குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல வல்லரசுகளின் கையில் இப்போது உலகம் கிடைத்திருக்கிறது.
உலகம் மிகவும் அழகானது. வளமானதுதான். ஆனால் அது இப்போது வல்லரசு வெறியர்களால் குதறப்படுகிறது. உலக முதலாளிகள் எல்லாம் ஏழை எளிய நாடுகளின் மக்களைப் பிழிந்து குருதி குடிக்கின்றனர். பஞ்சப் பராரிகளாக பட்டினிச் சாவில் அழிகின்றனர் ஏழை எளிய மக்கள். தங்களின் ஆளுமைக்கு அடிபணிய மறுக்கும் எளிய நாடுகளை அடக்கி நசுக்கி வெறியிடுகின்றன வல்லரசுகள்.
1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் ஜப்பானின் கிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட இரண்டு அணு குண்டுகளை விட ஆற்றலான அணு குண்டுகள் ஏறத்தாழ 23 ஆயிரம் அளவில் வல்லரசுகளிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மையை அமெரிக்காவே வைத்திருக்கிறது. அமெரிக்காவிடமும், ரசியாவிடமும் இருக்கிற அணுகுண்டுகளின் எண்ணிக்கையே 22 ஆயிரம் ஆகும். எஞ்சிய 1000 அணுகுண்டுகளையும் சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இசுரேல், இந்தியா, பாக்கிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் வைத்திருக்கின்றன.
அன்றைக்கு 1945 இல் கிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போட்டு அழித்த பின்னர், அன்றைய அமெரிக்கா அதிபர் ரூசுவெல்ட் உலக நாடுகளை அழைத்து ஒரு மாநாட்டைக் கூட்டினார். உலகில் போர் பற்றிய நிலைகளைப் பேசி அமைதி ஏற்படுத்துவதற்கென அம் மாநாட்டில் நோக்கம் கொள்ளப்பட்டது. அதுபோன்றதொரு வழி முறையில் அணுக் கருவிகளை ஏராளமாகத் தன்னள வில் உருவாக்கி வைத்திருக்கிற அமெரிக்கா, ஒபாமா, 47 நாட்டுத் தலைவர்களை கடந்த ஏப்பிரல் 12, 13 நாள்களில் வாசிங்டனில் "அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாடு' நடத்த அழைத்திருக் கிறார்.
2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா வில் ஆறு அணுகுண்டுகளிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத் திருந்த யுரேனியத்தை சில தீவிரவாதிகள் பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைந்து திருட முயன்றார்களாம்.
தீவிரவாதிகளின் கைகளில் அணு குண்டுகள் கிடைத்தாலோ, அல்லது அணுகுண்டு செய்வதற்கான மூல பொருள்களாக உள்ள யுரேனியம் தாதுப் பொருள் கிடைத்தாலோ என்ன செய்வது என்கிற அச்சம் வல்லரசுகளைக் கவ்விக் கொண்டதாம். எனவே, அமெரிக்காவும், ரசியாவும் ஆணு ஆயுதங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளலாம் என ஒப்புக் கொண்டனவாம். இந்தப் பின்னணியில்தான் கடந்த 2010 ஏப்பிரல் 12, 13 ஆம் நாள்களில் அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டைக் கூட்டியிருக்கிறது அமெரிக்கா. உலகின் எளிய நாடுகளை அணு ஆயுதங்கள் எனும் பெயரால் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்காகவே இந்த மாநாட்டைக் கூட்டியிருக்கிறார் ஒபாமா.
அழைக்கப்பட்ட 47 நாடுகளுள், இசுரேல் கலந்து கொள்ளவில்லை. இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகள் தங்களது பாதுகாப்புத் தேவைக்கென ஆணு ஆயுதக் குறைப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஈரானை மாநாட்டிற்கு அழைக்கவே இல்லை. இந்நிலையில் அமெரிக்கா வல்லரசின் தொண்டரடியாகச் செயல்படுகிற இந்திய மன்மோகன் சிங், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி, இன்ன இன்ன பேச வேண்டு மாய் அமெரிக்கா கூறியவற்றைப்பேசி விட்டுத் தில்லி திரும்பியிருக்கிறார்.
அணு பாதுகாப்புக்குத் திட்டவட்ட மான செயல்திட்டம் தேவை என மன்மோகன் பேசினாராம். அதை சீனா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 25 நாடுகள் வரவேற்றனவாம்.
பாதுகாப்பு என்றால் என்ன? யாரிடமிருந்து? யாருக்குப் பாதுகாப்பு இதை யெல்லாம் மன்மோகன் சிங் விளக்கவில்லை. ஆனால் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு யாரிடமிருந்து யாருக்கு?
அன்றைக்கு இரண்டாம் உலகப் போருக்காக உலக வல்லரசு நாடுகள் ஏராளமாய் வெடிமருந்துகளை உருவாக்கின என்பதும், அவற்றில் பெரும் பகுதி செலவு செய்யப்படாததால் அவ்வளவு மருந்துகளுக்குரிய நைட்ரேட், பாஸ்பேட், பொட்டாஷியம் போன்ற வேதியல் கலவைகளை வேளாண்மைக் குரிய வேதியல் மருந்துகள், உரங்கள் என்கிற பெயரில் எளிய நாடுகளின் தலையில் விற்றதும் அனைவரும் அறிந்த பழைய செய்திகள்.
ஆனால் அதைவிடக் கொடுமையானவை இப்போது நடந்து கொண்டிருக் கும் பின்வரும் செய்தி: கிரோஷிமா, நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவும், இந்தியாவும் போர் முனைப் போட்டிக்காக பல்லாயிரக்கணக்கான அணுகுண்டுகளைச் செய்து காத்திருக்கின்றன.
நீண்ட காலக் காத்திருப்புக்குப் பின்னர் பழைய சோவியத்து ரசியாவில் இருந்த உக்ரைனின் செர்னோ (1986 இல்) அணுமின் நிலையத்திலும், அமெரிக்கா வில் தொடர்ச்சியாகவும், மிக அதிகமாக வும் அணுமின் நிலையங்களிலும் மிகப் பெருமளவில் நேர்ச்சிகள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறை நேர்ச்சியிலும், ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். பல ஆயிரக்கணக்கான அணுக்கதிர் வீச்சினால் உடல் அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் படிப்படியாகத் தங்கள் நாடுகளில் அணுமின் நிலையங்களை நிறுவுவதை நிறுத்திக் கொண்டார்கள். பிற மூன்றாம் நிலை அடிமை நாடுகளில் அணுமின் நிலையங்களை நிறுவத் தொடங்கினர்.
அந்த வகையில் அணுகுண்டு வெடிப்பதும், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகளும் வேறுபாடு கொண்டவை இல்லை என்பதை அறியாத அடிமை அரசுகள், அணுமின் நிலையங்களை வரவேற்று தங்கள் தங்கள் நாடுகளில் நிறுவிக் கொண்டன. அந்த வகையில், கல்பாக்கத்தில் நிறுவப்பட்ட அணுமின் நிலையத்தால் பலமுறை எளிய நிலையில் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் இந்திய அரசு மூடி மறைத்து விட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலையக் கழிவு நீர் கடலில் கலப்பதால் ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் சுற்று வட்டாரக் கடல் பகுதியில் மீன்கள், கடல் உயிரிகள் வாழ இயலாமல் விலகி ஆந்திரப் பகுதி கடலுக்குப் போய்விடுகின்றன என்று தமிழக மீனவர்கள் பெரும் கவலை கொள்கின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையின் போது கல்பாக்கம் அணுமின் நிலையமும் அதனால் பாதிக்கப்பட்டது. அப்போது கனநீர் கசிவும், சேகரித்து வைக்கப்பட்ட அணு உலைக் கழிவுப் பொருள்களும் பேரலை யில் வெளியேறி நூற்றுக்கணக்கினர் இறந்து போயினர். ஆனால் அதையெல் லாம் அணுமின் நிலைய அதிகார வட்டாரங்கள் மூடி மறைத்ததுடன், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொய் கூறின.
கடந்த 2009 அன்று கருநாடகத்தின் கார்வார் பகுதிக்கு அருகில் உள்ள கைகா அணுமின் நிலையத்தில் 55 ஊழியர்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி பெரும் இன்னல் பட்டனர். ஆனால் அதையும் அணு உலைக் கசிவினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் என்று அந்த அணுமின் நிலைய அதிகார வட்டாரங்கள் மறுத்து விட்டன. ஆக, அணுமின் நிலையங்கள் என்பவை என்றுமே அஞ்சத் தகுந்தவை தாம். அவற்றால் பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டு பேரழிவு ஏற்படாது என்று யாராலும் உறுதி கூறிவிட முடியாது.
அணுமின் நிலையத்தில் நிறுவப்படும் அணு உலை செயலற்றுப் போனால் கூட பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் கதிர் வீச்சை வெளியிடுகிற வகையில் அணு உலைக் கதிர்கள் அழிந்து விடாமல், அந்த உலைக்குள்ளேயே இருந்திடும். இயற்கையின் பெருஞ் சீற்றங்களால் அந்த அணு உலைக்குப் பெரும் தாக்கங்கள் ஏற்படும்போது, அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டுப் பெரும் பேரழிவுகளே உருவாகும். ஆக, அணு மின் நிலையம் என்பதே அணுகுண்டை வைத்திருக்கும் கிடங்கு போன்று கொடுமையானதுதான்.
அமெரிக்காவின் சூழ்ச்சி
அது அவ்வாறிருக்க தமிழகத்தில் இரண்டு அணுமின் நிலையங்களையும், கருநாடகத்தில், மராட்டியத்தில், இராஜஸ் தானில் எல்லாம் ஒவ்வோர் அணுமின் நிலையத்தையும் இந்திய அரசு நிறுவியிருக்கிறது. இந்த ஐந்து நிறுவனங்களுமே அமெரிக்கத் தொழில் கூட்டில் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் உலக மயமாக்க நெருக்கடியில் அதிக அளவில் மின்சாரம் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் வகையில் அமெரிக்கா இந்தியா அரசை நெருக்கி அணு ஆற்றல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது. அதன்படி 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அணு உலைகளை முதல் தவணை யாக அமெரிக்காவிடமிருந்து வாங்கிக் கொள்ள வேண்டுமாய் நெருக்கடி கொடுத் திருக்கிறது.
அதைவிடக் கொடுமை என்னவெனில், அவ்வாறு நிறுவப்படும் அணுமின் தொழிலகங்களில் நேர்ச்சி ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்காதாம். அதுமட்டு மல்லாமல் இழப்பீட்டுத் தொகையாக அதிக அளவில் 500 கோடி மட்டும்தான் கொடுக்குமாம். இழப்பு எவ்வளவு பெரிதாயினும் அதற்கு மேல் எவ்வளவு இழப்பாயினும் அத்தனை கோடி ரூபாயை இந்திய அரசுதான் தரவேண்டுமாம்.
இந்த இடத்தில் இன்னொரு செய்தி நம் நினைவுக்கு வரவேண்டும். 1984 ஆம் ஆண்டு திசம்பர் இரவு 10 மணிக்கு, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தால் ஏறத்தாழ 390 டன் வேதிப் பொருள்களின் நச்சு காற்று பரவி நடந்த மிகப் பெரும் நேர்ச்சியும், அதை அந்த அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம் எவ்வாறு எதிர் கொண்டது என்பதையும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அந்தக் கொடும் நிகழ்வில் இறந்த வர்கள் 25,000 பேருக்கு மேலானவர்கள் என்று அரசே கூறுகிறது. அப்படியானால் இறந்தவர்கள் இன்னும் பல மடங்கினர்.
அந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் லாரன் ஆண்டர்சனைக் கைது செய்யச் சொல்லி ஆணை பிறப்பித்தது இந்திய அரசின் நீதிமன்றம். ஆனால் அந்த ஆன்டர்சனை அமெரிக்கா பாதுகாத்து வைத்திருப்பது மட்டுமல்ல, எங்களின் குடிமகனை உங்களிடம் ஒப்படைக்க எங்கள் சட்டம் இடம் தரவில்லை என்று சொல்லி, இன்றுவரை ஒப்படைக்க மறுத்துவிட்டார்கள்.
ஆக, அவர்களின் தொழிலாக நச்சுக் காற்றால் இலக்கக் கணக்கான மக்களை அழிக்க மட்டும் அவர்களின் சட்டம் இடம் தருகின்றது என்றால் அமெரிக்காவையும், அதற்கு அடிமையாய்த் தலையாட்டும் இந்திய அரசையும் புரிந்து கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவுக்குச் சென்று விருந்து தின்று, குடித்துக் கும்மாளம் அடித்து வரும் இந்திய அதிகார வகுப்பினர் எவரும் வாரன் ஆன்டர்சனை எங்களிடம் தரவேண்டும் என வலியுறுத்தியவர்கள் இல்லை. இதற்கிடையில் அந்த போபால் கொடுமைக்கு இழப்பீடாக 713 கோடியைத் தர வேண்டும் என கேட்கப்பட்டு வெகு காலத்திற்குப் பின்பே அதை அந்த நிறுவனம் தந்தது.
அதை அப்படியே இந்தியப் பாதுகாப்பு வங்கியில் போட்டு வைத்ததிருந்ததில் வட்டியோடு அது 1503 கோடியாகப் பெருகியிருந்தது. இருப்பினும் 2004 ஆம் ஆண்டு வழக்கு மன்ற வலியுறுத்தலால் 713 கோடியை மட்டும் இந்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுத்தது. எஞ்சிய தொகையை ஏப்பம் விட்டனர்.
ஆக, அமெரிக்க இந்திய அரசுகளின் இத்தகைய அயோக்கியத் தனங்களை எண்ணிப் பார்த்துக் கொண்ட நிலையில், இன்றைக்கு அமெரிக்கா தன் வலியுறுத்தலால் தொடங்கக் கூறும் அணுமின் நிலையத் தொழிலகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பே அவற்றில் நேர்ச்சி ஏற்பட்டால் எந்த வகையில் இழப்பீடு செய்யப்படும் என்கிற நயவஞ்சகமான ஒப்பந்தத்தைப் போடுவதை கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் கிரோஷிமா, நாகசாகிகளாய் கல்பாக்கம், கூடங்குளம்
அத்தகைய நயவஞ்சக ஆதிக்க வெறி பிடித்த அமெரிக்க அரசின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அதற்கு இசைவாக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடத் துடிக்கிறார்கள் காங்கிரசு கட்சியினரும், அவர்களின் ஒட்டுண்ணிக் கட்சிகளும். எதிர்க்கட்சிகள் எவையும் கூட அவற்றைப் பெரிய அளவில் எதிர்க்க வேண்டும் என்றோ, மக்களுக்கு இதை விளங்க வைத்து, மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்றோ அக்கறை செலுத்திடவில்லை.
தமிழகத்தின் வடக்கு, தெற்கு, இரண்டு பகுதிகளிலும் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டல்ல, மடியில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு இருப்பதுபோல் தமிழகம் தத்தளிக்கிறது. அமெரிக்க அயோக்கியத்தனத்தாலும், இந்திய ஆணவ வெறித்தனத்தாலும் அடிமைப்பட்டிருக்கிற தமிழகத்தில் நேரப் போகிற இக் கொடுமைகளைக் கண்டு வாய் திறந்து பேச கருணாநிதிக்கு அக்கறையில்லை.
மானாட மயிலாட பார்ப்பதற்கும், அரை அம்மண ஆட்ட கூத்தியர்கள் நடத்தும் பாராட்டு விழாக்களில் மனம் குளிர உட்கார்ந்திருப்பதுமான கருணாநிதிக்குத் தமிழகத்தைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர் கவலைப்படுவதெல்லாம் அவருடைய வாரிசுகளுக்கு அரசியல் பதவி அமைத்துத் தருவதைப் பற்றித்தான். ஆனால் தமிழக மக்களின் அடுத்த தலைமுறையினர் எத்தகைய கொடுமைக்கு ஆளாகப் போகின்றனரோ, தமிழகத்தில் ஒரு கிரோஷிமா, நாகசாகியாக கல்பாக்கம், கூடங்குளங்கள் இருந்து விடக் கூடாது என்று மக்கள் கவலைப்படாமல் இருந்திட முடியாது.
எனவே அணு உலைவிபத்து இழப்பீட்டு மசோதாவை மட்டும் அல்ல, அணு உலை அமைக்கும் தொழிற் சாலைகளை அமைப்பதையே தடுத்திட பேரெழுச்சி கொள்ள வேண்டும். கல்பாக்கம், கூடங்குளங்களை இழுத்து மூடிட வேண்டும்.
(விடுதலை முழக்கம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)