ஆர்.கே. நகர் தொகுதி கிட்டத்தட்ட ஒரு ஆக்கிரமிப்புப் பிரதேசம்போல இருந்தது. ஒவ்வொரு தெருக்களையும் அமைச்சர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்திருந்தனர். ‘அம்மா’வின் வெற்றிக்காக அனைத்து சனநாயக நெறிமுறைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது ஒரு நல்ல அறிகுறி. நாமும் தோழர் மகேந்திரனுக்கு ஆதரவுத் தெரிவித்திருந்தோம். தேர்தலை ஒட்டிய ஒரு முயற்சி என்ற போதிலும் தமிழகத்தின் பெரும்பாலான இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்றன. வெகுகாலத்திற்குப் பின்னால் இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடருமா  என்பதை வருங்காலம் மட்டுமே தெளிவுபடுத்தும்.

தமிழகத்தில் இப்படியென்றால் இந்தியா அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ’ஊழற்ற ஆட்சி’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியின் முகமூடி மெல்ல கழன்று கொண்டிருக்கிறது. 100 நாட்களுக்குள் கறுப்புப் பணத்தை மீட்போம் என்பது நாடக வசனமாகிவிட்டது. இதற்குள் சர்வதேசக் குற்றவாளி லலித் மோடிக்கு எந்த அளவிற்கு சுஷ்மா சுவராஜும், வசுந்தரராய் சிந்தியாவும் போட்டி போட்டுக்கொண்டு உதவியிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பா.ச.க.வினருக்கும் சர்வதேசக் கிரிமினல்களுக்கும் இடையிலான உறவின் ஒரு சிறிய விளிம்புதான் இந்த நிகழ்ச்சி.

ஒரு பெரிய பகுதி இன்னும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்துதான் கிடக்கிறது. இதற்கிடையில் ஸ்மிருதிராணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதான கல்வித் தகுதி குறித்த விசாரணையை நீதிமன்றம் தொடங்கவுள்ளது.  மோசடி என்பது மோடி போன்றவர்களுக்குச் சர்வ சாதாரணம். தனது திருமணத்தையே 30 வருடங்களாக மறைத்த மனிதர்தானே மோடி. கடைசியில் யோகாவில் இறங்கிவிட்டார். இதுவும்கூட ஒரு மோசடிதான்.

இந்து சனாதனவாதிகள் எல்லா மதிப்பு வாய்ந்தப் பொருட்களையும் எரித்து ‘யாகம்‘ செய்து கொண்டிருந்தபோது இதற்கு எதிராக பௌத்தத் துறவிகள் உருவாக்கியதுதான் ‘யோகா’. இதனால்தான் இன்றுவரை எந்தவொரு சங்கராச்சாரியாரும் யோகா செய்வதில்லை. ஆனால் அந்த ‘யோகா’வும் எங்கள் படைப்பு என்று இந்துவெறியர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

பௌத்தர்களின்  சொத்தான காஞ்சியிலிருந்த பௌத்த விகாரை காமாட்சியம்மன் கோயிலாக மாற்றப்பட்டதையும், மாமல்லபுரத்து பௌத்த சிற்பங்கள் பஞ்ச பாண்டவர் ரதமாக மாற்றப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியுமா? வேறு ஒருவரின் உழைப்பால் உருவானதைத் திருடி தனதாக்கிக் கொள்வதுதான் இந்துவெறியர்கள்  அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்து வரும் அசிங்கமான நடைமுறை. யோகாவும் இந்த பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளது. யோகா இந்துமதத்திற்குச் சொந்தமானது என்றால் முதலில் ஒவ்வொரு சங்கராச்சாரியாரையும் யோகாசனம் செய்யச் சொல்லி மோடி வலியுறுத்த வேண்டும்.

இதற்கிடையில், ‘‘மீண்டும் எமர்ஜென்சி வராது என்று உறுதியாக சொல்ல முடியாது’’  என்று பா.ச.க. வின் மூத்த தலைவர் அத்வானி வாய் மலர்ந்துள்ளார். ‘‘வந்தால் வரட்டும்” என்று வரவேற்கும் தொனியில் துக்ளக் தலையங்கம் எழுதியுள்ளது. பாசிசத்தை வீழ்த்திய வீரம்செறிந்த வரலாறு நமக்கு உண்டு என்பதை நினைவுபடுத்தியபடி நாமும் சொல்கிறோம் - ‘‘வந்தால் வரட்டும்!’’

Pin It