தலித் எழுத்தாளர்களையும், அவர்களின் ஆக்கங்களையும் அறிமுகப்படுத்தி வந்த இப்பகுதியில், தன்னுடைய அயராத கலை ஆர்வத்தால் ஆகச்சிறந்த கலைஞராக உருவாகியிருக்கும் ஒருவரைப் பற்றி இங்கு பேசுகிறோம். மணிமாறன். தலித் அரங்கவியலில் பரவலாக அறியப்பட்ட பெயர். பாடல்களைப் புனைவதும், இசையமைப்பதும், அதை அரங்கேற்றுவதும் மட்டுமல்ல அவருடைய பணி; அதன் மூலம் சமூக விடுதலையைச் சாத்தியப்படுத்துவது; சமத்துவ சமூகத்தைக் கட்டமைப்பது; அதற்கு எளிய மக்களை அணிதிரட்டுவதே அவருடைய குறிக்கோள்.

குழந்தைப் பருவத்தில் அவர் அனுபவித்த சமூகக் கொடுமைகளைப் பற்றி அவர் கூறும் அளவிற்கு, அதை எழுதுவது இயலாத ஒன்று. அவர் பிறந்தது சென்னையில்தான். ஆனால், வளர்ந்தது இந்தியாவின் பல முக்கிய நகரங்களில். ஒரு பறவையைப் போல அவர் திரிந்தார் என்று உவமித்துக் கூறினால், அது பொருந்தாது. ஏனெனில், துன்ப மூட்டையைச் சுமந்து நகரங்களில் திரிந்த ஒரு குழந்தையை – நாம் பறவை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இன்று மிக முக்கிய கலைஞராகப் பரிணமித்திருக்கும் மணிமாறன், சென்னையில் குழந்தைத் தொழிலாளராக இருந்தவர். குழந்தைகளுக்கு கிடைக்கும் அரவணைப்பான பாதுகாப்பு அவருக்கு இருந்ததில்லை. மிகச் சிறந்த பாடல்களை எளிமையாகப் புனையும் ஆற்றல் பெற்ற மணிமாறனால், ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது.

சென்னையில் இருக்கும்போது ‘நேசக்கரம்' என்ற தொண்டு நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டபோது அவர் நண்பர்களோடு சேர்ந்து அன்னக்கூடையை வைத்துக் கொண்டு இசைத்து ‘கானா' பாடல்களைப் பாடவும் இயற்றவும் தொடங்கியிருக்கிறார். பின்னர் அதுவே அவருக்குத் தொழிலாக மாறியிருக்கிறது. அத்தகைய பாடல்களைப் பாடும்போது ‘ரேஷன்' என்று சொல்லப்படும் கலவை உணவையும் கஞ்சாவையும் தருவார்கள். இப்படித்தான் பாடத் தொடங்கியிருக்கிறார் மணிமாறன்.

சென்னையில் தான் நடந்து போகாத தெருக்களே இல்லை என்று கூறும் மணிமாறன், சென்னையில் நடைபெறும் திருவிழாக்களுக்கும் கானா பாடியதாகக் கூறுகிறார். சிறுவயதில் திருவல்லிக்கேணியில் இருக்கும் போது, அங்கிருக்கும் ஒரு கோயிலிலிருந்து 63 நாயன்மார்களை இரவில் தூக்கிக்கொண்டு நடந்தே சென்று, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் கொண்டுபோய் வைப்பதற்கு பத்து ரூபாய் தருவார்களாம். அங்கு கொடுக்கப்படும் பிரசாதம் எனப்படும் சாப்பாட்டிற்காகவும் கோயில்களிலே தங்கிவிடுவது அவருடைய வழக்கம். இந்த நேரத்தில் கோயிலில் இருக்கும் குருக்கள் செய்யும் பாலியல் குற்றங்கள், அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.

ஒரு கலைஞன் தன் வாழ்வின் துயரங்களை ஆக்கங்களாக்கும்போது, அவை உன்னதமானதாக மாறுகின்றன. பிறரை ஈர்க்கும் தன்மையுடையதாக மாறி, அவை அழியாச்சுவடுகளை நம் உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றன. அப்படித்தான் மணிமாறனின் பாடல்களும்! அவர் தயாரித்த முதல் ஒலிநாடாவாகிய ‘சாலையோரப் பூக்களில்' அவர் துன்பங்களை அனுபவித்த காலங்களில் எழுதிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சாலையோரப் பூக்கள் என்பது, குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கும் வீதிசிறுவர்களைக் குறிக்கும்.

தலித் கருத்தியலுக்குள் எப்படி வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘வீதியோரத்தில் இருந்த காலங்களில் எனக்கு சாதி குறித்த கருத்து எதுவும் இல்லாமல் இருந்தது. ஒரு நிறுவனத்தில் பயிற்சிக்காகப் போயிருந்தேன். அதற்குப் பிறகு தான் நான் என் வாழ்க்கையில் சாதியின் தாக்குதல்களைப் புரிந்து கொண்டேன். அப்போது கானாவும் டோலக்கும் தான் என் தொழிற்கருவிகளாய் இருந்தன. கானா மட்டுமே பாடிக் கொண்டிருந்த நாங்கள், பிறகு கருத்தியல் சார்ந்து கலைக் குழுக்களை அமைத்தோம். ‘கழனி கலைக்குழு', ‘மறுபக்கம் கலைக்குழு' எனப் பெயர் வைத்து நிகழ்ச்சிகளை நடத்தினோம்'' என்றார்.

பொதுவாக, கலை என்று தொடங்கி, பிறகு அது தொழிலாக மாறும். ஆனால், மணிமாறனோ தொழிலாகத் தொடங்கியதை, பிற்காலத்தில் கலையாக ஆக்கிக் கொண்டார். இதற்குப் பிறகு நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள், தயாரிக்கப்பட்ட ஒலிப் பேழைகள், குறுந்தகடுகள் எல்லாமே – சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, கல்வி விழிப்புணர்வு எனக் கருத்தியல் சார்ந்து வெளிவந்தன.

‘ஆட்டோ ஓட்டி, கானா பாடிக் கொண்டிருந்த என் வாழ்வில் இத்தகைய கருத்தியல் ரீதியான வெளிப்பாடுகள் அமைந்த பிறகு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அவரை ஒருவேளை நான் சந்திக்காமல் போயிருந்தால், என் வாழ்க்கை வெறும் கனவாகவே போயிருக்கும். அவருடன் இணைந்த பிறகு தான் சமூகம், அம்பேத்கரியல், பெரியாரியல் ஆகியவற்றின் மீது எனக்கு வெளிச்சம் வீசப்பட்டது. எனது கலைப் பொறுப்பு எனக்கு விளங்கியது.''

‘கலக்கல் கானா' என்ற தலைப்பில் ஒரு குறுந்தகட்டை நான் உருவாக்கினேன். அதிலுள்ள பாடல்களில் பெரும்பான்மையானவற்றில் தற்போது எனக்கு எதிர்நிலை உண்டு. அதில் கானா பாட்டுக்காக முதன்முதலில் நான் தான் வீணையைப் பயன்படுத்தினேன். பெரியார் யார் என்னும் கருதுகோளை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு முன்பே கானாவில் ‘பெரியார் என்னும் பெருந்தலைவர் கதையை தெரியுமா?' என்ற பாடலை வைத்தேன்'' என்கிறார் மணிமாறன்.

அவருடைய வெளியீடுகள் அதற்குப் பிறகு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கின எனலாம். விடுதலைச் சிறுத்தைகளின் வெளியீடாக என்னுடைய தயாரிப்பில் ‘சேரிக்குரல்' வந்தது. அதற்குப் பிறகு ‘விடுதலைக்களம்', ‘வீரத்தழும்பில்' அவருடைய பாடல்கள் இடம் பெற்றன. அதேபோல் அம்பேத் கரின் போராட்டங்கள் என்னும் குறுந்தகட்டிலும் அவருடைய பாடல் ஒன்று வெளிவந்தது. ‘டிசம்பர் 26' என்னும் சுனாமியைப் பற்றிய ஒரு பாடல் பேழையும் உருவானது.

இதற்கிடையில் அவர் உருவாக்கிய புத்தர் கலைக்குழுவினர் தலித் மேடைகளிலும், பிற கலை இலக்கிய மேடைகளிலும் பறையாட்டம், நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகளை நடத்தத் தொடங்க, மணிமாறன் தலித் கலைஞர்களிடையே முதன்மை இடத்தைப் பெறுகிறார்.

பறையடிக்கக்கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்ற சூழலில், மீண்டும் நாம் பறையை எடுக்கலாமா என்ற கேள்விக்கு, ‘நானும் அந்தப் போராட்டங்களை ஆதரிக்கிறேன்'' என்கிறார். சாவுக்கு பறையடிப்பது தவறு. அது சமூக இழிவு. நான் அதை எதிர்க்கிறேன். ஆனால், அதை ஒரு கலையாகப் பார்க்கும்போது, மற்ற கலைஞர்களைப் போல பறையிசைக் கலைஞர்கள் மதிக்கப்படும்போது நாம் ஏன் அதைத் தடுக்க வேண்டும்? அது மட்டுமல்ல, இன்று பார்த்தால் தமுஎச, மக்கள் கலையிலக்கியப் பெருமன்றம், மகஇக போன்ற பொதுவுடைமை இயக்க மேடைகளில் இது நிகழ்த்தப்படுகிறது. அப்போது அதற்கு ஒரு கலைத்தன்மை கிடைக்கிறது.

இதே பறையை வேற்று சாதி சமூகத்தினர் தோளில் மாட்டி அடிக்க வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். தலித் ஆதார மய்யம் போன்ற அமைப்புகள் பறையை விடுதலைக்கான கருவியாக கட்டமைத்திருக்கிறது. பறையிசைக் கலைஞர்கள் இப்போது கூட சில ஒதுக்கல்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிய விழாக்கள் கொண்டாடப்படும்போது, அதில் அனைத்து இசைக்கலைஞர்களையும் அழைக்கின்றனர். அவர்களைக் குழுவாக அனுப்பும்போது பறையிசைக் கலைஞர்களை மட்டும் நான்கைந்து பேர்களாக அனுப்புவார்கள். இதனால் அக்கலையின் முழுமை கெட்டுவிடுகிறது.

‘இப்போது பறையாட்டம் நிகழ்த்துக் கலையாக கொஞ்சமாக கொஞ்சமாக அரங்கங்களில் நிகழ்த்தப்படும்போது, இசைவழி சாதிய ஒடுக்குதல் நிகழத் தொடங்கியிருக்கிறது. பறை இசைக்கு பதிலாக ‘செண்டை மேளம்' என்னும் வகையை இப்போது நிகழ்த்துகின்றனர். இது வேகமாக பரவி வருகிறது. செண்டை மேளம் என்பது, சாதி இந்துக்களின் இசை. இவர்கள் யாராவது போராட்டங்களுக்கோ, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவோ தங்கள் இசை ஆயுதத்தை எடுத்திருக்கிறார்களா என்றால் இல்லை. ஆனால், முற்போக்கு மேடைகளில்கூட இன்று செண்டை மேளம் அடிப்பதைக் காணலாம். இது, பறை இசைக் கலைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்கிறார்.

அவருடைய லட்சியம் இப்போது இரண்டுதான் : ஒன்று சாதி ஒழிப்பிற்கான பிரச்சாரம். இன்னொன்று சாதி மறுப்புத் திருமணங்களை உருவாக்குவது. ஓர் எழுத்தாளன் பக்கம் பக்கமாய் எழுதுவது, படித்தவர்களை மட்டும் தான் விழிப்படையச் செய்கிறது. படித்தவர்கள் எத்தகையவர்களாய் இருக்கின்றனர் என்பது நாம் அறிந்ததுதான். ஆகவே, கலை வடிவத்தில் பாமரர்களை சாதி ஒழிப்புப் போரில் இணைக்க முடியும் என்னும் நம்பிக்கை தனக்கிருப்பதாகவும், சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு ஊக்கத்தையும், சமூக வாழ்வியலையும் தரவேண்டும் என்பதற்காகவும் – புத்தர் கலைக் குழுவை நடத்துவது தன்னுடைய லட்சியம் என்கிறார்.

மணிமாறனின் வாழ்க்கைத் துணைவர் மகிழினி, ஒரு குரலிசைக் கலைஞர். இருவரும் சமூகத்திற்காக வாழும் கலைப் போராளிகள்!

– யாழன் ஆதி

Pin It