தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் நீர்வள மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் நீர்வள ஆதார அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் குழுமக் கோட்டங்கள், ஆற்றுப்படுகையிலுள்ள நீராதாரங்கள் எந்தக் காரணங்களால் மாசடைகின்றன, அவற்றை எப்படித் தடுக்கலாம் என்று ஆய்வு செய்யவும், செயல்திட்டம் வகுக்கவும் உருவாக்கப்பட்டன. சென்னை, மதுரை, கோவையில் தற்போது சுற்றுச்சூழல் குழுமக் கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழக ஆறுகளின் சுற்றுச்சூழல் தன்மையை கண்காணித்தல். திட, திரவக் கழிவு மாசுபாட்டிலிருந்து நதிகளைக் காக்க ஆராய்ச்சித் திட்டங்கள் இடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கம் நடத்துதல், மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்துதல் ஆகிய பணிகளுடன், "என்செல்" என்ற ஆங்கில இதழையும், "ஸ்டிரீம்", "நீரோடை" என்ற தமிழ் இதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

இந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோட்டங்கள் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளன. காவிரி தவிர்த்த ஆறுகளில் நீர் மாசுபாடு ஏன் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு தகுதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆறுகளின் நிலைமை குறித்து விரிவான சுற்றுச்சூழல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திட்டத்தை அமல்படுத்தாத நிலையில், எதிர்காலத்தில் நாம் தண்ணீருக்காக தவிக்க நேரிடும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பெரும்பாலான நமது ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தொடங்கும் நிலையில் அங்கெல்லாம் அழிக்கப்படும் காடுகளுக்கும், ஆறுகளில் நீர்வளம் குறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது. இந்த மலைத் தொடர்களில் கட்டப்படும் சுற்றுலா ரிசார்ட்டுகள், நீர் விளையாட்டு மையங்கள், தேயிலை, காபி, காய்கறி பயிர் சாகுபடி போன்ற காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் நீராதாரம் குறைந்து, மண்ணரிப்பு ஏற்படுகிறது. காடுகள்தான் நமது வாழ்வின் உயிர் ஆதாரம். இந்தக் காடுகளைக் காப்பாற்றாவிட்டால், தமிழகம் பாலைவனமாகி விடலாம் என்கிறது அந்த அறிக்கை. சமீபத்திய நீலகிரி நிலச்சரிவு காடழிப்பின் விளைவே. தேசிய ஏரிகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் உதகை, கொடைக்கானல் ஏரிகளில் மாசுபாட்டை கட்டுப்படுத்த உயிர்சூழல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீராதரங்களைப் பாதுகாக்க இரண்டு முறைகளைப் பயன்படுத்தலாம். ஒன்று தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது. மற்றொன்று நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது. ஆனால் நிதி ஆதாரம், தொழில்நுட்ப சிக்கல்களால் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலேயே நீர்நிலைகளில் கலக்கிறது. இதைத் தடுக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் மட்டும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது. குறைந்த நிலப்பகுதி, குறைந்த இயந்திரங்களுடன் நீர்சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு கழிவு நீரை சுத்திகரிக்கும் நோக்கத்துடன் சூலூர் நகர கழிவு நீர் சுத்திகரிப்பு முன்னோடி ஆராய்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜவ்வரிசி ஆலை, தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை, காகித ஆலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றில் உருவாகும் கழிவு நீரை சவ்வூடு பரவல் முறைக்கு மாறாக, புதிய தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து விவசாயம், தோட்டம், மீன்வளர்க்க பயன்படுத்தலாம் என்று முன்னோடி ஆய்வுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் தண்ணீர், ஆற்றலை குறைவாகப் பயன்படுத்தி மறுசுழற்சி செய்து, வளங்குன்றாத வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 1998 ஆம் ஆண்டு முதல் மூன்று கோட்டங்களிலும் 1200 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இயற்கை வேளாண்மை மூலம் மண்வளம், மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் சிக்கனம் போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என்று ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற பயிற்சி, கருத்தரங்குகளை முனைவர் கோ. நம்மாழ்வார் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆய்வுத் திட்டங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற்று இன்று ஆசிரியர்களாக இருக்கும் பலர், தங்கள் மாணவர்களை இங்கு அனுப்பி வருகின்றனர். அத்துடன் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கலுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்டு அனுப்பப்படுகின்றன.

கோட்டங்களின் சார்பில் வெளியாகும் நீரோடை, ஸ்டிரீம், என்செல் இதழ்கள், கையேடுகள், சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றைப் படிக்கும் வாசகர்கள் தொடர்ந்து கோட்டங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கின்றனர். புதிய ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு எப்படிச் செயல்பட வேண்டும், எந்த வேலைகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு பேரூராட்சிகளுக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வழிகாட்டப்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் நீர், நில வளத் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக பாதிப்புகளை தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உலக வங்கி நிதி ஆதாரத்தில் சுற்றுச்சூழல் குழுமக் கோட்டங்கள் செயல்பட ஆரம்பித்தாலும், அதற்குப் பிறகும் தமிழக ஆறுகளின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதால், இந்தக் கோட்டங்கள் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு ஒப்புக்கொண்டது. தற்போது மாநில அரசு நிதியில் இவை செயல்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபடும் இந்த அரசுத் துறைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம் போன்ற அமைப்பு இல்லை. நீர்நிலைகளை பாதுகாக்கும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளில் கோட்டங்கள் தொடர்ந்து செயல்படும். மூன்று கோட்டங்களுக்கும் வழிகாட்டும் வகையில் சமீபத்தில் திருச்சியில் சுற்றுச்சூழல் வட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுகைகளில் மாசுபாட்டைக் களைய இக்கோட்டங்களுக்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். செயல்பாடுகளை விரிவுபடுத்த தேவைப்படும் நிதியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

-இரா. இளங்கோவன்

(செயற்பொறியாளர், பொதுப்பணித் துறை, நீர்வள ஆதார அமைப்பு, சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம், கோவை)

 

 

Pin It