‘நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவன் வாக்கினை மெய்பிப்பது குற்றாலம் எனலாம்.  ஆம் குற்றாலம் என்றவுடன் நினைவிற்கு வருவது கொஞ்சி, கும்மாளமிட்டு ஆர்ப்பரிக்கும் அருவிகளே. இந்த அருவிகளில் குளிக்கும்போது உற்சாகம் பிறப்பதுடன் மன நிறைவும் ஏற்படுவதை அனைவரும் உணர்வர்.

குற்றாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ஏற்ற இடமன்று, இயற்கை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், விவசாயிகள், ஆன்மீகவாதிகள், நாட்டுமருத்துவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ஏற்ற தலமாக விளங்குகிறது.  பெல்ஜியத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலம் ‘ஸ்பா’. ‘தென்னகத்தின் ஸ்பா” என அழைக்கப்படும் சிறப்புடையது நமது குற்றாலம்.

இயற்கைவளம் பொருந்திய மேற்குதொடர்ச்சி மலையில் மூன்று சிகரங்களை கொண்ட திரிகூடமலையின் ஒரு பகுதியில் உருவாகும் ஆற்றின் பெயர் சிற்றாறு.  இந்த சிற்றாறு குற்றாலம் பகுதியில் இயற்கைபுடைசூழ பல அருவிகளாக வீழ்ந்து வளம் சேர்க்கின்றன. 

ஆர்ப்பரிக்கும் முரசு போல ஒலி எழுப்பி 200அடி உயரத்திலிருந்து விழும் பேரருவி, சிறார்களுக்கு உகந்த சிற்றருவி, புலிவாய் போன்ற பாறைப்பகுதியிலிருந்து விழும் புலியருவி, ஐந்து பாகங்களாகப் பிரிந்து விழும் ஐந்தருவி, செண்பகமரங்கள் சூழ்ந்த அடர் வனப்பகுதியில் விழும் செண்பகா அருவி, வானளாவ உயர்ந்த மரங்களில் தேனடைகள் நிறைந்த மலைகளின் உட்பகுதியில் விழும் தேனருவி, வனத்துறைக்கு உரிய பழத்தோட்டப்பகுதியில் விழும் பழத்தோட்ட அருவி, மலைஅடுக்குப் பாறைகளில் தவழ்ந்து வரும் பழைய குற்றால அருவி என குற்றாலப் பகுதிகளில் பல்வேறு அருவிகள் அழகு சேர்க்கின்றன. அதே சமயம் வளமும் சேர்க்கின்றன.

இம்மலையின் அழகினை திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி எனும் நூலில் மலை வளத்தினை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியரு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

கானவான்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்

கனக சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்

தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன் தேர்க்காலும் பாரிக்காலும் வழுகும்

கூனலினம் பிறை முடித்த வேணி அலங்கார்

குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே” 

சிங்கனும் சிங்கியும் சுற்றித்திரிந்த இம் மலையில் இல்லாத மூலிகைகளே இல்லை எனலாம். தீராத நோய்களை எல்லாம் தீர்த்துவைக்கும் மூலிகைகளின் தாயகமாக குற்றால மலையருவிகள், உடலுக்கும், மனத்திற்கும் நலம் சேர்கின்றன.

இத்தகைய சிறப்புடைய அருவிகளின் நீரானது நிலத்தில் சிற்றாறாக உருவெடுத்து தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களை வளப்படுத்தி சீவலப்பேரியில் (முக்கூடல்) தாமிரபரணி ஆற்றுடன் இணைந்து கடலில் சங்கமமாகிறது.

இந்த சிற்றாற்றின் இடையே, தலையணை, அடிவெட்டான் பாறை, வாழ்விலாங்குடி, புலியூர், பாவூர், திருச்சிற்றம்பலம், மாறாந்தை, வீராணம், மானூர், நெட்டூர், பள்ளிக்கோட்டை, உக்கிரன் கோட்டை, அழகியபாண்டியபுரம், பிள்ளையார்குளம், செழியநல்லூர், பிராஞ்சோர், கங்கைகொண்டான் பகுதிகளில் சிறுசிறு அணைக்கட்டுகள் உள்ளன.  இதனால் சுமார் 120 குளங்கள் பயன்பெறுகின்றன.

சிற்றாற்றின் மூலமாக நேரடியாக 2074 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 120 குளங்கள் மூலம் மறைமுகமாக 7570 ஹெக்டேர் நிலங்களும் பாசனவசதியைப் பெறுகின்றன. குற்றால அருவிகளின் நீரே இப்பகுதியின் ஜீவநீராக உயிர்நாடியாக விளங்குகின்றது.

இத்தகைய சிறப்பும், அழகும், இலக்கிய வளமும், விவசாய நலனும், மருத்துவக் குணமும் கொண்ட அருவிகள் இயற்கைச் சீரழிவை எதிர்நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற் கொள்கின்றன.

குற்றாலத்திற்கு பருவ காலத்தில் (சீஸன்) பல லட்சம் மக்கள் வருகின்றனர்.  இவர்களால் பயன்படுத்தப்படும், தூக்கி எறியப்படும் பல்வேறு கழிவுப் பொருட்கள் இயற்கை சீரழிவை ஏற்படுத்துகின்றன.  உதாரணமாக நெகிழிகள் (பிளாஸ்டிக்) காரக்கட்டிகள் (சோப் வகைகள்) மென்காரக்கூழ் (ஷாம்பூ) கழிவுப் பொருட்கள் போன்றன மூலிகை வளம் பொருந்திய இயற்கையைச் சீரழிக்கின்றன.

மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயணப் பொருட்களின் கலவையில் (சோப், ஷாம்பூ) கார்சினோஜென்ஸ் எனப்படும் சோடியம் லாரல்சல்பேட், சோடியம் எத்தில் லாரல் சல்பேட் உள்ளிட்ட இரசாயன வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.  இதில் கார்சினோஜென்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் ஊக்கியாகும்.  இந்த வகையான இராசயணப் பொருள் அதிக நுரைவருவதற்காக சேர்க்கப்படுகிறது.  இது அனுமதிக்கப்பட்ட சதவீதம் 6 % மட்டுமே.  ஆனால் சில தனியார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இதனை 15% வரை சேர்க்கின்றன.  இத்தகைய வேதிப்பொருட்கள் சதவீதம் 1% அதிகமானால் கூட அது பெருந்தீங்கினை விளைவிக்கும், பல மேலை நாடுகளின் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை தனியார் மற்றும் உலக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை கடைவிரித்து விற்பனை செய்யும் சந்தைகளாகவும், கழிவுகளை கொட்டும் குப்பைப் பகுதிகளாகவும் கருதுவதால் தடைவிதித்தல் என்பதும், சட்டங்கள் என்பதும் காகித அளவிலேயே நின்று விடுகின்றன.  இதற்கு நமது மத்திய, மாநில அரசுகளும் துணை நிற்பது துர்  பாக்கியமே.

அருவிகளில் பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் கார்சினோஜென்கள் (சோப், ஷாம்பூ) நீரில் கலக்கும் போது அந்நீர் அதிகமான காரத் தன்மை உடையதாக மாறுகின்றது.  இதனால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள், சிறு உயிரினங்கள் மற்றும் அதனுடைய முட்டைகள் அழிக்கப்படுகிறன்றன.  எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதால் இந்நீர் விவசாயத்திற்கு உகந்ததாக இல்லாமல் போகிறது.

சிற்றாற்றால் பயனடையும் சுமார் 9,000 ஹெக்டேர்  நிலங்களும் உப்பு மற்றும் காரத் தன்மை உடையதாக மாறுகின்றது. அதுமட்டுமின்றி இந்நீரைப்  பருகினாலோ, அல்லது இந்நீரின் மூலம் விளைவிக்கப்படுகின்ற பொருட்களை உண்பதாலோ புற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் இப்பகுதி மக்களைத் தாக்குகின்றன.

இப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களை ஏற்கனவே தனியார்  நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  குப்பைக் கழிவுகள் ஆற்றின் கரைகளில் குவிக்கப்படுகின்றன.  நீர் வழிந்தோடும் கால்வாய்களும் தூர் வாரப்படாமல் பராமரிப்பு இன்றி அமலைச் செடிகளால் நீக்கமற நிறைந்துள்ளன.

இச்சூழலில் அருவிநீர் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், அனைத்துப் பாதிப்புகளும் இப்பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுகின்றன.

அரசாங்கம் குற்றால அருவிகளில் இரசாயன வேதிப் பொருட்களைப் பயன்படுத்த உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.  குறிஞ்சி மண்ணையும் மக்களையும் இயற்கையோடு ஒத்துவாழ வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் அவசியமாகிறது. 

Pin It