2011 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட336 வன்கொடுமைகளில் படுகொலைகள் மட்டும் 44 கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 50 சதவிகிதம் அதிகம்  கொலை வழக்கில் 3.9 சதவிகிதம் மட்டுமே தண்டனை!

தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டில் 204 நேரடி கள ஆய்வு உட்பட, 336 வன்கொடுமை நிகழ்வுகளில் மதுரையில் உள்ள "எவிடன்ஸ்' அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. இவ்வாய்வில், 2011 ஆம் ஆண்டில்  மட்டும் 44 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது; இதில் 18 பேர் பெண்கள் (ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படாத பல வன்கொடுமை நிகழ்வுகளில் மேலும் சில படுகொலைகள் நிகழ்ந்திருக்கலாம்). அதுமட்டுமின்றி, துப்பாக்கிச் சூடு மற்றும் காவல் நிலையங்களில் 10 த­லித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். கொலையா? தற்கொலையா? விபத்தா? என்று கண்டறிய முடியாமல் 24 த­லித்துகளின் மரணம் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளன.

சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்ட 44 தலித்துகளில்  மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி (4), சிவகங்கையைச் சேர்ந்த செல்வப்பிரியா (11), தூத்துக்குடியைச் சேர்ந்த அற்புதா (16), திண்டுக்கல்லைச் சேர்ந்த காளிஸ்வரி (6) உள்ளிட்ட 18 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 19 வயதி­லிருந்து 30 வயதிற்குள் கொல்லப்பட்ட த­லித்துகளின் எண்ணிக்கை 11. கடந்த 10 ஆண்டுகளில் 2011 இல் அதிகமான தலித் படுகொலைகள் நடந்திருப்பது இவ்வாய்வின் மூலம் தெரிய வருகிறது.

cov_370இதனை கடந்த ஆண்டுகளில் நடந்த படுகொலைகளின் அடிப்படையில் ஒப்பீடு செய்யலாம். கடந்த 2010 ஆம் ஆண்டு 1633 த­லித்துகள் மீதான வன்கொடுமைகளில் 22 (சனவரி – செப்டம்பர் 2010 வரை) படுகொலைகளும், 2009 ஆம் ஆண்டு 1264 தலி­த்துகள் மீதான வன்கொடுமைகளில் 27 படுகொலைகளும், 2008 ஆம் ஆண்டு 1545 வன்கொடுமைகளில் 34 படுகொலைகளும் நடந்துள்ளன.

இதுமட்டுமின்றி, கடந்த சனவரி 1 முதல் 25 சனவரி 2012 வரை, திண்டுக்கல் பசுபதி பாண்டியன், திருச்சி குமரேசன், உசிலம்பட்டி ராஜகோபால், கும்பகோணம் இம்மானுவேல், திண்டுக்கல் முருகன், நாகப்பட்டிணம் ரெங்கையன், திருநெல்வே­லி மூக்கம்மாள், சென்னை அம்பிகா ஆகிய 8 தலி­த்துகள் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தீண்டாமைப் பாகுபாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான த­லித்துகள் படுகொலைகள் செய்யப்பட்டாலும், அப்படுகொலைகளின் பின்னணியில் "குற்றச் சாயங்கள்' பூசப்பட்டு, இவை தனிப்பட்ட ரீதியான படுகொலைகளாகவே சித்தரிக்கப்படுகின்றன. இதனால் இப்படுகொலைகளுக்கு எதிரான கண்டனங்கள் பெரிய அளவில் எழவில்லை. இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட படுகொலைகள், சாதிய வன்கொடுமைகள் அப்பட்டமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய தருவாயில் நடைபெற்ற படுகொலைகள், போலிசார் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் பெரிய அளவில் ஏற்பட்ட படுகொலைகள் போன்றவற்றிற்கு எதிராகத்தான் அதிகளவு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தலி­த் அரசியல் கட்சிகள் இயக்கங்களாக இருக்கின்றபோது இத்தகைய படுகொலைக்கு எதிராக வீறுகொண்டு ஜனநாயகப் போராட்டங்களை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தி வந்தனர். ஆனால், தற்போது இதுபோன்ற எதிர்ப்பு போராட்டங்களோ குறைந்தபட்சம் இப்படுகொலைகளைக் கண்டித்து அரசுக்கு கொடுக்கக்கூடிய அழுத்தங்களோ முற்றிலும் இல்லாமல் போனது கெடுவாய்ப்பானது. த­லித் படுகொலைகளை த­லித் அல்லாத அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்கிற ஜனநாயகப் பண்பு இருந்தாலும் த­லித் தலைமையிலான அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் கடமையும் பொறுப்பும் உள்ளது. ஆனால், இன்று அரசு நிறுவனங்களோடு சமரசம் செய்து கொண்டு, விலை போய்க் கொண்டு அல்லது இத்தகைய படுகொலைகளைக் கண்டிக்கிற செயல்பாட்டில் ஒருவிதமான சலி­ப்போடு த­லித் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்நிலையில் இதுபோன்ற படுகொலைகளைக் கண்டித்து ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்களும் மக்கள் இயக்கங்களும் வ­லிமையான அளவில் குரல் கொடுத்தாலும் அத்தகைய போராட்டங்கள் வெளியே தெரியாமல் போய்விடுகின்றன.

கடந்த 1995 – 1997 ஆண்டுகளில் நடந்த தென்மாவட்ட சாதியக் கலவரங்களில் தலி­த் படுகொலைகளைக் கண்டித்து மிகப்பெரிய மக்கள் எழுச்சியும் த­லித் இயக்கங்களின் பங்களிப்பும் வெகுவாக இருந்தன. ஆனால் இன்றோ, அதுபோன்ற போராட்டங்களுக்காக பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது ஒன்றுமறியாத தலி­த்துகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தலி­த் படுகொலைகளில் 3.9 சதவிகிதம் மட்டுமே தண்டனை கிடைக்கிறது. இத்தகைய துயரமான போக்கிற்கு காவல் துறையும், நீதித்துறையும் முக்கியப் பொறுப்பு என்றாலும் அத்துறைகளை சரியாக இயக்க வைப்பதற்கான அரசியல் அழுத்தம் அண்மைக் காலங்களில் பெரிய அளவில் இல்லை. இதுபோன்ற படுகொலை சம்பவங்களில் சட்ட ரீதியான தலையீடுகள் மட்டும் ஆங்காங்கே சிறிய அளவில் பல்வேறு த­லித் இயக்கங்களாலும், தனிப்பட்ட த­லித் ஆர்வலர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது சற்றே ஆறுதலானது. எத்தகைய வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் : 

தலி­த் மூதாட்டி மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை

தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் அருகில் உள்ள கிராமம் கூழையனூர். அக்கிராமத்தில் வசித்து வந்த த­லித் சமூகத்தைச் சேர்ந்த ராஜû என்கிற முதியவர் 02.01.2011 அன்று இறந்து  போனார். இவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக 3.1.2011 அன்று மயானத்திற்கு சென்றிருந்தபோது, அப்பகுதி சாதி இந்துக்கள் ராஜûவின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் த­லித்துகளுக்கும் சாதி இந்துக்களும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 27.01.2011 அன்று இரவு 10.30 மணியளவில் சுமார் 12 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் சின்னாயி என்கிற த­லித் மூதாட்டியின் வீட்டில் பெட்ரோல் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். இக்கொடிய தாக்குதலால் பலத்த காயமடைந்த சின்னாயி இறந்து போனார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் குற்ற எண்.35/2011 பிரிவுகள் 147, 148, 436, 307, 302 இந்திய தண்டனைச் சட்டம் (இ.த.ச.) மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10), 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாமோதரன், மார்க்கண்டன். சிங்கம், முருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலி­த் முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

நாமக்கல், பெரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லயன். த­லித் சமூகத்தைச் சேர்ந்த நல்லயன் மகன் சேகர் என்பவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகள் குல்சார் என்பவரும் காதலி­த்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குல்சாரின் தந்தை ஷாஜகான் 21.02.2011 அன்று மாலை சுமார் 3 மணியளவில் நல்லயன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த நல்லயன்  இறந்துபோனார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் குற்ற எண்.311/2011 பிரிவு 302 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

வீட்டு வேலைக்காக கேரளாவிற்கு கடத்தப்பட்ட தமிழக சிறுமி படுகொலை

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகில் உள்ள கிராமம் கருவேப்பிலங்குறிச்சி. இக்கிராமத்தில் வசித்து வருகிற இருளர் சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் 11 வயது மகள் தனலட்சுமி என்பவர் வீட்டு வேலைக்காக கேரளா – எர்ணாகுளம் அருகில் உள்ள ஆலுவா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வீட்டின் உரிமையாளர்களான ஜோஸ்குரியன் – சிந்து தம்பதியினர் தனலட்சுமிக்கு உணவு கொடுக்காமல் நாய் கூண்டில் அடைத்து வைத்து உடம்பில் சிகரெட்டால் சுட்டு துன்புறுத்தியுள்ளனர். கத்தியாலும் உடம்பில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் ஆலுவா, கோலன்சேரி எம்.ஓ.எஸ்.சி. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த தனலட்சுமி 24.01.2011 அன்று இறந்து போனார். இச்சம்பவம் ஆலுவா காவல் நிலையத்தில் குற்ற எண்.522/2011 பிரிவுகள் 302 இ.த.ச., இளம்சிறார் நீதிச்சட்டம் பிரிவு 26 மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் பங்கில் வழிவிடவில்லை என்பதால் ஆத்திரம் – சாதி இந்துவின் கொடூரத் தாக்குதலால் த­லித் படுகொலை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள கிராமம் கீழநாலுமூலைகிணறு. இக்கிராமத்தில் வசித்து வந்த த­லித் சமூகத்தைச் சேர்ந்த பச்சிராஜன் என்பவர் 14.06.2011 அன்று மதியம் 3 மணியளவில் திருச்செந்தூர் – திருநெல்வே­ சாலையில் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த முத்து என்கிற சாதி இந்து, பச்சிராஜனைப் பார்த்து, நீ கீழநாலுமூலைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவன் தானே, வழியை விடு; நான் முதலி­ல் என் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொள்கிறேன் என்று கூற, அதற்கு பச்சிராஜன், உங்கள் வயது என்ன? என் வயது என்ன? இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்டதற்கு, ஆத்திரமடைந்த முத்து சாதி ரீதியாக இழிவாகப்பேசிக் கொண்டே தம்முடைய வேனை இயக்கி பச்சிராஜன் மீது மோதி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல்நிலைய குற்ற எண்.273/2011 பிரிவு 302 இ.த.ச. மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

தலி­த் பெண்கள் மீதான வன்கொடுமைகள்

கடந்த 2010 ஆம் ஆண்டு 24 த­லித் பெண்களும், 2009 ஆம் ஆண்டு 30 தலி­த் பெண்களும், 2008 ஆம் ஆண்டு 30 த­லித் பெண்களும் பா­லியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், "எவிடன்ஸ்' அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 2011 ஆம்  ஆண்டில் 336 வன்கொடுமைகளில் 20 பா­லியல் வல்லுறவும், 12 பாலி­யல் வல்லுறவுக்கு முயன்ற கொடுமையும் நடந்துள்ளது. பா­லியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 20 பெண்களில் 19 (95 சதவிகிதம்) பெண்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்.

சாதிய மோதல்

இதுமட்டுமின்றி, 336 வழக்குகளில் 19 (6 சதவிகிதம்) சாதிய மோதல்களும், 25 பெண்கள் உட்பட 62 (18 சதவிகிதம்) தலி­த்துகள் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடந்துள்ளன. த­லித்துகள் மீதான கொலை முயற்சி நிகழ்வுகள் 42 (12.5 சதவிகிதம்) நடந்துள்ளன. 19 சாதிய மோதல்களில் 4 நிகழ்வுகள் திண்டுக்கல் மாவட்டத்திலும், 3 நிகழ்வுகள் நாமக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் நடந்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

"எவிடன்ஸ்' அமைப்பு களஆய்வு மேற்கொண்ட 336 வன்கொடுமை நிகழ்வுகளில் 22 பெண்கள் உட்பட 39 (12 சதவிகிதம்) நிகழ்வுகளில் நிலத்தின் அடிப்படையில் வன்கொடுமைகள் நடந்துள்ளன.

தலி­த்துகள் மீதான வன்கொடுமைகளில் முத­லிடம் விழுப்புரம் மாவட்டம். தலி­த் மக்கள் தொகையில் 28ஆவதாகஉள்ள மதுரை, வன்கொடுமைகளில் மூன்றாவது இடம். நீதிமன்ற விசாரணை நிலுவையில் முத­லிடம் சிவகங்கை. காவல் விசாரணை நிலுவையில் முதலி­டம் விருதுநகர். பாலி­யல் வன்கொடுமையில்  5.8 சதவிகிதம் மட்டுமே தண்டனை.

children_370தமிழகத்தில் 2010 ஆம் ஆண்டு தலி­த்துகள் மீது 1631 வன்கொடுமைகள்  நடந்துள்ளன. பழங்குடியினர் மீது 33 வன்கொடுமைகள் நடந்துள்ளன. தலி­த்துகள் மீது நடந்த வன்கொடுமைகளில் 103 சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளன. இரண்டாவதாக விருதுநகர் மாவட்டத்தில் 99, மூன்றாவதாக மதுரை மாவட்டத்தில் 93, நான்காவதாக கடலூர் மாவட்டத்தில் 92, அய்ந்தாவதாக சிவகங்கை மாவட்டத்தில் 88, ஆறாவதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 87 சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் அதிகமான தலி­த் மக்கள் தொகையைக் கொண்டது விழுப்புரம் மாவட்டம். இது, வன்கொடுமை அதிகளவு நடக்கக்கூடிய முதல் மாவட்டமாகவும்  உள்ளது. ஆனால், வன்கொடுமை சம்பவங்கள் இரண்டாவதாக உள்ள விருதுநகர் மாவட்டம் தலி­த் மக்கள் தொகையில் 14 ஆவது இடத்தில் உள்ளது. வன்கொடுமை நடக்கக்கூடிய மூன்றாவதாக உள்ள மதுரை மாவட்டம் த­லித் மக்கள் தொகையில் 28ஆவது இடத்தில் (மதுரை மாநகரத்தின் மக்கள் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை) உள்ளது. தலி­த் மக்கள் தொகையில் இரண்டாவதாக உள்ள வேலூர் மாவட்டத்தில் 27 வன்கொடுமை நிகழ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

தலி­த் மக்கள் குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளில் அதிகளவு வன்கொடுமை நடந்து வருவதைக் கண்டறிய முடிகிறது. தலி­த் மக்கள் தொகையில் 19 ஆவது இடத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஒரே ஒரு வன்கொடுமை சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2010 வரை தமிழகத்தில் தலி­த் படுகொலைகள் 22; 24 வன்கொடுமைகள் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் முத­லிடம் சிவகங்கை மாவட்டம். இம்மாவட்டத்தில் 395 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டாவதாக மதுரை மாவட்டத்தில் 358, மூன்றாவதாக விழுப்புரம் மாவட்டத்தில் 343, நான்காவதாக திருநெல்வேலி­ மாவட்டத்தில் 277, அய்ந்தாவதாக விருதுநகர் மாவட்டத்தில் 205 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தமிழகத்தில் 3,568 வன்கொடுமை வழக்குகள் நீதிமன்ற நிலுவையில் உள்ளன. அவற்றில் 187 வழக்குகளுக்கு (5.2 சதவிகிதம்) மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 577 வழக்குகள் (16 சதவிகிதம்) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. த­லித் கொலை வழக்குகளில் 3.9 சதவிகிதம் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 22.5 சதவிகிதம் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. த­லித் பாலி­யல் வன்கொடுமைகளில் 5.8 சதவிகித வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. 11.6 சதவிகித வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சாதிய ரீதியாக இழிவாகப்பேசுகிற வன்கொடுமைகளில் 4.7 சதவிகிதம் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.

தமிழகத்தில் தற்போது காவல் விசாரணையில் நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 2,092. இவற்றில் முதலி­டம் விருதுநகர் மாவட்டத்தில் 160 வழக்குகளும், இரண்டாவதாக மதுரை மாவட்டத்தில் 142 வழக்குகளும், மூன்றாவதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 130 வழக்குகளும், நான்காவதாக விழுப்புரம் மாவட்டத்தில் 111 வழக்குகளும், அய்ந்தாவதாக திருநெல்வேலி­ மாவட்டத்தில் 101 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 2092 வழக்குகளில் 1020 வழக்குகளுக்கு மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய ரீதியான வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டாலும் தண்டனை வெறும் 5 சதவிகிதமே உள்ளன. குறிப்பாக, கொலை (3.9 %), பா­லியல் வன்கொடுமை (5.8 %) உள்ளிட்ட கொடும் குற்றங்களில் ஈடுபடுகிற குற்றவாளிகளில் 95 சதவிகிதத்தினர் தப்பித்துக் கொள்கின்றனர்.

1989 ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (11.11.1989) கொண்டு வரப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பின்னரும் இச்சட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ வன்கொடுமைகளை ஒழிப்பதில் குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உரிய அக்கறை காட்டவில்லை என்பது தெரிய வருகிறது.
தலி­த் மக்கள் காவல்நிலையம் சென்று புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணையில் ஈடுபடுவது, அரசு குற்ற வழக்கறிஞர் வழக்கை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் அரசு தரப்பினர் பாதிக்கப்பட்ட தலி­த்துகளுக்கு எதிராகவே உள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மாநில அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின் முதல் கூட்டமே கடந்த தி.மு.க. ஆட்சியில் 03.11.2010 அன்றுதான் நடத்தப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சரியாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்குதான் மாநில அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவின் தலைவர் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. புதிதாக வந்துள்ள அ.தி.மு.க. அரசு உடனடியாக மாநில அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவினை ஏற்படுத்தி, இக்குழு திறம்பட பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிற சாதித் தலைவர்கள், சில ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பகுப்பாய்வு செய்கிற திறன் இருக்குமானால், மேற்கண்ட புள்ளி விவரங்களின் அடிப்படையிலாவது இச்சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதை உணர்வார்கள்.

கடந்த 2009 – 2010 ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிதி ரூ.49.80 லட்சமாகும். இன்றைய காலகட்டத்தில் அந்நிதியில் 5 வீடுகள் கட்டலாம். இதைக் கொண்டு எப்படி தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு வர முடியும்? இத்திட்டங்களும் பெயரளவிலான திட்டங்களாகவே உள்ளன. தமிழக சட்டமன்றத்தில் 44 தலி­த் மற்றும் பழங்குடியின சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 20 விழுக்காடு சட்டமன்ற உறுப்பினராக த­லித்துகள் இருந்தாலும் அமைச்சர்களாக இருப்பது 2 பேர்தான். ஆனால், கவுண்டர் சமூகத்தில் 8 அமைச்சர்கள் உள்ளனர். இதை பாகுபாடு என்பதா? ஆளுகின்ற கட்சியின் நிலைப்பாடு என்பதா? தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் தீண்டாமை ஒழிப்பு குறித்தோ, த­லித் மக்களின் மேம்பாடு குறித்தோ ஆக்கப்பூர்வமான விவாதங்களையோ, செயல்திட்டங்களையோ எடுத்து வைத்ததாகத் தெரியவில்லை.  சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய தலி­த் உறுப்பினர்கள் கட்சிக்கு அடிபணியக்கூடிய பரிதாபத்திற்குரியவர்களாக உள்ளனர். த­லித் அரசியல் கட்சிகள் சட்டமன்றத்திற்கு போக முடியாமல், த­லித் மக்களின் முக்கியப் பிரச்சனைகளையும் அரசியல் தளங்களில் எடுத்துச் செல்லாமல் ஒருவிதமான மய்ய நீரோட்ட அரசியலி­ன் ஏகபோக கனவு மன்னர்களாகவே இருந்து வருகின்றனர்.

பரமக்குடியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டால் 6 தலித்துகள் கொல்லப்பட்டபோது, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்கங்கள் எந்த கண்டனத்தையும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.  இதனிடையே மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது, த­லித் இளைஞர்களும், ஆர்வலர்களும், தலி­த் இயக்கங்களும்தான். இவர்களைக் கொண்டுதான் வன்கொடுமை ஒழிப்பில் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழுக்களுக்கு இடைஞ்சல் செய்யாமல், அதிகாரிகளிடம் விலை போகாமல், இயக்கங்களை மிரட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களிடம் இருக்கிறது.

சமத்துவப் பாடத்திட்டத்தை கட்டாயமாக்குக!

Dalit_620

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மறுக்கிற காவல் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 4 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு சிறப்பு சுற்றறிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

வன்கொடுமையை தடுக்கத் தவறுகிற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த ஏப்ரல் 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணை வெளியிட்டுள்ளது. அவ்வாணை நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பதிவு செய்ய குறுக்கீடு செய்யக்கூடிய ஆதிக்க சாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தலித் படுகொலை மற்றும் பா­லியல் வல்லுறவு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க துரிதமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

வன்கொடுமையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமின் கொடுக்கக்கூடாது என்கிற விதி இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் சரண்டர் மனு போட்டு அதன் மூலம் முன்ஜாமின் பெறுகிற தந்திரத்தை அரசு அனுமதிக்கக்கூடாது.

பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுக்களை மாவட்டந் தோறும் அமைத்து அனைத்து கிராமங்களிலும் தீண்டாமை குறித்த விரிவான ஆய்வினை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அவ்வாய்வு சடங்குத்தனமான ஆய்வாக இல்லாமல் தர நிர்ணயத்துடன் சமூக நீதி அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றின் முடிவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

தீண்டாமை நடைபெறக்கூடிய கிராமங்களை கண்டுணர்ந்து அப்பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். அக்கிராமங்களில் அனைத்து தரப்பு மக்களிடம் சமூகக் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும். அதற்கென்று தனித்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

தீண்டாமைக் கொடுமைகளுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு எச்சரிக்கை அடிப்படையிலான விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். கிராமம் தோறும் சுவரொட்டிகள் மூலம் அவை ஒட்டப்பட வேண்டும்.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாக செயல் படுத்தாத காவல் துறையினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தனியாக ஒவ்வொரு வட்டத்திலும் டி.எஸ்.பி. தகுதியில் உள்ள அதிகாரியின் கீழ் சிறப்பு காவல்நிலையம் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய காவல் அதிகாரிகளுக்கு சர்வதேசிய மனித உரிமை தர நிர்ணயம் மற்றும் அறிவியல் பூர்வமான விசாரணை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

வன்கொடுமை ஒழிப்பு குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடக்கப் பள்ளியில் இருந்து கல்லூரி வரை உள்ள அனைத்து படிப்புகளிலும் ஒரு பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

வன்கொடுமையால் கொலை செய்யப்படுகிற த­லித்துகளுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக ரூ.10 லட்சம் மற்றும் பாலி­யல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்படுகிற தலி­த் பெண்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் ரூ.10 லட்சம்; மற்ற வன்கொடுமைகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் ரூ.2 லட்சம் என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 இல் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கக்கூடிய நிதி போதுமானதாக இல்லை. எனவே, தற்போது ஒதுக்கக்கூடிய நிதியைவிட மூன்று மடங்கு உயர்த்தி அம்மக்களுக்கான உரிமைகளைப் பரந்துபட்ட அளவில் எடுத்துச்செல்ல அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தீண்டாமைக் கண்காணிப்பு குழு என்கிற சமூக ஆர்வலர்கள் குழுவினை ஒவ்வொரு வட்டத்திலும் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இக்கட்டுரையாளர் "எவிடன்ஸ்' அமைப்பின் செயல் இயக்குநர்)

Pin It