சாதிய அமைப்பு என்பது ஒரு சாதாரண சமூக அமைப்பு என்றும், சமூகத்தின் மீது அமைந்திருக்கக் கூடிய கட்டமைப்பு என்றும் சில தலைவர்கள் தவறாக விளக்கினர். இந்த மேல் கட்டமைப்பானது, அடிப்படைக் கட்டமைப்பான பொருளாதாரக் கட்டமைப்பை அழிப்பதன் மூலம் – தானாகவே அழிந்துவிடும் என்பதே அவர்கள் கருத்து. உண்மையில் சாதியமே நம் நாட்டில் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பாகவும், அடிப்படைக் கட்டமைப்பாகவும் இருக்கிறது. அது, இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக உளவியல் மற்றும் ஆன்மிக வாழ்வோடு பிணைந்திருக்கிறது.

karl_marx_374இந்த உண்மையை உணர்வதற்கும், இந்த அடிப்படைக் கூற்றிற்குப் போதுமான அளவிற்கு கவனம் செலுத்தவும் 1990கள் வரை, இந்திய சமூகம் உண்மையில் எவ்வாறு இயங்கியது என்பது குறித்த அனுபவங்களை சேகரிக்க வேண்டும். அவர்கள் சாதிய காரணியை ஓர் அடிப்படைக் காரணியாக அங்கீகரித்து, சாதி அடிப்படையிலான வன்கொடுமைகளை கவனிப்பதற்கு திட்டங்களையும் நிகழ்வுகளையும் டெல்லியில் நடைபெற்ற தங்களது உயர்மட்டக் குழு கூட்டத்தில் வகுத்தனர். சாதி ஒழிப்பிற்கான உறுதியான வழிமுறையான – அம்பேத்கர் வடிவமைத்த மதமாற்ற நடைமுறையைத் தடுக்க, பார்ப்பனியம் இச்செயல்திட்டத்தை வகுத்தது.

இதனால்தான் கடந்த 85 ஆண்டு காலத்தில் ஏற்கனவே மதமாற்றம் பெருமளவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் மட்டுமே மார்க்சியம் தன்னை சுருக்கிக் கொண்டுள்ளது. இம்மாநிலங்களில் இதற்கு மேலும் ஒரு கட்டுக்கோப்பான முறையில் அம்பேத்கரின் மதமாற்ற கருத்தியலைப் பரப்புவது என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த சாதி ஒழிப்பிற்கும் – இந்து மதத் தகர்ப்பிற்கும் இட்டுச் சென்றிருக்கும். அம்பேத்கரின் மதமாற்ற இயலுக்கு எதிராக மநுவாதிகள் மார்க்சியத்தைப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் பிற இடங்களில் இதே போன்று உழைக்கும் மக்களின் இருப்பு இருந்தபோதும், இந்திய மார்க்சியவாதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் செயலாற்றுவதை சரியெனக் கருதினர்.

தொழில் மய்யக் கல்வியின் அளவு அல்லது சமூக அரசியல் ஓர்மை அதிகமாக இருக்கக்கூடிய, அரசியல் அடிப்படையில் முன்னேறிய மாநிலங்களில் மார்க்சியம் எளிதாகப் பரவும் என நம்பப்படுகிறது. அத்தகைய இடங்களில் தொழில் மய்யத் தாக்கத்தின் விளைவாக ஆற்றல் மிக்க உழைக்கும் மக்களின் படைகள் உருவாகின்றன. பொருளாதார சுரண்டல் போன்றவை குறித்து மக்கள் புரிந்து வைத்துள்ளனர். ‘ஒரு மாநிலம் மார்க்சியமயமாக மாறியவுடன் அதன் அருகிலும் சுற்றிலும் உள்ள பிற மாநிலங்கள் கம்யூனிச சிந்தாந்தத்திற்குள் வந்துவிடுகின்றன' என ஹென்றி கிஷிங்கர் ஒரு கருத்தை வெளியிட்டார்.

வறுமை மற்றும் வர்க்கச் சுரண்டல், வன்கொடுமைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுதல், தொழில்மயமாக்குதல் அல்லது தனியாகவோ கூட்டமாகவோ நடத்தப்பட்ட ஆட்சி அதிகாரத்தை நோக்கிய அரசியல் ஆகிய இக்கூறுகள் எவையுமே – மார்க்சியத்தின் தாக்கம் இந்திய மாநிலங்களில் வளர எவ்வகையிலும் உதவவில்லை. சாதியத்தை அதன் எல்லா வடிவங்களோடும் தன்மைகளோடும் அப்படியே வைத்துக் கொண்டு, தொழில் வளர்ச்சியை ஓரளவிற்கு மேலே கொண்டு செல்ல முடியாது என்பதை ஏற்கனவே ஆராய்ந்து தெளிவுபடுத்தியிருக்கிறோம். இந்தச் சூழலில் பெரிதும் தொழில் வளர்ச்சி கண்ட மாநிலங்களான குஜராத், மகாராட்டிரம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகியவை மார்க்சியத்தை உள்வாங்கியவை அல்ல.

பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தொழில் வளர்ச்சி குறைவானதாகவும், தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள மாநிலங்களான மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகியவை விரைவாகவே மார்க்சிய மாநிலங்களாக மாறின. மறுபுறம், ஏறத்தாழ ஒரே மாதிரியான பண்பாடு மற்றும் மொழி, தொழில் சூழல் மற்றும் பொருõளாதார நிலைகளையுடைய அண்டை மாநிலங்களான பீகார், அசாம், ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை மார்க்சியத்தை உள்வாங்கவோ, கம்யூனிஸ்டு கட்சியின் தாக்கத்திற்கு உள்ளாகவோ இல்லை. அய்ரோப்பாவில மிகச் செரிவாக செயல்படுகின்ற ஆட்சி அதிகாரத்தை நோக்கிய அரசியல், அதன் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது. பஞ்சாப்பும், ஆந்திரப் பிரதேசமும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்று இருந்தபோதும், இந்தியாவில் தூர தூரமாக இருந்தபோதும் பண்பாட்டு மற்றும் மொழியியல் நோக்கில் ஒற்றுமையற்ற நிலையிலும் மார்க்சியவாதிகளின் ஒரு சில நடவடிக்கைகளை உள்வாங்கியுள்ளன.

மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகள் விரிவடைந்ததற்கும், மார்க்சியம் பரவியதற்குமான தனித்துவமான மற்றும் பொதுவான காரணிகள் என்ன? பெருமளவிலான தொழில் வளர்ச்சி கண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. பஞ்சாப்பில் அம்பேத்கரிய தாக்கத்தின் வளர்ச்சியால் மநுவாதி கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற இயலவில்லை. நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் உள்ளிட்ட ‘செம்பாதை' என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கினால், பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்த விளையும் இத்தகைய இயக்கம், இந்துக்கள் அல்லாத பகுதிகளிலேயே தொடர்கிறது; அல்லது இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குப் பெருமளவில் மதமாற்றம் நிகழ்ந்த இடங்களிலும் மற்றும் மதமாற்றத்திற்கான சூழல் உயிர்ப்புடன் இருக்கும் மாநிலங்களிலும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்கின்றன.

பார்ப்பனியத் தலைவர்களால் மார்க்சியக் கருத்தியல் ஏற்றுக் கொள்ளப்பட்ட அத்தனை மாநிலங்களிலும், சாதிய சுரண்டலுக்கு எதிரான ஒரு குறிப்பிட்ட வகையிலான சமூக எதிர்ப்பு ஒரே விதமாக வெளிப்படுவதை நாம் கண்டோம். இந்த மாநிலங்களில் மதமாற்றம் மிக உயிர்ப்புடன் இருந்தது. அம்மாநிலங்களின் மக்கள் தொகை கணக்கீட்டினைப் பார்த்தால், இந்து அல்லாதவர்களின் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையின் பெரும் பகுதியாக இருப்பதை காணலாம். கேரளாவில் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மக்கள் தொகை ஏறத்தாழ 45 விழுக்காடாக இருக்கிறது. (முஸ்லிம் 24.7 மற்றும் கிறித்துவர்கள் 19.00). பெரிய அளவில் நடைபெற்ற மதமாற்றம் காரணமாக, கிழக்கு இந்தியாவின் பெரும் நிலப் பகுதியும், மக்கள் தொகையும் இந்திய எல்லையிலிருந்து வெளியேறி, வங்காள தேசம் போன்ற ஒரு புதிய நாடாக உருவாகியுள்ளது.

பிரிவினைக்குப் பிறகும், மேற்கு வங்காளத்தின் மொத்த மக்கள் தொகையில், முஸ் லிம்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் மொத்தமாக ஏறத்தாழ 26 விழுக்காடு உள்ளனர் (முஸ்லிம்கள் – 25.2%, கிறித்துவர்கள் – .6%, பவுத்தர்கள் – .3%). எஞ்சியுள்ள பெரும் எண்ணிக்கையிலான வங்காள தீண்டத்தகாத மற்றும் பழங்குடி மக்கள் இதே வழிமுறையை தொடர்ந்தார்கள் எனில், சாதி என்ற அமைப்பையே அது அடியோடு குலைத்துவிடும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாபில் ஏறத்தாழ 59.9 விழுக்காட்டினர் சீக்கியர்களாக உள்ளனர். அது போக, முஸ்லிம்கள் 1.6%, கிறித்துவர்கள் 1.2% மற்றும் பவுத்தர்கள் 0.2% ஆகவும் உள்ளனர். அதே அறிக்கையில் திரிபுராவில் 31.1 விழுக்காடாக உள்ள பழங்குடியினர் போக, முஸ்லிம்கள் 8%, கிறித்துவர்கள் 3.2% மற்றும் பவுத்தர்கள் 3.1% ஆக உள்ளனர்.

மார்க்சியர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது முதல் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இந்து அல்லாதவர்களின் வளர்ச்சி விகிதம் மிகவும் வேகமாகக் குறைந்து வந்துள்ளது. அவர்கள் அழிந்து போகும் நிலையில் உள்ள இனமாக மாறியுள்ளனர். இந்த அடிப்படையில், பழங்குடியினர், தீண்டத்தகாதவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் அதிகமாக இருக்கக் கூடிய மாநிலங்களிலும், மதமாற்ற நடவடிக்கை இந்து மக்கள் தொகையை மிகவும் அழித்திருக்கும் நிலையில் உள்ள அல்லது இந்து அல்லாதவர்களின் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களிலும், மார்க்சியத்தின் தாக்கமும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் செயல்பாடுகளும், ஒப்பீட்டளவில் மிக அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த கருத்தின் மறுபக்கமும் உண்மையாகவே உள்ளது.

இந்துக்கள் மிக அதிகப் பெரும்பான்மை யினராக இருக்கக் கூடிய, மதமாற்றத்திற்கு குறைவான வீச்சே இருக்கக் கூடிய மாநிலங்களில் மார்க்சியத்தின் தாக்கமும், கம்யூனிஸ்டுக் கட்சிகளின் செயல்பாடுகளும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. ஒரிசாவில் இந்துக்களின் மக்கள் தொகை 94.4 விழுக்காடு ஆகும் (முஸ்லிம்கள் 2.1% மற்றும் கிறித்துவர்கள் 2.4%). இதன் மூலம் கடந்த நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த அல்லது பழங்குடி மக்கள் மத்தியில் மதமாற்றம் ஏறத்தாழ நிகழவே இல்லை என்பது தெரிகிறது. மேற்கு வங்காளத்திற்கு அடுத்து இருக்கும் மாநிலமாக இருந்தபோதும், ஒரே விதமான மொழி, பண்பாடு மற்றும் பொருளாதார அடிப்படைகள் இருந்த போதும் மார்க்சியத்தின் தாக்கம் ஒரிசாவில் ஏறத்தாழ இல்லை என்றே கூறலாம்.

இமாச்சலப் பிரேதசம் மற்றும் குஜராத்தில் இந்துக்களின் மக்கள் தொகை, முறையே 95.4% மற்றும் 89.1 விழுக்காடாக உள்ளது. அரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தர்காண்டில் இந்து மக்கள் தொகை முறையே 88.2%, 88.8% மற்றும் 85 விழுக்காடாக கணக்கிடப்பட்டுள்ளது. தோழர் சுர்ஜித் பஞ்சாபிலிருந்து வந்தவர் என்றபோதும் இந்த மாநிலங்களை தங்கள் பாதிப்பின் கீழ் கொண்டு வர, இந்தியாவின் கம்யூனிஸ்டு தலைவர்கள் முயற்சியே எடுக்கவில்லை. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராட்டிரத்தில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம், பவுத்த கிறித்துவ மற்றும் சீக்கிய மதங்களுக்கு மாறியவர்கள் ஏறத்தாழ 20 விழுக்காடாக உள்ளனர். இதற்கேற்பவே இந்த மாநிலங்களில் மார்க்சிய நடவடிக்கைகள் உள்ளன.

இந்துக்களின் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப மார்க்சியத்தின் வீச்சு குறைவாக இருப்பது வெளிப்பட்டிருக்கும் வேளையில், மார்க்சியம் பிறப்பதற்கும், பரவுவதற்கும் மிகவும் பொருத்தமற்ற சூழலை இந்து மதம் உருவாக்குகிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது. வேறு வகையில் சொல்வதெனில், இந்து அல்லாதவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப மார்க்சியத்தின் பெயராலான இயக்கம் கொழிப்பதும் புலனாகிறது. முஸ்லிம் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களில் மார்க்சியம் கொழிக்கிறது. இந்த உண்மை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் மனங்களிலும் உறைத்திருக்கும் போலும். இந்து மதத்தை விமர்சித்திருக்கும் அவர்கள், அதே நேரத்தில், உலகின் பிற பெரும் மதங்களின் முற்போக்கான பங்கைப் பாராட்டியுள்ளனர்.

இன்று வரை நிலைத்துள்ள மூன்று உலக மதங்கள் – பவுத்தம், கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றங்களுடன் மட்டுமே மிகப் பெரும் வரலாற்றுத் திருப்பங்கள் இணைந்துள்ளன. எம்.என். ராயும், மிக ஆணித்தரமான மொழியில் வலுவான வாதத்துடன் இஸ்லாமின் புரட்சிகர மற்றும் வரலாற்றுப் பங்கினை பாராட்டியுள்ளார். அராபிய தீர்க்கதரிசியை பின்பற்றுபவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு தாய் நிலமாக இந்த நாடு (இந்தியா) இருக்கிறது. ஒரு முழுமையான இஸ்லாம் நாட்டில் இருப்பதைவிட அதிகமான எண்ணிக்கையில் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்பதை ஒருவர் அரிதாகவே உணர்கிறார். அதோடு, பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இந்திய மக்கள் தொகையின் இந்த பெரும் பகுதியினர் பொதுவாக தேவையற்றவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

இந்தியாவின் தேசிய கட்டமைப்பில் உள்ள இந்த நுட்பமான, ஆனால், மிகவும் வருந்தத்தக்க இடைவெளியானது ஒரு வரலாற்றுக் காரணத்தைக் கொண்டுள்ளது. ஆனாலும், ஒரு அக்பரின் அரசாட்சியில் வளமோடு வாழும் பெருமையுடைய அல்லது ஷாஜஹானின் கட்டடக் கலை சாதனைகளை பற்றி பெருமிதப்படக்கூடிய ஓர் இந்து, இந்திய வரலாற்றைப் பெருமைப்படுத்தியதாக நம்பப்படும் அந்த அரசர்கள் போன்றே, அதே இனத்தைச் சேர்ந்த அல்லது அதே நம் பிக்கையை கொண்டுள்ள தனது அண்டை வீட்டுக்காரருடன் இணைய இயலாத பெரும் இடைவெளியினால் பிரிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மக்கள் தொகையில் அதி பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய பழமைவாத இந்துக்களைப் பொருத்தவரையில், முசல்மான்கள், உன்னதமான குடும்பத்தில் பிறந்திருப்பினும், உயர் கல்வியைப் பெற்றிருப்பினும் பாராட்டத்தக்க பண்பாட்டு சாதனைகளைப் புரிந்திருப்பினும் ஒரு மிலேச்சரே; தூய்மையற்ற காட்டுவாசி; இந்துக்களில் இருப்பதிலேயே கீழ் நிலையில் இருப்பவர்களுக்கு மேலான எந்த ஒரு நிலையிலும் நடத்துவதற்கு தகுதியற்றவர்கள். இத்தகைய ஒற்றை மனநிலை சூழல் என்பது, கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இயல்பாக வெளிநாட்டு படையெடுப்பாளர் மீது கொள்ளும் வெறுப்பின் அடிப்படையில் பிறந்த முன் தீர்மானத்திலிருந்து எழுந்திருக்கக்கூடும். அந்த அரசியல் உறவு என்பது கடந்த காலத்தைச் சார்ந்தது. ஆனால் அந்த முன் தீர்மானம், தேசிய ஒருங்கிணைவிற்கு ஒரு மோசமான தடையாக மட்டுமல்லாது. வரலாறு குறித்த சார்பற்ற பார்வைக்கும் தடையாக இன்றளவிலும் இருக்கிறது.

உண்மையில், பல நூற்றாண்டுகளாக ஒரே நாட்டில் ஒன்றாக வாழ்ந்தபோதும், அடுத்தவரின் பண்பாட்டின் மீது மிகக் குறைவான மதிப்பு கொண்ட இரண்டு சமூகங்கள் குறித்து வேறு எந்த சான்றும் இல்லை. இஸ்லாமிய வரலாறு குறித்து அறியாமையுடனும், முகமதிய மதம் குறித்து வெறுப்புடனும் இந்துக்களைப் போல உலகின் வேறு எந்த நாகரிக மக்களும் இல்லை. நமது தேசிய கோட்பாட்டின் தனித்துவமான கூறு என்பது, ஆன்மிக ஏகாதிபத்தியமே ஆகும். முகமதியத்துடனான உறவில் இந்த கேடுகெட்ட ஆன்மிகமே அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. அராபிய தீர்க்கதரிசியின் படிப்பினைகள் குறித்த தற்போதைய பார்வை மிகவும் தவறாகப் புரியப்பட்டதாகவே உள்ளது.

இஸ்லாமின் அதீத புரட்சிகர முக்கியத்துவம் குறித்தோ, அந்த புரட்சியின் விளைவாக எழுந்த மிகப் பெரும் பண்பாட்டு விளைவுகள் குறித்தோ சராசரியான படித்த இந்து குறைவாகவே அறிந்திருப்பதோடு, அது குறித்து எந்த மதிப்பும் அற்றவராகவே உள்ளார். கத்தி முனையில் அமைதிக்கான செய்தியை பரப்பிய தனித்த தீர்க்கதரிசியின் பணியை முகமது ஏற்று அய்ம்பது ஆண்டுகள் கடப்பதற்குள், அவரை பின்பற்றுபவர்கள், ஒரு புறம் இந்தியாவின் எல்லைக்குள்ளும் மறுபுறம் அட்லாண்டிக் பெருங்கடலின் கரையிலும், இஸ்லாமின் பதாகையை வெற்றிகரமாக நட்டனர். ஒட்டகப் பயணத்தில் அய்ந்து மாதங்களுக்குள் கடக்க இயலாத பெரும் பரப்பளவைக் கொண்ட ஒரு நிலப் பகுதியை, டமாஸ்கஸ்சை சேர்ந்த முதல் காலிப்கள் ஆண்டனர். ஹெகிராவின் முதல் நூற்றாண்டின் முடிவில், ‘நம்பிக்கை கொண்டவர்களின் தளபதிகள்''தான் உலகின் மிகுந்த பலமிக்க ஆட்சியாளர்களாக இருந்தனர்.

இஸ்லாமின் எழுச்சி என்பது, எளிமையான சகிப்புத் தன்மையுடைய மக்கள் மீது மதவெறி பெற்ற வெற்றி என்ற கொச்சையான கருத்தை கல்வியறிவு பெற்ற இவ்வுலகம் இன்று நிராகரித்துள்ளது. இஸ்லாமின் அசாதாரணமான வெற்றி என்பது, அதன் புரட்சிகர முக்கியத்துவத்தின் காரணமாகவும், பழமையான மனித நாகரிகங்களான கிரேக்கம் அல்லது ரோமாபுரி மட்டுமல்லாது, பெர்சியா மற்றும் சீனம் மற்றும் இந்தியா ஆகியவை சீரழிந்ததன் காரணமாக எழுந்த நம்பிக்கையற்ற சூழலிலிருந்து வெளியேற, பெரும்பான்மை மக்களை வழிநடத்தும் திறன் காரணமாகவுமே ஏற்பட்டது. இந்த சூழல்களில் இஸ்லாமே இந்து மதம் மற்றும் சாதிகளுக்கு எதிரான சிறந்த மருந்து என்று அறிவித்த பெரியாரின் கருத்துகளை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It