்கப்படவில்லை, மாறாக வளர்ந்தது. பல இடங்களில், அத்தகைய ஜனநாயக உரிமைப் பறிப்பிற்கு முதலாளித்துவம் துணைசெய்கிறது.

முதலாளியின் லாப வேட்கை, உழைப்பு சுரண்டலை அதிகரிக்கிறது. உழைப்புச் சுரண்டலை எதிர்க்கிற காரணத்தாலும், அதிக லாபமீட்ட முயற்சிப்பதாலும், நவீனத்துவம் என்ற பெயரில் இயந்திரங்களின் மூலமும், உற்பத்தி சக்தியாக உள்ள மனித உழைப்புச் சக்தியைக் குறைக்கிறது. அரசும் தனது செலவினக் குறைப்பு, சிக்கனம் என்ற பெயரில், அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. நவீன இயந்திர மயமாக்கலால் உற்பத்தி அதிகரித்து, முதலாளிகளின், லாபம் கொழிக்கிறது. அது ஏற்படுத்தித் தரும் மூலதனம், தொழில் மூலதன வடிவத்தில் இருந்து, நிதி மூலதன வடிவத்திற்கு மாற்றம் பெறுகிறது. ஏற்கனவே ஆட்குறைப்பு நடைபெற்று வரும் ஒரு சமூகத்தில் நிதிமூலதனத்தின் செயல், வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியைத் தீவிரப்படுத்துகிறது. இந்த இடத்திலேயே வேலையற்ற இளைஞனின் கல்வித் தகுதியும், திறனும் கேள்விக்கு உட்படுத்தப் படுகிறது. இத்தகைய செயல்களால், வேலையின்மை மிகுந்த தீவிரம் பெற்று, சமூகத்தில் பல பாதிப்புகளை உருவாக்குகிறது வேலையின்மை, தீவிரவாதத்தை, அடிப்படைவாதத்தை, சாதி, மத அடிப்படையிலான அடையாள அரசியலை, ஜனநாயக உரிமைப் பறிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஜனநாயகப் போராட்டத்தில் முதலாளித்துவத்தின் மீது எந்த பாதிப்பும் வராத நிலையில், தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகிறது..

மேற்கண்ட சுழற்சி தொடர்ந்து நடைபெறுவதால் முதலாளித்துவம் சேதாரம் இல்லாமல், லாபமீட்டும் பணியைத் தொடரும் வழிவகையை சமூகம் உருவாக்கித் தருகிறது. ஆகவே தான் டி.ஒய்.எஃப்.ஐ, போன்ற அமைப்புகள முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் இந்த சமூக அமைப்பு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும், என வலியுறுத்துகின்றன. எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற முழக்கம் வெற்றி பெறுவதும், அந்த சமூக அமைப்பில் சாத்தியம், என்பதையும் வலியுறுத்துகின்றன. இப்போது நாம் வாழும் உலகம் முதலாளித்துவ உலகம் மட்டும் அல்ல. இதைப் பொருளாதார அறிஞர்கள், கேடுகெட்ட, கொடிய முதலாளித்துவம் என குறிப்பிடுகின்றனர்.

உதாரணத்திற்கு, முன்னெப்போதும் இல்லாத, ஊழல் பெருக்கெடுத்திருப்பதைக் கூற முடியும். சாதாரண முதலாளித்துவம் இருந்த போது, நடைபெற்ற ஊழலை விடவும் பலமடங்கு அதிகமான தொகை ஊழல், நடவடிக்கைகளால் தனி நபர் சுருட்டிச் செல்ல இடம் அளிக்கிற முதலாளித்துவ ஆட்சிமுறையாக இருக்கிறது. எனவே தான் இந்த ஆட்சி அமைப்பு முறை, முதலாளித்துவத்திலும் கொடிய முதலாளித்துவம் எனச் சொல்லப் படுகிறது. அதாவது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இரண்டாம் அலைவரிசை என்கிற தொழில்நுட்பம், பல தனியாருக்கு, விற்பனை செய்யப்படுகிற போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், புறந்தள்ளப்படுகிறது. அதற்காக, ஒரு பெண், முதலாளிகளுடனும், அரசுத்துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனும் தரகு வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்.

மிகக் குறைந்த விலையில் மேற்படி விற்பனையை நிகழ்த்த, மேலே குறிப்பிட்ட அனைவரும் சதிச் செயல்களில் ஈடுபட்டு, பி.எஸ்.என்.எல்.லுக்கு கிடைத்திருக்க வேண்டிய லாபமான, 1.76 லட்சம் கோடியை, தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். இந்த தொகையைக் கொண்டு அரசு அல்லது பி.எஸ்.என்.எல் நிறுவனம், பல லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம். ஆனால் சில தனி நபர்கள் கொள்ளை அடித்து செல்ல உதவியாக இருக்கும் வகையில், நமது ஆட்சி முறை இருக்கிறது. இதோடு கூடவே ஏக போகம் குறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. நாம் மேலே சொன்ன ஊழலில் சம்மந்தப் பட்ட அனைவரும், தொலைபேசித் துறையில் ஏகபோக நிறுவனங்களாக விளங்கி வருபவை. முதலாளித்துவத்தில் ஏகபோகம் வளர்ச்சி பெறுகிற போது, அவர்களுக்கான சலுகைகளும் அதிகரிக்கும். அந்த சலுகைகள் படிப்படியாக அதிகரித்து, நாட்டின் சட்ட திட்டங்களையும் வளைக்கும் அதிகாரம் கொண்டதாக மாறும்.

இன்றைய உலக மய பொருளாதாரக் கொள்கைகள் இந்திய மண்னில் காலடி எடுத்து வைக்கத்துவங்கிய பின்னரே, லட்சங்களிலும், ஒரு சில கோடிகளிலும் நடைபெற்ற ஊழல்கள், சில ஆயிரம் கோடி ஊழல்கள் பெருச்சாளியைப் போல் வீக்கம் பெற்று, லட்சக்கணக்கான கோடியாக, உருப்பெறத்துவங்கியுள்ளது. இதில ஆட்சியாளர்களும் தங்களின் ஏகபோகத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர். அத்தகைய விருப்பம் தான், தி.மு.க. தலைமை, எடியூரப்பாவின், பா.ஜ.க. ஆட்சி, அசோக் சவான் செய்த ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல். இப்படி பன்னாட்டு மற்றும் ஏக போக நிறுவனங்கள் அதிகரிக்கிற போது, இந்தியா போன்ற நாட்டில் 6 வருடங்களுக்கு முன்பு இருந்த, 5000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டாரின் எண்ணிக்கை, 52 ஆக உயர்ந்துள்ளது. பெரும் பணக்காரர்களின் பிடியில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டால், வேலை வாய்ப்பு உருவாகும். ஆனால் உரிமைகள் அற்ற சுரண்டல் நிறைந்த, கொடிய முதலாளித்துவத்திற்கு கட்டுப்படுகிற சட்டங்களைக் கொண்டதாக இருக்கும். இந்த வாதங்களின் பொருள் என்னவென்றால், இந்தியாவில் வளம் இல்லை என்பதோ, இந்த ஜனநாயக முறையில் வேலை வாய்ப்பை உருவாக்க முடியாது, என்பதல்ல.                      

(தொடரும்)

Pin It