அன்பு ஒரு காலத்தில் சின் மலையின் அடிவாரத்திலே இருந்த ஒரு கிராமத்தில் சோதான் என்ற ஓர் ஏழைச் சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்குப் பெற்றோர் கிடையாது. தினமும் கூலிவேலை செய்து தன் வயிற்றைக் கழுவி வந்தான் அச்சிறுவன். வயல்களில் வேலை செய்யும் போது ஓய்வு நேரம் கிடைத்தால் ஏதாவது ஒரு மரத்தின் நிழலிலே கொஞ்ச நேரம் இளைப்பாறுவான் சோதான். அந்த நேரத்தில் சிறு குச்சியைக் கொண்டு மலை, ஆறு, மனிதர்கள் என அழகழகாய் ஓவியங்களை வரைவான். சோதானிடத்திலே ஒரு தூரிகையை வாங்கும் அளவுக்குப் பணமில்லை. அவன் வரைந்த படங்களைப் பார்க்கும் கிராமத்து சனங்கள் ஆச்சரியப்படுவார்கள். அவனைப் பாராட்டுவார்கள். சோதானின் ஓவியத் திறமைப் பற்றி பக்கம் அக்கம் இருந்த கிராமங்களுக்கெல்லாம் சேதி பரவியது. அவனின் புகழ் வளர்ந்தது. ஒரு நாள் வயல் ஒன்றில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது அவனுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அது நன்பகல் நேரமாக இருந்தபோதும் படுத்துத் தூங்கிவிட்டான். அப்போது ஒரு கனவு கண்டான் சோதான். அக்கனவில் ஒரு தேவதை வந்தாள். தேவதை சோதானிடம் பேசினாள்.

“சோ தான், மக்கள் எல்லோரும் உன் ஓவியங்களையும், திறமையையும் பாராட்டுகிறார்கள். அதனால் நான் உனக்கு ஓர் ஓவியத்தூரிகையைப் பரிசளிக்க விரும்புகிறேன். நீ விரும்புகிற மாதிரியெல்லாம் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.''

இப்படிச் சொல்லி சோதானின் பக்கத்திலே ஒரு தூரிகையை வைத்துவிட்டு மறைந்தாள் அந்தத் தேவதை சோதான் தூங்கி எழுந்த போது அவன் அருகிலே ஒரு தங்கத்தூரிகை இருந்தது. தனக்கு வந்த அற்புதக் கனவை சோதித்துப் பார்க்க விரும்பினான் சோதான். உடனே ஒரு தட்டு நிறையச் சோறும், மீனும், இறாலும், பழங்களும் இருக்கிறமாதிரி வரைந்தான். கொஞ்சநேரத்தில் அவைகள் எல்லாமே உண்மையாக மாறிவிட்டதைக் கண்டு அதிசயப்பட்டான் அவன். தாங்க முடியாத சந்தோஷத்துடன் அவைகளை சுவைத்துச் சாப்பிட்டான் சோதான்.

children
சாப்பிட்டு முடித்த பிறகு தனக்குத் தேவையான புது ஆடைகளை வரைந்தான் சோதான். வரைந்த உடனே அந்த ஆடைகளும் கிடைத்தன. தனது பழைய உடைகளை களைந்து விட்டு புது ஆடைகளை அணிந்துக் கொண்டான். மறுநாள் சோதான் தன் கிராமத்தில் இருக்கும் ஏழைகளை எல்லாம் கூப்பிட்டான். அவனின் தங்கத் தூரிகையைக் கொண்டு பலவகையான உணவுகளை ஆவி பறக்க வரைந்து அவர்கள் சாப்பிடுவதற்குத் தந்தான். ஏழைகள் எல்லாரும் அவற்றைச் சாப்பிட்டு, அவனை மகிழ்ச்சியோடு இருக்கும்படி வாழ்த்தினார்கள்.

மிக விரைவில், தங்கத் தூரிகையுடன் இருக்கும் அச்சிறுவனின் புகழ் எங்கும் பரவியது. சோதானின் அளவிடற்கரிய திறமையைப் பற்றி அந்த நாட்டு அரசனின் மந்திரிக்கும் கூட சேதி போய்ச் சேர்ந்தது. சோதானை பார்க்க வந்த மந்திரி தன் விருப்பத்துக்கு ஏற்றபடியெல்லாம் வரையவேண்டும் என்று கேட்டார். அதைக்கேட்ட சிறுவன் அதற்காக தனது தூரிகையை தொடக்கூட மாட்டேன் என்று சொல்லிவிட்டான்.

கோபம்கொண்ட மந்திரிசோதானை கைது செய்து ஒரு பாதாள அறைக்குள் அடைத்து விட்டார். அவனுக்கு உணவோ, தண்ணீரோ தரக்கூடாது என்றும் சொல்லி விட்டார். ஆனால் சோதானோ கொஞ்சம்கூட பயப்படவில்லை. தினமும் உணவுப் பொருட்களையும், தண்ணீரையும் வரைந்து சாப்பிட்டுக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்து வந்தான். சிறுவன் சோதான் எப்படித்தான் உயிர்வாழ்கிறான் என்று அறிய ஆசைப்பட்ட மந்திரி ரகசியமாக வந்து அவனைக் கவனித்து வந்தார். ஒரு நாள் சோதான் தனக்கு வேண்டிய உணவை வரைந்து சாப்பிடுவதைப் பார்த்தார். அவருக்குக் கோபம் தலைக்கு ஏறியது. உடனே தனது வீரர்களைக் கூப்பிட்டு அச்சிறுவனை கொன்றுவிடும்படி ஆணையிட்டார். தன்னை நோக்கி விரைந்து வரும் போர் வீரர்களின் காலடி சத்தத்தை கேட்டான் சோதான். அவர்கள் தன்னை கொல்வதற்குதான் வருகிறார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டான். தன்னிடம் மறைத்து வைத்திருந்த தங்கத் தூரிகையை வெளியே எடுத்து தப்பித்துப் போகும் வகையில் படிகளை வரைந்தான். சோதான் வரைந்த படிகள் உண்மையாக மாறியவுடன் அதில் ஏறி தப்பித்தான்.

சோதானை போர் வீரர்கள் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவன் தனக்கு என்று ஒரு குதிரையை வரைந்து அதில் ஏறி பறந்தான். அவனைப் பிடிப்பதற்காக சுருக்குக் கயிற்றை வீசினார்கள் போர்வீரர்கள். சோதானும் பதிலுக்கு ஒரு சுருக்குக் கயிற்றை வரைந்து வீசினான். அவன் வீசிய சுருக்குக் கயிற்றில் மாட்டிக் கொண்ட மந்திரி குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தார். பின்னால் வந்த வீரர்கள் பயந்து ஓடிவிடடார்கள். அந்த ஊரில் இருந்தால், அங்கே இருக்கும் அரசர் தன்னை அமைதியாக வாழ விட மாட்டார் என்று நினைத்தான் சிறுவன் சோதான். அதனால் வெகு தூரத்திலிருக்கும். ஒரு நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தான் சோதான்.

அங்கே பலவகையான ஓவியங்களை வரைந்து விற்று வாழ்ந்து வந்தான். கால்கள் எதுவும் இல்லாதமாதிரியாக விலங்குகளை வரைந்து பார்க்கும் அவன் ஒரு நாள் தவறுதலாக நான்கு கால்களுடன் ஒரு குரங்கை வரைந்தான். அது திடீரென்று உயிராகி, மரங்களில் தாவி ஏறிக்கொண்டு பொதுமக்களை மிரட்டத் தொடங்கிவிட்டது. இவைகளைக் கேள்விபட்ட அந்நகரத்தின் மன்னர் சோதனை அழைத்தார். அவர் ஒரு கரூவூலத்தை வரையச்சொன்னார். சோதானோ அதை வரையாமல் மாடமாளிகை ஒன்றை வரைந்தான். அதை பார்த்த மன்னரோ மேலும் மேலும் வரையச் சொன்னார். சோதான் ஒன்றின் மீது ஒன்றாக பல மாடங்களை வரைந்துக் கொண்டே போனான். எடை தாங்காமல் அந்தக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது.

சோதானிடம் இருந்த அற்புதமான திறமையைக் கண்ட மன்னர் அவனை அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வெளியே சென்றார். அங்கே ஒரு கடலை வரையச் சொன்னார். கடல் உருவானதும் அதில் பயணம் செய்யத் தோன்றியது. கடல் உருவானதும் அதில் பயணம் செய்யத் தோன்றியது. உடனே அவர் ஒரு படகை வரையச் சொன்னார். அந்தப் படகில் மன்னரும், போர் வீரர்களும் எறிக் கொண்டனர். மன்னருக்கு அப்போது வேறு ஒரு ஆசை வந்தது.

புயல் அடித்தால் எப்படியிருக்கும் என்பதே அந்த ஆசை, உடனே சோதான் புயலை வரைந்தான். புயல் வந்தது. மன்னரும், போர் வீரர்களும் கடலில் மூழ்கி இறந்து போனார்கள். சோதான் ஒரு பறக்கும் வெண்ணிறக் குதிரையை வரைந்து அதில் ஏறிக்கொண்டு தப்பித்து மறைந்தான். அதற்குப்பிறகு அந்தச் சிறுவனை யாரும் பார்க்கவில்லை.


Pin It