பரம்பிக்குளத்தில் புலிகள் குறித்த பயிற்சிப் பட்டறை

முதல்வர் வீட்டில் பாம்பு புகுந்தது, ‘தேயிலைத் தோட்டத்தில் யானைகள் கும்மாளம், காட்டுக் கரடியுடன் வாலிபர் கட்டிப்புரண்டு சண்டை, கரும்புத் தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம், வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம், புலிகள் எண்ணிக்கை உயர்வு, திருப்பூரில் அதிசயப் பறவைகள் பிடிபட்டன, குழந்தையைத் தூக்கிச் சென்றது சிறுத்தைப் புலி, வெளிநாட்டுப் பறவைகள் குவிந்தன, இத்துடன் முதலைக் கண்ணீர் வடிக்கிறான். இதுபோன்ற செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி இடம்பெறுவதை நாம் கண்டிருப்போம். இந்த செய்திகளுக்குப் பின்னே உள்ள அறிவியல் உண்மை என்ன? காட்டுயிர்கள் பற்றிய உண்மை நிலவரம் என்ன? அவை எதிர்நோக்கும் சிக்கல்கள் என்ன என்பன குறித்த மூன்று நாள் பயிலரங்கம் பரம்பிக்குளம் காட்டுயிர் காப்பகத்தில் கடந்த மே 6,7,8 ஆகிய நாட்களில் நடந்தது. இதில் தமிழகத்தின் முன்னணி ஊடகத்தினைச் சேர்ந்த 30 பேர் கலந்துகொண்டனர். பரம்பிக்குளம் காட்டுயிர் காப்பாளர் இம்முகாமைத் தொடங்கி வைத்துப் பேசும்போது இந்தக் காட்டைப் பழங்குடிகளுடன் இணைந்து எப்படி நிர்வகிக்கிறோம் எனக் கூறினார்.

காட்டுயிர் பாதுகாப்புக் கழகத்தைச் சேர்ந்த ரவி செல்லம் பேசும்போது விலங்குகளுக்கும் மனிதனுக்குமான பிணக்குகளில் மனிதனே வென்று வருகிறான் எனவும் புலிகள் கணக்கெடுப்பில் உள்ள குறைபாடுகளையும், விலங்குகள் மனிதனைத் தாக்க நேரிடுவதற்கான காரணங்களையும் பகிர்ந்து கொண்டார். மேலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கும் பதிலளித்தார். பரிணாமவியலின்படி பூனைக் குடும்பம் எங்கெங்கு விரவி யுள்ளன எனவும் அதன் உணவுப் பழக்கம், கலவி,¢ இனப்பெருக்கம், வாழிடத்தேவை, இரையாகும் விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

காட்டுயிர் காப்புக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெயபால், காட்டுயிர் தொடர்பான குற்றங்களையும் அதன் பின்னணியையும் அலசி ஆராய்ந்தார். காட்டுயிர்களின் வர்த்தகம் அதன் தாக்கம் குறித்தும் உரையாடினார். பிணந்தின்னிக் கழுகுகள் விரைவில் அழியும் தருவாய்க்கு வந்துவிட்டது பற்றி அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைவனத்தைச் சேர்ந்த பாரதிதாசன் பகிர்ந்து கொண்டார். மேலும் விலங்குகள் அழிவுக்கு வேட்டை, வாழிடம் அழிப்பு மட்டுமின்றி மறைமுகமாகவும் மனிதனது நடவடிக்கைகள் எப்படி இயற்கையையும் காட்டுயிர்களையும் பாதிக்கிறது என்றும் விளக்கினார். டைக்குளோபினாக் எனும் வலி நிவாரணி மருந்து கால்நடைகளுக்கு போடப்பட்டு அதன் எச்சத்தை உண்ட கழுகு செத்து மடிந்தது பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கோவில் திருவிழாக்கள் என்ற பெயரில் கானகத்தினுள் நடத்தப்படும் செய்கைகள் காட்டுயிர்களை எப்படி பாதிக்கிறது என கோவையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் மோகன்ராஜ் விளக்கினார். குளம், குட்டைகளை எல்லாம் கழிவுகளைக் கொட்டும் இடமாக மாற்றி விட்டதையும் படம்போட்டு விளக்கினார்.

காட்டுக்குள்ளே போடப்படும் சாலைகளும், அதில் செல்லும் வாகனங்களும் கானகத்தை எங்ஙனம் துண்டாடுகிறது என்பதையும், சிறு ஊர்வன உயிரினம் நூற்றுக் கணக்கில் நசுக்கி சாகடிக்கப்படுகிறது என்பது பற்றியும் படங்களுடன் விளக்கினார் கழுதைப்புலி ஆராய்ச்சியாளர் ஆறுமுகம். வால்பாறையில் நேரும் மனிதன் விலங்குகளுக்கு இடையேயான பிணைப்பு பற்றி மழைக்காடுகள் அமைப்பைச் சேர்ந்த சங்கர்ராமன் விளக்கினார். கேமரா பொறி மூலம் விலங்குகளை எப்படி படம் எடுக்கிறோம் என்பதையும், அதன் மூலம் என்ன பயன் என்பதையும் உலக காட்டுயிர் நிதியத்தைச் சேர்ந்த பீட்டர் எடுத்துரைத்தார். நிழற்படங்கள் காட்டுயிர் பாதுகாப்பில் எங்ஙனம் பங்காற்ற முடியும் என்பது குறித்தும் படங்களைப் பத்திரிகையில் வெளியிடும்போது சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தையும் பேராசிரியர் ஜெயப்பிரகாசு விளக்கினார். இந்நிகழ்வு, காட்டுயிர் பாதுகாப்பு கழகத்தின் நிதியுதவியுடனும், அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைவனத்தின் மேற்பார்வையுடனும், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த இயற்கை கழகத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றது. இதனை பேரா.ஜெயப்பிரகாசு நெறிப்படுத்தினார்.

Pin It