வானூர்தி மூலம் எண்டோசல்ஃபான் பொழியப்பட்ட கிராமங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை நினைத்துப் பார்க்கமுடியாதது.

அவன் குழந்தையாக இருக்கும் பொழுது எனது வீட்டைச் சுற்றி பறந்து கொண்டிருக்கும் சிவப்பு நிறவானூர்திக்கு கீழே தான் ஊர்ந்து கொண்டு விளையாடினான். அவனது நண்பர்கள் என்டோசல்ஃபானை பொழிய அந்த வானூர்தி செல்லும் பொழுது அதில் ஒரு முறை சுற்றிவர பத்து ரூபாய் கொடுத்து சுற்றி வருவார்கள். பிரதீப் குமார் வானைப் பார்த்து பல ஆண்டுகள் கடந்தோடி விட்டன. 34 வயதான பிரதீப் Parparesis (இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதால், கால்கள் முற்றிலும் வலுவிழக்கும் ஒரு நோய்) என்றநோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே காலத்தை கழித்து வருகின்றார். குழந்தையாக இருக்கும் பொழுது அவர் பார்த்து மகிழ்ந்த அந்த சிவப்பு நிறவானூர்தி இன்று அவருக்கு அச்சத்தைக் கொணரும் நினைவுகளாகிவிட்டது. “23 வயது வரை நான் நன்றாகத்தான் இருந்தேன். எங்கள் மளிகைக் கடையில் என் அப்பாவிற்கு உதவியாக இருந்து வந்தேன். வானிலிருந்து பொழியப்பட்ட எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லியால்தான் நான் இந்தநிலைக்கு ஆளாகியுள்ளேன். ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள முந்திரி தோட்டத்தை தேயிலைத் தோட்ட கொசுக்களிடம் இருந்து காப்பதற்காக தெளிக்கப்பட்ட எண்டோசல்ஃபான் எங்கள் மக்களை பாதித்து விட்டது” என்று கூறுகின்றார் பிரதீப்.

அந்த நோய் அவரை கொஞ்சம், கொஞ்சமாக செயலிழக்கச் செய்தது. முதலில் பாதத்தை பாதித்தது, பின்னர் கால்கள் உணர்ச்சியற்று மடக்கமுடியாமல் போனது, இறுதியாக இடுப்புக்கு கீழே உள்ள எல்லாப் பகுதிகளுமே உணர்வற்றும், வலுவற்றும் விட்டன. பிரதீப் தான் குணமாவோம் என்று இப்பொழுதெல்லாம் நம்புவதே இல்லை. மைய நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டதால் ஒன்றுமே செய்யமுடியாது என்று பிரதீப்பின் மருத்துவர் கூறுகின்றார்.

காசர்கோடில் உள்ள கும்பதாசே கிராமத்தில் பிரதீப் வசிக்கும் முவ்வார் பகுதி முழுக்க நோயாளிகள் நிறைந்த மருத்துவமனையின் ஒரு பிரிவு போலகாட்சியளிக்கின்றது. பிரதீப் வீட்டிற்கு பின்புறம் உள்ளவீட்டில் வசிக்கும் 68 வயதான நாராயணசர்மா ஒருவிதப் புற்று நோயால் பாதிக்கப் பட்டுள்ளார்.

ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் சோகமும், நம்பிக்கையற்ற நிலையுமே உள்ளது. அறுபது வயதான சசிகலா paraplegic (இடுப்புக்கு கீழே உள்ள கால்கள் உட்பட உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் செயலிழக்கவைக்கும் ஒரு நோய்) என்ற நோயினால் தாக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் தங்கை கோதாவரி அம்மா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார், அவரது பிள்ளை நிர்மலா மிகவும் அரிதான Motor neuron disease (நரம்பு மண்டலத்தில் இருந்து தசைகளுக்கு தூண்டுதல்களை எடுத்துச்செல்லும் நரம்புகளை பாதிக்கும் நோய்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது கை, கால்கள் திருகியநிலையில் செயலிழந்து உள்ளன. முப்பத்தைந்து வயதான நிர்மலா வெறும் நான்கு அடி உயரமே உள்ளார். ஒரு குழந்தையை எந்தஅளவுக்கு கவனமாக அதன் அம்மா வளர்ப்பாளர்களோ அந்தளவு கவனம் நிர்மலாவுக்கும் தேவைப்படுகின்றது. 

இது போன்ற நோயினால் பாதிக்கப்பட்ட எல்லோரும் அவர்களது உறவினர்கள் கருணை உள்ளத்தினால் உயிருடன் வாழ்ந்து வருகின்றார்கள். அந்தகுடும்பத்தில் உள்ள எல்லோரும் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் சர்மாவின் அக்கா மகளான சிரீதேவி என்ற பெண்ணே சமையல் வேலையையும், அனைவரையின் தேவையையும் கவனமாக பார்த்துக் கொள்கின்றாள். ஆனால் அந்த பெண்ணுக்கும் கூடஅடிக்கடி நரம்பு தொடர்பானபிரச்சனைகளும், தோல் ஒவ்வாமையும் (skin allergy) ஏற்படுகின்றது.

“இது போன்ற ஒருவகை (நரம்பு) நோய்கள் தான் இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு வருகின்றது” எனவாணி நகரில் குமார் மருத்துவமையம் வைத்துள்ளமருத்துவர் மோகனா குமார் கூறுகின்றார். 1982லிருந்து தொடர்ந்து இம்மக்களுக்கு ஏற்படும் நோய்கள் எல்லாவற்றையும் கண்டுவருகின்றேன். நரம்பு தொடர்பான நோய்களான congential abnormality, cereberal palsy, mental retardation, epilepsy போன்றவை மிகவேகமாக அதிகரித்து என்னுள் எச்சரிக்கை உணர்வைத் தூண்டியது. மேலும் இரத்த, சிறுநீரகப் புற்றுநோய்கள், தோல் ஒவ்வாமை நோய் போன்றவையும் கூட இங்கு நீங்கள் சாதாரணமாகப் பார்க்கலாம். வானூர்தியின் மூலம் பொழியப்பட்ட எண்டோசல்ஃபான் சுற்றுவட்டப் பகுதியிலுள்ள ஒவ்வொரு தாவரம், வனஉயிர்களின் உடலிலும் கலந்து எல்லாவற்றையும் பாதித்து விட்டது. அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட ஜப்பானின் இரோசிமா நகரமக்கள் போல இங்கு பிறக்கும் அடுத்ததலைமுறை கூடஇந்தபாதிப்புகளுக்கு உள்ளாகும். ஏனெனில் இந்த நச்சு அவர்களின் மரபணுக்களில் கலந்து விட்டது” என அவர் கூறுகின்றார். 

2004ஆம் ஆண்டு கேரளா எண்டோசல்ஃபானை தடை செய்தது. ஆனால் கேரளாவின் காசர்கோடு பகுதியில் வாழும் மக்களுக்கும், அதை ஒட்டியுள்ள கர்நாடகாவின் தட்சிண கர்நாடகப் பகுதியில்(இங்கு பிப்ரவரி 18,2011 திகதியில் இருந்து 60 நாட்களுக்கு எண்டோசல்ஃபான் தடை செய்யப்பட்டிருந்த்து) வாழும் மக்களும் இந்த நச்சுக்கொல்லியினால் தான் பாதிக்கப்பட்டார்களா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டும், இதை ஆராயும் ஆய்வாளர்கள் முற்றிலும் வித்தியாசமானஆதாரங்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர். காசர்கோடு பகுதியில் உள்ள பதினொரு பஞ்சாயத்துகளில் மட்டும் 5,000 நோயாளிகள் உள்ளனர் என்றும், இதில் 3,000 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முவ்வார் பகுதியில் இருந்து பசுமையான சூழலில் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் நாம் எதானீரில் உள்ளவீடு ஒன்றை அடைந்தோம். அந்த வீட்டுக்கு கதவோ, சாளரமோ எதுவும் இல்லை. இந்த வீட்டில் தான் எழுபது வயதான அபூபக்கீர் தன் மனைவி, இரண்டு பெண்கள், நான்கு மகன்களுடன் வாழ்ந்து வருகின்றார். கல் குவாரியில் வாகன ஓட்டுநராக பணிபுரியும் அபூவிற்கு மாதம் 2,000 ரூபாயை வைத்து தான் 60 விழுக்காட்டிற்கும் மேல் மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகன்களான அப்துல் காதர், அப்துல் இரகுமான், அப்துல் அமீது, அப்துல் கபீர்க்கு தேவையானமருத்துவசெலவுகளை பார்த்துக் கொள்ளவேண்டும். எண்டோ சல்ஃபானால் பாதிக்கப்பட்டவர்களின் அரசு பட்டியலில் இவர்கள் இருந்தாலும் இவர்களுக்கு அரசு வழங்கும் 300 ரூபாய் உதவித் தொகை கிடைப்பதில்லை.

கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் எண்டோ சல்ஃபானால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 2க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதாக கடந்தஆண்டு அறிவித்தபோதும், அபூவின் மகன்களுக்கு அந்த அரிசி இன்னும் கிடைத்தப்பாடில்லை. இதுமட்டுமின்றி அபூ வீடு வாங்குவதற்காக வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தவேண்டும். ஏற்கனவே கேரளவீட்டு வசதி வாரிய அலுவலகர்கள் வந்து வீட்டை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான அறிக்கையை கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். 1998ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக அவர்களிடம் அபூ ஒரு இலட்சத்தி எண்பதாயிரம் கடன் வாங்கியிருந்தார், அது இப்பொழுது வட்டியும், முதலுமாக சேர்ந்து ஐந்து இலட்சத்து எழுபத்து மூன்றாயிரத்து ஐநூற்றி எண்பத்து ஆறு ரூபாயாக உள்ளது. “எனக்கு கடன் வாங்கவேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆனால் அப்பொழுது எங்களுக்கு ஒரு வீடு இல்லை, மழை பெய்யும் போது எல்லாம் எங்கள் குழந்தைகள் அழத் தொடங்கினார்கள், அவர்களுக்காக வீடு கட்ட இந்த கடனை வாங்கினேன்” என நினைவு கூறுகின்றார் அபூ.

இப்பொழுது ஊடகங்களில் இந்தசெய்தி வெளிவந்துவிட்டதால் அவரிடம் இருந்து வீடு பறிக்கப்படாது. ஆனால் வரும் நாட்களில் நிலைமை மிகவும் மோசமாகலாம் என அபூபக்கீர் அஞ்சுகின்றார். இப்பொழுது அவர் தன் இளையமகளுக்கு திருமணம் செய்வதற்கு பணம் திரட்டவேண்டும். “என் மகன்கள் மட்டும் நலமாக இருந்திருந்தால், இந்த வயதான காலத்தில் நான் உழைக்காமல் ஓய்வெடுத்திருக்கலாம்” என வேதனையுடன் கூறு கின்றார் அபூ பக்கீர்.

எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானோர் ஏழைக் குடுமபத்தைச் சேர்ந்தவர்களே. “மிகக் குறைந்த புரத உணவு உட்கொண்டதால்தான் அவர்களின் மேல் இந்த நச்சு மிகவும் மோசமானவிளைவுகளை ஏற்படுத்தி உள்ளது” என மணிபால் மருத்துவக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் உன்னிகிருஷ்ணன் நம்மிடம் கூறுகின்றார். அந்தக் குடும்பத்தில் பணிபுரிபவர்களின் பணம் எல்லாம் அவர்களின் சிகிச்சைக்கே சரியாகி விடுவதால் எப்பொழுதும் அவர்கள் பணப்பற்றாக்குறையிலேயே உள்ளார்கள்.

எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதேவையாகும். உதாரணத்திற்கு காசர்கோடு, தொட்டிகனம் பகுதியைச் சேர்ந்த சிறீதேவி தன் மகன் அபிகிலாசா பிறந்த உடனே வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். 11 வயதாகும் அபிகிலாசாவிற்கு பிறந்ததிலிருந்தே hydrocehalus (மூளையினுள்ளே ஒரு திரவம் சேர்ந்து வரும் ஒரு நோய்), அபிகிலாசா உடனே சிறீதேவி பெரும்பாலானநேரத்தைச் செலவழிகின்றாள். “இது அரசு கவனத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சனை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் உரு வாக்குதல் இந்த பிரச்சனையை ஓரளவு தீர்க்கலாம்” எனக் கூறுகின்றார் குமார். “இவர்களைத் தாக்கியுள்ள பெரும்பாலானநோய்களுக்கு சிகிச்சையே இல்லை, இருந்தாலும் தொடர்ச்சியானமருத்துவஉதவிகள் நோயாளிகளுக்கு மனஆறுதலைக் கொடுக்கும். படுக்கையிலேயே அவர்களை கிடத்தியிருக்காமல் சரியான நேரத்தில் அவர்களுக்கு உணவளித்தும், அவர்களின் உடலை தூய்மையாகவைத்திருப்பதும் மிகவும் முக்கியமானஒன்றாகும்” எனஅவர் மேலும் கூறுகின்றார்.

தட்சிண கர்நாடகாவின் அலங்கார் கிராமத்தில் உள்ள சந்திரவதி நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ள தனது 20வது வயதான மகன் சசாங்கை வீட்டில் விட்டுதான் வெளியில் சென்றாக வேண்டும். சந்திரவதி அருகிலுள்ளஒரு சத்துணவுக் கூடத்தில் வேலை செய்கின்றார். ஒரு நாள் மதியம் சசாங்க் சுவற்றில் தனது தலையை பலமாகமுட்டிக்கொண்டதால் இரத்தம் கொட்டியது. சந்திரவதி தனது வேலையை முடித்து வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது சசாங்க் இரத்தவெள்ளத்தில் கீழே கிடந்தான். சந்திரவதியின் கணவர், மகன் சசாங்கின் மருத்துவ சிகிச்சைக்காக வாங்கியகடனை திருப்பிக் கொடுக்கமுடியாததால் 1997ல் தற்கொலை செய்து கொண்டார். கண்டிப்பாக இவர்களுக்கும், இது போன்ற நிலையில் உள்ள மற்றவர்களுக்கும் மறுவாழ்வு மையங்கள் ஒரு உதவியாக இருக்கும்.

இரசீவி பூசாரி தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிக் கவலையில் இருக்கும் போது, அவரின் பிள்ளைகளான தினேசா, தினகரா, வித்யா எல்லோரும் சிரித்துக் கொண்டுதான் உள்ளார்கள். அவரின் வீட்டை ஒட்டிய பகுதியில் வானூர்தியின் மூலம் எண்டோ சல்ஃபான் தெளிக்கப்பட்டு வந்தது. 2000த்திற்கு பிறகு குழாய்கள் மூலம் தெளிக்கப்பட்டு வருகின்றது. 26, 25, 24 வயதாகும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்காக அவர் இதுவரை ஐந்து இலட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். ஆனால் இதுவரை அவர்களின் நிலையில் எந்த ஒரு மாற்றமில்லை என்றாலும், அவர் இன்னும் நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. அரசு சிறு நிலத்தைக் கொடுத்து உதவினால், அதன் மூலம் தன் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தைத் திரட்டமுடியும் என எண்ணுகிறாள். “நல்ல சிகிச்சை கிடைத்தால் அவர்கள் குணமாகிவிடமாட்டார்களா?” எனக் கோபத்துடன் கேட்கிறாள் அந்த தாய். இவரது குடும்பத்திற்கு 50,000 ரூபாய் நிவாரணத்தொகை கிடைத்துள்ளது, இதுமட்டுமின்றி கர்நாடக அரசு மாதம் 1,000 ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு கொடுத்து வருகின்றது.

இந்தப் பகுதிகளில் மருத்துவவசதிகள் போதிய அளவு இல்லை. மேலும் சிறப்பு மருத்துவநிபுணர்களும் இங்கு இல்லை. உதாரணத்திற்கு கர்நாடகாவின் கொக்காடாவில் உள்ள 12 கிராமங்களுக்கு ஒரே ஒரு அரசு மருத்துவமனைதான். அங்கு ஒரு வாகனஓட்டுநர் உள்ளார் ஆனால் வாகனம் இல்லை. ஒரு சோதனைக் கூடம் உள்ளது ஆனால் சோதனைக் கூடத்தில் பணிபுரிய நிபுணர்கள் இல்லை. இவர்கள் சிறப்பு வசதிகள் கொண்டமருத்துவமனைக்குச் செல்லவேண்டுமென்றால் 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மங்களூருக்குத்தான் செல்லவேண்டும். தன் குழந்தைகள் இந்த நோய்களிலிருந்து குணமாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களது அம்மாக்கள் உள்ளனர். cerebral palsy (தூண்டுதல்களை கடத்தும் நரம்புகள் செயலிழக்கச் செய்யும் நோய்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகன் சந்தோசிற்கு என்றுமே பக்கபலமாக நிற்பது அவனது தாய் கிரேசி டி’சோசா தான். இதே நோயினால் பாதிக்கப்பட்ட ஐரிசு எழுத்தாளர், ஓவியரும், கவிஞருமான Christie Brownயை போல நீயும் ஒரு நாள் இந்தநோயிலிருந்து மீண்டு குணமடைவாய் என தன் மகனிடம் திரும்பதிரும்ப கூறிவருகின்றார் அந்த தாய். இதன் மூலம் அவன் இன்னும் மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாம் ஒரு ஞாயிறு மதியம் கிரேசியின் வீட்டிற்கு சென்ற போது சந்தோசு தொடங்கவிருக்கும் இந்தியா இங்கிலாந்திற்கு இடையிலான மட்டைப் பந்து போட்டியை காண மிகவும் ஆவலுடன் தொலைக்காட்சியின் முன் காத்திருந்தான். “அவன் பிடிவாதமான மட்டைப்பந்து இரசிகன், மின்சாரம் இல்லை என்றால் கூடவானொலியில் போட்டியின் வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருப்பான்” எனகூறுகின்றார் கிரேசி. நான் அவனை ஒரு குழந்தையைப் போல எப்பொழுதும் தூக்கிச்செல்வேன். சேவாக், சச்சின், தோனிக்கு பிறகு இப்பொழுது அவனுக்கு பிடித்திருக்கும் பிரபலம் விராத் கோலி. மட்டைப்பந்துப் போட்டிகள் இல்லாத நாட்களில் சுதீப், விசுணுவர்தன் நடித்ததிரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பான்.

20வது வயதாகும் சந்தோசு பிறந்தபொழுது நன்றாகத்தான் இருந்தான். ஒரு வயதில் அவனுக்கு வந்தகாய்ச்சல் அவனை அப்படியே பக்கவாதத்தில் தள்ளிவிட்டது. அவனை அவனது பெற்றோர் புத்தூர், மங்களூரில் இருக்கும் மருத்துவமனை களுக்கு எடுத்துச்சென்றபொழுதும் அவனது நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. தனது வீட்டிற்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள முந்திரி தோட்டத்தில் எண்டோசல்ஃபான் தெளிக்கப்படும் பொழுது தனக்கு இருந்த மூச்சு விடுவதிலும், இருமல் பிரச்சனைகளையும் நினைவு கூறுகின்றார் கிரேசி.

இந்தப் பகுதியிலுள்ள இரத்தத்தில் இன்னும் அந்தநச்சு உள்ளது என்கின்றார் மருத்துவர். இரவீந்திரநாத் சன்பாக் (இவர் மணிபால் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர், அவர் மேலும் கூறுகையில் “ஆறிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்கு இந்தநச்சு இன்னும் இந்தமண்ணிலேயே தான் இருக்கும் அதன் பின்னர் எண்டோசல்ஃபான் சல்ஃபேட்டு என்ற மிகவும் மோசமான நச்சாக மாறிவிடும்” என்றார்.

எண்டோசல்ஃபானால் தனது வலது கண்ணைப் பறிகொடுத்த சிறீதர் என்ற சமூக செயல்பாட்டாளர், இவர் எண்டோ சல்ஃபானால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆதரவாக போராடி வருகின்றார். தனது பதினான்காவது வயதிலே retinal detatchment என்ற நோயினால் தனது வலது கண்ணை இவர் இழந்தார். 3.5 இலட்சம் ரூபாய் செலவில் இதுவரை தனது கண்ணில் நான்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். தற்பொழுதும் பெங்களூரில் உள்ளசங்கரா நேத்ராலயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இப்பொழுது இவரது இடது கண்ணும் பாதிக்கப்பட்டுள்ளது. “மிகவும் மோசமானநிலைக்கு என்னை மனதளவில் தயார்படுத்தி உள்ளேன்” எனஅவர் கூறுகின்றார்.

இந்தகிராமத்தில் உள்ளவர்கள் பிரச்சனை ஏற்படும் பொழுது ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்கின்றார்கள் என்பதை இங்கிருந்தால் புரிந்துகொள்ளமுடியும். தனது மனைவியின் தாலியை அடமானம் வைத்து தான் தன் நண்பன் சிறீதரின் கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தார். பின்னர் எண்டோசல்ஃபானால் மனநலம் பாதிக்கப்பட்ட 38வயதான சாரதா ஒரு வீட்டைக் கட்டுவதற்கு சிறீதர் உதவினார்.

 இப்பொழுது கொக்கடாவில் சாரதாவிற்கென்று சொந்தமாக ஒரு வீடு இருக்கின்றது. முன்பு இவர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு அறையில் நூறு ரூபாய் கொடுத்து தங்கிவந்தார், தன் தம்பி இருதய அதிர்ச்சியின் காரணமாக இறந்தஅன்று இவர் தங்கியிருந்த அறையிலிருந்து அதிகாரிகளால் விரட்டப்பட்டு வீதிக்கு வந்தார். இவருக்கு மாத ஓய்வூதியமும் பிற நிவாரண உதவிகளும் இவரது பெயர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இல்லாததால் கிடைக்கவில்லை. இப்பொழுது அவர் தன் வீட்டின் முகப்பு பகுதியின் கீழே தன் தம்பி மனைவி, அவரது ஆறு குழந்தைகளுடன் உட்கார்ந்து மணலில் ஏதோ எழுதி பின்னர் அதை ஒரு சின்னக்குழந்தையின் மனநிலையுடன் அழித்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

- ப.தோமையர்  காசர்கோடு

ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்: ப.நற்றமிழன்

Pin It