இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) செங்கொடி மையக் குழு உறுப்பினரும் தமிழகப் பொதுச் செயலாளரும் ஆகிய எல்.ஜி.எஸ். என்று சுருக்கமாய் அழைக்கப்பட்டு வந்த தோழர் இல. கோவிந்தசாமி (அகவை 63) சென்ற திசம்பர் 7 காலை காலமானார். திசம்பர் 6ஆம் நாள் எர்ணாகுளத்தில் நடைபெற்ற கட்சியின் மையக் குழுக் கூட்டத்திற்குச் சென்று விட்டுத் தொடர்வண்டியில் சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது அவரது உயிர் பிரிந்தது.

ஆலைத் தொழிலாளியாகத் தொழிற்சங்க இயக்கத்தில் தமது பொது வாழ்வைத் தொடங்கிய தோழர் எல்.ஜி.எஸ்., இரா. குசேலர் தலைமையிலான உழைக்கும் மக்கள் மாமன்றத்தில் முனைப்புடன் பங்காற்றினார். தோழர் ஏ.எம்.கோதண்டராமன் சிறையிலிருந்து விடுதலையான பின் அவரோடு பழகிப் புரட்சிகர அரசியலுக்கு வந்தார். முதலில் செம்மணிஎன்ற ஏட்டை நடத்தி வந்த எல்.ஜி.எஸ். மக்கள் யுத்தக் கட்சியின் சமரன்ஏட்டிற்கு ஆசிரியராகத் திகழ்ந்தார். பிற்பாடு கருத்து வேறுபாடுகள் காரணமாய் அக்கட்சியிலிருந்து விலகினார்.

மா.லெ. செங்கொடி இயக்கத்தின் மையக் குழு உறுப்பினராகவும் தமிழக அமைப்பாளர்களில் ஒருவராகவும் பங்காற்றிய போதே, மனித உரிமை அமைப்புகளிலும் தமிழிய இயக்கங்களிலும் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களிலும் அக்கறை காட்டி வந்தார். பல போராட்டங்களில் நம்மோடு பங்கேற்றார்.

1999இல் தமிழ்ச் சான்றோர் பேரவை முன்னெடுத்த தமிழ்வழிக் கல்விக்கான காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தில் பங்குபெற்ற 102 தமிழர்களில் எல்.ஜி.எஸ்.சும் ஒருவர்.

படிப்பின் அடிப்படையிலும் பட்டறிவின் அடிப்படையிலும் தோழர் இல. கோவிந்தசாமி ஓயாதத் தேடலில் இருந்தார். எல்லாவகை வறட்டுத்தனங் களையும் அறவே வெறுத்து ஒதுக்கினார். மா.லெ. இயக்கத்திற்குட்பட்ட குழுப்பகைமைகளை உறுதியாய் புறந்தள்ளியது மட்டுமன்று, விரிவான இடதுசாரி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

புரட்சியாளர்க்குரிய எளிமையும் வறுமையும் இறுதிக் காலம் வரை அவரிடம் சேர்ந்தே இருந்தன. நோய்வாய்ப்பட்டிருந்த போதும் மருத்துவம் செய்து கொள்ளும் வசதி இல்லாமல் துன்புற்றார். ஆனால் இயக்க உழைப்பை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை. இயற்கை அவரை நிறுத்தும் வரை!

தோழர் இல. கோவிந்தசாமிக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் செவ்வணக்கம்!

தோழர் இராசப்பா மறைந்தார்!

மா.லெ. இயக்கத் தோழரும் ம.ஜ.இ.க. தலைவர்களில் ஒருவருமான தோழர் இராசப்பா (அகவை 71) அவரது சொந்த ஊர் பந்துவக் கோட்டையில் சென்ற நவம்பர் 22ஆம் நாள் காலமானார்.

ஆசிரியராகப் பணியாற்றி வந்த தோழர் இராசப்பா 1970இல் நக்சல்பாரி இயக்கம் சார்பில் நடைபெற்ற அழித்தொழிப்பு நடவடிக்கையில் தோழர் தியாகு உடன் சேர்ந்து பங்கு பெற்றார். பிறகு 20 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாகச் செயல் பட்டார். பிறகு அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. நோய்வாய்ப்பட்டு வறுமையில் வாடிய நிலையிலும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றி வந்தார்.

தமிழீழ மக்களுக்கு ஆதரவாக ம.ஜ.இ.க. முன்னெடுத்த செயற்பாடுகளில் முனைப்புடன் பங்கேற்றார்.

தோழர் இராசப்பா அவர்களுக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் செவ்வணக்கம்! 

அணைந்தது சுடரொளி

குழந்தைக் கல்விக்கென்றே தன் வாழ்வைத் தந்த சுடரொளித் தாத்தா (அகவை 82) சென்ற நவம்பர் 27 ஆம் நாள் காலமானார். இளமைப் பருவத்தில் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். வரலட்சுமி அம்மாளைச் சாதிமறுப்புத் திருமணம் செய்தார். இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாய்ப் பணியாற்றினார்கள். 

சிவப்பிரகாசம் என்ற இயற்பெயரை சுடரொளி என்று மாற்றிக் கொண்டார். அவரின் மூத்த மகன் திரைப்பட இயக்குநர் அருண்மொழி. மகள்கள் அமுதமொழி, தேன்மொழி. தம் மக்கள் மூவருக்கு சாதிமறுப்புத் திருமணங்கள் செய்து வைத்தார். திராவிட இயக்கப் பாவலர் முடியரசனாரின் மகன் பாரிக்குத் தேன்மொழியை மணமுடித்துக் கொடுத்தார். 

1993இல் அம்பத்தூரில் தாய்த் தமிழ் கல்விப் பணி சார்பில் தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியை நிறுவிய போது அங்கு தமது கல்விப் பணியைத் தொடர்வதற்காக அம்பத்தூரிலேயே வீடு வாங்கிவந்து குடியேறினார். இறுதிக் காலம் வரை அங்கேயே வாழ்ந்து கல்விப் பணி தொடர்ந்தார். தமிழ் உச்சரிப்பை எளிய முறையில் சொல்லித் தரும் சில பாடங்களையும் தொல்காப்பியம் போன்ற குறுந்தகடுகளையும் வெளியிட்டார். 

உயிரோடு இருக்கும் போது நான் பாடம் சொல்லித் தருவேன், மறைந்த பிறகு என் எலும்புக் கூடு பாடம் நடத்தும்என்று அடிக்கடி சொல்வார். 

அவர் விரும்பியவாறு அவரது விழிகள் கொடையளிக்கப்பட்டதோடு, உடலும் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. 

சுடரொளித் தாத்தாவுக்கு தாய்த் தமிழ்க் கல்விப் பணி, தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவர் சார்பிலும் செவ்வணக்கம்!

அனல் திரு.மு. விவேகானந்தன் மறைந்தார் 

திராவிட இயக்கச் செயல் வீரரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குப் பொருந்திய துணைவருமான திரு.மு. விவேகானந்தன் (அகவை 77) சென்ற அக்டோபர் 28 ஆம் நாள் மதுரையில் மறைந்தார்.  

திரு விவேகானந்தன் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் மதுரை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளராகவும் இருந்தவர். புரட்சிக் கவிஞர் பேரவை போன்ற அமைப்புகளில் இறுதி வரை முக்கியப் பணியாற்றினார். 

1965 மொழிப் போரின் போது போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக திரு விவேகானந்தன் பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை தோழர் சூரியதீபன் போன்றவர்கள் மறவாது குறிப்பிடுவர். 

திரு விவேகானந்தன் அச்சகம் வைத்து நடத்தியதோடு அனல் வீச்சு என்ற கொள்கையி தழையும் நடத்தியவர். ஈழத்தில் இந்தியப் படையயடுப்புக் காலத்தில் வைகோ ஈழம் சென்றிருந்த போது நம் வேங்கை எங்கே?” என்று கட்டுரை தீட்டினார். 

அய்யா விவேகானந்தனின் புதல்வர் மாறனும் (அன்பு அச்சக உரிமையாளர் ) தமிழியக்கங்களின் நெருங்கிய தோழராக இருந்து வருகிறார். சென்ற ஆண்டு வாழ்க்கைத் துணைவியின் மறைவு அய்யா விவேகானந்தனைப் பெரிதும் பாதித்தது. அப்படியும் தமிழீழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டார். 

தமிழீழத்தில் நிகழ்ந்த இன அழிப்புப் போர் பற்றிய செய்திகள் அவரைப் பெரிதும் கலங்கச் செய்தன. மே 17-18 முழுப்பேரழிவுக்குப் பின் அவர் மீளாத் துயரில் ஆழ்ந்தார். தினமணியில் தொடராக வெளிவந்த ஈழப் போராட்ட வரலாறு பற்றிய கட்டுரைகளைப் படித்துச் சேர்த்து வந்தார். 

அய்யா, அனல் மு. விவேகானந்தனுக்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் செவ்வணக்கம்! 

Pin It