பழைய முறை - முன்னோர் முறை என்று சொல்கின்ற இந்நிகழ்ச்சிக்கு, அதைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல் தமிழில் ஒன்று கூட இல்லை. இருக்கிற கல்யாணம், விவாகம், தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் என்கின்ற சொற்கள் வடமொழிச் சொற்கள் என்பதோடு, அவை இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொற்களும் அல்ல. இந்நிகழ்ச்சிக்கு நாம் தோன்றிய பின் தான் - நாம் "வாழ்க்கை ஒப்பந்தம்' என்கின்ற இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய சொல்லை ஏற்படுத்தினோம். இந்நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு பெயர் இல்லை என்பதோடு, இதற்குப் பொதுவான ஒரு முறையும், சடங்கும் கிடையாது. நம்மிடையே நடைபெறும் இச்சடங்குகள் என்பவையும், இந்நிகழ்ச்சிக்குப் பார்ப்பனரால் ஏற்பாடு செய்யப்பட்டு நம்மிடையே புகுத்தப்பட்டவையேயாகும்.

பெண்ணடிமைக்கு இருக்கிற சக்தி, உலகமெல்லாம் பெண்களை அடிமைப்படுத்தி இருக்கிறது. வெள்ளைக்காரன் பெண்களை இழிவாக நடத்துகின்றான். துலுக்கன் பெண்களுக்கு உறையே போட்டு விடுகின்றான். அவனெல்லாம் நடப்பில் இழிவுபடுத்துகிறான் என்றால், நமக்கிருக்கிற ஆதாரம் இலக்கியம், தர்மம் எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவனவாக இருக்கின்றன என்பதோடு, மொழியும் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. பெண்ணைக் குறிக்க "அடி', "அவள்' என்ற சொற்கள் இருக்கின்றனவே தவிர, மரியாதைக்குரிய சொற்கள் எதுவும் இல்லை. ஆண்களுக்கு மட்டும் அய்யா, அவர்கள் என்று சொற்கள் இருக்கின்றன. இலக்கியம், தர்மம் செய்தவன் இன்றைக்கு எதிரே இருந்தால், உதைக்க வேண்டுமென்றுதான் தோன்றுகின்றது. பெரிய சமுதாயக் கோளாறை மாற்ற வேண்டுமானால், பெரும் புரட்சி செய்துதானாக வேண்டும்.

அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியில் வரும் ஒரு பாடலில் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “எவ்வளவு பணக்காரனின் மனைவியாக இருந்தாலும், இந்திரன் மகளாக இருந்தாலும் அவள் கையில் பத்து ரூபாய் கொடுத்தால் போதும் சம்மதித்து விடுவாள்'' என்கின்றான். கணவன் எவ்வளவு அழகானவனாக இருந்தாலும், கலையில் வல்லவனாக இருந்தாலும், பிறன் மேலேயே அவள் எண்ணம் செல்லும் என்று எழுதி இருக்கின்றான்.

வள்ளுவன் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண் தன் மனைவியைத் தொழ வேண்டுமென்று சொல்லவில்லை. அவ்வை, பெண் புலவராக இருந்தும் அவள் "தையல் சொல் கேளேல்' பெண் சொல்லைக் கேட்கக் கூடாது என்கிறாள். இப்படி எந்தப் புலவரை, இலக்கியத்தை, நீதி நூலை, புராண - இதிகாசங்களை எதை எடுத்தாலும் அவை பெண்களை இழிவுபடுத்துவதாகவும், அடிமைப்படுத்துவதாகவுமே இருக்கின்றன.

காதலர் வாழ்வு மறைந்து, கணவன் - மனைவி வாழ்வு வந்ததும் பெண்களின் சுதந்திரம் மறைந்து விட்டது. பெண் என்றால் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும். அதுதான் சிறப்பு என்று வாழ்வு முறையாக்கப்பட்டு விட்டதால், பெண்கள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட முடியாமல் போய்விட்டனர். இனியாவது தாய்மார்கள், பெண்களை அறிவு பெற முடியாமல் மூடி வைப்பதைத் தடுக்க வேண்டும். ஆண்கள் பெண்களுக்கு உரிமை கொடுக்க முன்வந்தால் கூட, பெண்கள் அதனை ஏற்பதாக இல்லை. காரணம், நாம் அவர்களை அடக்கி ஒடுக்கி அறிவு பெற முடியாமல் செய்வதாலேயே ஆகும். ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் வாழ்க்கைக்கேற்ற ஊதியம் பெறும்படியான தொழிலைச் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். 20 வயது வரைப் படிக்க வைக்க வேண்டும். தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விட வேண்டும்.

இந்த ஜோசியம், சகுனம், பொருத்தம் என்பவை எல்லாம் மனிதனின் முட்டாள்தனமான மூடநம்பிக்கையேயாகும். தாலி கட்டுவது என்பதும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் ஒன்றுதானாகும். தாலி கட்டுவதே "அறுப்பதற்காக!' பெண்களை முண்டச்சி (விதவை)களாக்க, சகுனத் தடையாக்கவேயாகும். வயதுப்படிப் பார்த்தால் ஆண்தான் முன் சாக வேண்டும்; அதன்பின் தான் பெண் சாக வேண்டும். திருமண அமைப்பு முறையானது அப்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணை விடப் பெண் வயதில் குறைவாக இருக்க வேண்டும் என்கின்ற முறை இருப்பதால், ஆண் முதலில் சாகவும் பெண் தாலியறுக்கவுமான நிலை ஏற்படுகின்றது. மற்றப்படி தாலியால் எந்தப் பயனுமில்லை. ஆணின் அடிமை என்பதைக் காட்டக் கூடிய அடிமைச் சின்னமே தாலியாகும்.

இந்த நிகழ்ச்சி சடங்கு நிகழ்ச்சியல்ல; பிரச்சார நிகழ்ச்சி. சடங்கு நிகழ்ச்சியென்றால் இங்கு பானை, சட்டி, அம்மி எல்லாமிருக்கும். மக்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லிபிரச்சாரம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. மணமக்களாக இருக்கிற இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து "நாங்கள் துணைவர்களாகிவிட்டோம்' என்று சொன்னால் போதும்.

(விடுதலை - 17.6.1969)

Pin It
மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான இன்னொரு விஷயம்வி.பி.சிங்கின் மரணம் பற்றிய செய்தியாகும். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் மும்பை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பர்ஸானா வெர்ஸெ கூறுவது போல, வி.பி.சிங் தான் இறப்பதற்கு ஒரு தவறான தருணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

“மக்களின் எதிரிகள் எதைப் புகழ்கிறார்களோ அதை நாம் இகழ வேண்டும். அவர்கள் எதை இகழ்கிறார்களோ அதை நாம் புகழ வேண்டும்'' என்றார் மாவோ. அது வி.பி.சிங் விஷயத்திற்கும் ஓரளவு பொருந்தும். எனவே, அவரைப் பற்றி இந்து பாசிசவாதிகளின் மிக சாதுரியமான, மிக சாமர்த்தியமான பிரதிநிதியான "சோ' ராமசாமி கூறியுள்ளதைக் காண்போம்:

“வி.பி.சிங்கின் (ஆட்சிக்) காலம் நெறிபிறழ்வான காலம். அந்த மனிதரை நான் எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறேன். ஆக, எனது கருத்துக்கள் தற்சாய்வு கொண்டவை என்று கருத உங்களுக்குச் சுதந்திரம் உண்டு. அவர் காங்கிரசிலிருந்து வெளியே வந்த நொடியிலிருந்து, ஏன் அதற்கு முன்பேயும் கூட, நான் வி.பி.சிங்கையும் அவரது அரசியலையும் விமர்சித்து வந்திருக்கிறேன். நான் சந்திரசேகரை எச்சரித்தேன்,ஹெக்டேவை எச்சரித்தேன், ஜனதா கட்சியிலிருந்த எனது நண்பர்கள் அனைவரையும் எச்சரித்தேன் : வி.பி. சிங்கிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, மத்திய அரசாங்கத்தில் காங்கிரசை அகற்றுவதில்தான் அவருக்கு விருப்பம் இருந்ததேயன்றி, பிரதமராகுவதில் விருப்பம் இருக்கவில்லை என்று அவர்கள் கருதினர்.ஆனால், நான் அதுதான் அவரது சூதாட்டம் என்று கூறினேன். பிரதமராவது, பிரதமர் பதவிக்கு அவரது பெயரை மற்றவர்கள் முன்மொழியச் செய்வது, பிறகு அந்தப் பதவியை மிகுந்த தயக்கத்துடன் ஏற்றுக் கொள்வது. சந்திரசேகருக்கு துரோகம் இழைத்து வி.பி.சிங்கை பிரதமராக்கிய தேவிலால், சந்திரசேகரை பிரதமராக்க வி.பி.சிங்கிற்குத் துரோகம் இழைப்பார் என்று எழுதிய ஒரே பத்திரிகையாளன் நான் தான்.

கடைசியில் அதுதான் நடந்தது. ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாற்றிய வி.பி.சிங் வெளியாட்களை நியமித்து அவரை உளவுபார்த்தார். தனது சொந்தப் பிரதமருக்கே இப்படிச் செய்பவர், கற்பனை செய்து பார்க்கக்கூடிய மிக மோசமான துரோகியாகத்தான் இருக்க வேண்டும். அவர் இதைச் செய்த நொடியிலிருந்தே அந்தமனிதரை அபாயகரமானவராக நான் பார்த்தேன். மண்டல் அறிக்கைக்கு அவர் புத்துயிர் தரும் வரை இட ஒதுக்கீட்டை ஆதரித்தவராக அவர் இருந்ததில்லை. மண்டல் கமிஷன் ஜனதா கட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை ஜனதா கட்சி அரசாங்கம் கவிழ்ந்த பிறகு தாக்கல் செய்யப்பட்டது.

பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கிய போது, பா.ஜ.க.விடமிருந்து பிற்பட்ட வகுப்பினரை அக்கட்சியிடமிருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியினரை அடக்கி வைக்க முடியும் என்று வி.பி. சிங் கருதினார். அதன் காரணமாகத்தான் மண்டல் கமிஷன் மூலம் அவர் இந்தியாவிற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டார் என்று நினைக்கிறேன். இந்த நாட்களில் பள்ளிச் சிறுவர்கள் கூட முற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் என்று பேசுகின்றனர். இந்த அபாயகரமான போக்குக்கான பழியை வி.பி. சிங் மீதுதான் சுமத்த வேண்டுமேயன்றி வேறு யார் மீதும் அல்ல. அவர் தனது பதவிக்காக, இந்து சமுதாயத்தை சீர் செய்ய முடியாத அளவுக்குப் பிளவுபடுத்திவிட்டார்.''

உலகின் புகழ்பெற்ற இலவச கலைக்களஞ்சியமான "விக்கிபீடியா'வில் "சோ' ராமசாமி என்னும் பக்கம் உள்ளது. அதில் அவர் வி.பி. சிங் பற்றிக் கூறியவைதான் மேலே காணப்படுபவை. ஆனால் இந்து சமுதாயத்தில் உருக்குப் போன்ற அய்க்கியத்தைக் கொண்டு வரப் பாடுபட்ட / பாடுபடும் சாவர்க்கர், கோல்வால்கர், வாஜ்பேயி, எல்.கே. அத்வானி, நரேந்திர மோடி, தொகாடியா, சுதர்ஷன் போன்றவர்களைப் பற்றி "சோ'வின் கருத்துக்கள் "விக்கிபீடியா'வில் இதுவரை பதிவு செய்யப்படாமல் இருப்பது, இந்திய மக்களின் அவப்பேறுதான்! எனினும் அவை, வேறு இடங்களில் - குறிப்பாக அவரது ஊதுகுழலான "துக்ளக்'கில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, "இந்தியாவின் மிகச் சிறந்த நிர்வாகி என அரசு பயங்கரவாதியான நரேந்திர மோ(ச)டி புகழப்பட்டிருப்பதைக் காணலாம்.

vps_photo
முதலில் "சோ' கூறும் அரை உண்மை ஒன்றை எடுத்துக் கொள்வோம்: மண்டல் கமிஷன் ஜனதா கட்சி ஆட்சியின்போதுதான் (1977 - 79) அமைக்கப்பட்டது என்று கூறுகிறார். உண்மைதான். அந்த கமிஷனின் அறிக்கை ஜனதா கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்குப் பிறகுதான் தாக்கல் செய்யப்பட்டது என்கிறார். அதுவும் உண்மைதான். ஆனால் இந்த உண்மைகளை முழுமையாக்கக் கூடிய இன்னொரு உண்மையைத்தான் அவர் மூடி மறைத்து விடுகிறார். ஜனதா கட்சி ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசின் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி அரசாங்கங்கள் அந்த அறிக்கையைக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கிடப்பில் போட்டு வைத்திருந்தன.

பிரதமர் பதவிக்கு வரும் வரை வி.பி.சிங், மண்டல் கமிஷன் பற்றிப் பேசவே இல்லை என்று துணிந்து புளுகுகிறார் "சோ'. 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வி.பி.சிங்கின் தலைமையிலிருந்த ஜனதா தளம், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத் முதலியன உள்ளிட்ட "தேசிய முன்னணி' போட்டியிட்டது. தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இருந்த முக்கிய வாக்குறுதிகளிலொன்று, அது ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும். அந்த வாக்குறுதியையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை முன்நிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வி.பி. சிங், பிரதமராகும் வரை அந்தப் பரிந்துரைகளை ஆதரித்துப் பேசவில்லை என்று ஆர்.எஸ்.எஸ்.இன் "நசிகேதன் விருதை' வாங்கிய ஒரே தமிழ் நாட்டுப் பத்திரிகையாளரான "சோ' அபத்தமாகப் பேசுகிறார்.

யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்னும் தைரியத்தில் ஓர் அப்பட்டமான பொய்யைத் துணிச்சலாகக் கூறிய ஒருவரின் வாயிலிருந்து அடுக்கடுக்கான மற்ற பொய்கள் வருவதில் என்ன ஆச்சரியம் : “பா.ஜ.க.வுக்கும் அவருக்கும் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கிய போது, பா.ஜ.க.விடமிருந்து பிற்பட்ட வகுப்பினரை அக்கட்சியிடமிருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் அக்கட்சியினரை அடக்கி வைக்க முடியும் என்று வி.பி. சிங் கருதினார். அதன் காரணமாகத்தான் மண்டல் கமிஷன் அறிக்கையை அவர் நடைமுறைப்படுத்தினார்.'' வரலாற்று நிகழ்வுகளின் காலவரிசையை அவரால்தான் எத்தனை எளிதாக மாற்றியமைக்க முடிகிறது. தனது வழக்கமான இரட்டை நாக்குடன்தான் பா.ஜ.க. மண்டல் குழு பரிந்துரைகளை அணுகியது. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கூடவே கூடாது என வெளிப்படையாகச் சொல்வதற்குத் துணிச்சலில்லாத பா.ஜ.க., முற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களைத் தூண்டிவிட்டது. அருண் சோரி போன்ற சந்தர்ப்பவாதப் பத்திரிகையாளர்களைத் தூண்டிவிட்டு, இட ஒதுக்கீடுக்கு எதிரான கட்டுரைகளை எழுத வைத்தது.

மண்டல் குழுவின் பரிந்துரைகளால் பிளவுபட்டுப்போன "இந்து சமுதாயத்தை' சீர் செய்யும் முறையில் அய்க்கியப்படுத்துவதற்காக பா.ஜ.க., "ரத யாத்திரை'யைத் தொடங்கியது.மதத்தின் பெயரால் நாட்டு மக்களை மீண்டும் சீர் செய்ய முடியாத அளவுக்கு (அது 2008 நவம்பர் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் வரை நீடித்துள்ளது) பிளவுபடுத்தியது. "தாவாவு'க்கு உரியதாகச் சொல்லப்பட்ட பாபர் மசூதியைத் தகர்ப்பதற்கு சங் பரிவாரம் செய்து வந்த எல்லா முயற்சிகளையும் முறியடித்த வி.பி.சிங், "ரத யாத்திரை'யின் மூலம் மதப் பகைமையைக் கிளப்பி நாட்டில் ரத்தக் களரியை ஏற்படுத்தத் திட்டமிட்ட எல்.கே.அத்வானியைக் கைது செய்யும்படி பீகார் மாநில முதலமைச்சருக்கு உத்தரவிட்டார். பாபர் மசூதி தகர்க்கப்பட்ட 1992 டிசம்பர் 6ஆம் நாள்தான் இந்திய மக்களின் ஒற்றுமை "சீர் செய்ய முடியாத' வகையில் தகர்க்கப்பட்டது.

"வி.பி. சிங் காங்கிரசிலிருந்து வெளியே வந்த நொடியிலிருந்தே, ஏன் அதற்கு முன்பிருந்தே, அவரது அரசியலை' விமர்சித்து வந்ததாக "சோ' கூறுகிறார். வி.பி.சிங்கின் தொடக்ககால அரசியல் அப்பழுக்கற்றதாக இருந்ததா, இல்லையா என்பதில் நமக்கு அக்கறை இல்லை. ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் சேர்ந்ததற்குப் பின் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளிலிருந்து தான் அவர் நமது அக்கறைக்குள்ள "வி.பி.சிங்' ஆக மாறுகிறார்.

வி.பி.சிங், ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்படும் வரை, அவர் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே செயல்படுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு உகந்த வகையில் தொழில், வர்த்தகம் தொடங்குவதற்காக மத்திய அரசுகடைப்பிடித்து வந்த லைசென்ஸ் முறையைத் தளர்த்த ராஜிவ் காந்தி எடுத்த கொள்கை முடிவைச் செயல்படுத்துவதில் வி.பி.சிங் இறங்கினார். தங்கக் கட்டிக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, தங்கத்தின் மீதான வரியைக் குறைத்தார். கள்ளக் கடத்தல் மூலம் வந்து சேரும் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்யும் போலிஸாருக்கு, அந்தத் தங்கத்தில் சிறு பகுதி இலவசமாகத்தரப்படும் என அறிவித்தார். ஆனால் அவர் மேற்கொண்ட வேறு நடவடிக்கைகளை ராஜிவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதாவது, வி.பி. சிங் வருமான வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவின் இயக்குநருக்கு அதிக அதிகாரங்கள் கொடுத்தார். அச்சமயம் அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்தவரும் அமலாக்கப் பிரிவின் இயக்குநருமான புரே லால் என்பவரின் கீழ் பணியாற்றிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் - பல பண முதலைகளின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியனவற்றை திடீர் சோதனையிட்டு அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததைக் கண்டு பிடித்தனர்.

V.P.Singh
அவர்களது திடீர் சோதனைக்கு உட்பட்டு வரி ஏய்ப்புச் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அம்பானி நிறுவனத்தை நிறுவிய திருபாய் அம்பானியும், இந்தி சினிமா நடிகர் அமிதாப் பச்சனும் ஆவர். அம்பானியின் வரி ஏய்ப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக வி.பி. சிங், ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்து வந்த பாலிஸ்டர் நூழிலையைத் தயாரிப்பதற்கு வேண்டிய மூலப் பொருளை, திறந்த பொது உரிமம் மூலம் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்தி அந்த மூலப் பொருளை வாங்குவதற்கு சிறப்பு உரிமம் பெற வேண்டும் என்னும் விதியை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நிதி உதவி செய்து வந்த பண முதலைகளின் மீதே வி.பி. சிங் கை வைக்கத் தொடங்கியதால், பெரு முதலாளிகளின் நிர்பந்தத்தின் பேரில் ராஜிவ் காந்தி அவரை நிதித் துறையிலிருந்து மாற்றி பாதுகாப்பு அமைச்சராக்கினார். அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தான் போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதிலும், ஜெர்மனியிலிருந்து நீர்முழ்கிக்கப்பல்கள் வாங்கியதிலும் ஊழல்கள் நடந்திருப்பதையும் கண்டுபிடித்தார். அதனால் ஆத்திரமுற்ற ராஜிவ் காந்தி அவர் மீது ஓர் அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்தி 1986இல் அவரைப் அவரை பதவி நீக்கம் செய்தார். அதாவது தனியார் உளவு நிறுவனம் ஒன்றின் மூலமாக வி.பி. சிங், இந்திய பிரதமரான ராஜிவ் காந்தி மீது உளவு பார்த்துக் கொண்டிருந்தார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.

இதைத்தான் "சோ' உளவு பார்த்தவர் என்றும் சொல்கிறார். அப்படி உளவு பார்த்திருந்தாலும் (இதையும் ஒரு வாதத்துக்குத்தான் சொல்கிறோம்) அது தவறு அல்ல. ஆனால் ராஜிவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் "சோ'வுக்கு ஒரு பெரிய விஷயமல்ல; மாறாக, அந்த ஊழல் பேர்வழியை உளவு பார்ப்பதுதான் பெரும் குற்றம். வி.பி. சிங் உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார். காங்கிரஸிலிருந்து விலகிய அவர், தனது நெருக்கமான அரசியல் சகாக்களான அருண் நேரு, ஆரிப் முகம்மது கான் ஆகியோருடன் இணைந்து "ஜன் மோர்ச்சா' என்னும் அமைப்பைத் தொடங்கினார்.

1987இல் அலகாபாத் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகனுமான அனில் சாஸ்திரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாளான 1988 அக்டோபர் 11 அன்று ஜன் மோர்ச்சா, லோக் தள், சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சி, காங்கிரஸ் (எஸ்) ஆகியன ஒன்றிணைந்து ஜனதா தளம் என்னும் புதிய கட்சி உருவாக்கப்பட்டது. ராஜிவ் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டும் என்னும் பொதுக் குறிக்கோளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வி.பி.சிங். அவர் நிதியமைச்சராக இருந்த போது வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள், போபர்ஸ் பீரங்கிகளையும் நீழ்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவதில் நடந்த லஞ்ச ஊழல்களை வெளிக்கொணர்வதில் அவர் வகித்த பாத்திரம், ஊழல் கறைபடாத தனிமனித நேர்மை ஆகியன - இந்தியா முழுவதிலும் அவருக்கு செல்வாக்குத் தேடிக் கொடுத்திருந்தன. எனவே "தேசிய முன்னணி' வெற்றி பெற்றால் வி.பி.சிங் தான் பிரதமராவார் என்னும் எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது.

ஆனால், உண்மை என்ன? தேர்தல் முடிந்து "தேசிய முன்னணி'யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 1989 டிசம்பர் 1ஆம் நாள் நடைபெற்றது. தூய்மையான அரசியல்வாதி என்று தேர்தலின் போது பிரச்சாரம் செய்யப்பட்டு, பிரதமராக வரக்கூடியவர் என்று மக்களால் எதிர்பார்க்கப்பட்ட வி.பி. சிங், அந்தக் கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு தேவிலாலின் பெயரை முன் மொழிந்தார். ஆனால், தேவிலால் எழுந்து நின்று, தான் அந்தப் பதவியை வகிக்க விரும்பவில்லை என்றும், புதிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் "பெரியப்பா'வாக இருக்கவே விரும்புவதாகவும் கூறி, அந்தப் பதவிக்கு வி.பி.சிங்கின் பெயரை முன்மொழிந்து விட்டார். ஜனதா தளத்திலிருந்த எல்லா அங்கங்களுக்கும் பொதுவான வேட்பாளராகத் தன்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என நினைத்திருந்த சந்திரசேகருக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. அவர் அக்கூட்டத்திலிருந்து வெளியேறினார். வி.பி.சிங்கின் அமைச்சரவையில் பங்கேற்க மறுத்துவிட்டார். "சோ' சொல்வதில் ஒன்று மட்டும் உண்மை. அதிகார ஆசையிலும் லஞ்ச ஊழலிலும் திளைந்திருந்த தேவிலால், சந்திரசேகர் போன்ற அரசியல்வாதிகள், வி.பி. சிங்கிற்குத் துரோகம் இழைத்தனர். வி.பி. சிங் எல்லா பூர்ஷ்வா அரசியல்வாதிகளையும் போலவே “அரசியல் என்பது சாத்தியமானதைச் செய்யும் கலை'' என்று செயல்பட்டிருக்கிறார். யாரைக் கவிழ்க்க, யாரைப் பயன்படுத்தலாம் என்பதை அறிந்திருந்தார்.

வி.பி.சிங்கின் தலைமையிலான ஜனதா தளமும், மேலே சொல்லப்பட்ட மாநிலக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய "தேசிய முன்னணி', 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் "தேசிய முன்னணி' "இடதுசாரி கட்சிகள்', பா.ஜ.க., காங்கிரஸ் ஆகியனவற்றில் எதுவுமே ஆட்சி அமைக்கக்கூடிய எண்ணிக்கையைப் பெறவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 160க்கும் குறைவு. ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதில் மட்டுமே ஒன்றுபட்டிருந்த இடதுசாரிகளும் பா.ஜ.க.வும் "வெளியே இருந்து' ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்ததன் பேரில், வி.பி.சிங்கின் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. அத்தேர்தலில் தி.மு.க. ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆயினும் "தேசிய முன்னணி'யில் இடம் பெற்றிருந்த கட்சி என்பதற்காக "முரசொலி' மாறனை காபினட் அமைச்சராக்கினார் வி.பி.சிங்.

வி.பி.சிங், பிரதமர் பொறுப்பில் இருந்தது ஓராண்டுக்கும் குறைவான காலமே (2 டிசம்பர் 1989 முதல் 10 நவம்பர் 1990). பா.ஜ.க. வெளியிலிருந்து தரும் ஆதரவைக் கொண்டே அரசாங்கத்தை நடத்த வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருந்ததால், அவர் சில அரசியல் சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருந்தது. அவர் பதவி ஏற்ற சில நாட்களுக்குள்ளேயே பெரும் சவாலொன்றை அவர் எதிர்கொண்டார். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த முப்டி முகம்மது சயீதின் (முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்; இந்திய அரசாங்கத்தில் ஒரு முஸ்லிம் உள் துறை அமைச்சராக்கப்பட்டது அதுவே முதல் முறை) மகள், காஷ்மீர் விடுதலைப் போராளிக் குழுவொன்றால் கடத்திச் செல்லப்பட்டார். அந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், நாட்டின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் தகுதி வி.பி. சிங்கிற்கு இல்லை எனக் கடுமையான விமர்சனம் செய்தது. அந்த விமர்சனத்தைத் தணிக்கும் வகையிலும், அமைச்சரின் மகள் கடத்தப்பட்டதால் காஷ்மீரில் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தணிக்கும் வகையிலும் அவரது அரசாங்கம் அந்தப் போராளிக் குழுவின் நிபந்தனைகள் சிலவற்றை ஏற்று, அக்குழு கோரியபடி சில கைதிகளை விடுதலை செய்தது.

காஷ்மீரிலுள்ள பிரிவினைவாத சக்திகளையும் தீவிரவாதிகளையும் ஒடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. வற்புறுத்தியதன் பேரில் வி.பி. சிங் ஒரு மாபெரும் தவறைச் செய்தார். மத்திய அரசாங்கத்தில் மூத்த அதிகாரியாக இருந்தவரும் சர்வாதிகார மனப்பான்மை கொண்டவருமான ஜக்மோகனை, ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமித்தார். அதற்கு முப்டி முகம்மது சயீதும் காரணம் என்று சொல்லப்படுகிறது. காரணம், அவரது அரசியல் எதிரியாக இருந்த பரூக் அப்துல்லாவை ஓரங்கட்ட ஜக்மோகன் பயன்படுவார் என்று சயீத் கணக்குப் போட்டதாகச் சொல்லப்படுகிறது. ஜக்மோகன் அங்கு ஆளுநராக இருந்த காலத்தில் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லிம்களுக்கும் இந்து பண்டிட்களுக்கும் இருந்த பாரம்பரியமான நல்லுறவுகளைச் சீர்குலைப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டார். காஷ்மீர் முஸ்லிம்களின் தலைவராகக் கருதப்பட்ட மிர்வெய்ஸ்ஸின் இறுதி ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்படி பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டார். காஷ்மீரில் ஆயுதமேந்திய போராளிக் குழுக்களின் வன்முறை நடவடிக்கைகள் தீவிரமடைவதற்கு ஜக்மோகன் காரணகர்த்தராக இருந்தார்.

V.P.Singh
காஷ்மீர் விஷயத்தில் கிடைத்த அனுபவத்தாலோ என்னவோ, பஞ்சாபில் பயங்கரவாதிகளை ஒடுக்குதல் எனும் பெயரால் கடுமையான போலிஸ் ஒடுக்குமுறைகளை ஆதரித்து வந்த அந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தவரும், காங்கிரஸ்காரருமான சித்தார்த் ஷங்கர் ரேவை அகற்றி அவருக்குப் பதிலாக நிர்மல் குமார் முகர்ஜி என்னும் மூத்த அதிகாரியை ஆளுநராக நியமித்தார். அங்கு நீண்ட காலம் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கி, பொதுத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்தார். மேலும், இந்திரா காந்தி ஆட்சியின் போது, அமிர்தசரஸ் பொற்கோவிலில் இந்திய ராணுவம் நடத்திய "ஆப்பரேஷன் ப்ளு ஸ்டார்' நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக் கேட்பதற்காக அமிர்தசரசில் இறங்கி பொற்கோவிலுக்கு நடந்தே சென்றார்.

ராஜிவ் அரசில் நிதியமைச்சராக இருக்கும்போது வரி ஏய்ப்பாளர்களுடனும் அம்பானி போன்ற பெருமுதலாளி களுடனும் மோதிய வி.பி. சிங், தனது ஆட்சிக் காலத்தில் அம்பானியுடன் மீண்டும் மோத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். பொதுத் துறை நிறுவனங்களான ஆயுள் காப்பீடு நிறுவனமும் (எல்.அய்.சி.) பொதுக் காப்பீடு நிறுவனமும் (ஜி.அய்.சி.) பெருமளவில் கடன்களும் முதலீடும் வழங்கியுள்ள பெரும் கட்டுமானப்பணி நிறுவனமான "லார்சன் அண்ட் டூப்ரோ'வின் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அம்பானி செய்த முயற்சிகளை வி.பி. சிங் அரசு தோற்கடித்தது.

மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதிலும் அவருக்குச் சிக்கல்கள் இருந்தன. ஜனதா தளத்திற்குள்ளேயே இருந்த பழைமைவாதிகள், வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவரும் பா.ஜ.க.வின் எதிர்ப்பு, பொருளாதார அளவுகோலை மட்டுமே வலியுறுத்தும் இடதுசாரிகளின் போக்கு ஆகியவற்றின் காரணமாக, மத்திய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு ஒதுக்கீடு (இதுவும்கூட சில துறைகளுக்குப் பொருந்தாது) முறையை நடைமுறைப் படுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது ஆக்கங்கள் அனைத்தும் இந்தியிலும் பிற மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சாமானிய மனிதருக்கும்கூட கிடைக்க ஏற்பாடு செய்தார். அம்பேத்கருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டதும், அவரது உருவப் படம் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் திறந்து வைக்கப்பட்டதும் வி.பி. சிங் ஆட்சிக் காலத்தில்தான். அம்பேத்கரின் அறைகூவலை ஏற்று, பவுத்தம் தழுவிய தலித் மக்களுக்கும் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு உண்டு என்று அறிவித்ததும் வி.பி.சிங் அரசு தான். அது மட்டுமல்ல, தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர்கள், சங்கராச்சாரிகளையும், மேல்மருவத்தூர் சாமியார்களையும் சந்தித்து ஆசி பெற்று வந்த அரசியல் - பண்பாட்டு மரபு உருவாக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு மட்டுமல்லாது, பல "சமயச்சார்பற்ற' அரசியல் தலைவர்களுக்கும் "அலர்ஜியாக' இருந்து வரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஒரே ஒரு இந்தியப் பிரதமர் வி.பி.சிங் தான்.

பார்ப்பனிய ஆதிக்கத்தை அசைக்கின்ற மண்டல் குழு பரிந்துரைகளை அவர் நடைமுறைப்படுத்தியதால், தனது செல்வாக்கின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவை இழக்க நேரிடும் என பா.ஜ.க. கருதியது உண்மைதான். அதனால்தான் இந்துக்களை ஒன்றிணைப்பதற்கான ரத யாத்திரையைத் தொடங்கியது. வி.பி. சிங் உறுதியுடன் செயல்பட்டு எல்.கே.அத்வானியை கைது செய்யும்படி செய்தார். அடுத்த நாளே பா.ஜ.க., வி.பி. சிங் அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாகக் கூறியது. மென்மையான இந்துத்துவத்தைக் கடைப்பிடித்து வந்த ராஜிவ் காங்கிரசும் போபர்ஸ், எச்.டி.டபிள்யூ. நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் விசாரணைகளை முடக்கி வைப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து வந்தது. இடதுசாரிகள் மட்டுமே தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துக்கொண்டிருந்த நிலைமையில் வி.பி.சிங் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.

142 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் 346 உறுப்பினர்களின் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து கொண்ட அவர், தனக்கு எதிராக அணி திரண்டவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்: “எத்தகைய இந்தியாவை நீங்கள் விரும்புகிறீர்கள்''? லஞ்சமும் ஊழலும் மலிந்த, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உக்கிரமடைந்த, மதவாதம் ஓங்கி நிற்கின்ற, இந்து, முஸ்லிம் பயங்கரவாதம் வளர்ந்து வருகின்ற, பன்னாட்டு மூலதனத்திற்குக் கதவை அகலமாகத் திறந்து விடுகின்ற, தலித்துகள் மீதான வன்கொடுமைகள் பெருகுகின்ற, பதவி வேட்டையில் மட்டுமே அக்கறை உள்ள - சந்தர்ப்பவாத பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் தலித் அரசியல் தலைவர்கள் நிறைந்த இந்தியாதான் தங்களுக்குத் தேவை என்பதை அப்போது அவரை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, அவரை ஆதரித்தவர்களில் பெரும்பான்மையினரும் கூட முடிவு செய்துவிட்டனர்.

அவர் நம்பிக்கை வாக்குக் கோரும் சமயத்திலேயே சந்திரசேகர், தேவிலால் உள்ளிட்ட 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (சமாஜ்வாடி ஜனதா தளம் என்னும் புதிய கட்சி லேபிள் அப்போது இருந்தது) அவருக்கு எதிராகத் திரும்பியிருந்தனர். இந்த 64 பேருக்கு ராஜிவ் காங்கிரஸ் வெளியிலிருந்து தருவதாக சொன்ன ஆதரவின்அடிப்படையில் சந்திரசேகர் சில மாதங்கள் பிரதமராக இருந்தார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவாளரான வி.பி. சிங்கை எதிர்த்த சக்திகளிலொன்றுதான் ஜெயலலிதாவின் அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. ராஜிவ் காந்தி, ஜெயலலிதா, "சோ' ராமசாமி ஆகியோரை மகிழ்விக்கும் சில நடவடிக்கைகளை சந்திரசேகரின் ஆட்சி மேற்கொண்டது. அவற்றிலொன்றுதான் 1991இல் தி.மு.க. அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்ததாகும். அவரது ஆட்சியின் கீழ் தான் இந்தியாவை அமெரிக்கா ஏகாதிபத்தியத்துடன் மிக நெருக்கமாகக் கொண்டு வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

வி.பி. சிங் பிரதமர் பதவியிலிருந்து விலகியவுடனேயே, தனக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. வகை பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கிக் கொள்ளும்படி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார். கடைசி வரை எந்த போலிஸ் படையின் பாதுகாப்பும் அவருக்கு இருந்ததில்லை. 1992இல் இந்தியாவின் துணைக் குடியரசுத்தலைவராக தாழ்த்தப்பட்டவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று கூறி, கே.ஆர். நாராயணின் பெயரைப் பரிந்துரைத்தவர் வி.பி. சிங் தான்.

1992 டிசம்பரில் அயோத்தில் எல்.கே.அத்வானி தலைமையில் கரசேவை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது, அதை எதிர்த்து "தர்ணா' நடத்துவதற்காகச் சென்று கொண்டிருந்த வி.பி. சிங்கும் அவரது ஆதரவாளர்களும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு 1992 டிசம்பர் 6இல்அந்தக் கரசேவகர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர். பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு, மும்பையில் சிவசேனையும் சங் பரிவாரமும் காவல் துறையினரின் உதவியுடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்ற கலவர நிகழ்ச்சிகளைக் கண்டனம் செய்வதற்காக மும்பைக்குச் சென்று உண்ணா நிலையை மேற்கொண்டார் வி.பி. சிங். அவரது உண்ணா நிலையைக் கிண்டல் செய்வதற்காக அவர் உட்கார்ந்திருந்த பந்தலுக்கு எதிரே இன்னொரு பந்தல்போட்டு "உண்ணும் நிலையை' மேற்கொண்டனர் இந்து பாசிசவாதிகள். வி.பி.சிங் உண்ணா நிலையுடன் நின்று கொள்ளாமல், தண்ணீர் கூட அருந்த மறுத்துவிட்டார். அதன் காரணமாகவே அவரது சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டன.

1990களின் இறுதியில் தீவிரமான அரசியலிலிருந்து வி.பி. சிங் ஒதுங்கி நின்றார். தேவே கவுடாவும், அய்.கே. குஜ்ராலும் அடுத்தடுத்துப் பிரதமர்களாக இருந்த அய்க்கிய முன்னணி அரசாங்கத்திற்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி வந்தார். பூர்ஷ்வா அரசியலின் வரம்புகளை உணர்ந்ததாலோ என்னவோ, மக்கள் பிரச்சனைகளில் நேரடியாகத் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள குடிசைப் பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதால் பாதிக்கப்படும் தலைவர்களுடன் பங்கேற்றார். இத்தனைக்கும் அவர் பதினேழு ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவராகவும், ரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டவராகவும் இருந்தார். கடைசி வரை அம்பானிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாகவே இருந்தார். உத்திரப் பிரதேசத்திலுள்ள காஸியாபாத் தொகுதியிலுள்ள டட்ரி என்னுமிடத்தில், மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க 2500 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு மிக அற்பத் தொகையே இழப்பீடாகத் தரப்பட்டது. அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற அவர் முலாயம் சிங் அரசால் கைது செய்யப்பட்டார்.

தான் அப்பழுக்கற்ற கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாத அரசியல்வாதி என்று வி.பி.சிங் ஒருபோதும் உரிமை பாராட்டிக் கொண்டதில்லை. தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும் அரசியல்வாதிகள் எல்லோரும் ஜெபமாலையை உருட்டிக்கொண்டிருக்கும் துறவிகளல்ல என்றும், எதையோ எதிர்பார்த்துதான் வருகிறார்கள், அது நடக்கவில்லை என்றால் போய்விடுகிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். எப்படி இருந்தாலும், அவர் பதவி ஆசை கொண்டிருந்தவர் என்னும் குற்றச்சாட்டை அவர் மீது "சோ' போன்ற வலதுசாரிகளோ, தீவிர இடதுசாரிகளோ ஒரு போதும் சுமத்த முடியாது. அவர் நினைத்திருந்தால் குறைந்தபட்சம் இந்தியக் குடியரசுத் தலைவராகவாவது பதவி வகித்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட விருப்பம் அவருக்கு இருக்கவில்லை. பூர்ஷ்வா அரசியல் வாழ்க்கை நிர்பந்திக்கும் சமரசங்கள், லட்சிய வாழ்க்கை நிர்பந்திக்கும் அறவியல் ஆகியவற்றுக்குள்ள முரண்பாடுகளால் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த அவரது "ஆன்மா'வுக்கான நிம்மதிப் புகலிடங்களாக இருந்தவை - அவர் கடைசி வரை வரைந்து கொண்டிருந்த ஓவியங்களும், எழுதிக் கொண்டிருந்த கவிதைகளும்தான்.

Pin It
. ரத்தப் பிரிவுகளான A, B, O, AB ஆகியவற்றைக் கண்டறிந்தவர் கார்ல் லேண்ட்ஸ்டினர் ஆவர். 1901 ஆம் ஆண்டு இதை உலகிற்கு அவர் அறிவித்தார்.

2. ஆர்வில் ரைட், வில்பர் ரைட் ஆகிய இரு சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் முதன் முதலாய் விமானத்தில் பறந்தார்கள். ஒரு மலை உச்சியிலிருந்து 12 அடி உயரத்தில் 12 வினாடிகள் மட்டுமே முதன் முதலில் அவர்களால் பறக்க முடிந்தது. அதே நாளில் மூன்று முறை பறந்தனர். மூன்றாவது முறை அவர்களால் 852 அடி உயரத்தில், 59 வினாடிகளுக்கு பறக்க முடிந்தது.

3. மார்க்கரேட் ரஸ்க் என்ற 47 வயது நிரம்பிய டச்சு நாட்டு பெண் மருத்துவர்தான் முதன் முதலில் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவராக மருத்துவமுறைகளின்படி அறியப்பட்டார். 1977ஆம் ஆண்டு இது நடந்தது.

karl_lansdinar 4. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி குஜராத் மாநிலம் அலகாபாத்திலிருந்து நைனி ரயில் நிலையத்திற்கு, 6000 கடிதங்களுடன் ஒரு குட்டி விமானம் பறந்துச் சென்றது. இதுவே உலகின் முதல் விமான அஞ்சல் போக்குவரத்து ஆகும்.

5. லேசலோ பிரோ என்ற அங்கேரி நாட்டு சிற்பி தான் உருள் முனைப் பேனாவை 1938ஆம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கினார்.

6. உலகின் முதல் அழகிப்போட்டி பெல்ஜியம் நாட்டில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாள் நடந்தது. இப்போட்டியை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. பதினெட்டு வயது நிரம்பிய கிரியோல் அழகியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு 5000 பிரான்ஸ் பரிசளிக்கப்பட்டது.

7. ஜேம்ஸ் பில்லன்ஸ் என்பவர்தான் 1914ஆம் ஆண்டு, எடின்பர்க் உயர்நிலைப்பள்ளியில் முதன் முதலாக கரும்பலகையை உருவாக்கி பயன்படுத்தினார்.

first_bus 8. 1662 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், பாரிஸ் நகரில் எட்டு இருக்கைகளைக் கொண்ட பேருந்து முதன்
முதலாக பொதுமக்கள் உபயோகத்திற்கென இயக்கப்பட்டது. பாஸ்கல் எனும் தத்துவ அறிஞர் இதை நண்பர்களோடு இணைந்து நடத்தினார்.

9. கேட் பார்டன் என்ற பெண்மணிதான் உலகின் முதல் பேருந்து நடத்துனர். 1909ஆம் ஆண்டு அவரின் தந்தையார் நடத்திய பேருந்து நிறுவனத்தில் அவர் பணி புரிந்தார். கேட் பார்டனின் சகோதரிகளான ரூத், ஈடித், ஆகியோரும் நடத்துனர்களாகப் பணிபுரிந்தனர்.

10. குழந்தைகள் படிப்பதற்கான முதல் புத்தகம் ஆங்கிலத்தில் தான் முதலில் வெளியானது (பாட புத்தகம் அல்லாத நூல்) 1563 ஆம் ஆண்டு இந்த நூல் அச்சிடப்பட்டது.


Pin It

தத்துவம், கலை இலக்கியம், வீரம் ஆகியவற்றின் விளை நிலமாக இருந்தது கிரேக்கம் என்பதை நாம் அறிவோம். அம்மண்ணிலே தோன்றிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர் தான் பிளாட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவராவார். பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ், அவர் எழுதுவதற்காக ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி "பிளாட்டோ' என வைத்துக் கொண்டார். அனேகமாக புனைப்பெயரை வைத்துக் கொண்டு எழுதிய உலகின் முதல் எழுத்தாளர் அவராகத்தான் இருக்கும்.

"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும் இச்சொல்லில் இருந்து தான் ஆங்கிலச் சொல்லான Flat வந்தது. பிளாட்டோவின் சொந்த ஊர் ஏதென்ஸ். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும் எளிமையையே விரும்பியவர். இவரின் தந்தை அரிஸ்டோன், தாய் பெரிக்டியோனி. இவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் கடைசிப் பிள்ளைதான் பிளாட்டோ.

கிரேகத்தின் வழக்கப்படி இராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது இருபதாவது வயதில் சாக்ரட்டீசிடம் மாணவராகச் சேர்ந்தார் பிளாட்டோ. இவருக்கு தத்துவத்துறையில் மட்டுமல்லாது இசை, கவிதை, ஓவியம் ஆகிய நுண்கலைகளின் மீதும் அளவற்ற ஈடுபாடு இருந்தது. சாக்ரட்டீசின் முதன்மை மாணவனாக இருந்த பிளாட்டோ, அவர் இறக்கும் காலம் வரை அவருடனேயே இருந்தார். சாக்ரட்டீஸ் இறந்த பிறகு பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணங்கள் அவருக்கு அனுபவ அறிவை சேர்க்கவும், சாக்ரட்டீசின் கருத்துக்களை பரப்பவும் உதவின.

கிரேக்கம் திரும்பிய பிளாட்டோ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். உலகின் முதல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வுகளும், பொதுக்கல்வி போதனையும், நுன்கலை பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பிளாட்டோ எழுதிய "குடியரசு' என்ற நூல் மிகச் சிறந்தது என போற்றப்படுகிறது. பிளாட்டோவின் சிந்தனைகள் இன்றளவும் மிகச் சிறந்தவையாக மதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு தனி வாழ்விலும், அரசியலிலும் சம பங்கு தரவேண்டும் திறனை வளர்க்க கல்வி பயன்படவேண்டும். அன்பு, வீரம், பொறுமை, நேர்மை ஆகிய ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று பிளாட்டோ வலியுறுத்தினார்.

"மனிதனிடம் அறிவு உறங்கும்போது, கீழான ஆசைகள் தோன்றி வாழ்வை சீர்குலைத்துவிடும். நல்லறிவு இல்லாததால் தான் தீமைகள் ஏற்படுகின்றன' என்றார் பிளாட்டோ. நீதி என்பது மனிதப்பண்பு எனச்சொன்ன பிளாட்டோ, புத்தரைப் போலவே - அதிகப்படியான ஆசையே துன்பங்களுக்கு காரணம் - என்றார். வாழும்போதே மக்களின் பேராதரவினையும், மதிப்பையும் பெற்றவர் பிளாட்டோ, அவர் தனது என்பதாவது வயதில் இறந்தபோது ஏதென்சு நகரமே துக்கம் அனுசரித்ததாம். விரிந்த சிந்தனையும் பரந்த உள்ளமும் எப்போதுமே மக்களின் பாராட்டுக்களை பெறும். உலகம் அவர்களைப் போற்றும். 


Pin It
அன்பான குழந்தைகளே!

thazir

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

இனிவரும் மாதங்களில் நிறைய திருநாள்கள் வருகின்றன. ஊரும், வீடும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். நீங்களும் புதுத்துணிளை அணிந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இனிப்புகளையும், பலகாரங்களையும் சாப்பிடுவீர்கள். உறவினர்களின் வீடுகளுக்குப் போய் வருவீர்கள். உறவினர்களை வரவேற்பீர்கள்.

திருவிழா என்பது எப்போதுமே மகிழ்ச்சியானது தான். அப்போது பனி கவிவதுபோல நமது மனங்களில் மகிழ்ச்சி கவிந்து கொள்கிறது. துக்கமோ, கவலையோ ஓடிப்போய் விடுகிறது. திருவிழாக்களும், திருநாட்களும் பக்திக்காக உருவாக்கப்படவில்லை. மனிதர்கள் ஒன்றாகக் கூடி மகிழவே அவை உருவாக்கப்பட்டன. ஆனால் அவற்றை தந்திரமாக பிற்காலங்களில் பக்திக்காக மாற்றிக் கொண்டனர்.

இத்திருவிழா காலங்களில் நீங்கள் ஒற்றுமையை, கூட்டுறவை கற்றுக் கொள்ளவேண்டும். உங்களிடம் அதிகமான பணமோ, பொருட்களோ இருந்தால் பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும். ஏழ்மையிலும், தேவையிலும் இருக்கும் நண்பர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து, அவர்களோடு திருவிழாவையும் திருநாளையும் கொண்டாடி மகிழ வேண்டும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எளிமையாக, ஆனால் நிறைவாக கொண்டாட வேண்டும். திருவிழா என்பது மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் வெளிப்பாடு என்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால் புரிந்து கொள்வீர்கள்.

மாற்றங்களை நோக்கி...

புதிய சிந்தனைகளை செயல் வடிவாக்குவது வளர்ச்சியின் ஓர் அவசியம். அறிவு வளர்ச்சியில் மட்டுமின்றி எல்லாத் துறைகளுக்குமே இது பொருந்தும். தலித்திய நோக்கில் குழந்தைகளுக்கு ஒரு மாத இதழ் இருந்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது; உடனடியாக அதற்கு செயல்வடிவம் தர எண்ணி, "தலித் முரசி'லேயே எட்டுப்பக்கங்களை ஒதுக்கி "தளிர்' தொடங்கினோம். கடந்த மார்ச்சில் தொடங்கிய "தளிர்' மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. எட்டுப்பக்கங்களில் தான் எதையும் சொல்லியாகவேண்டும் என்ற வரையறை வேறு. ஆனாலும் "தளிர்' பெரிய வரவேற்பு பெற்றதை வாசகர் கடிதங்களும், தொலைபேசி வழி உரையாடல்களும், நேர்கருத்துகளும் தெரிவித்தன. "தளிர்' பகுதியில் வெளியான குழந்தைப் பாடல்களும், கதைகளும், ஓவியங்களும், கட்டுரைகளும் பாராட்டைப் பெற்றன. அப்பக்கங்களில் குழந்தைகளின் ஆக்கங்களும் இடம் பெற்றன.

"தளிர்' பகுதி வந்ததால் "தலித் முரசி'ன் வழக்கமான பகுதிகளில் சில இடம் பெற முடியாமல் போயின. இதழின் ஓட்டத்தையும், அடர்த்தியையும் இப்பகுதி குறைப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் "தளிர்' நிறுத்தப்படவில்லை. ஆனால் "தலித் முரசு' 13ஆம் ஆண்டில் நுழையும் தருணத்தில் - அதன் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் சில மாற்றங்களை மேற்கொள்ள இருக்கிறது. இச்சூழலில், குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு என்று தனியாக ஓர் இதழ் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்பதால், "தளிர்' பகுதி இவ்விதழுடன் நிறுத்தப்படுகிறது.

சூழலும், போதிய நிலைத்தன்மையும் உருவாகும் போது "தலித் முரசே' குழந்தைகளுக்கான ஒரு தனி இதழைக் கொண்டு வரும். ஆனால் இனி குழந்தைகள் உரிமை தொடர்பான செய்திகளையும், கட்டுரைகளையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து வெளியிடும். "தளிர்' பகுதிக்கு பதிலாக இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான ஆய்வுகள், புதியவர்களின் பக்கங்கள் ஆகியவை தொடர்ந்து "தலித் முரசி'ல் இடம் பெறும்.
Pin It