நீ கேட்கலாம்

ஏன் அவனுடைய கவிதைகள்

கனவுகள் பற்றியும் இலைகள் பற்றியும்

அவன் பிறந்த ஊரின் பெருத்த எரிமலை பற்றியும்

பேசவில்லை என்று

வா வந்து பார் அந்தத் தெருவில் ஓடும் ரத்தத்தை.

வா வந்து பார்

அந்தத் தெருவில் ஓடும் ரத்தத்தை.

வா வந்து பார் அந்தத்

தெருவில் ஓடும் ரத்தத்தை!

– பாப்லோ நெருடா

கிறிஸ்டியான் லேம்ப் எழுதிய "அய்யாம் மலாலா' என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. பெண் கல்விக்காகப் போராடுகிறவர் என்று எல்லோராலும் பேசப்படுகிறவர் மலாலா. அதற்காக அவர் நடத்திய போராட்டங்களும் களப்பணிகளும் என்ன? அவருடைய வேலைத்திட்டம் எப்படிப்பட்டது? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடுபுத்தகத்தை நோக்கினால், அவர் தந்தை நடத்திய தனியார் பள்ளியில் 20 பெண்களோடு சேர்ந்து தானும் படித்தது; பெண் கல்வி பற்றி தந்தை எழுதிக் கொடுத்த உரைகளை அரங்குகளில் பேசியது; தாலிபான்களின் கொடுமைகளைப் பற்றி பி.பி.சி.யில் வலைப்பூ எழுதி மேற்குலகத்திற்குக் காட்டியது இவ்வளவே.

ஒரு நாள் தாலிபான்களால் தலையில் சுடப்படுகிறார். உலகம் பதறித்துடிக்கிறது.இங்கிலாந்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடே உன்பக்கம் இருக்கிறது என்று ஒபாமா செய்தி அனுப்புகிறார்.மடோனா அவருக்காகப் பாட்டுப்பாடுகிறார்.கடைசியில் நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.மலாலாவின் "ஓர் இரவு'ப் புகழுக்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.ஒரு பெண் – துப்பாக்கியால் குறிப்பாக ஆப்கான் துப்பாக்கியால் அதிலும் குறிப்பாக அமெரிக்கா வெறுக்கிற ஆப்கான் துப்பாக்கியால் சுடப்படுகிறார் – அவ்வளவுதான்.

அனைத்து ஊடகங்களின் வெளிச்சத்திலும் பட்டுத்தெறிக்க இப்படி ஓர் உபாயம் இருப்பது நம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு தெரிந்துவிடக் கூடாதே. தெரிந்தால் தானாகப் போய் தாலிபான்களிடம் தலையைக் கொடுப்பார்களே என்று பயந்து கொண்டிருந்த வேளையில்தான் பெருமாள் முருகன் வெளியே வந்தார். "மாதொருபாகன்', "நான்தான் மலாலா' என இவ்விரு "கருத்துரிமைப் போராளி'களின் நூலையுமே "காலச்சுவடு'தான் வெளியிட்டிருக்கிறது.

"கடவுள் செத்துப் போய்விட்டார்' என்று நீட்ஷே அறிவித்தபோது கூட உலகம் இப்படிப்பட்ட பிரளயங்களைச் சந்தித்திருக்காது. பெருமாள் முருகன் "தான் செத்துப்போய்விட்டதாக'ப் பிரகடனப்படுத்திய உடனேயே – எழுதிக் கொண்டிருந்த பேனாவை அப்படியே கீழே போட்டு விட்டு – முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாம் வீதிக்கு வந்துவிட்டார்கள். எல்லா தொலைக்காட்சிகளிலும் அதே நேரத்தில், அதே தலைப்பில், அதே நாலு பேர், அதே பேச்சை பேசிக்கொண்டிருந்தார்கள்.

கணிப்பொறியில் "P' என்ற எழுத்தைத் தட்டினாலே "பெருமாள் முருகன்' என்று காட்டியது. "இந்து பத்திரிகைகள்' இது பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு கடமையாற்றின. நகைச்சுவையுணர்வு நிரம்பப் பெற்றவர்களால் "ரே பிராட்பரி'யின் "பாரன்ஹீட் 451' நாவல் மேற்கோள் காட்டப்பட்டது. பெருமாள் முருகனை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்; அவரைத் தனிமையில் இருக்கவிடுங்கள் என்று அவருடைய நண்பர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அங்கே இருந்தால் ஆபத்து; அதனால் அவரை சென்னை கல்லூரிக்கு மாற்றும்படி உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படுகிறது (அதுவும் தற்பொழுது நிறைவேற்றப்பட்டு விட்டது). திருச்செங்கோட்டில் வீசப்படும் பாஸ்பரஸ் குண்டுகளிலிருந்தும், கொத்துக் குண்டுகளிலிருந்தும் அவரைக் காப்பாற்றி எப்படியாவது சென்னையில் ஒரு நாடு கடந்த கருத்துரிமை அரசை நிறுவிவிட வேண்டும் என்று அறிவுஜீவிகள் கூடிக் கூடிப் பேசுகிறார்கள். ஆனால் பெருமாள் முருகன் மட்டும் "அன்று' மூடிய வாயை "இன்று' வரை திறக்கவேயில்லை. என்னாலெல்லாம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டதால், இன்னொரு ஈஸ்டர் பண்டிகைக்கு விடுமுறை கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பை மக்கள் இழந்துவிட்டனர்.

இப்போராட்டத்தையொட்டி வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்று படிமமாக மனதில் பதிந்துவிட்டது. கருத்துரிமைக்கு ஆதரவான கூட்டத்தில் பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், ஆர். நல்லக்கண்ணு ஆகியோர் திரளான மக்கள் முன்னால் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பல அடிகள் தள்ளி – அர்ச்சுனர்களையெல்லாம் ஆக வேண்டியதைப் பார்க்கச் சொல்லிவிட்டு –"நிஷ்காம கர்மத்தோடு' கையைக் கட்டிக் கொண்டு "காலச்சுவடு' கண்ணன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைப் பார்த்தபோது, இதற்கு முன் தமிழகத்தில் எந்தக் கருத்துகளுமே தடைசெய்யப்படவில்லையா? இதுதான் முதன் முறையா? என்ற கேள்வி எழுந்தது. 2002 ஆம் ஆண்டு பழ. நெடுமாறன் எழுதிய நூல் ஒன்று தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டு தடை செய்யப்பட்டது.

நூலை வெளியிட்ட சாகுல் அமீது "பொடா' சட்டத்தில் சிறை வைக்கப்பட்டார். பதிப்பித்த நெடுமாறனின் துணைவியார் வழக்கு மன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டார். எத்தனை கம்யூனிசத் தோழர்களின் நூல்கள் தடைசெய்யப்பட்டன என்று நல்லக்கண்ணுவைக் கேட்டால் சொல்வார்.திருமாவளவன் மதிக்கும் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு, அழித்துவிட்டோம் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் இங்கு தடை நீட்டிக்கப்படுகிறது. இந்தத் தலைவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் கட்டுடைப்பாளர்களும் கலகக்காரர்களும் அன்று எந்த உபநயனத்தில் பங்கேற்க ஊருக்குப் போயிருந்தார்கள்?

பெருமாள் முருகனுக்காக எதிர்வினையாற்றிய பிரதிகளையும் தனி மனிதர்களையும் மூன்று விதமாகப் பிரிக்கலாம்: 1. இந்தக் கதை சாதி, மதத்தையெல்லாம் இழிவுபடுத்தவில்லை; இலக்கியத்தை இலக்கியமாகப் பாருங்கள் 2. கருத்துச்சுதந்திரம் பற்றித் தாங்கள் ஏற்றுக்கொண்ட விழுமியங்களுக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்கிற தார்மீக அடிப்படையில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரை ஆதரிப்பது 3. என்ன கதை, என்ன பிரச்சனை என எதையும் புரிந்து கொள்ளாமல், கலந்து கொள்ளாவிட்டால் "போராளி'ப் பட்டியலிலிருந்து பெயரை எடுத்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் போய்ச் சேர்ந்து கொண்டது.நிற்க.

இம்மூன்று காரணங்கள் மற்றும் படைப்பின் அழகு, தன்னளவிலான விழுமியங்கள், பதற்றங்கள் என்பவற்றைக் கடந்து, இக்கட்டுரை எழுதப்படுவதற்கு அடிப்படையான வேறொரு காரணம் இருகிறது. "மாதொருபாகன்' அப்பட்டமான ஜாதியப் படைப்பு.இன்னும் நேரடியாகச் சொல்லவேண்டுமானால், தலித் மக்களைக் கேவலப்படுத்தும் படைப்பு. ஆனால், இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை இதுவரை எவரும் பெருமாள் முருகன் மீது வைக்காதது ஏன்?

அதற்கான பதிலை அவரவர்களுக்குள்ளேதான் தேடிப்பார்க்க வேண்டும்.நூலைப் படித்தவர்களும் இதற்காகப் போராடியவர்களும் பார்க்கத் தவறிவிட்டார்களா அல்லது கண்கள் பார்த்தும், செய்தி மூளையைச் சென்றடையவில்லையா என்பது தெரியவில்லை. இந்திய மனங்களின் நனவிலி அடுக்கில் ஆழப்பதிந்து போய்விட்ட "தலித்துதானே' என்கிற "இயல்பான' மனநிலையாகத்தான் இதைப்பார்க்க வேண்டியிருக்கிறது. தலித்துகளுக்கு இந்த நாவல் அளிக்கும் "இடம்' பற்றிய எந்தப் பேச்சுமே இன்றைய கருத்துரிமைப் போராட்டக் களத்தில் எழுப்பப்படவில்லை என்பதற்கு வேறு என்ன காரணம் இருந்துவிடமுடியும்? இதைத்தான் அம்பேத்கர் ‘கள்ளமவுனம்' என்கிறார்.

அயோக்கியத்தனம். இந்தப் புதினத்தின் கதை என்பது குழந்தைப் "பேறு' இல்லாத கணவன் மனைவி படும் துயரம் பற்றிய, மொகன்ஜதாரோவில் சற்று ஆழமாகத் தோண்டியிருந்தால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு கதை. குழந்தை இல்லாத அவர்கள் இருவரையும் புதினத்தின் ஒவ்வொரு வரியிலும் யாராவது கைகொட்டிச் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்குப் பரிகாரமாக வருவது, திருச்செங்கோடு ஊர்த்திருவிழாவில் இருக்கும் ஒரு வழக்கம். பதினாறாம் நாள் சாமி மலையேறும்போது, அந்த ஊரில் இருக்கும் எல்லா ஆண்களும் சாமியாகி விடுவார்களாம். எந்தப் பெண்களும் எந்த ஆண்களோடும் (சாமிகளோடும்) கூடுவார்களாம்.

குழந்தை இல்லாத பெண்கள் அங்கே போகும் போது அவர்களுக்கு அந்த சாமிகளால் பாக்கியம் கிட்டுமாம். என்னவோ நாசமாகப் போகட்டும். நம்முடைய கேள்வி, இந்தக் கதையில் எந்த இடத்திலும் வரவேண்டிய, குறிப்பிடப்பட வேண்டிய கட்டாயமோ, அவசியமோ இல்லாமல் – எந்தவிதத்திலும் கதையின் போக்குக்கு உதவாத, எந்தவொரு காரண காரியமுமே இல்லாமல் – எதற்காக தலித் மக்களைப் போகிற போக்கில் அசிங்கப்படுத்தியிருக்கிறார் பெருமாள் முருகன்? இதற்குப் பெயர்தான் அயோக்கியத்தனம்.

கதையின் முக்கியப் பாத்திரமான காளி, எங்கே தன் மனைவி பொன்னாத்தா பதினாறாம் நாள் திருவிழாவில் கலந்து கொண்டு விடுவாளோ என்று தன்னளவில் மருகுகிறான். அந்த நினைப்பில் கிடந்து அல்லாடுகிறான். அவர்களுக்கிடையேயான நேசத்தினால் மட்டுமே அவன் அப்படி இருக்கிறான் போலிருக்கிறது என்று கதையைப் படித்துக் கொண்டு போனால், ஓரிடத்தில் தன் நெருங்கிய கூட்டாளி ஒருவனிடம் முதன் முறையாக வாயைத் திறந்து போதையில் வெளிப்படையாக மனதில் பட்டதைப் பேசுகிறான்:

“ஒரு பொம்பள, சாதிக்குள்ள எத்தன பேருகிட்ட போனாலும் தப்பில்ல.பொழங்குற சாதிக்காரனோட போனாக் கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போனா அவ்வளவுதான். ஊரே விட்டே ஏன் சாதிய விட்டே தள்ளி வெச்சிருவாங்க. இன்னிக்கு அப்படியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோட தான் இருக்கோனும்ங்கிறம். அப்புறம் எப்படி? வீதியில சுத்தறதுல பாதிக்குமேல திரியறது தீண்டாச் சாதி தண்டுவப் பசங்கதான். அதுக்கப்புறம் என்னால் பொன்னாத்தாளத் தொடவே முடியாது.கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது. எதுக்கு இதெல்லாம், அப்படி ஒரு கொழந்த எனக்கு வேண்டாம்...''

இது யாருடைய குரல்?என் மனைவி யாருடன் வேண்டுமானாலும் படுத்துக் கொள்ளட்டும்.ஆனால், போயும் போயும் ஒரு தீண்டத்தகாதவனோடு படுத்துவிடக் கூடாது என்று நினைக்கும் காளியின் ஜாதிக்குரலா?அல்லது அவள் தனக்கு மட்டுமேயானவள் என்ற அவனுடைய நேசத்தை படிப்பவர்கள் இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெருமாள் முருகனால் கொடுக்கப்பட்ட அழுத்தமா?

ஒரு ஜாதி வெறியனின் குரல்தான் அது என்று நீங்கள் சொல்வீர்களேயானால், அப்படிப்பட்ட ஒருவனுடைய குரலை கதையாக புத்தகம் போட்டு இன்றைக்குச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆறாத ஒரு ரணத்தை உங்கள் கதாபாத்திரங்களின் வழியாகக் கீறிப்பார்ப்பதில் அப்படி என்ன மனப்பிறழ்வு உங்களுக்கு? இல்லை, அது காளி பேசுவது; அவனுடைய நேசத்தை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்காகக் கொடுக்கப்பட்ட அழுத்தம்; அன்றைய சமூக எதார்த்தம் என்று "எதிர்வினை'யாற்றுவீர்களேயானால் "தீண்டாச்சாதியோட படுத்துவிட்டால்....' என்று எதிர்மறையாக ஏன் எழுதுகிறீர்கள்?"ஒரு பாப்பாரப் பயலோடு படுத்துவிட்டால் வெள்ளை வெளேரென்று குழந்தை பிறந்துவிடும். பின் யாரும் அதை என் பிள்ளை என்று நம்ப மாட்டார்கள்' என்று நேர்மறையாகக்கூட எழுதியிருக்கலாமே? உங்கள் படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் அகமகிழ்ந்திருப்பார்களே!

பொன்னாத்தா பதினாறாம் நாள் சடங்குக்காக, தன் தாய் தகப்பனோடு வண்டி கட்டிக் கொண்டு போகிறார். “புறப்படும்போது வண்டிக்கு அருகில் ஒருவன் வந்தான், இடுப்பில் வேட்டி, கிச்சத்தில் துண்டை மடித்து வைத்திருந்தான். "சாமீ...' என்று அழைக்கவும் அப்பன் திரும்பி "என்னடா' என்றார். ஆளைப்பார்த்ததும் சக்கிலியர் என்று தெரிந்தது'' – இவர் பெயர் மாரன். தன் பெண்டு பிள்ளைகளோடு வந்த அவர், வண்டியில் வர அனுமதி கேட்கிறார். அனுமதி கிடைத்ததும் மாரனே வண்டி ஓட்டுகிறார். “அவன் பெண்டாட்டி கோதானத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் மீது சிறிதும் படாமல் அவனுக்குப் பின்னால் போய் உட்கார்ந்திருந்தாள்.'' அவர்களுடைய குழந்தைகளைப் பார்த்து பொன்னாத்தா பொருமுகிறாள்: “ஒரு சக்கிலிக்கு முன்னக் கூட நமக்குக் கேவலந்தான்'' அழகான அந்த குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறாள். ஆனால் செய்யவில்லை.

”தொட்டுத் தூக்கும் சாதிப்பிள்ளைகளையே கூட பொன்னா மடியில் வைத்துக் கொள்வதில்லை'' சாமியை மனதுக்குள் வேண்டிக் கொண்டே போகிறாள்: “எங்கே போனாலும் தீட்டுப்பட்டு விடுமோ என்று ஒதுங்கி நிற்கும் தீண்டாச் சாதி மனுசர் போல ஒரு ஓரமாக நிற்க வேண்டியிருக்கிறதே.''கோயில் வந்த பிறகு மாரன் இறங்கி விடுகிறார். “மாரன் கும்பிட்டுச் சொன்னான், அவன் பெண்டாட்டி உடல் கூனிக் கும்பிட்டு "சாமிங்க உத்தரவு தரோனும்' என்றாள். பொன்னாவின் அம்மா முந்தானை முடிச்சை அவிழ்த்து ஓரணாவைக் கொடுத்தாள். முந்தானையை ஏந்தி வாங்கிக் கொண்டாள். கும்பிட்டபடி பின்னே போய் நகர்ந்தார்கள்.''

"எங்கே போனாலும் ஒதுங்கி நிற்கும் தீண்டாச் சாதி மனுசர் போல' என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஏனைய சாதிக்காரன் எவனும் தொட்டால் தீட்டு என்று அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவர்களே தானாகவே தாங்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்று உணர்ந்து ஒதுங்கிப்போகிறார்கள் இல்லையா? இது என்ன வகையான சமூகவியல்? ஒருமக்கள் கூட்டத்தில் வலி நிரம்பிய வாழ்முறையையும் வரலாற்றையும் அதன் சிதைக்கப்பட்ட உளவியலையும் இதற்கு மேல் யாரும் அசிங்கப்படுத்தி விட முடியாது.

 அக்காலத்தைய சமூகம் இப்படித்தான் இருந்தது. ஜாதி கெட்டித்தட்டிப் போயிருந்தது. அதை அப்படியே பதிவு செய்வதுதான் இலக்கியம். அந்தப் பகுதி மக்களின் வழக்காறுகளை அப்படியே பதிவுசெய்கிறோம் என்றெல்லாம் விளக்கம் சொல்வார்கள்.

ஜாதிய விலங்காண்டிகளின் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் சமூகப் பொறுப்புள்ள எந்தப் படைப்பாளிக்கும் இருக்காது. நேற்று நடந்தவற்றை அப்படியே பதிவு செய்வதன் மூலம் இன்று எதைப் பதிவு செய்ய நினைக்கிறீர்கள்? என்னதான் அறிவியல் கோலோச்சினாலும் இன்றளவும் ஜாதியைக் கைவிடாத கேடுகெட்ட சமூகம் தானே இது. அந்தச் சமூகத்தில் நீங்கள் செய்யும் பதிவுகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா? சராசரிக்கும் கீழான ஒரு கதைக்கு இத்தனை "ஜாதிப் பதிவு'களைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை பாட்டி வடை சுட்ட கதையை பெருமாள் முருகன் எழுதியிருந்தால், ஒரு கவுண்டர் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தபோது, சக்கிலி வீட்டுக் காக்கா பறந்து வந்து வடையைத் தூக்க, நாடார் தோட்டத்து நரி ஓடி வந்தது என்று எழுதியிருப்பார் போல! ரொம்பக் கேட்டால், இனவரைவியல், மானுடவியல், சமூகவியல் என்று ஜல்லியடிக்கத் தொடங்கி விடுவார்கள்.

நீங்கள் சொல்லும் எல்லாமே அடிப்படையில் அறிவியல் சார்ந்தவை.அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை (Methodology) இருக்கிறது.அவை தரவுகள் தொடர்புடையவை. யாரோ, எவரோ, எப்போதோ, எதற்கோ, எங்கேயோ சொன்னதையெல்லாம் கேட்டு கதை எழுதி விட்டு, அதற்கு அறிவியல் விளக்கமும் கொடுத்தால் உலகமே சிரிக்கும்.

பாடநூல்களில் இடம்பெற்ற அம்பேத்கர் கேலிச்சித்திரமும், புதுமைப்பித்தனின் கதையும் தலித் மக்களை இழிவுபடுத்துகிறது என்று சொன்னபோதும் இப்படித்தான் சொல்லப்பட்டது. படைப்பை படைப்பாகப் பாருங்கள். அன்றைய காலகட்டத்தின் படைப்பை இன்றோடு சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஏன் "அன்றைக்கு' ராமன் குதிரைக்குப் பிறந்த கதையையும், ஸகந்தன் எப்படிப் பிறந்தான் என்ற கதையையும் புனைவாக்கி அதே பாடப்புத்தகத்தில் இன்றைக்கு சேர்க்கக் கூடாது?

பெருமாள் முருகனின் கண்ணீரைத் துடைக்க கைக்குட்டையோடு போகிறவர்கள் தவறாமல் சொல்வது, “சாதியவாதத்துக்கும், மதவாதத்துக்கும் பெருமாள் முருகன் பலியாகிவிட்டார்.'' சாதியின் மீதும் மதத்தின் மீதும் அப்படி எத்தனை கற்களை எறிந்ததால் அவை அவரைப்பலிவாங்கின என்பதைப் பார்க்கலாம். இரண்டுக்கும் மய்யமாக இருப்பது அந்தப் பதினாறாம் நாள் சடங்குதான். அந்தச் சடங்கைச் சொன்னதன் மூலம் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட அந்த சாதியைச் சேர்ந்த பெண்களை அவர் அசிங்கப்படுத்திவிட்டார் என்று சாதியவாதிகளும், ஓர் இந்துக் கோயிலில் அப்படி நடப்பதாக எழுதியதால் கோயிலைக் களங்கப்படுத்திவிட்டார் என்று மதவாதிகளும் சொல்கிறார்கள்.

முதலில் ஜாதிக்கு வருவோம்.குறிப்பிட்ட சாதியினருக்கு – எதிராக – எந்த ஒரு வார்த்தையையும் பெருமாள் முருகன் எழுதிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அப்படி ஒரு சடங்கை தன்னகத்தே கொண்டிருக்கும் அந்த சாதிக்கு எதிர்க்குரலில் பேச எல்லாவிதமான வாய்ப்பையும் வெளியையும் கொண்ட கதை இது. அந்தக் காலத்திலிருந்த சக்கிலியர்களை "அப்படியே' பதிவு செய்யத் தெரிந்த பெருமாள் முருகன், அதே காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாத்திகம் பேசிக்கொண்டு ஊருக்குள் திரிந்தவர்களை வைத்து அந்தச் சடங்கை கண்டிப்பது போலவோ, பகடி செய்வது போலவோ எழுதியிருந்தால் அது நேர்மையான பதிவு.

அப்படி எழுதியிருந்தால்தான் அது சாதி எதிர்ப்பு.அப்படி எதுவுமே இல்லை.பின் எதற்காக சாதியவாதிகள் எதிர்க்கிறார்கள்?காரணம், பெருமாள் முருகனின் அரைவேக்காட்டுத்தனம். "யாரோ' சொன்ன அந்தச் சடங்கு பற்றிய செய்தி தூக்கத்தைக் கெடுத்து, தாக்கத்தை ஏற்படுத்தவும் அரக்கப்பரக்க எழுதத் தொடங்கிவிட்டார். சர்ச்சைக்குரிய அந்தப் பகுதி பற்றி பெருமாள் முருகன் தரப்பு என்ன சொல்கிறது? “அந்தச் சாதியைச் சேர்ந்த “எல்லாப்'' பெண்களும் அந்தச் சடங்கில் கலந்து கொள்வதாக எழுதவில்லை; பிள்ளை இல்லாத பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சடங்கு என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.'' பொய்.

“நான்கு ரத வீதிகளிலும் ஊர் நடுவே இருக்கும் கோயில் மண்டபங்களிலும் கலைநிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. கொண்டாட்டத்தின் உச்சத்தில் வரைமுறைகள் எல்லாம் தகர்ந்து போகும். அந்த இரவே சாட்சி.இணங்கும் எந்த ஆணும் பெண்ணும் உறவு கொள்ளலாம். சந்துகளிலும் ஊரைச் சுற்றி இருக்கும் நிலங்களிலும் மலை மண்டபங்களிலும் பாறை வெளிகளிலும் உடல்கள் சாதாரணமாகப் பிணைந்து கிடக்கும். இருள் எல்லா முகங்களிலும் திரைபோட்டுவிடுகிறது. ஆதிமனிதன் இந்தத் திருவிழா கொண்டாட்டத்தில் உயிர் பெறுகிறான்.

“திருமணமாகாத பெண்களை யாரும் அனுப்பமாட்டார்கள். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை எங்கும் பார்க்கலாம். ஆண்களிலோ இளைஞர் கூட்டம் அதிகமாய்த் திரியும்.அந்த இரவில் எத்தனை பெண்களோடு முடியுமோ அத்தனை பெண்களை ஈர்க்க முயலும் இளைஞர்கள்.பல இளைஞர்கள் அங்கு தான் உறவின் முதல் சுவையை அறிவார்கள். கற்றுக் கொடுப்பவர்களாகப் பெண்கள் ...... கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமேயில்லை. அந்தப் பெண்கள் நன்றாகச் சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப் போனார்கள். "இன்னிக்கு நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னிக்குத் தேவடியாதான்' என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்.''

கதையில், அந்தச் சடங்கைப் பற்றிய முதல் விவரிப்பு இது. இதில் எங்கேயும் பிள்ளையில்லாத பெண்கள் பற்றிய விவரிப்பே இல்லை. அப்படியே அவர்கள் சொல்வது போல் பிள்ளையில்லாத பெண்களுக்கு மட்டுமேயான சடங்குதான் அது என்று சொன்னால், அந்தச் சிறிய வட்டாரத்தில், நிலங்களில், மலை மண்டபங்களில், பாறை வெளிகளில் என்று எங்கு பார்த்தாலும் – பாலியல் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் செய்யுமளவுக்கு – அந்த ஊரில் அத்தனை பிள்ளையில்லாத பெண்களா இருந்தார்கள்? அவர்களே பாவம் பிள்ளையில்லாமல் நொந்து நொம்பலப்பட்டு அங்கு வரும்போது, அந்தக் கருமம் பிடித்தவன்களுக்குக் "கற்று' வேறு கொடுப்பார்களா? அது சரி முருகன், அந்த ஒரே ஒரு நாளில், ஒரே ஒரு முறை உறவு கொண்டவுடனேயே அப்படி எத்தனை பேருக்குக் குழந்தைகள் பிறந்தனவாம்? இப்படிப்பட்ட "மோடி'த்தனமான தரவுகளைச் சொல்லி அறிவியலை மானபங்கப்படுத்தினால் அதற்கு இ.பி.கோ.வில் ஏதாவது தண்டனை இருக்கிறதா என்று உங்களுக்காகப் போராடும் முன்னாள் நீதிபதிகளைத்தான் கேட்கவேண்டும்!

காளியும் திருமணத்திற்கு முன் அந்தச் சடங்கிற்கு போயிருக்கிறான்.ஆனால், இப்போதுதான் அந்த நாள் அது குழந்தையில்லாத பெண்களுக்கு ஒரு திருநாள் என்று காளிக்குத் தெரிகிறது.அதாவது பிள்ளை இல்லாத பெண்களுக்கு இது ஒரு கூடுதல் வாய்ப்பு தானே தவிர அவர்களுக்கு மட்டுமேயானதல்ல. இப்படி ஒரு அரைவேக்காட்டுத்தனமான எழுத்தை, இன்னசாதி, இன்ன ஊர் என்றில்லை எந்த ஊர்ப் பெண்களாக இருந்தாலும் கரைத்து மூஞ்சியில் தான் ஊற்றுவார்கள்.

சாதிய வாதத்தால் பாதிக்கப்பட்ட பெருமாள் முருகனின் புரட்சிப் படைப்பு, தலித் மக்களை மட்டும் தான் "அப்படியே' பதிவு செய்திருக்கிறது. மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களை முடிந்தவரை விதந்துதான் பேசுகிறது. ஆதியாகமத்தில் தனியொருவனாக இந்த உலகத்தைப் படைத்த கடவுளைப் போல, வனமாக இருந்த திருச்செங்கோட்டை நிலமாக மாற்றிய கவுண்டர்கள்;  

தொழில் நேர்மையுள்ள கொட்டமுத்து விற்கும் செட்டியார்; உழைத்துச் சம்பாதிக்கும் நாடார்; வழக்கம் போல் கர்ப்பக்கிரகத்திற்குள்ளேயே அய்யர் தவிர, கதையில் யாருக்கும் அடங்காமல் தலையில் கிராப் வைத்துக்கொண்டு, தான் விரும்பும் படி வாழ்ந்து கொண்டு கட்டுடைக்கும் கருத்துகளைக் கொண்ட அந்நாளைய "போஸ்ட் மாடர்னிஸ்ட்' நல்லுப்பையன் கவுண்டர், இறுதியில் பொன்னாத்தா தேர்ந்தெடுக்கும் "சாமி' கூட தோளில் துண்டு போட்ட, கடைக்கு உள்ளே போய் புட்டு வாங்கிக் கொடுக்கும் "நல்ல சாதி'யைத் சேர்ந்தவன் தான் – எல்லோரையும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கச்சிதமாக உட்கார வைத்திருக்கிறார் பெருமாள் முருகன். யாரையும் அங்கே இங்கே என ஓர் அங்குலம் கூட அசைத்து விடவில்லை.

மதம்பற்றிய கதையும் அதேதான்.எந்தவொரு மத்திற்கும் குறிப்பாக, இந்து மதத்திற்கு எதிரான போக்கு கதையின் எந்த இடத்திலும் வந்து விடவில்லை. அர்த்தநாரீஸ்வரன் என்கிற பெருந்தெய்வத்திலிருந்து பாவாத்தா என்கிற சிறு தெய்வம் வரை கதையில் யாருக்கும் எந்தக் குறையும் வந்துவிடவில்லை. பின் எதற்காக காவிக்கூட்டம் பெருமாள் முருகனைக் கடித்துத் துப்புகிறது?வேறென்ன?அந்த அரைவேக்காட்டுச் சடங்கு நடக்கும் இடமாக இந்துக் கோயில் எழுதப்பட்டதுதான்.இதுவே சடங்கு மசூதியிலோ, தேவாலயத்திலோ நடப்பதாக எழுதியிருந்தால், யாரும் வாயைத் திறந்திருக்க மாட்டார்கள்.ஆகச் சிறந்த கலைப்படைப்பென்று கொண்டாடியுமிருப்பார்கள்.

ஒரு படைப்பாளி தான் ஏற்றுக்கொண்டதைத்தான் எழுதுவான், எழுதவேண்டும்.அதுதான் எழுத்து.  ஜாதியை – சிலருக்கு அது தரும் பெருமையை, சிலருக்கு அது தரும் சிறுமையை – பெருமாள் முருகன் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதுதான் அவருடைய எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய படைப்பாளிகளைக் கேட்டால், சாதி மத வரையறைக்குள் வராத சிறுதெய்வங்களைப் பற்றித் தானே எழுதுகிறோம் என்பார்கள்.

எல்லா தெய்வங்களும் இந்து மதத்திற்குள் அடைக்கப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. அதேபோல், மதத்தைப் பற்றி மதம் சார்ந்த கோயிலை முன்னிலைப்படுத்தி, எந்தவித விமர்சனமும் இல்லாமல் எழுதுகிறீர்கள் என்றால், நீங்கள் ஜாதியை ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள். இந்து மதத்தையும், ஜாதியையும் எந்தக் கோட்டைக்கொண்டு பிரித்துப் பார்ப்பீர்கள்? இப்படி முழுக்க முழுக்க ஜாதியையும் மதத்தையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு – எனக்கு எதிராக ஜாதியும் மதமும் இருக்கின்றன – என்றுசொல்லாதீர்கள்.நீங்களே ஜாதியும் மதமுமாகத்தான் இருக்கிறீர்கள்.

"படைப்புகளில் ஜாதி, மதம் என்கிற வார்த்தைகளே வரக்கூடாது என்று சொல்லும் பாசிஸ்டுகள்' என்று எங்களுக்கான முத்திரையொன்றைச் செய்யச் சொல்லி இந்நேரம் ஆள் அனுப்பியிருப்பீர்கள். "காட் ஆப் ஸ்மால் திங்ஸ்' இல் கூட ஜாதி இருக்கிறது. அதுவும் பாலியல் சார்ந்த கதைதான்.அதிலும் தலித் மாந்தர்கள் வருகிறார்கள்.

கதையின் இறுதிப்பகுதியே இரு உடல்களின் இணைவைப் பற்றியதுதான். ஆனால் அந்த இணைவில் ஜாதி காறி உமிழப்படும். சனாதனக் கட்டுகள் உடைத்து நொறுக்கப்படும்.பூமணியும் புதினம்தான் எழுதினார். "அஞ்ஞாடி'யிலும் ஏராளமான ஜாதிக்காரர்கள் வருகிறார்கள். ஆனால், "அஞ்ஞாடி' ஒரு நேர்மையான பதிவு. எந்த ஜாதிச் சாயத்தையும் ஊற்றி எழுதப்படாத எழுத்து. பூமணி, தொ. பரமசிவன், ஆ. சிவசுப்பிரமணியன் எழுத்துகளுக்கும் உங்கள் எழுத்துகளுக்கும் எங்களுக்கு வேறுபாடு தெரியும்.

கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் ஜாதி வெறியர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வை – அதற்குக்காரணம்ஜாதிஅல்ல; கோபாலகிருஷ்ணநாயுடுவின் பாலியல் பிறழ்வு – என்று "குருதிப்புனல்' எழுதிய இந்திரா பார்த்தசாரதி; "பிள்ளை கெடுத்தாள் விளை' என்று ஏதோ ஊருக்குப் பெயர் வந்ததற்குக் காரணம் ஒரு சிறு பிள்ளையைக் "கெடுத்த' தாழ்த்தப்பட்ட பெண் என்று புனைந்த சுந்தர ராமசாமி, எப்போதோ பறச்சி, பறையன் என்று புதுமைப்பித்தன் எழுதியதை இப்போதைய இலக்கியச் சுவையறும்புகளின் மீது தடவி சப்புக்கொட்ட வைக்கும் "காலச்சுவடு', கதையின் போக்குக்கு எந்த வகையிலும் உதவாவிட்டாலும், தீண்டத்தகாத தண்டுவப் பயல்களை வம்படியாகப் பதிவு செய்த பெருமாள் முருகன் – ஒத்துக்கொள்கிறோம் நீங்கள் மெத்தப் படித்தவர்கள். ஆகப் பெரிய இலக்கியவாதிகள்.உளப்பகுப்பாய்வில் ஊறித் திளைத்தவர்கள்.காப்காவை கரைத்துக் குடித்தவர்கள். அழகியலின் அடுத்த கரையை நீந்திக் கடந்தவர்கள்.

ஆனால், நாங்கள் உங்களிடம் கேட்பதெல்லாம் ஏன் எங்கள் கோவணத்தையே எப்போதும் அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? 

Pin It