தி.மு.க.வின் மூலாதாரக் கொள்கை என்று அண்ணாவால் பலமுறையும் குறிப்பிடப்பட்ட திராவிடநாடு விடுதலைக் கோரிக்கைக்கு 1963இல் முழுக்குப் போடப்பட்டது. கட்சியின் இதயமாகக் கருதப்பட்ட விடுதலை இலக்கை வலி தெரியாதபடி அறுத்தெறிந்தார் அண்ணா. தி.மு.க. தோற்றம் கண்ட 1949 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரையிலும் கழகத்தவர்களின் கனவு தேசமாகக் காட்டப்பட்டு வந்த திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா எத்துணை எளிதாகக் கைவிட்டார் என்பதையும், அதை எவ்வித எதிர்ப்புமின்றி எப்படிக் கைவிட முடிந்தது என்பதையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
திராவிடநாடு; கோரிக்கையின் வெறுமை 1959ஆம் ஆண்டிலிருந்தே வெளிப்படத் தொடங்கி விட்டது. 1959ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க.வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், 'திராவிடநாடு' இலட்சியம் என்றாலும் கூட தமிழ்நாடு எல்லைக்குள் மட்டுமே பணிகள் நடைபெறுவதாக ஈ.வெ.கி. சம்பத் குறை கூறினார். திராவிட நாடு கோரிக்கையில் கழகத் தலைமை நேர்மையற்று இருப்பதாக சம்பத் கருதினார். இவ்விதமாக, கட்சியின் குறிக்கோள்-நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் போக்கு கட்சிக்குள் 1959இல் தொடங்கிவிட்டது.
1959 திசம்பர் 27ஆம் நாள், நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் சென்னைச் சட்டமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினார். 'தனித் திராவிடநாடு கேட்கும் தி;.மு.க. இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறதா? இல்லையா?' என்று கேட்ட போது வகையாக மாட்டிக் கொண்ட அண்ணா, 'இப்போதைய அரசியல் சட்டம், மாநிலங்களை ஆதிக்கம் செய்யும் அளவிற்கு மத்திய அரசிடம் அதிகாரங்களைக் குவித்துள்ளது; தி.மு.க. சட்டப்ப+ர்வமான வழிகளின் மூலம் அரசியல் சட்டத்துக்கானத் திருத்தம் கொண்டு வருவதற்கு முயலுமே தவிர அதற்கு மேல் எதுவும் இல்லை, என்று அறிவித்தார். ஜஜகோ.கேசவன், திராவிட இயக்கத்தில் பிளவுகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 1994, பக்.42ஸ அண்ணா இப்படி அப்பட்டமாகத் திராவிட விடுதலைக் கோரிக்கையின் வெறுமையை வெளிப்படுத்திய போது, அது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. அண்ணாவுக்கு எதிராக வெளிப்படையாக ஈ.வெ.கி. சம்பத் முரண்படுவதற்கு இதுவும் ஒரு காரணமானது. நடிகர்களுக்கு முன்னுரிமை தரும் 'அரிதார அரசியல்', அவர்களுடைய அடாவடி நடவடிக்கைகள், தலைமையின் போக்கு, மிகச் சிறிய அச்சுறுத்தல்களுக்கே அஞ்சும் தலைமையின் நிலை ஆகியவற்றைக் காரணங்களாகக் காட்டி, தம் அணியினருடன் வெளியேறி சம்பத் தமிழ்த் தேசியக் கட்சியை 19.04.1961இல் தொடங்கினார்.
ஆனால், அண்ணா தொடர்ந்து திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தினார். (கட்டுரைத் தொடரின் இயல் - 5 பார்க்க). அது மட்டுமின்றி, இலக்கு திராவிட நாடு விடுதலைதான் என்றும்; சட்டசபைக்குச் செல்வது வழிமுறை மட்டுமே வேட்டுமுறை ஏற்புடையதல்ல, ஓட்டுமுறையே தி.மு.க.வின் வழிமுறை என்றும் அண்ணா தொடர்ந்து தெளிவுபடுத்தி வந்தாh.; அண்ணா 1961 ஜூலை மாதத்திலும் இப்படி எழுதினார்:
'தம்பி, சட்டமன்றம் செல்வது பொறுப்புணர்ந்து தான் கொண்ட கொள்கைக்கு வலு ஊட்டும் நோக்குடனேதான்" (தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்-5, கடிதம் 147)
1962 பிப்ரவரி மாதம், அண்ணா தம் இலக்கையும் வழிமுறையையும் வேறுபடுத்திக் காட்டினார்.
'திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டு விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சியே தவிர, திராவிட நாட்டை விடுவிப் பதற்காக ஏற்பட்ட கழகமே தவிர, அது சட்ட சபையைக் கைப் பற்றி மந்திரி சபை அமைப் பதற்கு ஏற்படுத்தப்பட்ட வெறும் அரசியல் கட்சி அல்ல." (நம் நாடு, 1- 2.1.1962)
அதுமட்டுமின்றி, தம்பிமார்கள் எந்த நிமிடமும் திராவிட நாட்டு விடுதலைக்காகச் சிறை செல்லத் தயாராக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் அண்ணா எழுதி வந்தார். 1961 ஆகஸ்டு மாதம் தம்பிகளுக்கு அண்ணா இப்படிக் கடிதம் எழுதினார்:
'விடுதலைக் கிளர்ச்சியில் எதிர்பார்க்க வேண்டிய அடக்குமுறை அவிழ்த்து விடப்படும் வேளை நெருங்கிக் கொண்டிருக் கிறது. தம்பி! என்ன சொல்கிறாய்? முதல் பந்தியா! பிறகா! வேண்டவே வேண்டாமா! பதில் சொல்லிவிடு! மணி அடித்து விட்டார்கள்!!"
அண்ணா அதே கடிதத்தில் இப்படி எழுதினார்:
'விடுதலை கேட்கும் எம்மைச் சிறைக்கு இழுத்துச் செல்லும் போது, அந்தச் சிறையில் எத்தனை ஆPக்கள், எத்தனை ஆடுயுக்கள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தேர்தலிலே வெற்றி தேடிக் கொடுங்கள.;"
(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 5, கடிதம் - 148)
அண்ணாவின் இந்தக் கருத்துக்களை ஏற்றுத்தான் அடிமட்டத்துத் தொண்டர்கள் வரை 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை' என்ற வரிகளை திரும்பத் திரும்ப உரத்து உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அண்ணாவின் விடுதலைக் கருத்தை ஏற்றுத்தான் 1957 பொதுத் தேர்தலில் தி.மு.க.வின் 15 சட்டமன்ற உறுப்பினர்களும,; 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும,; 1962 பொதுத் தேர்தலில் 50 சட்டமன்ற உறுப் பினர்களும், 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 34 இலட்சம் வாக்குகளை 1962 தேர்தலில் தி.மு.க. பெற்றிருந்தது. மேலும் 22.09.1962 அன்று சென்னையில் நடைபெற்ற 'திராவிட நாடு விடுதலை விழா' ஊர்வலத்தில் இரண்டு இலட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர்; பொதுக் கூட்டத்தில் மூன்று இலட்சம் பேர் பங்கேற்றனர்.
திராவிட நாட்டு விடுதலை உணர்வு பொங்கி வழிந்த காலகட்டம் அது.
விடுதலை அரசியலுக்கு முழுக்கு - சீனப் போர் தந்த வாய்ப்பு
1962 இன் இறுதியிலேயே அண்ணாவின் இந்த வகையிலான 'தேர்தல் வழியாகத் திராவிட நாட்டு விடுதலை' என்ற முறைக்குச் சோதனை வந்தது. அண்ணா அதில் தோற்றுத்தான் போனார். 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய-சீனப் போர் மூண்டது. அந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்தியா முழுவதுமே சீன எதிர்ப்பின் அடிப்படையிலான ஓர் ஒற்றுமை உணர்வு காணப்பட்டது. 1959 முதலே 'திராவிடநாடு' என்ற கருத்து கட்சிக்குள்ளேயே நெருக்கடியைச் சந்தித்து வந்தது. அண்ணா, காலம் பார்த்து அதைக் கைவிட வேண்டும் என்ற கருத்தில் இருந்து வந்தார் என்பது சரியான கணிப்பே ஆகும். சீன ஆக்கிரமிப்பு அப்படி ஒரு அரிய வாய்ப்பை அண்ணாவுக்கு வழங்கியது.
1962 ஜூலை 15ஆம் நாள் தி.மு.க.வின் நான்காவது சென்னை மாவட்ட மாநாட்டில், ஜூலை 19ஆம் நாள் விலைவாசி உயர்வுப் போராட்டம் நடைபெறும் என்றும், உயர் அரசு அலுவலகங்களின் முன் ஒருநாள் அடையாள மறியல் போராட்டமாக அது நடத்தப்படும் என்றும் அண்ணா அறிவித்தார். ஜூலை 19 அன்று வேலூரில் மறியல் செய்து அண்ணா கைதானார். அண்ணாவுக்கு 10 வாரக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது அண்ணா சிறையில் இருக்கும் பொழுது சில முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன அண்ணா 1962 அக்டோபர் 24ஆம் நாள் விடுதலையானார்.
இந்தியப் பிரதமர் ஜவஹர் லால் நேருவால் 1961இல் உரு வாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் குழு 1962இல் முதன் முதலாகக் கூடியது. அதற்கு முன்பு தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு ஒன்றையும் 1961இல் நடத்தியிருந்தது. இந்தியத் தேசிய ஒருமைப் பாட்டுக் குழு, தேசிய ஒருமைப் பாடு மற்றும் வட்டார உணர்வு குறித்த குழு ஒன்றை நியமித்தது. அக்குழு பிரிவினை பற்றிய கோரி;க்கைகளைத் தடைசெய்யும் நோக்குடன் ஓர் அறிக்கை தயாரித்து அளித்தது. அதில் இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காக்க இந்திய அரசியல் சட்டத்தின் பத்தொன்பதாம் பிரிவைத் திருத்தப் பரிந்துரைத்தது. பல்வேறு கட்சித் தலைவர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்த இக்குழு, அண்ணாவிடமோ அல்லது பிற தி.மு.க. தலைவர்களிடமோ கருத்துக் கேட்கவே இல்லை. இக்குழுவினர் பரிந்துரையின்படி செய்யப்பட்டதே இந்திய அரசியல் சட்டத்தின் பதினாறாவது சட்டத் திருத்தம் (Sixteenth Amendment Act, 1963).
இதன்படி இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 19, 84, 173 மற்றும் அரசியல் சட்டத்தில் உள்ள மூன்றாவது அட்டவணை ஆகியவை திருத்தத்திற்கு உள்ளாகின. இதன்படி சட்டமன்றத்துக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டியிடும் போது, இந்திய அரசியல் சட்டத்தில் தான் நம்பிக்கையும், கடப்பாடும் கொண்டவர் என்றும், இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆதரவானவர் என்றும் உறுதிமொழி ஏற்க வேண்டும். அதாவது, தனிநாடு கோரிக்கையை முன்வைப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. சட்டத் திருத்தத்திற்காக மசோதா 18.01.1963இல் சட்ட அமைச்சர் ஏ.கே.சென் என்பவரால் முன்வைக்கப்பட்டு, 05.10.1963 அன்று சட்ட வடிவம் பெற்றது. 1962 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அண்ணாவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும.; எதிர்வரும் பிரச்சனையை உணர்ந்து கொண்ட அண்ணா மைய அரசின் இணக்கத்தைப் பெற முயற்சிக்கும் போக்கு தெரிந்தது.
விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் கைதான அண்ணா, 1962 அக்டோபர் மாதம் 24ஆம் நாள் வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அன்று மாலை வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா இப்படி அறிவித்தார்:
“சீனாவின் ஆக்கிரமிப்பைச் சகிக்க முடியாது; சீனாக்காரன் எடுத்து வைத்த காலடி திருப்பி எடுக்கப்படும்வரை அந்த ஒரு துறையில் நேருவின் கரத்தை வலுப்படுத்தியே தீருவோம்;”.
“சீனப் படையெடுப்புக்காகத் திராவிடநாட்டுப் பிரச்சனையை விட்டுவிட மாட்டோம். போர் நெருக்கடியில் நமது பிரச்சனையைத் தள்ளிவைத்து, எந்தவிதக் கிளர்ச்சியிலும் ஈடுபடாது, நாடு காக்கும் பணி நமதென்றே நாமிருப்போம்.” ஜவு.ஆ. பார்த்தசாரதி, தி.மு.க வரலாறு, பாரதி பதிப்பகம், சென்னை, ஏழாம் பதிப்பு, 1998, பக்.361
உடனடியாக வெளியிடப்பட்ட சீனப்போர் பற்றிய அண்ணாவின் அறிக்கையிலும், நேருவை அண்ணா வெகுவாகப் பாராட்டியிருந்தார்:
“குரோதத்தையோ, கொந்தளிப்பையோ, போரையோ தவிர்க்கும் விதத்தில் நாட்டின் கொள்கையைத் தெளிவாக வைத்திருக்க எந்த ராஜதந்திரியும் பண்டித ஜவஹர்லால் நேரு போல் உண்மையான, யோக்கியமான முயற்சியில் இவ்வளவு முழுமையாக ஈடுபடவில்லை.” மேலது, பக்..362ஸ
அந்நியப் படையெடுப்பின் போது ஒற்றுமை உணர்வைக் காட்டுவது அவசியம் என்றாலும் கூட, அண்ணாவின் அறிக்கையில் கூடுதல் இணக்கம் காணப்பட்டது. நிதி சேகரித்து அளிப்பதையும் தங்கள் பணியாக அண்ணா அறிவித்தார். ஒருபடி கூடுதலாகப் போய், “வீடு இருந்தால்தானே ஓடு மாற்ற முடியும்? இப்போது வீட்டிற்கே அல்லவா ஆபத்து வந்திருக்கிறது!” என்று அண்ணா கூறினார். திராவிடநாடு கொள்கையை மெல்ல மெல்ல ஓரம்கட்டி, ஒரேயடியாக முழுக்குப் போடும் போக்கின் தொடக்கத்தை அண்ணாவிடம் காணலாம். திராவிட நாடு வீடாக இருந்தது போய் இப்போது இந்தியா அண்ணாவுக்கு வீடாகக் காட்சி அளித்தது. அது மட்டுமின்றி அண்ணா இப்படி அறிவித்தார்:
“…enter the name DMK in the roll call of honour for the integrity and safety of the country”
[S. Ramachandran (ed.). Anna Speaks, Puratchi paathai Pathippakam, Chennai, Revised edition, No date, Page 31 enter the name DMK in the roll call of honour for the integrity and safety of the country”
சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றுபட்டுக் குரல் கொடுப்பது என்னும் பெயரில் அண்ணா ஓசைப்படாமல் திராவிட நாடு கொள்கையை ஓரங்கட்டினார். அதுவே 1963இல் அதிகாரபூர்வமாகக் கைவிடப்பட்டது.
பிரிவினை பேசும் எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தடைசெய்யும் நோக்கிலேயே பதினாறாவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது என்றும், மக்களாட்சி முறைமைக்கு எதிரானது என்றும், பிரிவினைக் கோரிக்கைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறைபாடுகளாலேயே எழுகின்றன என்றும் அண்ணா நாடாளுமன்ற மேலவையில் பேசினார்.
அண்ணாவின் ஓசையில்லா கொள்கை மாறாட்டம்:
நாடாளுமன்ற மேலவையில் பிரிவினைத் தடை மசோதா மீது அண்ணா உரையாற்றியதாக 25.1.1963 அன்று தி.மு.க. தலைமைக் கழக வெளியீடான 'தி.மு.க வரலாறு' (1975) குறிப்பிடுகிறது. அண்ணாவின் உரையில், திராவிடநாடு கோரிக்கையை அதிகாரப+ர்வமாக வெளியிடும் முன்னரே, மாநில சுயாட்சி நோக்கி நகர்வதைக் காணலாம். தன் கோரிக்கையை விடாமல் இருப்பது போலவும், அதேநேரம் ஒரு சமரசத்தை நாடுவது போலவும் அண்ணா பேசியிருக்கிறார்:
“எங்களுடைய கோரிக்கை இறையாண்மை யைப் பாதிப்பதாக ஏன் கருதுகிறீர்கள்? அதற்குப் பதில் கூறுமுன், 'இறையாண்மை' என்பதன் மூலம் என்ன பொருள் கொள்கிறோம் என்பது பற்றி நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் முன்னுரை 'அரசியல் இறையாண்மை' மக்களிடம் பொதிந்திருப்பதாகக் கூறுகிறது. சட்ட இறையாண்மை, கூட்டாட்சி ஒன்றியத்திடமும் அதை உருவாக்கும் அலகுகளான மாநிலங்கள் ஆகியவற்றிடமும் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய திட்டம் (அதாவது கோரிக்கை), மாநிலங்களுக்கு இன்னமும் கொஞ்சம் அதிகம் இறையாண்மை அளிப்பதற்கானது என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? நாங்கள் 'திராவிடஸ்தான்' கேட்டவுடனேயே இறையாண்மையின் வேரை வெட்டுவதாக ஏன் கருதுகிறீர்கள்? இறையாண்மை முழுவதுமே ஒரு குறிப்பட்ட இடத்தில் மட்டுமே தங்கியிருக்கவில்லை. நாம், ஒற்றையாட்சியை அல்ல, ஒரு கூட்டாட்சி அமைப்பைப்... பெற்றிருக்கிறோம். ஏனெனில் பல அரசியல் தத்துவமேதைகள் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்தியா என்பது அவ்வளவு விரிந்தது - உண்மையில் ஒரு துணைக்கண்டம் என்று விவரிக்கும் அளவிற்கு, ஓர் இரும்புச் சட்டக ஒற்றையாட்சி முறை இங்கு இருக்க முடியாத அளவிற்கு- மனவளம் அவ்வளவு பன்மை வகைப்பட்டது, மரபுகள் அவ்வளவு வேறுபட்டவை, வரலாறு அவ்வளவு மாறுபட்டது.
நான் காணும் குற்றம் என்னவென்றால், PளுP உறுப்பினரான திரு. குருபாத சுவாமியும் மற்றவர்களும் ஏற்பளித்துக் கூறியதைப் போல, இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் கூட்டாட்சி செயல்பட்ட விதம், மாநிலங்களின் சிந்தைகளில் ஒரு விரக்தி நிலையை உருவாக்கியிருக்கிறது. மாநிலங்கள் பிச்சை பெறும் நிறுவனங்களாக விரைந்து மாறிக் கொண்டிருக்கின்றன என்று நான் கூறினால் என்னை ஆதரிக்க முடியாது என்று அவர்கள் கருதலாம். அவை (மாநிலங்கள்) பின்னுக்குத் தள்ளப்படுவதாக, மாநிலங்கள் உணருகின்றன. தங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற இயல்பான உணர்வு காணப்படுகிறது. இத்துடன் சேர்ந்து காணப்படும் வட்டார ஏற்றத்தாழ்வுகள், அத்துடன் மொழிச்சிக்கல் ஆகியவையும் உள்ளன. ஆகவே என்னைப் போன்ற மனிதர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கருதினால், அது இயற்கையானது என்றும் பிரிவினை பற்றி நாங்கள் சிந்தித்தால் அது இயல்புக்கு மாறானதல்ல என்றும் நீங்கள் கருதவில்லையா?
… நான் சொல்ல விரும்புவது என்னவெனில், கூட்டாட்சிமுறை செயல்படும் விதம் மாநிலங்கள், மேலும் மேலும் விரக்தி நிலை அடையும் வகையில் உள்ளது அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே அம்மாநிலங்களின் கோரிக்கை.
… கூட்டாட்சி அரசியல் சட்டத்தின் ஒற்றையாட்சிப் பண்புகளை எதிர்க்கும் எதிர்ப்பின் ஈட்டி முனையே தி.மு.க. என்று நீங்கள் கருத வேண்டும். …இந்தக் கூட்டாட்சியை உண்மையான கூட்டாட்சி ஆக்குங்கள்” (மொழிபெயர்ப்பு: கட்டுரையாளர்)
சோவியத் நாட்டில் அளிக்கப்பட்டுள்ள பிரிந்து போகும் உரிமையை அண்ணா சுட்டிக்காட்டினார். இந்தச் சட்டத்திருத்தம் 'அடிப்படை உரிமைகளை'ப் பாதிப்பதாகக் கூறினார்.
அண்ணாவின் உரையில் சில முக்கியக் கூறுகளைக் கவனிக்க வேண்டும். 16ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்கான மசோதா விவாதத்திற்கு வைக்கப்பட்ட நிலையிலேயே தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு 'மாநிலங்களுக்கு அதிக உரிமைகள்' என்ற திசை நோக்கி அண்ணா ஓடியிருப்பதைப் பார்க்கலாம். அதாவது சட்டம் வருமுன்னேயே, அது வரப் போகிறது என்ற நிலையிலேயே விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணா.
1962 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மேலவையில் அவர் நிகழ்த்திய கன்னிப் பேச்சில,; “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். ஒரு திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் நாங்கள் தன்னுரிமை விரும்புகிறோம்.” என்றெல்லாம் பேசினார். ஆனால், 1963 இல் அண்ணாவின் குரலில் இன உரிமை வேட்கை இல்லை.
ஒரு நாடாளுமன்ற உரை என்பது திடீரென்று பேசிவிடும் உரை அல்ல, அவ்வுரையின் பெரும்பகுதி முன்னமே திட்டமிடப்பட்ட ஒன்றாகவே இருக்க முடியும். அண்ணாவின் நாடாளுமன்ற உரை திராவிட நாடு கோரிக்கையைக் கைகழுவிவிட்டு, மாநிலங்களுக்கு அதிக உரிமை கோருகிறது. இது குறித்துத் தன்கட்சிக்குள் எவரிடமும் அண்ணா விவாதித்ததாகத் தெரியவில்லை. பொதுக் குழுவிலோ, செயற்குழுவிலோ கூட இது குறித்து முன்கூட்டியே அவர் விவாதிக்கவும் இல்லை, தீர்மானம் போடவுமில்லை.
1963இல் நிறைவேற்றப்பட்ட பதினாறாவது அரசியல் சட்ட மசோதா 'பிரிவினை கோருகிறவர்கள் தேர்தலில் நிற்க முடியாது" என்ற ஒன்றை மட்டுமே கருவாகக் கொண்டிருந்தது. பிரிவினை கோருவோருக்குத் தண்டனை வழங்கும் சட்டமல்ல அது. உண்மையான பிரிவினைத் தடைச்சட்டம் 1967இல் தான் வந்தது. சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் தடைச்சட்டம் - 1967 எனப்படும் சட்டம்தான் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என வரையறை செய்தது. அதற்கு ஓராண்டு முதல் ஏழாண்டு வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறியது.
1963ஆம் ஆண்டு பதினாறாவது சட்டத் திருத்த மசோதா விவாதிக்கப்படும் நிலையில் இருக்கும் போதே, அண்ணா தாங்கள் கோருவது 'மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள்" அல்லது 'உண்மையான கூட்டாட்சி" என்று பேசினார். சட்டம் வருமுன்பே தன் இலக்கைக் கைவிடும் அண்ணாவின் போக்கு அவரின் நீண்டகால அரசியல் திட்டத்தை உய்த்துணர முடியாதவர்களுக்கு மட்டுமே வியப்பைத் தரும்.
அண்ணாவின் உத்தியில் மாறுபட்ட இருமுனைகள்:
1959இல் சென்னைச் சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் கிடுக்கிப் போட்டு அண்ணாவை மடக்கிய போது, அண்ணா கூறிய பதிலை இப்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 'இப்போதைய அரசியல், மாநிலங்களை ஆதிக்கம் செய்யும் அளவிற்கு மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளது. தி.மு.க. சட்டபூர்வமான வழிகளின் மூலம் அரசியல் சட்டத்திற்கான திருத்தம் கொண்டு வருவதற்கு முயலுமே தவிர அதற்குமேல் எதுவும் இல்லை" என அண்ணா கூறிய பதிலுக்கும் 1963இல் டில்லி மேலவையில் அண்ணா கூறியுள்ள கருத்துக்கும் உள்ள ஒற்றுமையை உணர வேண்டும்.
சட்டப்பூர்வமான இடங்களான சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் அண்ணா முன்வைத்த கருத்துகளுக்கும், கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றும் போது அண்ணா முன்வைத்து வந்த கருத்துகளுக்கும் பெருத்த வேறுபாடு இருந்து வந்தது. 'இதோ மணி அடித்துவிட்டது!" என்று தம்பிமார்களிடம் கூறுவது, “விடுதலை கேட்கும் எம்மைச் சிறைக்கு இழுத்துச் செல்லும் போது, அந்தச் சிறையில் எத்தனை ஆக்கள், எத்தனை ஆடுயுக்கள் இருக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தேர்தலிலே வெற்றி தேடிக் கொடுங்கள்” என்று கூறி ஒருபுறம் தம்பிகளின் உணர்வை உசுப்பி விட்டுத் தேர்தல் வேலை வாங்குவது, மறுபுறம் சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய அவைகளில் 'மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள்" என்று பேசுவது, இவ்வகையில் மாறுபட்ட இரு முனைகளைக் கொண்ட உத்தியைக் கைக்கொண்டு தேர்தல் அரசியல் செய்தார் அண்ணா.
அண்ணாவுக்கு ஒரு பெருத்த சிக்கல் காத்திருந்தது. சட்ட மன்றத்தில் (1959) சி.சுப்பிரமணியத்தைச் சமாளிக்க முடிந்தது. நாடாளுமன்றத்திலும் தன் கோரிக்கை உண்மையான கூட்டாட்சிதான் என்று பேசிவிட முடிந்தது. ஆனால், இனி தம்பிமார்களிடம் சமாதானமாகப் பேசித் திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டாக வேண்டுமே, அந்தச் செயலையும் தம்பிகளும் ஏனைய தலைவர்களும் ஏற்கும் வண்ணம், கட்சியில் பிளவு வராதபடி, தொண்டர்கள் அதிர்ச்சி அடையாதபடி, அனைவருடைய சம்மதத்துடன் தங்கள் மூலாதாரக் கொள்கையான திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டாக வேண்டும். அண்ணாவின் 'சாமர்த்தியம்" இதை வெற்றிகரமாகச் செய்து முடித்ததில் வெளிப்பட்டது.
மூலாதாரக் கொள்கை திருத்தம் :
1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் 08,09,10 ஆகிய நாட்களில் தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக் குழுவில் அமைக்கப்பட்ட 'கட்சி சட்டதிட்டத் தனிக்குழு" கட்சியின் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதைக் கட்சியின் செயற்குழு ஏற்றுக் கொண்டு கட்சியின் சட்டதிட்டத்தில் விதி 2ஐ நீக்கி விட்டுப் புதிதாக வரையப்பட்ட பகுதியை விதி 2ஆகச் சேர்த்தது. விதி 2 இவ்வாறு கூறுகிறது:
'தமிழகம், ஆந்திரம், கேரளம், கருநாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்குள், இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது"
இவ்வாறு தி.மு.க.வின் குறிக்கோள் மாற்றியமைக்கப்பட்டது. 'இந்திய ஒருமைத்தன்மை", 'இந்திய அரசியல் அமைப்பு", 'இவற்றுக்கு உட்பட்டு இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்கள்" என்று முற்றிலுமாகக் குறிக்கோள் விதி மாற்றி யமைக்கப்பட்டு, ஓர் அடிமைத் தமிழகத்தின் பிச்சைக் குரலாகப் பதியப்பட்டது.
அண்ணாவால் எப்படி எவ்வித எதிர்ப்பும் இன்றி திமுகவின் மூலாதாரக் கொள்கையான திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட முடிந்தது? கட்சியில் எவ்விதப் பிளவும் நிகழா வண்ணம் அண்ணாவால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது? அண்ணாவின் நாவன்மை, ஏற்க வைக்கும் திறன், புரிந்து கொள்ள இயலாதவர்களைக் குழப்புவது, புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவர்களை எதிர் வினைவுகள் குறித்து மிகையாகக் கூறி கலவரப்படுத்துவது, தான் கூறும் ஒன்றைத் தவிர வேறு வழியே இல்லை எனக் கருதத் தூண்டும் வகையில் செய்திகளை அலசுவது, இறுதியில் தன் கருத்தை ஏனையோரின் பொதுக் கருத்தாகப் பதிவு செய்வது - இவை அனைத்தையும் அண்ணா தன் அரசியல் உரைகளில் பயன்படுத்துவதை ஆழ்ந்து நோக்கினால் அறிந்து கொள்ளலாம். அது அண்ணாவின் தனித் திறமை. தன் கருத்தையே பொதுக் கருத்தாக மாற்றும் திறன் அண்ணாவிடம் இருந்தது.
தேர்தலில் ஈடுபடுவதா, வேண்டாமா? என்பதை 1956இல் திருச்சி மாநாட்டில் தொண்டர்களின் வாக்கெடுப்புக்கு விட்டு 'தொண்டர்களின் விருப்பப்படி" தேர்தலில் ஈடுபடுவது என்று முடிவெடுத்த அண்ணா, மூலாதாரக் கொள்கையான திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. சென்னைப் பொதுக் குழுவில் (ஜூன் 1963) ஒரு நீண்ட உரையாற்றினார். ஜ'எண்ணித் துணிக கருமம்" என்ற தலைப்பில் அது அச்சு வடிவம் பெற்றிருக்கிறது. திருச்சி கே. சௌந்தரராஜன் தொகுத்தளித்துள்ள 'விடுதலை வேட்கை அறிஞர் அண்ணா, (புரட்சிப் பாதை, சென்னை, 2003) என்ற நூலில் முதற்கட்டுரை.ஸ அண்ணாவின் உரை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று ஆகும். இந்த உரை கேட்போருக்குத் தளர்ச்சியையும், ஓர் இயலாமை உணர்வையும் ஊட்டி, தீர்வு என்ற பெயரில் எதைக் கூறினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உளநிலையை உருவாக்க வல்லது. திராவிட நாடு கோரிக்கை எவ்விதம் கைவிடப்பட்டது என்பதை டி.எம்.பார்த்தசாரதி தம் 'தி.மு.க வரலாறு" என்ற நூலில் இப்படிக் கூறுகிறார்:
“பாராளுமன்றத்தில் பிரிவினைத் தடைச் சட்டம் நிறைவேறிய பிறகு, தி.மு.கழகம் தன் நிலையைப் பற்றி ஆராய முற்பட்டது. தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின் முக்கியஸ்தர்களைத் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். பொதுக்குழு உறுப்பினர்களை ஒவ்வொருவராகவும் - கூட்டாகவும் அழைத்து, பிரிவினைத் தடைச்சட்ட விதிகளை விளக்கி அவர்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொண்டார். பின்னர், கட்சியின் மத்தியச் செயற்குழுவை, 1963 நவம்பர் திங்கள் 3ஆம் நாள் கூட்டினார்.
இந்தச் செயற்குழுக் கூட்டம் இராய புரத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் கூடியது. கூட்டத்திற்கு எல்லாச் செயற்குழு உறுப்பினர்களும் வந்திருந்தனர். பிரிவினைத் தடைச் சட்டத்தின் பலாபலன்களைப் பற்றியும் - கழகம் நீடித்துப் பணிபுரிய வேண்டிய நிலையைக் குறித்தும் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசி முடிவுக்கு வந்த பின்பு, கட்சியின் சட்டதிட்டத் திருத்தக் குழு தந்த அறிக்கையை ஒப்புக்கொண்டு கழகக் குறிக்கோளைத் (விதி 2) திருத்துவதென முடிவு செய்தது.”
ஜ டி.எம்.பார்த்தசாரதி, திமுக வரலாறு, பக். 374ஸ
கட்சியின் மூலாதாரக் கொள்கையைக் கைவிடுவதென, அண்ணாவின் வழிகாட்டுதல் படி மிகச்சிறிய குழுவான சட்டதிட்டத் திருத்தக் குழு வரிவடிவம் கொடுத்தது. அதைச் செயற்குழு மற்றும் சில முக்கியஸ்தர்கள் ஏற்றனர். இவ்வாறு திமுகவின் முதன்மைக் கொள்கை கைவிடப்பட்டது. எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அண்ணாவுக்குத் தெரியும்.
பொங்கி வரும் உணர்ச்சிக்கு அண்ணா கொடுத்த மடைமாற்றம்:
விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாகக் கேள்விப்பட்டாலே தொண்டர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்பது அண்ணாவுக்குத் தெரியும். அதற்கு என்ன மாற்று என்பதையும் அண்ணா அறிவார்.
திராவிட நாடு கோரிக்கை பற்றி 'எண்ணித் துணிக கருமம்" உரையாற்றிய அதே பொதுக்குழுவில் (ஜூன் 8,9,10) இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக மத்திய அரசு ஏற்றுக் கொண்டமையும் பரிசீலிக்கப்பட்டது. உடனடியாகப் போராட்டக் குழு உருவாக்கப்பட்டது. அது, மொழிப் போரட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியல் தயாரிக்கப் பொறுப்பேற்றுக் கொண்டது. அப்பட்டியல் 1.10.1963 அன்று அண்ணாவிடம் அளிக்கப்பட்டது. அண்ணா 13.10.1963 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டினார்.
இப்போது போராட்டக் களம் மாறியது; திராவிட நாடு விடுதலைப் போராட்டம் போய் விட்டது; இந்தி எதிர்ப்புப் போர் என்பதே முதல்நிலைப் போர் ஆனது. அண்ணாவின் தம்பிமார்கள் முன்பு தங்களைத் திராவிட நாடு விடுதலை வீரர்களாகக் கருதினார்கள்;; இப்போது இந்தி மொழி எதிர்ப்புப் போர் வீரர்களாக உணர்ந்தார்கள்; அண்ணா தொண்டர்களின் உணர்ச்சியை அடக்கவில்லை; மடைமாற்றம் செய்தார். 'திராவிட நாடு திராவிடருக்கே" என்று முழங்கிக் கொண்டிருந்த தொண்டர்கள், இப்போது 'இந்தி ஒழிக" என்று முழங்கத் தொடங்கினார்கள்.
திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது, தி.மு.க.வில் இருந்த அறிவுவயப்பட்ட தலைவர்களிடையே அதிர்வை உண்டாக்காமல் இல்லை. ஆனால் அண்ணாவின் உரை அவர்களைச் சமாதானப்படுத்தியிருந்தது. 'தி.மு.க.வை அழிந்து போகாமல் அண்ணா காப்பாற்றினார்; பிரிவினைக் கொள்கையைக் கைவிடாமல் இருந்திருந்தால் கட்சியே இல்லாமல் போயிருக்கும்" என்று அண்ணாவின் அறிவாற்றலைப் புகழ்ந்து பேசுவோர் இன்றும் உண்டு. 'கொள்கைக்காக உருவானதாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு கட்சி மூலாதாரக் கொள்கையையே இழந்து விட்டு ஏன் இருக்க வேண்டும்? அப்படி என்ன பெரிதாகச் சாதித்துவிட்டது கட்சி?" என்று விமர்சிப்பவர்களும் உண்டு.
விடுதலை உணர்வோடு வளர்க்கப்பட்ட தி.மு.க.வை முற்றிலுமாக வெற்றுத் தேர்தல் கட்சியாக மாற்றியமைத்த அண்ணாவின் 1963ஆம் ஆண்டின் சென்னை பொதுக்குழு உரை முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
(வரும்....)