ஏப்ரல் 30. மாலை. உலகத் தொழிலாளர்கள், மறுநாள் பிறக்கவிருக்கும் மேதின கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கும் நேரம். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள மூன்று தலித் கிராமங்களோ பெரும் சோகத்தில் மூழ்கி இருந்தன. திடீரென ஏற்படும் மரணம் உருவாக்குகின்ற பீதி, துக்கம், அதிர்ச்சி, நம்பிக்கையின்மை, மனித வாழ்வின் மீதான குழப்பம் ஆகியவற்றால் நடுங்கிக் கொண்டிருந்தன அக்கிராமங்கள். சக மனித உயிரின் முக்கியத்துவத்தையும், சட்ட விதிகளின் எச்சரிக்கைகளையும் புறக்கணித்துவிட்டு - தோல் பதனிடும் தொழிற்சாலையின் கழிவுநீர்த் தொட்டிகளில் ஒப்பந்தக்காரர்களாலும், முதலாளிகளாலும் இறக்கி விடப்பட்ட 5 தலித் தொழிலாளர்கள் - நச்சுவாயு தாக்கி இறந்த செய்தி, அத்தொழிலாளர் உடல்களின் சூடு ஆறுவதற்கு முன்னமே அக்கிராமங்களை எட்டிவிட்டது. தொழிலாளர்களின் பாதுகாவலர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்டிருக்கிற, நம் நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அப்போதுதான் மேதின அறிக்கையை எழுத உட்கார்ந்திருப்பார்கள். அதற்குள் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டு, தமது உயிரைக் குழைத்து மேதின செய்தியை எழுதிவிட்டார்கள் அந்த 5 தொழிலாளர்கள்! அவர்கள் தமது மரணத்தால் விடுத்த செய்தி இது தான்: தொழிலாளர்களுக்கு, குறிப்பாக தலித் தொழிலாளர்களுக்கு இந்த நாட்டில் உயிர் பாதுகாப்பில்லை.
மக்கள் பிரதிநிதிகள் ஆளுகின்ற இந்த ஜனநாயக நாட்டில் அரசை நடத்துகிறவர் களும், அரசியல் நடத்துகிறவர்களும் குட்டி அரசர்கள் போலத்தான் வாழ்கின்றனர். அந்தத் தனி மனிதர்களின் பாதுகாப்புக்கென செலவழிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் ஒரு சிறு பங்கினை செலவழித்திருந்தால் கூட, இந்த தலித் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்! தலைவர்களுக்கு "இசட்' பிரிவு பாதுகாப்பு, மக்களுக்கோ ‘ஜீரோ' பாதுகாப்பு.
வாணியம்பாடியில் மட்டுமே 110 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஒன்று "ஜிலானி தோல் பதனிடும் தொழிற்சாலை' இத்தொழிற்சாலையின் உரிமையாளர் ஜிலானி, அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு முகமது கலீம், இர்சாத் சுபேல், பசலூர் ரகுமான், சப்ருல்லா என்பவர்களுக்கு தனது தொழிற்சாலையை குத்தகைக்கு விட்டிருக்கிறார். இவ்வாண்டு ஏப்ரல் 30 அன்றுடன் ஒப்பந்தம் முடிவடைவதால், தொழிற்சாலையை ஜிலானியிடம் ஒப்படைப்பதற்கான முன்தயாரிப்பு வேலைகளில் முகமது கலீம் உள்ளிட்ட அய்ந்து பேரும் இறங்கியுள்ளனர்.
அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தது, சுமார் அய்ந்து மாதங்களாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருக்கும் தொழிற்சாலைக் கழிவு நீர். வாணியம்பாடியில் செயல்படும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரித்து அகற்றும் பொறுப்பை வாணியம்பாடி கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில் நிறுவனம் ஏற்றிருக்கிறது. இந்நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர்களில் ஒருவரான நாகேஷ் என்பவரிடம் தமது குத்தகை தொழிற்சாலையின் கழிவுகளை அகற்றிவிடும்படி அம்முதலாளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தோல் கழிவுகளை அகற்றித் தருவதற்கு கணிசமானதோர் தொகைக்கு ஒப்புக் கொண்ட ஒப்பந்தக்காரர், தலித் தொழிலாளர்கள் சிலரை இந்த ஆபத்தான பணிக்கு அமர்த்திக் கொண்டு வேலையைத் தொடங்கியிருக்கிறார். வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற நகரங்களில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள், தமது தொழிற்சாலைக் கழிவு நீரை கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி, சூழலுக்கும், உடல் நலத்திற்கும் கேடுவிளைவிக்கும் ஆபத்தான நச்சுப் பொருட்களை அகற்றிய பின்பே வெளியில் விடவேண்டும் என்பது அரசு விதி.
இச்சுத்திகரிப்பை செய்ய தனியே கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு பால்மாறிக்கொண்டு பல தொழிற்சாலைகள் நேரடியாகவே கழிவு நீரை திருட்டுத்தனமாக வெளியே விட்டுவிடுகின்றன. சுத்திகரிப்பு பொறுப்பினை ஏற்றுள்ள ‘வாணிடெக்' நிறுவனமும் தனது பணியை செய்வதில்லை. கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, கழிவு நீரை சுத்திகரிக்காமல் அதுவும் கச்சாவாகவே வெளியில் விடுகிறது. இப்படி நீண்டகாலமாகத் தொடரும் சமூகத்துரோகத் தனமான நடைமுறையின்படி, குறைந்த கூலியைக் கொடுத்து சில தலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, வேலையை முடித்து விடலாம் என்று அந்த ஒப்பந்தக்காரர் நினைத்திருக்கிறார்.
அவர் வேலைக்கு அமர்த்திக் கொண்ட வாணியம்பாடி அருகிலுள்ள சோலூர் கிராமத்தைச் சேர்ந்த சூரிய மூர்த்தி (55) மதனஞ்சேரியைச் சேர்ந்த சரவணன் (30), செங்கல்வராயன் பட்டறையைச் சேர்ந்த சென்றாயன் (35), ஏழுமலை (32), ராமு (29) ஆகிய 5 தொழிலாளர்கள் ஏப்ரல் 30 அன்று மாலையில் தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றுவதற்கு தொட்டிகளில் ஒருவர் பின் ஒருவராக இறங்கியபோது தான் நச்சுவாயு தாக்கி இறந்து போனார்கள். தொழிலாளர்களின் ஏழ்மையையும், அறியாமையையும், வறுமையையும் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து விதிகளை மீறிவருவதால் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன. முதலாளிகளை கட்டுப்படுத்தத் தவறிய, சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை கையூட்டு பெற்றுக் கொண்டு கவனிக்கத் தவறுகிற அரசு அதிகாரிகளும் இம்மரணங்களுக்குப் பொறுப்பாகிறார்கள்.
எனவே, இம்மரணங்கள் ஒருவகையில் கூட்டுக்கொலையே! இன்று முதலாளிகளோ "எங்கள் சொல்லை மீறி இறங்கியதால் செத்தார்கள்' எனச் சொல்லி, பழியை தொழிலாளிகள் மீது போட்டு தப்பிக்க முயலுகின்றனர். அரசு அதிகாரிகளோ தூக்கத்திலிருந்து விழித்தவர்களைப் போல, சுதாரித்துக் கொண்டு அறிக்கைகளை தயாரித்து வருகின்றனர். தோல் பதனிடும் தொழிற்சாலை அதிபர்களைக் கூட்டி 11.05.2010 அன்று வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்கள் இப்படி நச்சுவாயு தாக்கி இறந்து போவது ஒன்றும் புதிதில்லை. இது, கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுவரையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்படி இறந்திருக்கிறார்கள்.
2004ஆம் ஆண்டில் இதே போன்றதொரு விபத்து நடந்தது. அய்.டி.சி. (International Tanning Corporation) எனப்படும் தோல் பதனிடும் நிறுவனத்தில் நடந்த அந்த விபத்தில் நச்சு வாயு தாக்கி மசிகம் கிராமத்தைச் சேர்ந்த சிறீதர், ஆம்பூர் பி-கஸ்பாவைச் சேர்ந்த முருகையன், செல்வராஜ் ஆகியோர் இறந்தனர். தாஸ், முத்து, சுந்தர், ரேணு, கோபி ஆகிய ஏழு தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தனர். 2009ஆம் ஆண்டில் துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ‘அஜிஜுர் ரகுமான் தோல் பதனிடும் தொழிற்சாலை'யில் இதைப் போன்றதொரு விபத்து நடந்தது. இதில் பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த தாஸ், கோவிந்தாபுரம் மோகன் மற்றும் மிட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியும் நச்சு வாயு தாக்கி இறந்து போனார்கள். பெரியவரிகம் கந்தன், வெங்கடேசன் என்கிற இரு தொழிலாளர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நச்சுவாயு தாக்கி இறந்ததை தொழிலாளர்கள் நினைவு கூறுகின்றனர்.
மேதினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை நாள். ஆனால், அன்று ஆம்பூர் பெரியாங்குப்பம் இ.சி.டி.சி. (Eastern Chrom Tanning Company) தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 2 தொழிலாளர்கள் கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். இருவரில் ராகவன் என்ற தொழிலாளியின் நிலை கவலைக்கிடமானதாக இருக்கிறது. மேதினத்தன்று தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று விதிகள் கூறுகின்றன. ஆனால் மேலாளர் அழைத்தார் என தொழிலாளர்களை வரவழைத்து, கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதி மீறல்களையும் இத்தொடர் மரணங்களையும் தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது? தொழிற்சாலை ஆய்வுத்துறையும், மாசு கட்டுப்பாடு வாரியமும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? மனிதத் தன்மையற்று பிணந்தின்னும் கழுகுகளாக முதலாளிகள் ஏன் நடந்து கொள்கிறார்கள்? தொழிற்சங்கங்களின் பங்கு என்ன? தொழிலாளர்கள் இடையிலே ஏன் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை?
இம்மரணங்களை முன்னிறுத்தி இக்கேள்விகளுக்கு விடை காண முயன்றால், விடையாய் அறியவருவது இழிமைகள், அலட்சியங்கள், சாதிய நோக்கு, சுயநலம், பண வெறி முதலியவைதான். தோல் பதனிடும் தொழில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரசு பாதுகாப்புடன் நடந்துவரும் ஒரு கொடிய தொழிலாகும். இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகல், போலந்து செக்கோஸ்லேவோக்கியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளிலும் கூட தோல் பதனிடும் தொழில் நடந்து வருகிறது. ஆனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதிலும், மனிதர்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதிலும் இந்தியா, பங்களாதேசுக்குப் பிறகுதான் பிற நாட்டு தொழிற்சாலைகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பங்களா தேசில் ஹசாரிபாக் நகரில் உள்ள "தவுபிக் அலி தோல் பதனிடும் நிறுவனம்' ஆபத்து மிகுந்த தோல் கழிவுகளை கோழி தீவனமாக மாற்றி விற்பதாக செய்திகள் வந்தன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை (sos_arsenic.net) மேற்சொன்ன நாடுகளில் பலவும் இன்று தோல் பதனிடுவதற்கான வேதிப்பொருட்களை விற்பனை செய்வதில் இறங்கியுள்ளன. ஆனால் அந்த மேற்கத்திய நாடுகள் எவையும், தோல்பதனிடும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் கொடிய மாசுப்பொருட்களைப் பாதுகாப்புடன் எப்படி அப்புறப்படுத்தலாம் என்பதை சொல்லித் தருவதில்லை. தோல் பதனிடும் தொழிலில் உருவாகும் கழிவுப் பொருட்கள், அணுக்கழிவுகளுக்கு இணையான நச்சுத்தன்மை கொண்டவை என்றுகூட சொல்லிவிடலாம்.
தோல் பதனிடுவதற்கு பழைய முறை ஒன்று இருந்தது. அம்முறைப்படி, தோலில் உள்ள முடி, சதைத் துணுக்குகள், ரத்தம் ஆகியவற்றை நீக்க அதை சிறுநீரில் ஊறவைப்பார்கள். நீர்த்த சுண்ணாம்பும், உப்புக்கரைசலும் பயன்படுத்தப்படும். முடி நீக்கியபிறகு நாய் அல்லது புறாவின் கழிவில் தோல்களை போட்டு அடிப்பார்கள். பின்னர் செடார் மர எண்ணைய் பூசப்படும். பின்னர் தாவரப் பொருட்களைப் பயன்படுத்தி பதனிடும் முறை வந்தது. இம்முறையில் மரப்பட்டைகளும், இலைகளும் பயன்படுத்தப்பட்டன.
இன்று நவீன பதனிடு முறை வந்துவிட்டது. இம்முறையில் உப்பு மற்றும் சுண்ணாம்போடு பல்வேறு வேதிப்பொருட்களும் நொதி (enzymes)களும், நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நவீன முறையில் குரோமியம் எனும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி செய்யப்படும் பதனிடும் முறை, மிக வேகமான பதனிடு முறையாகும். இம்முறையினால் தோல் பதனிடப்படும்போது அது நீல நிறமாக மாறுவதால் இப்பதனீட்டு முறைக்கு "நீர்ம நீல முறை' (wetblue) என்றும் ஒரு பெயர் உண்டு. இந்த நவீன முறைகளில் மிகவும் நச்சுத்தன்மையும், ஆபத்தும் மிகுந்த 250 க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சோடியம் சல்பைடு, சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் ஹைடிரோசல்பைடு, ஆர்செனிக் சல்பைடு, கால்சியம் ஹைடிரோ சல்பைடு, டைமீதைல் அமைன், கந்தக அமிலம், பெண்டா குளோரோ பீனால், சைனைடு, காட்மியம், குரோமியம், ஆர்செனிக், ஜிங்க் அமோனியம் பைகார்பனேட், குரோமிக் அசிடேட், எதிலின், கிளைகால், மோனோ ஈதைல் ஈதர், மீதைல் அமைன், ஓ - நைட்ரோ பீனால், டொலின் டை - அமைன், 2, 4, 5, - டிரைகுளோரோபினால், ஜிங்ஹைடிரோ சல்பைட், ஜிங் சல்பேட், டிரெட்- பியூடலமைன், காட்மியம் நைட்ரேட், காட்மியம் (டிடி) அசிடேட், காப்பர் (2) நைட்ரேட், 1, 4 - 1, 8 டைகுளோரோ நாப்தலின், நிக்கல் சல்பேட், 0-சைலின், ஜிங்க் நைட்ரேட் என நீளும் வேதிப்பொருட்களின் பட்டியலில் பெரும்பான்மையானவை - தோலில் உள்ள முடி, சதைத் துணுக்குகள், ரத்தம் ஆகிய புரதப் பொருளை நீக்கவே பயன்படுகின்றவை ஆகும். அதன்பிறகு நடைபெறும் வண்ணமிடுதலுக்குப் பிற வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன. இப்பதனிடுதலின் போது வெளியேற்றப்படும் திடக்கழிவுகளும், திரவக் கழிவுகளும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகும்.
இவ்வளவு கொடுமையானதும், சுகாதாரக் குறைவானதும் ஆபத்து மிக்கதுமான தோல் பதனிடும் தொழிலுக்கும், தோல் கழிவுநீரை அகற்றுவதற்கும் தலித் தொழிலாளர்களே பயன்படுத்தப்படுகிறார்கள். இத்தொழிலின் போது ஏற்படும் விபத்துகளில் இறப்பதும் அம்மக்களாகவே இருக்கிறார்கள். இத்தொழிற்சாலைகளில் வீசும் கொடுமையான கவிச்சை நாற்றத்தையும், வேதிப்பொருட்களினால் வரும் அழுகிய முட்டை வாடையையும் ஒரு நிமிடம் கூட பிறரால் நுகர்ந்து கொண்டு நிற்க முடியாது. ஆனால், தலித் தொழிலாளர்கள் இவற்றைப் பொருட்படுத்தாமல்தான் வேலையை மேற்கொள்கின்றனர். மழை பொய்த்துப்போய், விளைநிலங்கள் மாசுபட்டுக் கிடக்கும் வேலூர் மாவட்டத்தில் தலித் மக்களுக்கு தோல்பதனிடுதல், காலனி தயாரிப்பு, பீடி தயாரிப்பு போன்ற தொழில்களை விட்டால் வேறுவழியில்லை.
அம்மக்களிடையே நிலவும் அறியாமையையும், வறுமையையும் தோல்தொழிற்சாலை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை மரணப் பள்ளங்களில் தள்ளி வருகின்றனர். தோல் தொழில் மூலம் அரசுக்குப் பெருமளவில் அன்னிய செலாவணி வருவதால், தொழிற்சாலைகளை செல்லப்பிள்ளைகளாகப் பாவிக்கிறது அரசு. கோடிக்கணக்கில் மானியங்களை வழங்குகிறது. ராணிப்பேட்டையில் கட்டப்பட்டுவரும் ஆர்.ஓ. (Reverse Osmosis Efluent Treatmentt) நிலையத்துக்கு மய்ய அரசும், மாநில அரசும் இணைந்து 19.06 கோடியை வழங்கியுள்ளன. இது, மொத்த திட்ட மதிப்பான 29.8 கோடியில் இரண்டு பங்கு தொகையாகும். வாணியம்பாடியிலோ 60.5 கோடியில் ஆர்.ஓ. நிலையம் உருவாகி வருகிறது. 1991இல் 15 கோடியில் தொடங்கப்பட்ட "வாணிடெக்' நிறுவனம் இன்று 75 ஏக்கர் பரப்பளவில் 65 கோடி மதிப்பீட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஆனால் ஒவ்வோர் அரசும் இத்தொழிற்சாலை முதலாளிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதால், சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பறிபோகும் என பயந்து ஒவ்வோர் முறையும் இவ்விபத்துகளின் போது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருகின்றன.
இறந்தது நாதியற்ற தலித் மக்கள் தானே என்று நினைக்கிறது அரசு! கடந்த இருபது ஆண்டுகளாக தோல் தொழிற்சாலைகளில் நச்சு வாயு தாக்கி இறந்த தலித் தொழிலாளர்களுக்கு, அரசு இழப்பீடு எதுவும் வழங்கியது இல்லை. ஆனால் இப்போதுதான் இழப்பீடு வழங்க முதன்முறையாக முன்வந்துள்ளது. ஏப்ரல் 30 அன்று நடந்த விபத்து மீதான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை 3.5.2010 அன்று சட்டமன்றத்தில் கொண்டு வந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார், அவரைத் தொடர்ந்து பேசிய அப்துல் பாசித், ஞானசேகரன், டி.கே.ராஜா, லதா, சிவபுண்ணியம், ஞானதாஸ் ஆகிய பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையைத் தொடர்ந்தே அரசு இழப்பீட்டை அறிவித்துள்ளது.
ஏற்கனவே தொழிற்சாலை நிர்வாகமும் ஒப்பந்தக்காரரும் சேர்ந்து, இறந்த தொழிலாளர்களுக்கு தலா 3,85,000 ரூபாய் வழங்குவதாக ஒப்புக் கொண்டு விட்டது. எனவே, மீதித்தொகையை சேர்த்து 5 லட்சம் ரூபாயாக அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளது. அப்படியெனில் அரசு வழங்குவது 1.15 லட்சம் மட்டும்தான். போன மாதம் சிறுத்தையால் அடிபட்டு இறந்த சிறுவனுக்கு வழங்கிய 2 லட்சம், ஏ.டி.எம். காவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளருக்கு வழங்கிய 7 லட்சம் போன்ற அரசு இழப்பீடுகளைப் பார்க்கும்போது இது மிகவும் குறைவு. அரசு ஊதியம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு அதிக இழப்பீடு! அன்றாடங் காய்ச்சி தொழிலாளிக்கு குறைவான இழப்பீடு என்று வருத்தப்படுகின்றனர் தொழிலாளர் குடும்பத்தினர். ஆனாலும் அரசுக்கு வழங்கிய தொகைக்காகவும் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்காகவும் பாராட்டைத் தெரிவித்தாக வேண்டும்.
வேலூர் தொழிற்சாலைகளின் ஆய்வாளரும், மாசு கட்டுப்பாடு வாரியமும் தொழிற்சாலைகளை கண்காணிப்பதில் அலட்சியமாய் இருந்தது, இத்தொழிலாளர்களின் மரணத்தின் வழியே தெரியவந்துள்ளது. வேலூர் தொழிற்சாலைகளின் ஆய்வாளர் முகமது கனி, முதலாளிகளுக்கு ஆதரவு நிலை எடுப்பவராக இருக்கிறார் என்ற கருத்து நிலவுகிறது. தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் கழிவு நீரை அகற்ற பல நடைமுறைகள் உள்ளன. கழிவு நீர்த்தொட்டிகளை எந்திரங்கள் மூலம் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். மிக மிக அவசியமான சூழலில்தான் தகுந்த பாதுகாப்பு கருவிகளோடு தொழிலாளர்களை தொட்டியினுள்ளே இறக்க வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டிகளை திறந்தே வைத்திருக்க வேண்டும். அவற்றை சுத்தப்படுத்துவதற்கு முன்னால் பல மணி நேரத்துக்கு அவற்றைத் திறந்து விட வேண்டும். நன்னீரை அத்தொட்டிகளில் ஊற்றி கழிவு மற்றும் நச்சு வாயுவின் செறிவை குறைக்க வேண்டும். பதனிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சையனைடு எனும் நச்சுப் பொருளால் உருவாகக் கூடிய ஹைட்ரஜன் சையனைடு வாயுவும், ஹைட்ரஜன் சல்பைடு வாயுவும், குரோமியம் ஹைட்ராக்சைடு வாயுவும் ஆட்களைக் கொல்லும் தன்மையுடையனவாகும். இந்த வாயுக்கள் கழிவுநீரில் உருவாகக்கூடியவை. மேற்சொன்ன எந்த பாதுகாப்பு நடைமுறையையும் தொழிற்சாலை நிர்வாகம் செயல்படுத்துவதில்லை. மாசுக்கட்டுப்பாடு வாரியம் தோல் கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை வகுத்திருக்கிறது. திட மற்றும் திரவக் கழிவுகளை எந்த தொழிற்சாலை அகற்றினாலும் - அதை வாரியத்துக்கும், CETP எனப்படும் பொது சுத்திகரிப்பு ஆலையின் பாதுகாப்பு அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டும். அந்த பாதுகாப்பு அதிகாரியின் முன்னிலையில்தான் எந்திரத்தைக் கொண்டோ, தொழிலாளர்களைக் கொண்டே கழிவுகள் அகற்றப்பட வேண்டும்.
கழிவு நீர்த்தொட்டிகளை சுத்தப்படுத்த, வாரியத்திடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறவேண்டும். கழிவுநீரை அகற்றும்போது பாதுகாப்பு கருவிகளான நச்சு வாயு அறியும் கருவி, கையுறைகள், பரிசோதனைப் பெட்டி, முகக் கவசம், காலுறைகள், கண் பாதுகாப்பு கண்ணாடி போன்றவை கட்டாயம் உடனிருக்க வேண்டும். (மாசு கட்டுப்பாடு வாரியக் கடிதம், நாள்: 1.6.2009) தோல் தொழிற்சாலை கழிவுகள் தேக்கி வைக்கப்படும் இடங்களைச் சுற்றி வேலியிட்டு "ஆபத்து' பலகையை வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிகள் கூறுகின்றன. ஆனால், இந்த விதிகளில் ஒன்றுகூட பின்பற்றப்படுவதில்லை என்பதே தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் உண்மை.
இதைவிடக் கொடுமை, இவ்விதிகளை உருவாக்கிய மாசுக்கட்டுப்பாடு வாரியமே இவை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்த இரு அரசுத்துறைகளின் அலட்சியத்தால் இன்று வேலூர் மாவட்டம் உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்துள்ள இடமாக அறியப்பட்டுள்ளது. தோல் நோயும், எல்லா வகையான புற்றுநோய்களும், இளம் வயதிலேயே முதுமையும், நோய் எதிர்ப்பு குறைபாடும் உடைய மக்களாக இம்மாவட்டத்தின் மக்களை இத்துறைகளும் தொழிற்சாலைகளும் மாற்றியுள்ளன.
இத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக எல்லா கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தொழிற்சங்கங்களை நடத்துகின்றன. ஆனால் இறந்த தொழிலாளர்களுக்காக சி.அய்.டி.யு மட்டுமே 6.5.2010 அன்று மிகக்குறைவான ஆட்களை வைத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. அதுவும் கூட மழையினால் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது. வேறு எந்தத் தொழிற்சங்கமும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முன்வரவில்லை.
மரணமடைந்த தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேசி இழப்பீடு பெற்றுத்தர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னின்று, சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை ஏப்ரல் 30 இரவே நடத்தியது. இதில் பிற கட்சிகள் சிலவும் பங்கேற்றன. தொழிலாளர்களின் உறவினர்களும் உறுதியோடு இருந்தனர். அதனால்தான் தொழிற்சாலை நிர்வாகம் பணிந்தது. ஆனால் இதுபோன்ற இறப்புகளை காசாக்கும் வழியிலேயே பல அரசியல் அமைப்புகள் குறியாக இருப்பதாக தொழிலாளர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே தான் இருக்கின்றன. தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்காத நிலையே நீடிக்கிறது. உண்மையாகவே தொழிலாளர்களுக்காகப் போராட விரும்பும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது சதி திட்ட வழக்குப் போட்டு முடக்க நினைக்கின்றனர் முதலாளிகள். சங்கங்கள்தான் நமது முதல் எதிரிகள் என்ற கருத்தை தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களிடையே உருவாக்கி வைத்திருக்கிறது.
தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இ.எஸ்.அய். 1948, மற்றும் டபிள்யூ.சி.1972 சட்டங்கள் மூலம் 10 முதல் 20 லட்சம் வரை இழப்பீடு பெறுவதற்கு வழியிருக்கிறது. இருந்தும் இதுவரையிலும் இத்தோல் தொழிற்சாலைகளில் விபத்துகளின் போது இறந்த ஒரு தொழிலாளியின் குடும்ப வாரிசுகளும் இம்மாதிரியான இழப்பீடுகள் எதையுமே பெற்றதில்லை. இதிலிருந்தே தொழிற்சாலை நிர்வாகத்தின் தப்பித்தல் போக்கையும், சில சங்கங்களின் உள்குத்து வேலையையும் நாம் ஊகித்து விடலாம்.
இதுபோன்ற விபத்துகளில் இறந்தவர்களின் தகவல்களை சேகரித்து, அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வேலூரில் இயங்கும் குடிமக்கள் நலச் சங்கமும், நுகர்வோர் பாதுகாப்பு மன்றமும் கோரிக்கை விடுத்துள்ளன. அரசு உடனடியாக இத்தொழிற்சாலைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றின் பாதுகாப்பு பற்றிய செய்திகளை வெளியிட வேண்டும். தவறிய தொழிற்சாலைகளை மூடவேண்டும். அரசு கூட்டிய தோல் தொழிற்சாலை முதலாளிகளின் கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் பேசும்போது, “இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு தரலாம்; உயிரைத் திருப்பித் தரமுடியுமா?'' என்ற வினாவினை எழுப்பியிருந்தார். அக்கேள்வியை அடியொட்டி அரசு இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்கள் எல்லாருமே குழந்தைகளையும், சிறுவர்களையும் கொண்ட தொழிலாளர்கள். ஒரு தொழிலாளியின் இளம் மனைவி கருவுற்று இருக்கிறார். தந்தையற்ற அக்குழந்தைகளுக்கு இந்த இழப்பீடு எதுவுமே செய்துவிடாது. இறந்தது
5 தொழிலாளர்களல்ல, 5 தலைமுறைகள் என்பதே உண்மை. மேலும் மேலும் இதுபோன்ற தலைமுறை பலிகளை வாங்காதிருக்க, இத்தருணத்தில் தேவையானது இழப்பீடுகள் மட்டுமல்ல; குற்றவாளிகளின் மீதான கடும் நடவடிக்கையும், தடுப்பு நடவடிக்கைகளும்தான்.
- நல்லான்