2011-க்கான பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த மாதத்தில் நம் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கின்றன. இக்கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் இந்திய ஒன்றியம் முழுதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சூடான விவாதம் நடந்து வருகின்றது.
பெரியார் திராவிடர் கழகமும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ்நாட்டின் மூன்று பகுதிகளிலிருந்து புறப்பட்ட பரப்புரை குழுக்கள் பத்து நாட்கள் பயணம் செய்து, 2007 அன்று திருச்சியில் நடத்திய கழக மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினோம். ஏன் இந்த கோரிக்கை? ஏன் இவ்வளவு வலிமையாக எழுப்பப்படுகிறது?
இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் வாழ்விடம், தொழில், உடை, திருமணம், கல்வி, சமூக அந்தஸ்து அனைத்துமே அவரவர் பிறந்த வழியே தீர்மானிக்கிறது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளைக்கொண்டு அமைக்கப்படும் குடிநாயக ஆட்சி, பெரும்பான்மை மக்களின் கல்வி, தொழில், வாழ்வுரிமை பற்றியும் அக்கறை காட்ட வேண்டுமல்லவா? அதுதான் இல்லை. விடுதலை பெற்று, தனி அரசமைப்பு சட்டம் இயற்றி அறுபது ஆண்டுகள் கடந்த நிலையிலும், பெரிய தடைகளையெல்லாம் தாண்டி இந்த ஆண்டுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 9 சதவீத இடம், 60, 70 விழுக்காடாய் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு செய்வது தொடர்பான இந்திரா சகானி (எதிர்) இந்திய ஒன்றியம் (1992); எம். நாகராஜ் (எதிர்) இந்திய ஒன்றியம் (2006); அசோக் தாக்கூர் (எதிர்) இந்திய ஒன்றியம் (2008) போன்ற வழக்குகளில் எல்லாம் எதிர் தரப்பினர் வைத்த முதன்மையான வாதம் என்ன? 1931க்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பதை முன்வைத்தே வாதாடினார்கள்.
மேற்கண்ட மூன்று வழக்குகளிலும் ஒட்டு மொத்த மக்களின் சமூக கல்வி நிலை குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும்கூட, 2011 கணக்கெடுப்பிலும் சாதிவாரி விவரங்களை எடுக்க உரிய வழி வகைகள் ஏதும் செய்யப்படவில்லை.
இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1892 இல் முதன்முறையாக எடுக்கப்பட்டபோது, அது முழுமையான கணக்கெடுப்பாய் அமையவில்லை.
1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கப்பட்டது. அது 1931 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்து வந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு சரிவர, முழுமையாக எடுக்க முடியவில்லை.
குடியரசான பிறகு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 இல் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. ஆனால் அரசியல் சட்டத்தின் 341, 342 ஆவது பிரிவுகளின்படி பட்டியல் இன சாதி, பழங்குடியினர் கணக்கெடுப்பு மட்டும் தொடர்கிறது.
அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவு சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள வகுப்புகளின் நிலையை பற்றியும், அவர்களுக்குள்ள சங்கடங்களைப் பற்றியும், அத்தகைய சங்கடங்களைப் போக்குவதற்கான வழி வகைகள் பற்றியும் அவர்களை மேம்படுத்துவதற்காக மத்திய (அ) மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை தர ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில் 1953 இல் அமைக்கப்பட்ட காகாகலேல்கர் ஆணையம், 1978 இல் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம், பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட இவையொத்த பிற ஆணையங்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய பரிந்துரைத்தும், அரசு உயர்சாதியினரின் எதிர்ப்பைக் கருதி திட்டமிட்டே புறக்கணித்தும் வந்துள்ளது.
ஆனாலும், இதே மய்ய அரசு தான் பிற்படுத்தப்பட்டோர் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் வருகிறபோதெல்லாம் 1931 முதல் பிற்படுத்தப்பட்டோரின் முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்ற பார்ப்பன உயர்சாதியினரின் வாதங்களுக்கு முகம் கொடுத்து பார்ப்பனருக்கு எதிரான வாதங்களை முன் வைத்து வந்துள்ளது.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் “சூத்திரர்கள் யார்?” (1946) என்ற தமது நூலில்:
“சூத்திரர்களின் பிரச்சினையின் ஆழம் குறித்து மக்கள் சரியாக உணர்ந்திராததற்கு காரணம் சூத்திரர்களின் மக்கள் எண்ணிக்கை குறித்து அவர்கள் அறிந்திராமல் இருப்பதுவே ஆகும். கெட்ட வாய்ப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவர்களின் கணக்கை தனியாக எடுக்கவும் இல்லை. என்றாலும், தாழ்த்தப்பட்டவர்கள் நீங்கலான “சூத்திரர்”களின் எண்ணிக்கை இந்து மதத்தைப் பொருத்தவரையிலும் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மண்டல் குழு அறிக்கை இந்துக்களில் 44 சதவீதப் பேரும், பிற மதங்களில் 8 சதவீத பேரும் என மொத்தம் 52 சதவீத பேர் பிற்படுத்தப்பட்டோர் எனக் கூறுகிறது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு முதலில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 36 சதவீதம் என்றது. ஆனால், பின்னர் அவர்களே எடுத்த மாதிரிக் கணக்கெடுப்பு 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறது.
வட்டாரத்துக்கு சில வீடுகள் என எடுத்து கணக்கிடும் மாதிரி கணக்கெடுப்பு துல்லியமானது அல்ல என்றாலும் அதனை ஆதாரமாகக் காட்டி கூக்குரல் எழுப்புகின்றனர். அரசியல் சட்டத்தின் 15(4) பிரிவு சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள பிரிவினருக்கு கல்வி நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் (இடஒதுக்கீடு) செய்வது குறித்துப் பேசுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்வேறு நிலைகளில் அவர்கள் பெற்றுள்ள கல்வித் தகுதி, மாநில சராசரியோடு அப்பிரிவினரின் சராசரி ஆகியவற்றை ஒப்பிட்டே முடிவு செய்வது பொருத்தமாயிருக்கும்.
அரசு வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சாதியினருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசியல் சட்டத்தின் 16(4) பிரிவு கூறுகிறது. ஒரு பிரிவினரின் மக்கள் தொகை, அப்பிரிவினரில் அரசு வேலை பெற்றுள்ளோர் எண்ணிக்கை, வேலையின் எந்தப் படி நிலையில் எத்தனை பேர் என்ற விவரம் இல்லாமல் எவ்வாறு அரசு சரியாக செயல்பட முடியும்?
1993 ஆம் ஆண்டின் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின் (1) உட்பிரிவு, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஒரு முறையும், அதன்பின் ஒவ்வொரு பத்தாண்டிலும், சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியுள்ள நிலையிலிருந்து மீண்டு விட்ட பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கவும், அல்லது புதிதாக சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறது. இது சாதிவாரியான கணக்கெடுப்பு இல்லாத நிலையில் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?
நீண்டகாலமாக இடஒதுக்கீட்டு முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் படும். தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பொதுப் போட்டி (Open Competition) இடங்களிலேயே பெரும் பகுதியைப் பெறும் அளவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களும், சில இடங்களைப் பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களும் வளர்ந்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்டு, இதுவரை ஏறத்தாழ எல்லா இடங்களையுமே மொத்தமாக அனுபவித்து வந்த உயர்சாதிக் கூட்டம், தமக்கு அடுத்த நிலையில் போட்டியாக வளர்ந்து வரும் பிற்படுத்தப்பட்ட மக்களை முடிந்தவரை கல்வி, வேலை வாய்ப்புகளில் வராமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் அரசின் உயர் பீடங்களில் அமர்ந்துவிட்ட உயர்சாதி அதிகாரிகளின் உதவியோடு தங்கள் ஏகபோக உரிமையையும் முடிந்த வரையிலும் காப்பாற்ற பல்வேறு வஞ்சக நடவடிக்கைகளிலும், பரப்புரைகளிலும் ஈடுபடு கின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பால் சாதியம் சமூகத்தில் ஆழமாய் வேர் கொண்டுவிடும் என்ற ஒரு பரப்புரையை செய்கின்றனர். ஆனால், இவர்கள், கடந்த 70 ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பில்லாத நிலையிலும் சாதியம் சமூகத்திலும், அரசியலிலும் ஆளுமை செலுத்துவதை ஏனோ கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர்.
சாதிகளுக்குள் பிளவுகளை சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்படுத்தும் என்ற வாதமும் மேற்கண்டவாறே ஆதாரமற்றதாகும். சாதிவாதி கணக்கெடுப்பால் மக்கள் தொகை அதிகமுள்ளோரின் ஆதிக்கம் சமுதாயத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது என்றொரு கருத்தையும் உயர்சாதியினர் கூறுகின்றனர். இதுவரை சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் முற்றாதிக்கம் செலுத்தி வரும் கூட்டம் மிகச் சிறுபான்மையான பார்ப்பன சாதியே ஆகும்.
மக்கள் தொகை அதிகமுள்ள பிரிவினர் ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள் என்ற வாதம் உண்மையானால், முற்று முழுதாய் இந்துக்களே வாழ்ந்து வந்த இந்தியாவில், வெளியிலிருந்து வந்த மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட இஸ்லாமியர் ஆட்சி எவ்வாறு ஏற்பட்டது? அதற்குப் பிறகு முழுதும் இந்துக்களும், இஸ்லாமியர்களுமே இருந்த இந்தியாவில் நூற்றுக்கணக்கில் மட்டுமே நுழைந்த ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி எப்படி ஏற்பட்டது?
அரசியல் சட்டத்தின் 15, 16, 29(2) ஆகிய பிரிவுகள் ‘தம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், மரபு வழி, மொழி ஆகிய காரணங்களுக்காக பாகுபாடு காட்டப்படுவது கூடாது என தடை செய்துள்ளது. ஆகவே சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது சரியல்ல என்று ஒரு சொத்தை வாதம் முன் வைக்கப்படுகிறது. இவ்வாதத்தை வைப்போர் சாதியைத் தவிர பிற கூறுகளான மதம், இனம், பாலினம், பிறப்பிடம், மரபு வழி, மொழி பற்றிய விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியப்படுகின்றன என்பதை ஏனோ கவனிக்கத் தவறுகின்றனர். மேலும் பட்டியல் இன வகுப்புகள், பழங்குடிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியர் போன்றோர் பற்றிய விவரங்களும் தொடர்ச்சியாக பதியப்பட்டே வந்துள்ளன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆக, ஒவ்வொரு முறை பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற போதெல்லாம் 1931க்குப் பின் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு இல்லை என்பதையே முதன்மையான வாதமாய் எதிர்தரப்பினர் வைத்து வந்ததையும், ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டிருந்தாலோ அல்லது குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் பின் தங்கிய நிலை கண்டறியப்பட்டாலும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அதற்குத்தக திருத்தி அமைக்க சாதிவாரிக் கணக்கீடு அவசியமாகிறது.
1991 ஆம் ஆண்டு முதல் மதுலிமாயி போன்ற பல்வேறு மூத்த தலைவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி வழக்குகள் தொடுத்து வந்துள்னர். இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு விண்ணப்பத்திலேயே எளிய வழி உண்டு. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் குடும்பவாரியான சமூகத் தன்மை பற்றிய பிரிவில் குடும்பத் தலைவர் சார்ந்துள்ள சாதி / சமுதாயம் பற்றிய கேள்வியில் “பட்டியலின சாதி அல்லது பழங்குடியினர்” எனில் குறியீட்டெண்ணைப் பதிவு செய்யுமாறு அச்சிடப்பட்டிருந்தது. அதில் “பட்டியலின சாதி / பழங்குடி / பிற்படுத்தப்பட்டவர்” என சிறு திருத்தம் செய்தாலே போதும்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் குடிநாயக அரசான இந்திய அரசு, நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினராக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கும், மேம்பாட்டுக்குமான திட்டங்களை தீட்டுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் வாய்ப்பாகவும்,எழுபது ஆண்டு களாக தவிர்க்கப்பட்டு வந்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளுவதன் வழியாக உரிய சமூகநீதி வழங்க எளிதாக அமையும் என்பதால்தான் பெரியார் திராவிடர் கழகம் சாதி வாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறது.
- கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
(பெரியார் முழக்கம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)