சோராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது ஜூலை 2010இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில், இந்தக் கொலையின் மூளையாகச் செயல்பட்டவர் அமித் ஷா என்று குறிப்பிட்டிருந்தது. ஏற்கெனவே இவ்வழக்கின் புலனாய்வு நடந்து கொண்டிருந்தபோது,சாட்சிகளைக் கலைக்க அமித் ஷா மேற்கொண்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணையை குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், செப்டம்பர் 2012இல் இவ்வழக்கை மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றியது.

மே 2014இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்றார். ஓரிரு மாதங்களில் அமித் ஷா பா.ஜ.க. தலைவரானார். அதன் பின் இந்த வழக்கு தலைகீழ் மாற்றங்களைக் கண்டது.

amitsha 600அமித் ஷா மீதான வழக்கை ஜேடி உத்பத் என்ற நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு ஒருமுறைகூட அமித் ஷா ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர்கள் எப்போதும் அமித் ஷாவுக்கு அரசியல் வேலை இருக்கிறது, அவசர வேலை இருக்கிறது என்று மனுத் தாக்கல் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் எரிச்சலடைந்த நீதிபதி உத்பத், ‘எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அமித்ஷா வர மறுக்கிறார். இதை இப்படியே தொடர அனுமதிக்க முடியாது’ என்று கூறினார். இது நடந்தது 6 ஜூன் 2014 அன்று. வழக்கை 26 ஜூன் 2014க்கு ஒத்தி வைத்தார் உத்பத். 25 ஜூன் 2014 வழக்கு விசாரணைக்கு முந்தைய நாள். அந்த நாளில் அவர் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

வழக்கை குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தது. அது இதுதான். ‘இந்த வழக்கின் விசாரணையைத் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரே நீதிபதி விசாரிக்க வேண்டும்.’ஆனால் இதையும் மீறி நீதிபதி ஜேடி உத்பத் மாற்றப்பட்டார். அவருக்குப் பிறகு இந்த வழக்கைக் கையாள நியமிக்கப்பட்டவர்தான் நீதிபதி ப்ரிஜ்கோபால் ஹர்கிஷண் லோயா.

மாவட்ட நீதிபதிகளின் மாறுதல்களைக் கையாள, ஒவ்வொரு மாநில நீதிமன்றத்திலும் நிர்வாகக் கமிட்டி ஒன்றுஇருக்கும். அந்த கமிட்டிதான் மாறுதல்களை முடிவு செய்யும். அமித் ஷா வழக்கை விசாரிக்க ஒரு நேர்மையான நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டபோது, அப்போது மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மொகித் ஷா, அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவரும் குஜராத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தால் எதற்கு சிக்கல் என்று நினைத்தோ என்னவோ அதில் பங்கேற்கவில்லை. ஆனால் அதே மொகித் ஷா, ஒரு வருடம் கழித்து நீதிபதி உத்பத்தை மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

31 அக்டோபர் 2014 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கம்போல அமித் ஷாவின் வழக்கறிஞர்கள் அவரால் இன்று நீதிமன்றத்துக்கு வர இயலாது என்று கூறினார். அப்போது நீதிபதி லோயா, ‘அமித் ஷா இன்று மும்பையில்தானே இருக்கிறார்? ஏன் வரவில்லை’ என்று கேள்வி எழுப்பினார். பிறகு வழக்கு விசாரணையை 15 டிசம்பர் 2014க்கு தள்ளி வைத்தார். அந்தச் சமயத்தில் நீதிபதி லோயா அந்த ஒரே ஒரு வழக்கை மட்டும்தான் விசாரித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 டிசம்பர் 2014 அன்று நாக்பூரில் சக நீதிபதியின் மகள் திருமணத்துக்காகச் சென்றிருந்த லோயா, மாரடைப்பால் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. நீதிபதி லோயாவோடு வேறு இரண்டு நீதிபதிகளும் சென்றிருந்தனர். ஊடகங்களில் இது பெரிய செய்தியாகவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு மட்டும், ‘மாரடைப்பால் இறந்திருந்தாலும், லோயா அதற்கு முன் நல்ல உடல் நலனோடு இருந்தார்’ என்று குறிப்பிட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இது குறித்து பிரச்சினை எழுப்பினார்கள். ஆனால் சில நாட்களில் இது மறக்கப்பட்டது.

லோயாவின் தங்கை மகள் நுபுர் பயானிதான் 2016ஆம் ஆண்டில் ‘கேரவன்’ இதழில் செய்தியாளரைச் சந்தித்து இது குறித்து சந்தேகத்தை எழுப்புகிறார். நவம்பர் 2017இல், ‘கேரவன்’ இதழ் லோயா மரணம் குறித்து ஒரு விரிவான புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது. அதன் பிறகுதான் லோயாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கின.

30 நவம்பர் 2014 அன்று, நாக்பூரில் இருந்து லோயா தன் மனைவி சர்மிளாவிடம் பேசுகிறார். அன்று தனக்கு என்னென்ன வேலைகள் இருந்தன என்பதை விவரிக்கிறார். நாக்பூரில் தங்கியிருப்பதாகவும், திருமணம் முடிந்ததும் வருவதாகவும் கூறுகிறார். அதுதான் நீதிபதி லோயா பேசிய கடைசி உரையாடல். மறுநாள் லோயாவின் குடும்பத்தினருக்கு அவர் மாரடைப்பால் இறந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.

லோயாவின் தங்கை மகள் லோயாவின் உடலைப் பார்த்தவுடனேயே தனக்குச் சந்தேகம் வந்தது என்று கூறினார். லோயாவின் சட்டையில் இரத்தக் கறை இருந்ததை தான் கண்டதாக அவர் கூறினார். அவர் அணிந்திருந்த பேண்டின் பெல்ட் திரும்பி இருந்தது. கழுத்தில் இரத்தக்கறை இருந்தது. தலையின் பின்புறம் காயம் இருந்தது என்றார். இதை வெறும் சந்தேகமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனென்றால், அமித் ஷா சம்பந்தப்பட்ட சோராபுதீன் ஷேக் வழக்கை மூடி மறைக்கவும், விசாரணை நடத்தப்படாமல் தடுக்கவும் தொடக்கம் முதலே அனைத்து முயற்சிகளையும் அமித் ஷா மேற்கொண்டார்.

லாட்டூரில் இருந்த லோயாவின் தந்தை ப்ரிஜ்கிஷனுக்கு லோயாவின் மரணம் குறித்து தகவல் அளித்தவர் தன்னை ஆர்.எஸ்.எஸ். சேவகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஈஷ்வர் பகேத்தி. லோயாவின் தந்தையை அழைத்த அவர், பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டது என்றும், உடல் அவர்கள் வீட்டுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை அவரே செய்வதாகவும் கூறியுள்ளார். ஒரு நீதிபதி இறந்துள்ள நிலையில், அரசு அதிகாரிகளோ, வேறு யாருமோ உடன் இல்லாமல் சம்பந்தம் இல்லாத ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஏன் லோயாவின் தந்தையை அழைத்து இறப்புத் தகவலைக் கூறினார் என்பதும் ஒரு பெரும் மர்மம்.

லோயாவின் உடல் அவர் வீட்டை வந்தடைந்தபோது, அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரைத் தவிர ஒருவரும் உடன் வரவில்லை. சொல்லப் போனால் லோயாவுக்கு அந்தத் திருமணத்துக்கு செல்வதற்கே விருப்பம் இருந்ததில்லை. அவருடன் பணி செய்த இரண்டு நீதிபதிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே நாக்பூருக்குச் சென்றிருந்தார். அந்த இரண்டு நீதிபதிகள்கூட லோயாவின் உடலோடு உடன் வரவில்லை.

லோயாவோடு நாக்பூர் நீதிபதிகள் ஸ்ரீகாந்த் குல்கர்னி மற்றும் மோடக் ஆகியோரின் கூற்றுப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறுகிறார் லோயா. உடனடியாக அவரை அருகாமையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். லோயாவின் மொபைல் போன் அவரிடம்தான் இருந்தது. மிக மிக எளிதாக அவர் குடும்பத்தை அழைத்து தகவலைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை.

நீதிபதி லோயா தங்கியிருந்தது ரவி பவன் அழைக்கப்படும் நாக்பூரின் விருந்தினர் மாளிகை. உடன் இருந்த இரண்டு நீதிபதிகள் தான் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்டோவில் முதலில் அருகாமையில் இருந்த தாந்தே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் லோயா. பின்னர் அங்கிருந்து மெடிட்டிரேனா என்ற பெரிய தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த மருத்துவமனையில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்திலாவது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போதும் தெரிவிக்கப்படவில்லை.

ரவி பவன் என்பது அரசினர் விருந்தினர் மாளிகை. அது அரசு விருந்தினர் மாளிகை பகுதி என்பதால் அதன் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. பகலில் ஆட்டோ வேண்டுமென்றால்கூட இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் ஆட்டோ பிடிக்க வேண்டும். நள்ளிரவு 12.30 மணிக்கு லோயாவை அழைத்துச் செல்ல அந்த ஆட்டோவைப் பிடித்தார்கள். எப்படிப் பிடித்தார்கள் என்பதும் புரியாத புதிர்.

நமக்கு மிகவும் நெருங்கிய அல்லது அந்த அளவு நெருக்கமில்லாத ஒரு நண்பருக்கு இதுபோல மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்தால் நாம் முதலில் செய்யும் காரியம், அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிப்பதே. ஆனால் சட்டம் பயின்ற இரண்டு நீதிபதிகள் ஏன் லோயாவின் மரணத்தைக் குடும்பத்தினருக்குத் தெரியாமல் மறைத்தார்கள் என்பதும் ஒரு புதிர்.

மெடிட்டிரேனா மருத்துவமனையில் லோயா இறந்து விட்டார் என்று கூறிய பின்னர் லோயாவின் உடல், நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

சாதாரணமாக மருத்துவமனைக்குச் சென்று இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புவதில்லை. அதுவும் ஒரு நீதிபதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புவது எப்போதும் நடப்பது இல்லை. ஆனால் லோயா இறந்துபோன தகவல் அவர் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படும் முன்னதாகவே, பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்திருக்கிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி லோயாவின் இறப்பு நேரம் காலை 6.15. ஆனால், நள்ளிரவே பிரேதப் பரிசோதனை நடந்தது என்று நாக்பூர் அரசு மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நள்ளிரவே உடலைப் பார்த்ததாக சித்தபர்த்தி காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

லோயாவின் மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது. லோயாவின் தந்தைக்கு வயது 85. தாயாருக்கு வயது 80. இருவரும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் யாருக்கும் இரத்த அழுத்தமோ நீரிழிவு நோயோ கிடையாது. மரணிக்கையில் லோயாவுக்கு வயது 48 தான். அவருக்கும் இரத்த அழுத்தமோ நீரிழிவு நோயோ கிடையாது. புகை, மது போன்ற கெட்ட பழக்கங்களும் அவருக்கு இல்லை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தார் லோயா என்று அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

‘கேரவன்’ இதழில் நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த கட்டுரைகள் வெளியானதும், ஒவ்வொருவராகத் தொடர்ந்து பேசத் தொடங்கினார்கள். லோயாவின் சகோதரி அனுராதா பயானி ஒரு மருத்துவர். மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மொகித் ஷா, அமித் ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால் 100 கோடி கொடுக்கப்படும் என்று தெரிவித்ததாகக் கூறினார். ஒரு தீபாவளி தினத்தன்று, குடும்பத்தினர் அனைவரும் கூடியிருக்கையில் இந்தத் தகவலை லோயா தன்னிடம் கூறியதாக பயானி விவரித்தார். நீதிபதி லோயாவின் தந்தையும் இத்தகவலை உறுதி செய்தார்.

நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பாகக் கிடைத்த பூர்வாங்க தகவல்களின் அடிப்படையிலும், அவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அடிப்படையிலும் முழுமையான ஒரு விசாரணை நடைபெற்றிருக்க வேண்டும். ஏனெனில் இறந்தவர் ஒரு சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி. ஒரு வேளை லோயா கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோமே. இந்தியாவில் ஒரு நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை என்ற அவப்பெயர் தீராத கரும்புள்ளியாக நம் மீது விழுந்திராதா?

ஆனால் மோடியின் இந்தியாவில் நியாயமான விசாரணை நடைபெற விட்டுவிடுவாரா என்ன?

நன்றி : சவுக்கு சங்கர் எழுதிய ‘மோடி மாயை’ நூல்

Pin It