கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கேரளம்... இந்தியா உட்பட, மூன்றாம் உலக நாடுகளையும் வியக்க வைக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தர வளர்ச்சி, பொறாமைப் படத்தக்க அளவுக்கு சமுதாய ஆய்வாளர்களின் கவனத்தை இந்தச் சிறு மாநிலத்தின் மீது திருப்பியிருக்கிறது. காலத்துக்கேற்ற நாகரிக உறைவிடமாகவும் கேரளம் கணிக்கப்படுகிறது. வரலாற்றில் தடம்பதித்த இத்தகைய மாற்றங்களுக்கு, சமுதாய அமைப்புகளின் மூலம் கிடைத்த அரசியல் ஞானமே அடித்தளம் அமைத்தது. அத்துடன் கேரளத்திலமைந்த கம்யூனிஸ்ட் அமைச்சரவைகள் நிறைவேற்றிய முற்போக்கான சட்டதிட்டங்களும் அதில் அடங்கும்.

கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவைத் தலைவர் எனும் நிலையில், இந்த செயல் திட்டங்களில் இ.எம்.எஸ் ஸின் பங்களிப்பு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. 1957 ஏப்ரல், 5ஆம் நாள், 11 அமைச்சர்களுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற கேரள கம்யூனிஸ்ட் கடசியை, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் சக்தியாக மாற்றியதிலும் அவரது தொலைநோக்குப் பார்வை தென்படுகிறது.

அமைதி வழியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை உருவாக்கிய புதிய சித்தாந்தம், ஏகாதிபத்திய சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பும் மிக்கவர்கள் என விமர்சிக்கப்படும் கம்யூனிஸ்டுகளின் கையில் ஆட்சி கிடைத்தால் உருவாகும் ஆபத்துகள் குறித்த முன்னறிவிப்பை முழங்கிய சூழலில்தான் வாக்குச் சீட்டு வழியாகக் கேரளத்தில் ஆட்சியமைப்பு, அதன் எதிர்கால முன்னேற்றம், எல்லைகள் என்பன பற்றி இ.எம்.எஸ் பல்வேறு சகோதரக் கட்சிகளுடனும் விவாதித்தார். அவை, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆம் காங்கிரஸில் கலந்து கொள்ள அவர் சென்ற நேரத்தில் நடைபெற்றன. அன்றைக்குப் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளின் விவாதத்தில் கேரளம் முக்கிய விஷயமானது. அப்போது இ.எம்.எஸ் கூறினார்.... இந்தியாவிலுள்ள இன மற்றும் சமூக வேறுபாடுகளின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுப்பினர் நான். எனினும் அவை உள்ளடங்கிய கேரள அரசின் தலைவன் என்ற முறையில்தான் செயல்படுகிறேன். இத்தகைய இரு வேறுபட்ட சூழ்நிலையிலான எனது செயல் பெரியதோர் அரசியல் கழைக்கூத்தாடியின் விளையாட்டே....

முதலாளித்துவ செயல்பாடுகள் ஆழமாக வேரூன்றி நிற்கும் ஒரு நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளுமன்றச் செயல்பாட்டை அறிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை 1957இன் அனுபவம் முன்வைத்தது. முதலாளித்துவ குடியரசு அமைப்புகளுக்கான தேர்தல்களில் பங்கெடுப்பதுடன், வாய்ப்புக் கிடைத்தால் ஆட்சி நடத்துவது என்பது மார்க்சியக் கொள்கைகளுக்கு எதிரானதல்ல!.. என்ற சுய விளக்கமாகவும் இது விளங்கிறது. ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களையும் அதில் தொழிலாளி வர்க்கக் கட்சிகள் ஈட்டும் வெற்றிகளையும் மார்க்சும், ஏங்கல்சும் கவனமாக உற்று நோக்கிய ஒரு காலம் உண்டு.

இத்தாலிய சோஷலிஸ்ட் கட்சிக்கு ஏங்கல்ஸ் எழுதிய கடிதம் மக்களாட்சியில் பங்கு கொண்ட ஏனைய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவை அமைக்கும் நிலை எய்தினால், அதில் சோஷலிஸ்டுகளும் பங்கு சேரும் கட்டத்தை முக்கியத்துவத்துடன் விமர்சிக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் ஏனைய களங்களுடன், நாடாளுமன்றச் செயல்பாடுகளும், மாறுபட்ட கருத்துகளின்றி ஒற்றுமையுடன் செயல்படுத்துவதில்தான் அனுபவமிக்க கம்யூனிஸ்டுகளின் வெற்றி இருக்கிறது எனலாம். இதில் கேரள கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றிக்கு இ.எம்.எஸ்ஸின் தலைமையை ஒரு சான்று எனலாம். முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளாமல் விட்ட கடமைகளையும் சேர்த்து நிறைவு செய்ய, தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு இதுவென்று அடையாளம் காணப்பட்டது.

28 மாத ஆயுள் கொண்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு அங்கீகரித்தவற்றில் மிகவும் முக்கியமானது விவசாயம் தொடர்பான ஆணை (1959ஜூன் மாதம்) பின்னால், கேரளத்தின் பிந்தைய முழுமுதல் முன்னேற்றத்துக்கும் அது காரணமானது. இதைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே நிலத்திலிருந்து வெளியேற்றுவதையும், குடியுரிமை ரத்து செய்வதையும் தடை செய்யும் அவசர ஆணை பிறப்பித்தது. (1957 ஏப்ரல் 11இல்) இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்ச்சி. பிறர் அறியாமல் அவர்களை மெல்ல வசப்படுத்தி, தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் காங்கிரஸின் செயல்பாட்டிலிருந்து, முற்றிலும் வித்தியாசமான ஒரு அணுகுமுறையாக இருந்தது இது. காங்கிரஸ் அரசுகள் மேற்கொண்ட விவசாயச் சீரமைப்பின் எல்லைகள் மற்றும் அதன் ஓட்டை உடைசல்களை அவர்களே ஆய்ந்தறிந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் வெளியேற்றுதல் மற்றும் குடியுரிமை ரத்து செய்தலை தடை செய்த அவசரச் சட்டம் முதன் முதலாகப் பிறப்பிக்கப்பட்டது.

சட்டத்தின் ஓட்டைகள் மற்றும் அரசாட்சி ஆகியவற்றின் உதவியால் வெளியேற்றுவதற்கு மற்றொரு வகையில் அனுகூலமாக அமைந்ததே காங்கிரஸின் விவசாயத் தொடர்பு ஆணை. கேரளத்தின் இந்த அவசரச் சட்டமும், விவசாயத் தொடர்பு ஆணையும் பெரும் விவாதங்களுக்கு அடிகோலின. மத்திய அரசும், கேரளத்தின் சட்டசபை எதிர்கட்சியும் அதன் உள்ளடக்கங்களுக்கு நிலவுடைமைச் சாயம் பூச பல்வேறு தந்திரங்கள் புரிந்தன. விவசாயத் தொடர்புகளை நவீனமாக்குதலும், அதன் முன்னோடியாக வெளியேற்றுதல் மற்றும் குடியுரிமை ரத்து செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்தலும் வரவேற்க வேண்டியதே. ஆனால், சிறிய மற்றும் மத்திய தர விவசாய நிலவுடைமைகளின் வாழ்க்கையை இதன் மூலம் அழிக்கக்கூடாது எனும் வாதத்துடன் காங்கிரஸின் முதலாளித்துவ (நிலவுடைமை) பிரிவுகள் தலை உயர்த்தின. சட்டசபையில் இந்த ஆணையை விவாதத்துக்கு எடுத்தபோதும் 1969இல் நிலவுடைமை ஆணை நிறைவேற்றப்பட்டபோதும் இந்த நிலை தொடர்ந்தது. இந்த அடிப்படையிலான எதிர்ப்பே பின்னானில், நிலவுடைமைச் சங்கத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலியது.

நிலவுடைமை அமைப்பின் மிருதுவான காலடிச்சுவடுகளே அவசர ஆணை மற்றும் சட்டவரைவில் உள்ளவை என்பதை உணரச் சிரமமில்லை. சமூக அமைப்பில் நடைமுறையில் உள்ள சுரண்டல் நிலைப்பாட்டை மாற்ற இந்தத் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. எனினும் நடைமுறையிலிருந்த நிலவுடைமை அதிகாரத்தை இது ஓரளவு அசைத்துப் பார்த்தது. இதுவே தளையிடப்பட்ட பெரும்பான்மை மக்கள், தங்களது தளைகளை உடைத்து முன்னேற வழியமைத்தது. நிலவுடைமை ஆதிபத்தியத்தின் அதிகாரம் மற்றும் பதவிகள் உள்ளவரையில், நிலவுடைமை ஆதிபத்தியத்தை வேரறுக்க இயலாது என்பது இதனால் பெறப்பட்ட அனுபவம்.

காங்கிரஸ் அரசுகள் அமைந்த மாநிலங்களில் உள்ளது போல், சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் காலகட்டத்தில், நுகர வேண்டியவர்கள் அதன் பலனை நுகர இயலாத நிலை கேரளத்தில் இல்லாமல் போனது. புதிய சட்ட வடிவமும், அதன் உயிர்த் துடிப்பான விவசாயி (உழவர்) அமைப்பும் புதியதொரு நிலைக்கு உயர்ந்தது. அதுவரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசோடு கம்யூனிச அரசுகளுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளதை அறிவுறுத்த இந்த அவசர ஆணையும், சட்ட அமலும் உதவின.

முதல் கம்யூனிச அரசின் மகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல், கல்வி சம்பந்தமான அரசாணை. தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபாரப் பேராசைகளுக்குக் கடிவாளமிட்டு நிறுத்தியது அது. கேரள சமூக வரலாற்றில் அதுவொரு மைல் கல் எனலாம். பிரிட்டிஷ் (ஆங்கில) அணுகுமுறையின் தொடர்ச்சியாகக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதில் எந்த விதப் பொறுப்பும் இல்லாமலே கொச்சி மற்றும் திருவிதாங்கூர் அரசுகள் செயல்பட்டன. இந்த இடைவெளியில் கிறிஸ்துவ நாயர் சமூகங்களின் உயர்ந்த நிலையினர் நுழைந்து முன்னேறினர். தேசிய இயக்கத் தொடர்ச்சியாக கல்வி நிலையில் அரசுக்கு எந்த விதப் பொறுப்பும் இல்லை என்பதை முற்போக்காளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மதச்சார்பு அமைப்புகளைத் தங்களிடம் வைத்திருந்த சாதிய, மதச் சார்பு நிலையினர், தீண்டாமை மற்றும் வியாபார மனோநிலை படிந்த நியமங்களையே கடைப்பிடித்தனர். இதனால் எழுந்த எதிர்ப்புக் குரலால் புதியதொரு நிலை உருவானது. 1930 முதல் மலபாரிலுள்ள ஆசிரியர் சங்கங்கள், இந்தச் சூழலில் அதற்கு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தின. தேசிய இயக்கத்தின் புதிய சக்தியாக ஆசிரியர் சங்கங்களும் குரல் எழுப்பின. இந்தச் சூழலை நினைவு கூர்ந்தவாறு 1957இல் கொண்டு வரப்பட்ட கல்வி தொடர்பான ஆணையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

தனியார் கல்வி அமைப்பின் வியாபார நோக்கம் சாதி, மத அமைப்பு முன்னுரிமைக்கும் கடிவாளமிட்ட இந்தக் கல்வி ஆணை, பெரிய சலசலப்பை உருவாக்கியது. மதங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு என்றும் சிறுபான்மையினரின் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்தனர். மதங்களின் இணைப்புச் சக்திகளான பத்திரிகைகள் உட்பட பலரும் இதை எதிரொலித்தனர். இந்தியச் சூழலில் கல்வியமைப்புகளை தேசிய உடைமையாக்குதல் சாத்தியமன்று . அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு கல்வித்துறையை மக்களாட்சித் தலைமையின் கீழ் கொண்டுவர கம்யூனிஸ்ட் கட்சி அப்போது முயன்றது. ஆசிரியர்கள் நியமனம், ஊதியம், பள்ளியை விட்டு நீக்குதல் மற்றும் தண்டனை நடிவடிக்கைகள் மேற்கொள்ள நிர்வாகங்களுக்கு உள்ள உரிமை ஆகியவற்றில் புதிய விதிமுறைகளை உருவாக்குதல் ஆகியவையே அரசு கொண்டு வந்த அன்றைய கல்வி தொடர்பான மசோதாவில் கூறப்பட்டிருந்தது. இந்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்த வேளையில், திருவனந்தபுரத்தில் கூடிய சாதி, மதத் தலைவர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களும் நடத்தியப் பேரணி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு ‘விமோசனப் போராட்டம்’ என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனத்தினர் துவங்கவிருந்த கிளர்ச்சியின் துவக்கம் என இ.எம்.எஸ் கணித்தார்.

எதிர்ப்பு அலையின் பின்னணியிலும், ஒரு சிலரது கருத்துகளின் அடிப்படையிலும் கல்வி சம்பந்தமான அந்த மசோதா, அரசியல் மேடையில் புதியதொரு பிரிவை உருவாக்கியது. அது அவர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் அரசுக்கும் அருகில் நெருங்கிவரச் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் மக்கள் கருத்துகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய கருத்து மோதல், கல்வி சம்பந்தமான மசோதாவுக்காக அவசியமா? எனும் கருத்தில், கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் என்ற கட்டுரையில் இ.எம்.எஸ் சொல்கிறார். விவசாயம், கல்வி மற்றும் ஆட்சி சீரமைப்பு ஆகியவற்றைத் தனித்தனியே நீர் புக முடியாத அறைகளாகத் தடுத்து நிறுத்தி, அவற்றில் ஏதேனும் ஒன்றை முதலிடத்திலும், ஏனையவற்றை அடுத்தடுத்து இரண்டாம், மூன்றாம் நிலைக்கும் தள்ளுவது சாத்தியமன்று. ஏனெனில் , இந்தத் துறை ஓவ்வொன்றிலும் பொதுமக்களது புகார் மற்றும் பிரச்சனைகளது அடிப்படையில் உருவானதே மக்களாட்சி அமைப்பு... மக்களாட்சி பற்றிய விசாலமான கண்ணோட்டத்தால் மட்டுமே இப்படிப்பட்ட சீரிய கருத்தை நாம் எதிர்பார்க்க முடியும்.

விவசாய மசோதாவும், கல்வித்துறை மசோதவும் கேரளாவின் மக்களாட்சி முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அது போலவே வலது சார்பு அரசியல்வாதிகளிடம் எச்சரிக்கையை உருவாக்கவும் அது காரணமானது. விவசாய மசோதாவை நிறைவேற்றியதற்காக அதிகாரம் பறிக்கப்பட்ட வர்க்கமும், கல்வி மசோதாவினால் காயம்பட்ட மத - சாதியப் பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து ‘விடுதலை கிளர்ச்சி’ (விமோசன சமரம்) எனும் பேரணியை நடத்தினர். முறையற்ற இந்தக் கிளர்ச்சிக்கு பேராதரவு நல்கியது காங்கிரஸ். பிரதமர் நேருஜியின் அணுகுமுறையை எவரும் சரியாக மதிப்பீடு செய்யவில்லை. தனிப்பட்ட முறையிலான சில கோட்பாடுகள் மற்றும் பலவீனங்களை வரலாற்றில் திணிக்க அவர்கள் முற்பட்டனர். உண்மையில், நேருவின் மனதுள்ளே இருந்த சோஷியல் டெமாக்ரடிக் சாய்வு நிலையிலிருந்து வந்த லிபரலும், கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியுற்று நிம்மதியிழந்து தவிக்கும் நிலவுடைமைத் தலைமையும் ஒன்றுடன் ஒன்று மோதியது. அதில் முதலாவது, இரண்டாவதற்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, என்ற இ.எம்.எஸ் ஸின் கண்ணோட்டமே சரியான வரலாற்று உண்மை!

இந்தப் போராட்டத்தைப் பெரிய அளவிலும் அதன் கம்யூனிச எதிர்ப்பு நிலைபாட்டை குறிப்பிட்ட ஓர் எல்லை வரையிலும் ஆதரித்த நேருவின் நிலை போலவே, இந்திய மக்களாட்சி அமைப்பின் வளர்ச்சியில் 1959வது வருடம், ஒரு பெரும் பின்னடைவுக்குத் துவக்கமிட்டது. எனலாம். கேரள சமுதாய வாழ்வில் விமோசன சமரம் எனும் விஷ விதை ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் கொடுமையானவை. சாதி, மத, அரசியலுக்கு அங்கீகாரம் மற்றும் ஆதரவு நல்கியவாறு வகுப்புவாத நிலைக்கு இழுத்துச் சென்றதில் பெரும் பங்கு வகித்தது. ஆரோக்கியமற்ற சூழ்நிலைக்கு அது துவக்கமானது. கேரள மக்களாட்சி முறை முன்னேற்றங்களுக்கு விதித்த தடைக்கற்களாகவே அந்த விமோசன சமரம் இருந்தது. அதன் அடித்தளத்தையும், வலதுசாரி கலாச்சார அக்கிரமங்களையும் தத்துவ ரீதியாக எதிர்ப்பதில், கேரள கம்யூனிஸ்ட் கட்சிக்கு இ.எம்.எஸ் ஸின் பங்களிப்பே ஓர் வளர்ச்சி போலவே வரலாற்றில், அநாகரிக அரசியலின் காலடியைப் பதிப்பதிலும், 1959ஆம் வருடம் நினைவுக்கு உரியதாக அமைந்துவிட்டது.

1957இல் கம்யூனிஸ்ட் அரசின் கழுத்தை அறுக்க, மத்திய அரசு, அரசியல் சட்டத்தின் 356ஆம் பிரிவைப் பயன்படுத்தியது. இந்தச் சட்டப் பிரிவின்படி நடைபெறும் நடவடிக்கைகளின் போதெல்லாம் இந்த முதல் கேரள அனுபவம் விவாதிக்கப்படுவதும் வழக்கமானது. அதே நிலை குறித்த மத்திய, மாநில அரசு உரிமைகள் பற்றிய விவாதங்களிலும் 1957இன் கம்யூனிஸ்ட் அரசின் வெற்றிகளும் அதன் துயர்மிகு அனுபவங்களும் ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

சீர்திருத்தச் சட்ட நடவடிக்கைகளின்படி வரலாற்றுப் பக்கங்களில் பளபளப்புடன் விளங்கிய 1957இன் கம்யூனிச அரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் இது சர்ச்சைக்குரிய விஷயமானது. அந்த சட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்குக் கீழ்ப்படிந்து செயல்படும் அரசியல் அமைப்புகளின் வகைகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஓரிடத்தை அது தேடிக் கொடுத்தது. நாடாளுமன்ற ஜனநாயக சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டு, புதிய கொள்கைப் போராட்டங்களுக்கும் அது வழி வகுக்கவும் செய்தது. பூர்ஷ்வா அரசியல் எல்லைகளை வெட்டிச் சுருக்கி, புதியதோர் அரசியல் முறை நடைமுறைக்கு வந்தது. இந்த சித்தாந்த வளர்ச்சி குறித்த சர்ச்சைகளில் இ.எம்.எஸ்ஸின் நன்கொடை, அவ்வளவு சுலபத்தில் மறக்கக் கூடியவை அல்ல.

முதன் முதலில் உருவான கம்யூனிஸ்ட் அமைச்சரவையும் அதற்கு இ.எம்.எஸ். போன்ற உன்னதத் தலைவர் ஒருவர் வழங்க நேர்ந்த விலை மதிப்புமே மேற்கத்திய விமர்சகர்கள் மற்றும் சமூகவியல் அறிஞர்களின் சிந்தனையை கேரளத்தை நோக்கித் திரும்பச் செய்தது. சமுதாயச் சீர்திருத்தங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்முறைகள் ஆகியவை கேரளத்தை ஒரு முன் மாதிரியாக உருவாக்கியது எனலாம். அதனால் வளர்ச்சி பற்றிப் பேசும்போதெல்லாம் கேரளம் மாதிரி என்ற வார்த்தை சரளமாக உபயோகிக்கப்படுகிறது.

வெறும் 28 மாதம் மட்டுமே ஒரு மாநிலத்தில் செயல்பட்ட ஓர் அரசு, மக்களின் கவனத்துக்கு உள்ளானது வியப்புக்கு உரிய விஷயம். பிறர் பொறாமைப்படத்தக்க இத்தகைய நிலைக்கு கேரள மாநிலத்தை உருவாக்கியதில் இ.எம்.எஸ்ஸின் பங்களிப்பு, வரலாற்றின் ஒரு பகுதி. இன்னமும் கம்யூனிச வயமாகாத நாடுகளில் நிலவும் கம்யூனிசக் கட்சியின் செயல்பாடுகளுக்கு இது ஒரு முன் மாதிரியாகவே கொள்ளப்படுகிறது. சித்தாந்த ரீதியாக இந்த நிலையை உருவாக்கி, நடைமுறையில் இதை வளர்த்தெடுத்ததில் இ.எம்.எஸ் தனியிடம் பெறுகிறார்.

வரலாற்றின் குறிப்பிட்ட இந்த இடமே, உலகில் முதன் முதலாகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச முதலைமைச்சர்!. என்ற புகழே, அவரை பெருமைக்கு உரியவராகவும்.... அதே நேரம் விவாதங்களுக்கு உரியவராகவும் மாற்றி விட்டிருக்கிறது.!

நன்றி : விகடன் பிரசுரம்