முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் சிங்களக் கொலைவெறி தணிந்தபாடில்லை. இன்று ஈழமண் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சிங்களக் காடையர் படை ஈழ மறக்குலப் பெண்களை மானபங்கப்படுத்தி மனம் மகிழ்கிறது. அவர்களைக் கட்டாயக் கருவுறுதலுக்கு உள்ளாக்கிக் களிப்படைகிறது. வேதனையை வெளியில் சொல்ல முடியாத முன்னாள் பெண் போராளிகள் பலர் மனதிற்குள்ளேயே வெந்து புழுங்கி மனச் சிதைவுறுகின்றனர். தற்கொலை நிகழ்வுகளும் பெருகி வருகின்றன. இனப்படுகொலையின் கோர வடிவம் இது.

முள்வேலிக் கம்பிக்குள்ளேயே மாண்டு புதையுண்டு போனவர்கள் பலர்; வெளியே மீண்டு வந்து ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருப்போர் இன்னும் பலர். அவர்களில் துணிவுள்ளோர் சொல்லும் கதைகள் கல் மனதையும் கரைக்கும்.

விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இம்முன்னாள் பெண்போராளிகள் தொடர்ந்து சிங்களப் படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளனர். உசாவல் என்ற பெயரில் படை முகாம்களுக்கு அவர்கள் அடிக்கடி வரவழைக்கப்படுவர்; வண்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவர். வர மறுக்கும் பெண்களின் குடும்பங்கள் கொலையச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

கடைநிலை வீரன் முதல் தலைமைப் படையதிகாரி முடிய எல்லாருடைய காமப்பசிக்கும் இப்பெண்கள் இரையாகின்றனர். ஒரு முகாமுக்கு வரவழைக்கப்படும் இவர்கள் தேவைப்படும் பிற முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவர். இளம் சிங்கள வீரர்களின் காம இச்சையைத் தூண்ட ஆபாசப் பாலியல் படங்கள் மேலிருந்து அனுப்பப்படுவதாகவும் தமிழ்நெற் செய்தி தருகிறது. எனவே இது தமிழினத்தைக் கருவறுக்கத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சதிச்செயல் என்பது தெளிவாகிறது.

இக்கொடுமையிலிருந்து தப்பிக்க ஒன்று நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும் அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டும். சில பெற்றோர்கள் தம் பெண்களைக் காப்பாற்ற காதலர்களோடு அவர்கள் ஓடிவிட்டதாகவும் கதைப்பதுண்டு. யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தற்கொலைக்கு முயற்சி செய்த முன்னாள் போராளிகள் பலருக்குத் தாம் மருத்துவம் பார்த்ததாக மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார். முகாம்களிலிருந்து திரும்பிய சிலர் பிளேடுகளை விழுங்கியும் சிலர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். வறுமையின் காரணமாக இத்தகைய முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டதாகக் கதைகட்டும் சிங்கள அரசின் கூற்றுகளை மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சுபோதினி சிவலிங்கம் பதினைந்து ஆண்டுகள் விடுதலைப் போருக்காய்த் தம்மை ஈந்து கொண்டவர். 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற சண்டை ஒன்றில் ஊனமாகிப் போனவர். வன்னிப் போரின்போது புலிகளின் மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர். அவருடைய சாவுக்கும் வறுமையே காரணமாக்கப்படுகிறது. ஆனால் அவர் தொடர்ந்து உசாவலின் பேரில் முகாமுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவர் என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மூடி மறைக்கிறது சிங்களம். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டோரின் உண்மை எண்ணிக்கை யாருக்கும் தெரியாது.சிறை பிடிக்கப்பட்டோர் முகாம்களில் அடைக்கப்பட்டோர் எந்தக் கணக்கும் கிடையாது.2000 முதல் 3000 வரையிலான சிறை பிடிக்கப்பட்ட பெண் போராளிகளில் எவருக்கு என்ன நேர்ந்தது என்பது எவருக்கும் தெரியாது. 600 பேர்கள் மட்டுமே முகாம்களில் உள்ளதாகக் கொழும்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்யப்பட்டோர் எத்தனை பேர்? யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது? எதற்கும் எந்தப் பதிவேடும் கிடையாது. மண்ணில் மிதிபடும் இந்த மனித உரிமைகளைக் கேள்வி கேட்க உலகில் எந்த நாடும் இல்லையே!

நெஞ்சங் குமுறுகிறார்  கற்பு

நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப்

பஞ்சை மகளிரெல்லாம்  துன்பப்

பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு

தஞ்சமு மில்லாதே  அவர்

சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்

மிஞ்ச விடலாமோ........

பாரதியின் நெஞ்சக் குமுறலை பெண்போராளி ஒருவர் இப்படி வெளிப்படுத்துகிறார். “மீண்டும் நான் சண்டை போடத் துடிக்கிறேன். துவக்கு ஒன்று என் கையில் கிடைக்குமென்றால் எத்தனைச் சிங்களக் காமுகரைக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேர்களைக் கொன்றுவிட்டு மாய்வேன்.”

மூலம் : தமிழ்நெற்(tamilnet)

Pin It