முதுமலை மசினகுடி பகுதிக்கு அருகேயுள்ள சிங்காரா காட்டுப்பகுதியில் அமைய இருந்த "இந்திய நியூட்ரினோ ஆய்வகம்" ஒரு வழியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த இதழில் ஆதி எழுதிய "புலிகளின் தேசத்தில் புதிய சர்ச்சை" என்ற கட்டுரை அலசி இருந்தது.

நியூட்ரினோ என்பது எந்த மின்ஆற்றலும் இல்லாத ஒரு நுணுக்கமான துகள். பிரபஞ்சத்தின் முக்கிய கூறான இந்த துகள்கள் பற்றிய பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் இல்லை. இது தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியாவில் அமைக்கப்பட இருந்த ஆய்வகம் அமைக்க சிறந்த இடம் என்று முதுமலை மசினகுடி பகுதியில் உள்ள சிங்காராவை இந்திய அணுசக்தி துறை தேர்வு செய்திருந்தது. நிலத்துக்கு அடியில் 2 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி அமைக்கப்பட இருந்த இந்த ஆய்வகத்துக்கு, காட்டுயிர் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பகுதி வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

யானைகள் வழித்தடத்தில், காட்டுயிர்கள் உலவும் இடத்தில் இந்த ஆய்வகம் அமைவது நீலகிரி உயிர்மண்டலக் காப்பகத்துக்கு பல்வேறு வகைகளில் ஆபத்தாக அமையும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு பதிலாக இந்திய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ராஜேஷ் கோபால் இப்பகுதியை பார்வையிட்டார். அவரது அறிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் நவம்பர் 20ந் தேதி அனுமதி மறுத்தது.

அதற்கு பதிலாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுருளியாறு அருவிக்கு அருகேயுள்ள இடத்தை ராஜேஷ் கோபால் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பகுதியில் பெரிய பாலூட்டிகள் எதுவும் இல்லை. குறிப்பிட்ட பகுதி மட்டுமே பாதுகாக்கப்பட்ட காடு. மேலும் இந்த ஆராய்ச்சிக்குத் தேவையான அடிப்படை அம்சங்களும் அங்கு இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இக்காரணங்களை முழுமையாக ஏற்க முடியுமா, தெரியவில்லை.

இந்தப் பகுதி மூன்று மாதங்களுக்கு முன்னர் மேகமலை சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கு யானைகள், காட்டு எருதுகள் அதிகம். பெரியாறு புலிகள் காப்பகம், சிறீவில்லிப்புத்தூர் மலைஅணில் காப்பகத்துக்கு உயிர் பாதுகாப்பு வளையமாகவும் சுருளியாறு காடு இருக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் உள்ள மங்கலாறு, ஐரவங்கலாறு, ஹை வாவிஸ் அணைகளுக்கும் ஆபத்து ஏற்படலாம். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் எந்தப் பகுதியிலும் இந்த ஆய்வகத்தை அமைக்கக் கூடாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இப்பகுதியிலும் எதிர்ப்பைச் சந்திக்கலாம் என்பதால் சரணாலயப் பகுதிக்கு வெளியே ஆய்வகம் அமைக்க பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது. "நியூட்ரினோ ஆராய்ச்சிக்குத் தேவையான கடினமான சார்நோகைட் பாறை அப்பகுதியில் உள்ளது. ஆனால் சிங்காராவைப் போல அதை அறுதியிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லை. புவியியல் ரீதியில் இப்பகுதி நிலையானதா, பாதுகாப்பானதா என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக மதிப்பீடு நடந்து வருகிறது" என்று ஆராய்ச்சியில் பங்கேற்போர் தெரிவிக்கின்றனர். மழைப்பொழிவு அதிகமில்லாத, நிலையான புவியியல் அமைப்பைக் கொண்ட, நிலநடுக்க ஆபத்து மிகக் குறைவாக உள்ள தமிழகமே ஆய்வகத்துக்கு ஏற்றது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சரணாலயமாக அறிவிக்கப்படாத பகுதி என்பதாலேயே ஓரிடத்தின் உயிர்செழிப்போ, முக்கியத்துவமோ குறைந்துவிடாது. காடுகள், காட்டுயிர்களைப் பற்றிய அறிவியல்பூர்வமான புரிதல், அவற்றைக் காப்பாற்றும் கடுமையான சட்டங்கள் இல்லாத நம் நாட்டில் எந்த வளர்ச்சி நடவடிக்கையும் கேள்விக்கு உட்பட்டதே. ஆனால் அதேநேரம் விஞ்ஞானிகளின் அனைத்து கோரிக்கைகளையும் முற்றிலுமாக நிராகரிப்பது என்பதும் ஏற்கக்கூடிய ஒரு விஷயமல்ல. இதில் விவாதம் நடத்தி, ஒத்தஉணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

 

Pin It