தலித் இளைஞர் படுகொலை - சாதிய துவேசத்தை பரப்பி வரும் வன்னியர் சங்கத்தை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

gopalakrishnan_300கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிராமம் சென்னிநத்தம். இக்கிராமத்தில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட தலித் இளைஞர் திரு.கோபாலகிருஷ்ணன் (20) த/பெ.மாயகிருஷ்ணன் என்பவரின் கொலை செய்யப்பட்ட சடலம் 19.12.2012 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணன் சாதி இந்து பெண் திருமிகு.துர்கா (20) என்பவரைக் காதலித்து வந்ததனால் துர்காவின் குடும்பத்தினரும் அப்பகுதி சாதி இந்து வன்கொடுமை கும்பலும் கோபாலகிருஷ்ணனை கொலை செய்துள்ளனர் என்று கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணனும் அப்பகுதி தலித்துகளும் புகார் தெரிவித்துள்ளனர். சாதிய துவேசத்தாலும் போலி கௌரவத்தாலும் நடத்தப்பட்ட இக்கொடிய படுகொலை குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இச் செய்தி வெளியிடப்படுகிறது.

                சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணன் திருமுட்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் பரவூர் கிராமத்தில் வசித்து வரும் சாதி இந்து ரவி என்பவரின் மகள் துர்காவும் காதலித்து வந்துள்ளனர். துர்கா பி.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

                கடந்த 12.12.2012 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சேத்தியாதோப்பு பகுதியில் நடந்த புதன்கிழமை சந்தைக்கு தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணன் தம்முடைய நண்பர்கள் பீட்டர் (27) த/பெ.கோவிந்தராஜ், பாக்கியராஜ் (30) த/பெ.புதுராஜா ஆகியோருடன் வந்துள்ளார். அங்கு துர்காவும் வந்திருக்கிறார். சந்தைக்கு வந்த துர்கா, செல்போன் மூலமாக கோபாலகிருஷ்ணனிடம் பேசியுள்ளார். ‘இரவு ஆகிவிட்டது, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்னுடன் துணைக்கு நீ வா’ என்று துர்கா அழைக்கவே அவருடன் கோபாலகிருஷ்ணன் பரவூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். பரவூர் கிராமத்தில் துர்காவை வீட்டில் விட்டுவிட்டு வருகின்றபோது துர்காவின் பாட்டி கனகவள்ளி, கோபாலகிருஷ்ணனை சாதி ரீதியாக கடுமையாக இழிவாகப் பேசியுள்ளார். இதன் பிறகு கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை.

                மறுநாளும் 13.12.2012 அன்று தம்முடைய வீட்டிற்கு கோபாலகிருஷ்ணன் திரும்பவில்லை. சந்தேகமடைந்த கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் மற்றும் அப்பகுதி தலித்துகள் 14.12.2012 அன்று சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ஆறுமுகச்சாமி அவர்களை சந்தித்து கோபாலகிருஷ்ணனை காணவில்லை என்கிற புகாரினை கொடுத்துள்ளனர். அப்போது டி.எஸ்.பி. ஆறுமுகச்சாமி புகார் கொடுத்தவர்களிடம் ‘உங்கள் மகன் கோபாலகிருஷ்ணன் தேவையில்லாமல் பரவூர் கிராமத்திற்கு சென்றுள்ளான். அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறான். இதனால் அக்குடும்பத்தினர் கோபாலகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்’ என்கிற தகவலை கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ‘உங்கள் மகனை தேடி கண்டுபிடிக்கிறேன். நீங்கள் திருமுட்டம் காவல்நிலையம் சென்று புகார் கொடுங்கள்’ என்று டி.எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளார்.

                இதனடிப்படையில் 14.12.2012 அன்று திருமுட்டம் காவல்நிலையத்தில் குற்றஎண்.328/2012 கீழ் ஆள் காணவில்லை என்கிற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அப்பகுதியில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் 16.12.2012 அன்று சேத்தியாதோப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன கோபாலகிருஷ்ணனை மீட்டுக் கொடுக்குமாறு அம்மக்கள் கோரிக்கை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து 17.12.2012 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபாலகிருஷ்ணனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

                கடந்த 19.12.2012 அன்று மதியம் 1.30 மணியளவில் பரவூர் பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் கோபாலகிருஷ்ணனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குற்ற எண்.328/2012 பிரிவுகள் 342, 364, 302 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.

gopalakrishnan_body_640

                படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் ஒரத்தூர் காவல்நிலையத்தில் 19.12.2012 அன்று புகார் கொடுத்துள்ளார். வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ச.ராமதாஸ் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் ரவி த/பெ.பரஞ்சோதி, ராணி க/பெ.ரவி, பிரபு த/பெ.கொளஞ்சான், ராமமூர்த்தி த/பெ.பரஞ்சோதி, பாலமுருகன் த/பெ.அருணகிரி உள்ளிட்ட 12 நபர்களின் பெயர்களோடு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

                சேத்தியாதோப்பு, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான அளவு கௌரவக் கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அடிப்படை காரணம் சில சாதி சங்கங்களும் சாதி சங்கத்தை மையமாகக் கொண்ட ஒரு சில அரசியல் கட்சிகளும் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வன்முறை ஏவிவிட்டு வருவதுதான். இதனால் இப்பகுதி சாதி இந்துக்களிடையே சாதிய துவேசம் வன்கொடுமையாக வளர்ந்து அவை உயிர்களை பலி கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

                இது கௌரவத்தின் அடிப்படையிலேயே நடத்தப்பட்ட கொடூர படுகொலையாகும். ஆகவே இப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்கு பின்னணியாக இருந்த அரசியல் சக்திகள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு அரசிற்கு சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.

பரிந்துரைகள்

             படுகொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தை மாயகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

             இறந்து போன கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.

             இவ்வழக்கினை எஸ்.பி. அந்தஸ்த்தில் உள்ள விசாரணை அதிகாரி விசாரிக்க மாநில காவல்துறை இயக்குனர் சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.

             சாதிய துவேசத்தை பரப்பி வருவது மட்டுமல்லாமல் அப்பகுதியில் பொது அமைதியை கெடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதிப்பது மட்டுமல்லாமல் அச்சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-  ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ் அமைப்பு

Pin It