நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்து, தங்களது வாக்குகளை பெருவாரியாக அளித்து, அ.தி.மு.க. அரசை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்துள்ளனர். முந்தைய தி.மு.க. அரசு மீது இருந்த வெறுப்புதான் வாக்குகளாக மாறின என்று சொல்லப்பட்டாலும், மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நினைத்தது என்னவோ உண்மை. மக்கள் விரும்பிய அந்த ஆட்சி மாற்றம், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்திருப்பதைப் பார்த்தால் ஏமாற்றமாகப் போய்விட்டதோ எனத் தோன்றுகிறது.

சமச்சீர் கல்வி வருவதற்கு முன் இங்கே நான்கு வகையான கல்வித் திட்டங்கள் நடைமுறையில் இருந்தன : மெட்ரிகுலேசன், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன், "ஸ்டேட் போர்டு' எனப்படும் இவ்வகைக் கல்வி முறைகளில் – ஏழை எளிய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே படிக்கும் நிலை இருந்தது. அரசுப் பள்ளியில் ஒரு பாடத் திட்டம், ஒரு பாட நூல்; மற்ற கல்வி முறை பள்ளிகளில் வேறு பாடத் திட்டங்கள், வேறு பாட நூல்கள். இதனால் தலித் மாணவர்கள் மற்ற (சாதி, பணக்கார) மாணவர்களோடு போட்டிப் போட முடியாத நிலை நீடித்தது. மேலும், இக்கல்வி முறை, பாடத்திட்டத்தின் வாயிலாக சாதியத்தை ஊட்டி, ஏற்றத்தாழ்வுகளை வளர்த்தது. இந்நிலையை தகர்த்து மாற்றியதுதான் சமச்சீர் கல்வி.

ஒரு ஜனநாயக அரசின் கடமை என்பது, வெகு மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுதான். ஆனால் இந்த அரசு பணக்காரர்களின், சாதி ஆதிக்கவாதிகளின் விருப்பங்களுக்கு துணை போயிருக்கிறது.

நமது நாட்டில் இன்னும்கூட கல்வி, மத்திய அரசின் அடிப்படைப் பட்டியலில் இணைக்கப்படவில்லை. கல்விக்காக வெறும் மூன்று சதவிகிதம் செலவழிக்கும் அரசாகவே நம் அரசுகள் இருக்கின்றன. இந்நிலையில் சமச்சீர் கல்வியை இந்த அரசு நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் – தமக்கு வாக்களித்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது. இத்திட்டத்தை ரத்து செய்து பழைய கல்வி முறையையே நீடித்திருக்கச் செய்வதன் மூலம் – இன்னொரு நவீன குலக்கல்வித் திட்டத்திற்கு இந்த அரசு மறைமுகமாக வழிகோலுகிறது. தமக்கு வாக்களித்து, வெற்றி பெற்று அரியணையில் அமரக் காரணமாக இருந்த தலித் மக்களுக்கு, இந்த அரசு துரோகம் இழைத்திருக்கிறது. இது, ஒரு மோசமான தொடக்கத்தின் அறிகுறி.

இந்தியாவில் பல காலமாக தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி பெற வழியே இல்லாமல் இருந்தது. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் நிலைமை சற்று மாறியது. புலே, எம்.சி. ராஜா, ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் அயராத போராட்டங்கள் மற்றும் முயற்சிகளின் விளைவாகவே, இன்று ஓரளவு கல்வியை இம்மக்கள் பெற்று வருகின்றனர். அந்த இணையில்லாத தலைவர்களின் கனவுகளும் போராட்டங்களும் அளப்பரிய தியாகங்களும் இந்த அரசால் துச்சமாக மதிக்கப்பட்டிருக்கிறது.

பணம் பிடுங்கும் வல்லூறுகளாக மாறியுள்ள "கல்விக் களவு வள்ளல்கள்' சமத்துவ சிந்தனைக்கு எதிராகவே எப்போதும் நடந்து வந்துள்ளனர். "அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவனும் எங்கள் பள்ளிகளில் படிக்கிற மாணவனும் ஒன்றா?' என வினா எழுப்பியவர்கள் இவர்கள்தான். இவர்களே இக்கல்வி முறைக்கு எதிராக வழக்கு மன்றம் போனவர்கள்; அவர்கள்தான் இப்போது இந்த நிறுத்திவைப்பை வரவேற்றிருக்கிறார்கள். அவர்களோடு அரசும் சேர்ந்து கொண்டுள்ளது வெட்கக்கேடானதும், கடும் கண்டனத்திற்குரியதுமாகும்.

கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், சமூகப் பணியாளர்கள் அடங்கிய குழு உருவாக்கிய பாட திட்டத்தை, பல கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட பாட நூல்களை – ஆதிக்க சிந்தனை கொண்டும், அரசியல் காழ்ப்புணர்வுடனும் அலட்சியப்படுத்துவது, ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. தலித் மக்களை மேலும் பல ஆண்டுகளுக்கு கீழ் நிலையிலேயே வைத்திருக்கும் உள்நோக்கம் கொண்டது.

சமச்சீர் கல்வியை நிறுத்திவைத்திருப்பது, நிரந்தரமாக அத்திட்டத்தை குப்பைக் கூடையில் போடுவதற்கான ஒரு முன்னோட்டம்தான். இப்பிரச்சினையில், சமச்சீர் கல்விக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஏற்கனவே அச்சடித்துள்ள பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்கி, உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டும். சமச்சீர் கல்வியை மாணவர்கள் தமது தாய்மொழியில் (தமிழ், உருது, தெலுங்கு) படிக்கும் வகையில், இத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த முன்வர வேண்டும்.

Pin It