இன்றைய காலச் சூழ்நிலையில் நீங்கள் தமிழ்த் தேசியவாதி என்று சொன்னால் எந்த இந்தியமும் உங்களைக் கண்டு பயப்படாது. தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என்றுதான் இந்தியம் கேட்கும். அந்த அளவிற்கு இப்போது தமிழ்த் தேசியம் என்ற பெயர் இப்போது அர்த்தம் புரியாமல், வரலாறு புரியாமல் உபயோகப்படுத்தப்படுகிறது.

தமிழ்த் தேசியத்தின் தொடக்கம் யார்? என்னைப் போன்ற பெரியாரிய தோழர்களுக்கு தோழர் தியாகு சொன்னதுபோல, பெரியாரின் சுயமரியாதை இயக்கமே தமிழ்த் தேசியத்தின் தொடக்கம்; பெரியாரே தமிழ்த்தேசியத்தின் தந்தை.

சரி நீங்க பெரியார் எதிர்ப்பாளரா? அப்படியென்றால் யார் தமிழ்த் தேசியத்தின் தொடக்கம்?

தோழர் தமிழரசன்தான் பெரியாருக்குப் பிறகு சாதி ஒழிந்த தனித்தமிழ்நாடு கேட்டார். அதனால் தோழர் தமிழரசன் தான் தமிழ்த் தேசியத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும். நான் தோழர் தமிழரசனையும் ஏற்றவன். சாதி ஒழிந்த தனித்தமிழ்நாடு தான் உண்மையான தமிழ்த் தேசியம் என்பதை உணர்ந்தவன்.

ஆனால் போலி தமிழ்த் தேசியவாதிகளுக்கு முதலமைச்சர் பதவிதான் தொடக்கமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால்தான் தமிழ்த்தேசியம் என்ற கூப்பாடு அவர்களிடம். ஆனால் சாதி ஒழிப்புக்காக சாதிவெறியை எதிர்த்துப் பேசமாட்டார்கள்.

இங்கே சாதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக போராடியவர்கள் உண்மையான தமிழ்த் தேசியப் போராளிகளே. அவர்கள் தங்களுடைய தமிழ்நாடு விடுதலைப் படையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்று அனைத்து சமுதாயத் தோழர்களையும் உள்ளடக்கிய படையை உருவாக்கினார்கள். தாழ்த்தப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்த காவல் துறை மீது தாக்குதல் நடத்தி சிறை சென்று பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்தவர்கள் உண்மையான தமிழ்த் தேசியப் போராளிகள்.

ஆனால் புதிய தமிழ்த் தேசியவாதிகளோ ஒரு கோகுல் ராஜின் கொலையைக் கூட கொலை என்று துணிந்து சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக மழுப்புகிறார்கள். தர்மபுரி கலவரம் சிறுமுரண்பாடாக பார்க்கமுடியும் இவர்களால்.

உண்மையான தமிழ்த்தேசியவாதிகளின் நோக்கம் சாதி ஒழிந்த தனித்தமிழ்நாடு விடுதலை என்பதுதான்; அதன் ஊடாகத்தான் தமிழீழமும் விடுதலை பெறும் என்று தீர்க்க தரிசனமான ஒரு பதிலை தோழர் தமிழரசன் சொன்னார்.

ஆனால் புதிய தமிழ்த் தேசியவாதிகளோ இந்தியாவின் ஆதரவுடன் ஈழம் அமைப்போம் என்று மேடைக்கு மேடை பேசுகிறார்கள். எந்த இந்தியம் தெரியுமா? அமைந்த ஈழத்தை அழித்த இந்தியம்...

இந்தியத்தின் மீது நம்பிக்கை வைக்கிற இவர்கள் முன்பும் இப்போதும் தனித்தமிழ்நாட்டுக்குப் போராடிய போராளிகளை இம்மியளவேனும் மதித்திருப்பார்களா என்றால் பதில் இல்லை.

இவர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் வழி வந்ததாக சொல்வார்கள். ஆனால் இந்தியா ஒரு போதும் ஈழத்துக்கு உண்மையாக உதவாது என்று மேதகு பிரபாகரன் சொன்னதை காதில் வாங்காமல் குழிதோண்டி புதைக்கிறார்கள். இவர்களா தமிழ்த் தேசியவாதிகள்?

தமிழக அரசியலில் ஒருபோதும் மேதகு பிரபாகரன் உள் நுழைய விரும்பியதில்லை. அது ஈழத்துக்குப் பின்னடைவாக இருக்கும் என்பதை உணர்ந்தார் மேதகு பிரபாகரன். ஆனால் அவர் வழி வந்தவர்கள் என்று சொல்பவர்களோ மேதகு பிரபாகரனை தங்களுடைய தமிழக அரசியல் கட்சித் தலைவர் போல விளம்பரப்படுத்தி வாக்குகள் சேகரிக்க முயல்கிறார்கள்.

உண்மையான தமிழ்த்தேசியம் இந்தியாவை உடைத்த, சாதி  ஒழிந்த தனித்தமிழ்நாடுதான் என்பதை புதிய தமிழ்த்தேசியவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இந்தியம் இவர்களைக் கண்டு பயப்படுவதில்லை.

இந்தியம் யாரைக் கண்டு பயப்படுகிறது? உண்மையான தமிழ்த் தேசியத்தைக் கண்டு பயப்படுகிறது.

தோழர் தமிழரசனின் நினைவு நாள் அன்று தமிழ்த்தேசிய ஈகியர் நாள் கூட்டத்தை தோழமைகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு இந்தியம் தடை விதித்தது.

எப்போது தடை விதித்தது இந்தியம்? கூட்டத்திற்க்கு இரண்டு நாளைக்கு முன்பு... மேல்முறையிடு செய்தால், நீதிமன்றம் சொன்னது 'கூட்டம் போட்டால் தனித்தமிழ்நாடு கேட்பீர்கள். அதனால்தான் தடை' என்று பதில் வந்தது. கடைசிவரை தடைதான்... இதுதான் உண்மையான தமிழ்த்தேசியம்

தோழர் தமிழரசனின் ஊரான மதகளிர் மாணிக்கத்தில் 2000 காவல்துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்தி தோழர் தமிழரசனுக்கு வீரவணக்கம் சொல்லமுடியாத அளவிற்கு தடைகள் பலமானதாக இருந்தன. இதுதான் உண்மையான தமிழ்த்தேசியம்.

இந்தியத்தை எதிர்த்து யார் போராடுகிறார்களோ, அவர்களே உண்மையான தமிழ்த்தேசியவாதிகள்.

இந்திய அரசியலில் பங்குகொண்டால் கூட்டு கொலையாளிதான்.

- தமிழ்மறவன்

Pin It