மழைக்காலமும் குயிலோசையும், மா. கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.90

தேசிய அளவில் புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன், தமிழில் நெடுங்காலத்துக்கு முன்பே எழுதிய இந்த இயற்கையியல் கட்டுரைகளை சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் புத்தகமாகத் தொகுத்துள்ளார். அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றிய முதல் தமிழ் எழுத்து கிருஷ்ணனுடையது.

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம், விலை ரூ.120

ஆங்கிலத்தில் சூழலியல் கட்டுரைகளை எழுதி வந்த சு. தியடோர் பாஸ்கரன், சமீப ஆண்டுகளாக தமிழில் சிற்றிதழ்களிலும், வெகுமக்கள் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக எழுதிய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு. அவரது முதல் சூழலியல் தமிழ் புத்தகம்.

இயற்கை: செய்திகள், சிந்தனைகள், ச. முகமது அலி, இயற்கை வரலாற்று அறக்கட்டளை, விலை ரூ.145

தமிழில் இயற்கை, காட்டுயிர்கள், பறவைகள், தாவரங்கள், கடல்உயிரினங்கள் பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் தகவல்களை கொண்ட தொகுப்பு. இந்த நூலின் முக்கியத்துவமே இதில் கையாளப்பட்டுள்ள சொற்கள்தான்.

தமிழ்நாட்டுப் பறவைகள், க. ரத்னம், மெய்யப்பன் தமிழாய்வகம், ரூ. 225

பறவைகள் சார்ந்த தமிழர்களின் அறிவு சங்க காலத்துக்கு முந்தையதாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டுப் பறவைகள் சார்ந்தும் பறவைகளின் பெயர் சார்ந்தும் வெளியான முக்கியமான புத்தகம். இதில் கையாளப்பட்டுள்ள பெயர்கள், அதற்கான காரணங்கள் குறிப்பிடத்தக்கவை.

தமிழரும் தாவரமும், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், ரூ. 150

இயற்கையைச் சார்ந்து வாழ்ந்த தமிழர்களது பண்பாட்டின் பல்வேறு அம்சங்களில் பண்டைகாலம் தொட்டே தாவரங்கள் பெற்ற முக்கியத்துவத்தையும், அவற்றின் தமிழ் பெயர்களையும் விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கும் புத்தகம்.

சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, சாலிம் அலி, நேஷனல் புக் டிரஸ்ட்

சிறு வயதில் ஒரு சிட்டுக்குருவியை சுட்டு வீழ்த்திய சாலிம் அலிக்கு, அதன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிய ஆர்வம், இந்தியாவின் மிகப் பெரிய இயற்கை பாதுகாவலராக அவரை மாற்றியது எப்படி என்று அவரே எழுதிய இந்த சுயசரிதை உணர்வுப்பூர்வமான மொழியில் நம்முடன் பேசுகிறது.

ஏழாவது ஊழி, பொ. ஐங்கரநேசன், சாளரம், விலை ரூ. 250

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொ. ஐங்கரநேசன், தற்கால சூழலியல் பிரச்சினைகள் பற்றி தமிழில் தொடர்ச்சியாக எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர், ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதுபவர். அவரது சூழலியல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது.

அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி, ரூ. 80

மூன்றாம் உலக நாடுகளை வீழ்த்த வல்லரசு நாடுகள் எடுத்துள்ள புதிய ஆயுதங்கள் விதைகள் என்ற அதிர்ச்சியான தகவலின் பல்வேறு பரிணாமங்களை இப்புத்தகத்தில் விளக்கியுள்ள பாமயன், நீண்டகாலமாக சூழலியல் தொடர்பாக தமிழில் எழுதி வருகிறவர். தமிழ் மொழியின் வளம் எத்தகையது என்பதை இவரது எழுத்தை படிக்கும்போது உணரலாம்.

சூழலியல் - ஓர் அறிமுகம், பூவுலகின் நண்பர்கள்

சூழலியல் அடிப்படைகளை எளிமையாகவும் அரசியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள உதவும் அடிப்படையான நூல். பல பதிப்புகள் கண்டது.

உயிரோடு உலாவ, வந்தனா சிவா, பூவுலகின் நண்பர்கள்

சுற்றுச்சூழலும் இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் எப்படி ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன என்பதை விரிவாகக் கூறும் நூல். பெண்ணியம், சூழலியலுக்கு உள்ள நெருக்கமான முடிச்சுகளைப் பற்றிப் பேசுகிறது.

 

Pin It