சுண்டூர் படுகொலையில் குற்றவாளிகள் அனைவரையும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் 22 ஏப்ரல் 2014 அன்று விடுதலை செய்தது. இது குறித்து அனுபவம் மிக்க மனித உரிமை வழக்குரைஞரும் சுண்டூர் வழக்கில் இடையறாது வாதாடி நீதிமன்ற அவமதிப்பைச் சந்தித்த போஜா தராகம் அளித்துள்ள பேட்டி.

சுண்டூர் வழக்கு பற்றி சொல்லுங்கள்...

சுண்டூர் வழக்கின் தீர்ப்பு மிகவும் பாரபட்சமானது. உண்மைக்குப் புறம்பானது. ஜாதியத் தன்மையுடையது. உயர் நீதிமன்றத்தால் சொல்லப்பட்ட காரணங்கள், குற்றச் சட்டவியல் மற்றும் சாட்சியத்தை மதிப்பீடு செய்வதில் உள்ள அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானது. முதல் தீர்ப்பை அளித்த விசாரணை நீதிமன்றம் மொத்த சாட்சியத்தையும் விரிவாக விவாதித்து பின் மறுக்கவே முடியாத ஒரு முடிவிற்கு வந்திருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக, உயர் நீதிமன்றம் நீதியின் அனைத்து நெறிகளையும் விதிகளையும் காற்றில் பறக்க விட்டு, அறிவியலுக்குப் புறம்பான, குற்றச்சட்டவியலிற்குத் தொடர்பே இல்லாத காரணங்களைச் சொல்லி அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்துவிட்டது.

poja daragamசம்பவம் நடந்த நேரத்தை உறுதி செய்வதில் அரசுத் தரப்பு தவறிவிட்டது என்பதே உயர் நீதிமன்றம் அளித்துள்ள விளக்கம். எந்த நேரத்தில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது நிறுவப்படவில்லை என்றது உயர் நீதிமன்றம். இவை பொருளற்றவை. நாங்கள் நீதிபதியிடம் இவை பொருளற்றவை எனக் கூறினோம். மேலும், முரண்பாடுகள் எவையேனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருப்பின் அவை சிறியதாகவோ பொருளற்றதாகவோ இருக்கக் கூடாது என்றோம். பொருண்மையான முரண்பாடுகளை மட்டுமே நீதிமன்றங்கள் தீர்மானிப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சட்டப்படியும் இல்லாமல் சாட்சியத்தின்படியும் இல்லாமல் மற்றும் குற்றச்சட்டவியல் கொள்கைகளின்படியும் இல்லாமல் உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பை அளித்துள்ளது. இவ்வழக்கின் தொடக்கத்தில் இருந்தே அது தன் சொந்த வழியிலேயே தீர்ப்பெழுத விரும்பியது. அது குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யவே விரும்பியது. அதனால்தான் முதலில் இருந்தே இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் சிறையில் காத்திருக்க வேண்டும்.... இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் சிறையில் துன்புற வேண்டும் என்பதே (நீதிபதிகளின்) வாதமாக இருந்தது. அதாவது, நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்படும் வாதங்களுக்காகக் கூட காத்திருக்காமல் உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய விரும்பியது. கடைசியில் தான் ஏற்கனவே முடிவு செய்ததன் அடிப்படையிலேயே அனைத்து குற்றவாளிகளையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இவ்வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம் 1989 இன் படி, குற்றம் சாட்டப்பட்ட வழக்குடன் இணைத்தே விசாரிக்கப்பட வேண்டும் என நாங்கள் தொடக்கம் முதலே ஆட்சேபித்து வந்தோம். இவ்வழக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன் கொடுமைகள் தடுப்புச்) சட்டம் 1989இன் படி விசாரிக்கப்பட்டிருந்தால், உயர் நீதிமன்றம் இச்சட்டத்தின்படி தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றம் இச்சட்டத்தின்படி அவர்களை தண்டிக்க விரும்பவில்லை. அது வழக்கைப் பிரிக்க விரும்பியது (வன்கொடுமைகள் சட்டம் குறித்த குற்றச் சாட்டுகளை மற்றதிலிருந்து பிரிப்பது). குற்ற வழக்கைப் பிரிப்பது என்ற ஒன்றே இல்லை. முழு வழக்கும் எல்லா சாட்சியத்துடனும் சாட்சிகளுடனும் சேர்ந்தே விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் தனியே பிரிப்பது என்பதே இல்லை. ஆனாலும் அது தனியே பிரிக்கப்பட்டது. நீதிமன்றம் வழக்கை விசாரித்தது, குற்றவாளிகளை விடுதலை செய்தது.

நீங்கள் அண்மையில் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டீர்கள். குற்றம் இழைத்தவர்களின் வழக்கை விசாரிக்கவே நீதிபதி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாக நீங்கள் வாதிட்டீர்கள். அதைப் பற்றி சொல்ல முடியுமா?

சாட்சியங்களின் படியில்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் உயர் நீதிமன்றத்தின் விருப்பமாக இருக்கிறது என்று நான் முதலில் இருந்தே சொன்னேன். வழக்கமாக சாட்சியங்கள் தர்க்க ரீதியில் பரிசீலனை செய்யப்பட வேண்டும்; மதிப்பிடப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் சாட்சியத்தை மதிப்பீடு செய்ய விரும்பவில்லை. தர்க்கரீதியில் முடிவுக்கு வரவும் விரும்பவில்லை. மேல்முறையீட்டு வழக்குரைஞர்களின் வாதங்களும்கூட கேட்கப்படவில்லை. நீதிபதி அவசரப்படுத்தினார், சீக்கிரம்.... சீக்கிரம்... (உங்கள் வாதத்தை முடியுங்கள்.) அதன் பிறகு, "நீங்கள் மேல் முறையீட்டை கேட்கின்ற விதமானது – எங்கள் மனதிலும் பாதிக்கப்பட்டவர்களின் மனதிலும் – இந்த நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது' என்றோம். பிறகு நீதிமன்றம் பின் வாங்கியது. இது எங்கள் மீது சுமத்தப்படும் மிகவும் மோசமான குற்றச்சாட்டு என நீதிபதிகள் கூறினர். நான், ஆம், உறுதியாகத்தான் கூறுகிறேன் என்றேன். பின்பு அவர் (நீதிபதி) நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கையை அளிக்க விரும்பினார். நாங்கள் அதை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றேன். பிறகு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை அளிக்கப்பட்டது. எங்களுக்கு எதிராக மட்டும் அல்ல; பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும்தான்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பில்லை. எனவே அவர்களை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தை கோரினோம். தயவு செய்து குற்றச்சாட்டில் இருந்து பாதிக்கப்பட்டோரை விடுவியுங்கள்; எங்களுக்கு (வழக்குரைஞர்களுக்கு ) அறிவிக்கை அனுப்புங்கள். அவர்கள் இந்த வேண்டுகோளை எழுத்து மூலம் கொடுக்கச் சொன்னார்கள். நாங்கள் எழுத்து வடிவிலும் கொடுத்தோம்.

எங்களுக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று நாங்கள் சொன்ன பொழுது, நீதிபதி இதை எழுதிக் கொடுக்கச் சொன்னார். எங்களுக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை; எனவே இந்த வழக்கை வேறு ஏதேனும் ஓர் அமர்விற்கு மாற்றலாம் என நாங்கள் எழுதிக் கொடுத்தோம். எங்களிடம் எழுத்துப்பூர்வமான உறுதியைப் பெற்றுக் கொண்ட பின்பும் கூட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க விரும்பியது. எங்களுக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என நாங்கள் சொன்ன பிறகு, சாதாரணமாக எந்த நீதிமன்றமும் வழக்கை வேறு அமர்விற்கு கொடுத்திருக்கும். பிறகு அவ்வழக்கு வேறு ஓர் அமர்வின் முன் மாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர், இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என நாங்கள் சொன்ன பிறகும் கூட இந்த வழக்கை விசாரிக்க விரும்பினார். இது அவரின் கோணல் புத்தியைத்தான் காட்டுகிறது. அவர் எப்படியாவது இந்த வழக்கை விசாரித்து குற்றவாளிகளை விடுதலை செய்யவே விரும்பினார்.

எங்களுக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற சூழலிலும் இந்த நீதிமன்றத்தின் முன் வாதிடுவதைத் தவிர வேறு ஏதும் வழி இல்லாததால், நாங்கள் வாதிட்டோம். தயவு செய்து – நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற – இந்த சூழலில் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் என நாங்கள் கூறினோம். அவர் அவ்வாறு (குறித்துக் கொண்டதாக) கூறி வழக்கை விசாரித்தார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை (எங்கள் மீதான குற்றச்சாட்டுகள்) இறுதி செய்யும் பொழுது பாதிக்கப்பட்டோர் மீதான வழக்கைப் பிரிக்க விரும்புவதாக எழுதினார். ஆனால், ஆணையில் எங்கள் மூவருக்கும் நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கையை அளித்தார். நீங்கள் அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எங்கள் இருவருக்கு மட்டுமே அளிக்க விரும்பினீர்கள். ஆனால் ஏன் நீங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டோரைச் சேர்த்துள்ளீர்கள்? என்று நீதிபதிகளிடம் கேட்டேன். அவர், "மன்னிக்கவும்; நான் நீக்கிவிடுகிறேன்' என்றார். பின்பு நீக்கும் பொழுது அவர், "நீங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை எனச் சொன்னீர்கள். அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்கப் போவதாகவும் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் பாதிக்கப்பட்டோரை அவமதிப்பு குற்றச்சாட்டில் இருந்து விலக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். எனவே நான் உங்களையும் கூட இக்குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கிறேன்' என்றார். அதற்குப் பிறகுதான் இவ்வழக்கில் வாதிட்டோம்!

சுண்டூர் வழக்கின் தொடக்க கட்டத்தில் ஒரு தலித் நீதிபதியால் இவ்வழக்கு விசாரிக்கப்பட்ட பொழுது நீதிபதியை மாற்ற வேண்டும் என சாதி இந்துக்கள் கோரினர். அரசும் உடனே நீதிபதியை மாற்றியது. ஆனால் அதற்குப் பிறகு விசாரணையின் பொழுது தலித்துகள் புகார் செய்தும் நீதிபதி மாற்றப்படவில்லை இல்லையா?

ஆமாம்.

தற்பொழுதுள்ள வழிதான் என்ன? பாதிக்கப்பட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். தீர்ப்பு கொடுமையானது என அவர்கள் நினைக்கிறார்கள். நாங்களும் இப்போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவே விரும்புகிறோம். நாங்கள் அரசை மேல் முறையீடு செய்யச் சொல்லி கேட்கிறோம். அதுதான் நடைமுறை. நாங்கள் சிறப்பு அரசு வழக்குரைஞராக அரசால் நியமிக்கப்பட்டிருப்பதால் மேல் முறையீடு செய்யச் சொல்லி அரசின் சட்டத்துறையிடம் நாங்கள் வேண்டுகோள் வைக்க வேண்டும். அவர்கள் மேல் முறையீடு செய்ய விரும்பவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நாங்கள் தனியாக மேல்முறையீடு செய்வோம். இது சாத்தியம்தான். இதேதான் கரம்சேடு வழக்கிலும் நடந்தது. கரம்சேடு வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவரையும் தண்டித்தது. ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் இதே போன்ற வேறு தண்டனைகள் வேறு சிலருக்கு வழங்கப்பட்டன. அவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உயர் நீதிமன்றம், சுண்டூர் வழக்கில் நடந்ததைப் போல் அனைவரையும் விடுதலை செய்தது. அனைத்து குற்றவாளிகளும் விடுதலையானார்கள். பின்பு நாங்கள் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றோம். இறுதியாக, உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தண்டனை பெற்றுத் தந்தோம். அதுதான் அநேகமாக திரும்பவும் நடக்கும்.

அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

அதை நாங்கள் கூற இயலாது. நம்மைத் தவிர்க்கும் நீதிக்காக நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. நம்மால் நீதியைப் பெறமுடியவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் முடிந்த பிறகு, பிழைத்தவர்கள் நீதியின் கனிகளை சுவைக்க முடியாமல் போன பிறகுதான் நமக்கு நீதி கிடைக்கும்.

இந்த தீர்ப்பிற்குப் பின்னால் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?

அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்னால் அவ்வாறு சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த வழக்கில் ஜாதிய கோணம் உள்ளது. நான் இந்த வழக்கில் ஜாதிய கோணம் இருப்பதாக உணர்கிறேன். தொடக்க நிலையில் இந்த விசயத்தை மேலே கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் நீதிபதிகள் இரண்டு பேரும் அந்த வழியில் செல்ல மாட்டார்கள் என்றே கருதினோம். ஆனால் விசாரணையின்போது நடந்த விசயங்களை வைத்து ஜாதிய கோணம் வெளிப்படுவதாக சந்தேகித்தோம்.

நீதிபதிகளில் ஒருவர் ரெட்டி சாதியைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ரெட்டிகள். கடலோர ஆந்திராவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க ரெட்டிகள். இந்நிலையில் நீதி வழங்கப்படாது என்றே நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் வழக்கின் முக்கியத்துவம் காரணமாக நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தோம். இதுபோன்ற அதிக சாட்சியங்கள் உள்ள ஒரு வழக்கில் எந்த நீதிபதியும் இந்த வழக்கிற்கு எந்தவிதமான ஊறும் விளைவிக்க முடியாது என நாங்கள் கருதினோம். அதிகப்படியான சாட்சியங்கள் இருந்தன. சட்டம் எங்கள் பக்கம் இருந்தது. ஆனால் நீதிபதிகள் எங்கள் பக்கம் இல்லை. அவர்கள் ஜாதி இந்துக்களின் பக்கம் இருந்தனர்! எனவே நாம் காத்திருக்க வேண்டும். போராட வேண்டும். நாம் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும் போராட வேண்டும். உச்ச நீதிமன்றம் நீதி அளிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் இதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கரம்சேடு வழக்கில் நீதி வழங்கப்பட்டதைப் போல் நீதி வழங்கப்படும் என நம்புகிறோம்.

குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீடுகளை விசாரிக்க ஓர் அமர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்பொழுது, இருதரப்பினரும் செய்திருந்த மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட இந்நிலையில், இரு மேல் முறையீடுகளையும் அவர்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டார்கள்... (என்றுதான் பொருள் இல்லையா?)

இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீடு இன்னும் விசாரிக்கப்படவே இல்லை. அந்த மேல்முறையீடு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அதற்கு எண் கொடுக்கப்பட்டுவிட்டது. விரைவில் விசாரிக்கப்படும் என்றார்கள். ஆனால் தண்டனை பெற்றவர்களின் மேல்முறையீடுகள்தான் முதலில் விசாரிக்கப்பட்டன. நாங்கள் ஆட்சேபித்தோம். இது போன்று மேல்முறையீடுகளை தனியே பிரிக்க முடியாது என்றோம். ஏனென்றால் இவை ஒரே சம்பவம் பற்றியவை. மேலும் நீங்கள் (இரு மேல் முறையீடுகளுக்கும்) ஒரே சாட்சியத்தைத்தான் கேட்க வேண்டும் என்றோம். இரு மேல்முறையீடுகளையும் சேர்த்தேதான் நீங்கள் விசாரிக்க வேண்டும் என்றோம். ஆனாலும் அவை தனியே பிரிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் மேல்முறையீடு ஒரு முக்கியக் கருத்தை முன் வைத்தது. வழக்கு காவல் துறையால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தின்படியே குற்றமும் சுமத்தப்பட்டது.

ஆமாம். சாட்சியங்கள் படிக்கப்பட்டன. குற்றமும் உறுதி செய்யப்பட்டது. முடிவும் இருந்தது. ஆனால் தண்டனை மட்டும் இல்லை. அதாவது, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டத்தின் அடிப்படையில் (விசாரணை நீதிமன்றத்தில்) தண்டனை வழங்கப்படவில்லை. எனவேதான் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதலில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டவர்களுக்கும் என எல்லா குற்றவாளிகளுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அந்த மேல்முறையீடு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. மொத்தம் 213 நபர்கள் இருக்கிறார்கள். எனவே பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டத்தின் கீழான இந்த மேல்முறையீடு மேற்கண்ட அனைவருக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆக, அது இன்னும் விசாரிக்கப்படவே இல்லை. எப்பொழுது அவர்கள் அதை விசாரிப்பார்கள்?

நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. இந்த மொத்த அமைப்பும் நீதித்துறை உட்பட, அனைத்தும் அவர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் அவர்களுக்கான அமர்வை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கான நீதிபதியைப் பெறுகிறார்கள். சட்டம், நீதி, கொள்கை, சமத்துவம் போன்ற எதுவுமின்றி அவர்களாகவே ஒரு முடிவிற்கும் வருகிறார்கள். இங்கு எதுவும் புனிதம் இல்லை. 

நேர்காணல் : "தலித் கேமரா'

தமிழில் : செ. சரவணன்

Pin It