பெரும் போர்களும், கொடும் பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், அணுக்கதிர் வீச்சும், நிலநடுக்கம், ஆழிப்பேரலை என்பன போன்ற இயற்கைப் பேரழிவுகளும் மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை நீண்டகால அளவிலே ஏற்படுத்தக்கூடியவை. இப்பட்டியலில் சாதியையும் இணைக்க வேண்டும். அணுக்கதிர் வீச்சு அடங்குவதற்கு 45 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்கிறது அறிவியல். பன்னூறு ஆண்டுகளாக இந்தியாவையும் சில ஆசிய நாடுகளையும் பிடித்துள்ள சாதிவெறி வீச்சும்கூட அடங்குவதற்கு அத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது, 7.11.2012 அன்று நடந்த தருமபுரி சாதிய வெறியாட்டம்.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய்க்கு அருகிலிருக்கும் நத்தம், அண்ணா நகர், கொண்டாம் பட்டி தலித் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சாதிய வெறியாட்டம் ஏற்படுத்திய அலை இன்னமும் அடங்கவில்லை. மக்கள் அந்த வன்முறைகளைப்பற்றி ஓயாமல் பேசிக்கொண்டுள்ளனர். ஊடகங்கள் இன்னும் விவாதம் நடத்துகின்றன. இதழ்கள் இன்னமும் செய்திகளை அச்சேற்றுகின்றன. வியட்நாமில் அமெரிக்க வல்லாதிக்கம் வீசிய நாபாம் குண்டுகளைப்போலவும், ஈழத்தில் ராஜபக்சேவின் இனவெறி அரசு வீசிய கொத்து குண்டுகளைப்போலவும் தமிழ்நாட்டில் ஒரு சாதி அரசியல் கட்சி வீசிய வன்முறை குண்டு துகள் துகளாக வெடித்துச்சிதறி மேலும் தொடர் வெடிப்புகளை ஏற்படுத்திக்கொண்டேயுள்ளது. அவ்வன்முறையின் கோர முகம் சாதி மனங்களை மேலும் இறுகிப்போகச் செய்திருக்கிறது. சாதி ஆதிக்க அமைப்புகள் வெட்கமும், நாகரிகமும் இன்றி வெளியே வந்து செயல்படத் தூண்டியுள்ளது.

எந்த முகாந்திரமுமின்றி சக மனிதனின் மீது இன்னதென்று வரையறுக்க முடியாத வெறுப்புணர்வை இது உருவாக்கியிருக்கிறது. அங்கங்கே கண்ணுக்குத் தெரியாதபடி வன்முறை நெருப்பு கங்குகளை புகைய வைத்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டுமின்றி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையையே பாழடித்திருக்கிறது. இவ்வன்முறையைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பாச்சாரப்பாளையம், மேலிருப்பு ஆகிய இடங்களிலும் ஆதிக்கச்சாதியினரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. இரு ஊர்களிலும் தலித் மக்களின் 17 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் உருவான பீதியும், வெறுப்பும், வன்மமும் அம்மாவட்டத்திலிருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்தியுள்ளது. நடைபெற்ற பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் இம்மாவட்டத்து மாணவர்கள் சரியாக தேர்வு எழுதவில்லை. எனவே, இம் மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காடு பனிரெண்டாம் வகுப்பில் 8.46 சதவிகிதமும், பத்தாம் வகுப்பில் 5.89 சதவிகிதமுமாகக் குறைந்துள்ளது ("தி இந்து' – 6.4.2013)

தருமபுரி சாதி வன்முறைக்கு ஓர் ஊடகமாக செயல்பட்டது நத்தம் காலனி இளவரசன், வன்னியப்பெண் திவ்யாவை காதல் மணம் புரிந்ததுதான். சாதிமீறும் திருமணங்களை தடுத்தே ஆகவேண்டும் என்று கொலை வெறிக் கூச்சலிடும் ஆதிக்கச் சாதி தலைவர்களுக்கு இதை சகிக்க முடியவில்லை. அப்பெண் முழுவிருப்பத்துடன் தான் இளவரசனுடன் போனேன்; திருமணம் செய்து கொண்டேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் அளித்தபிறகும் அதை நாடகம், கடத்தல் என்று பா.ம.க., வினர் சொல்லி வருகின்றனர். தன் மகளின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட நாகராஜை “பறையனின் மாமனார்” என்று கேலி செய்தும், “மகளைப் பிரித்துவிடு” என மிரட்டியும் ஓயாமல் தொல்லை செய்த "மூளைச் சலவை' செய்யப்பட்ட சொந்த சாதிக்காரர்களால் அவமானமடைந்து அவர் "தற்கொலை' செய்து கொண்டார்.

இளவரசன், திவ்யா ஆகியோரின் திருமணம் நடந்த ஒருமாத நீட்சி நாகராஜின் தற்கொலையில் முடித்துவைக்கப்பட்டதோடு, ஒரு மாத காலமாக திட்டமிடப்பட்டுக்கொண்டிருந்த கொடுஞ்செயலும் 7.11.2012 அன்று மாலை அரங்கேற்றப்பட்டது. நாகராஜின் பிணத்தை நெடுஞ்சாலையில் கிடத்திவிட்டு, சாலையோர மரங்களை அந்த மூன்று கிராமங்களுக்கும் உள்ளே யாரும் நுழைய முடியாதபடி வெட்டிப்போட்டு, தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. 268 வீடுகள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டன. வீடுகளில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. 54 வாகனங்கள் எரியூட்டப்பட்டன. ஊர் கோயில் நகைகளும் கூட கொள்ளைபோயிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். வன்னியப் பெண்களும் சிறுவர்களும் கூட இக்கொடுஞ்செயலில் ஈடுபடுத்தப் பட்டதாக சொல்கிறார்கள். வன்மமும் வெறுப்பும் கூட்டுச்சக்தியாக திரளும்போது அது பேரழிவை ஏற்படுத்தும் வன்முறையாக உருவெடுத்துவிடுகிறது. தலித் மக்களின் மீது நடத்தப்படும் அனைத்து வன்முறைகளும் இப்படியே உருக்கொள்கின்றன. திருவிழாவில் திளைக்கும் கூட்டுக்களியாட்ட மனநிலையைப்போல் இது கூட்டுவெறி மனநிலை. நாட்டை உலுக்கிய கயர்லாஞ்சி, ஜஜ்ஜார், சுண்டூர், கொடியங்குளம், குண்டுப்பட்டி, புளியூர், மங்களாபுரம் என பல கூட்டுவெறி சூறையாடல்களையும், வன்கொடுமைகளையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

தங்களது உடைமைகளை முற்றிலுமாய் இழந்துவிட்ட தலித் மக்கள் மாற்றுத் துணிகூட இன்றி வாரக்கணக்கில் அவதிப்பட்டதோடு, நடுத்தெருவில் சமைத்து உண்டு உறங்கியிருக்கிறார்கள். “தீபாவளி அன்று எல்லா குழந்தைகளும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தபோது, எங்கள் குழந்தைகள் தட்டை கையில் ஏந்தி ஒரு வேளை சாப்பாடு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தனர். அன்று நாங்கள் பட்டினி கிடந்தோம். விடிய விடிய காட்டுக்குள் பாம்பு பல்லிகளுக்கு நடுவே பதுங்கியிருந்தோம். ஒரு பெண் உயிருக்கு பயந்து ஓடிய போது தடுக்கி விழுந்தாள். அவள் வைத்திருந்த பிறந்து 3 மாதத்தில் மூளை ஆபரேஷன் செய்யப்பட்ட குழந்தை இறந்து விட்டது.” சு இப்படி பொது விசாரணையில் தலித் பெண்கள் சொன்ன கொடூர அனுபவங்கள் பல.

மாலை நான்கு மணிக்கு தொடங்கிய வெறியாட்டம் இரவு ஏழு மணி வரை நீடித்திருக்கிறது. காவல்துறையோ, தீயணைப்பு வண்டிகளோ வரவில்லை. ஆனால் அங்கு காவலுக்கு 30 காவலர்களைப் பணியமர்த்தியதாக மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அங்கு காவலர்கள் இல்லை என்றால் தாக்குதலை அனுமதித்து மவுனம் காத்ததாகவும், இருந்திருந்தால் வேடிக்கைப் பார்த்ததாகவும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பிறகு எதற்கு ஓர் ஆய்வாளரையும், ஒரு துணை ஆய்வாளரையும், காவலர் ஒருவரையும் இத்தாக்குதலை முன்னறிந்து தெரிவிக்காததற்காக அரசு பணியிடை நீக்கம் செய்தது என்று தெரியவில்லை!

இதுதொடர்பாக, “அரசின் மெத்தனம் இத்தாக்குதலை தடுக்காததற்கான முதற்காரணம் என்று சொல்ல முடியும். உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்து இருந்துள்ளது” என்று கூறி தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் மக்களின் கருத்தை எதிரொலித்திருக்கிறது. ஊர் ஊராகக் கூட்டம் போட்டு, "வன்னியப் பெண்களை கட்டும் பறையன்களை வெட்டுங்கள்' என்று பேசிய காடுவெட்டி குரு போன்றவர்கள் மீது அரசு முன்னதாகவே கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். கொலை வெறியைத் தூண்டும்படி தான் பேசவில்லை என்று குரு சொன்னாலும், "அவர் அப்படிப் பேசியது தவறு' என்று அன்புமணியே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். மாமல்லபுரம் சித்திரை விழாவுக்குப்பிறகு எடுக்கப்பட்ட உறுதியானதும் சிறப்பானதுமான நடவடிக்கையைப் போல ஒன்றை அரசு எடுத்திருந்தால், அது சாதி ஆதிக்கவாதிகளின் மனதில் ஓரளவுக்கேனும் அச்சத்தை உருவாக்கியிருக்கும். தருமபுரி தாக்குதல் நடந்திருக்காது.

தருமபுரி தாக்குதலுக்கு சாதிமீறிய திருமணமே காரணம் என்று சொல்லப்பட்டாலும் அது மட்டுமே அல்ல; உள்ளே கொதித்துக் கொண்டிருந்த சாதி வன்மத்தை வெளிப்படுத்த உதவிய ஒரு தற்செயல் நிகழ்வு அது. சாதி மீறும் திருமணங்கள் சில கொலையில் முடிகின்றன. தனிமனித அழிப்போடு நின்றுவிடும் அவை மிக அரிதாகவே ஊரையே சூறையாடுவதில் முடிகின்றன. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சாதி மீறிய திருமணம் ஒன்று நடந்ததற்காக ஹரியானாவிலுள்ள பாப்னவா கிராமத்தில் இருந்த தலித் வீடுகள் சிதைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. சாதி மீறி காதல் மணம் புரியும் பல இணைகள் கொல்லப்படுவது இப்போது தமிழகத்திலும் அதிகரித்திருக்கிறது.

மிக அண்மையில் திருவள்ளூரைச் சேர்ந்த ஓர் இளைஞர், தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு நாகர்கோவில் சென்று, சாதி மீறி திருமணம் செய்து கொண்ட தன் தங்கையை கொடூரமாகக் கொன்றுவிட்டு வந்து காவல்துறையிடம் சிக்கியுள்ளான். 2011 இல் தமிழகத்தில் 890 பெண்கள் கவுரவக் கொலையுண்டுள்ளனர். 7,000 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் காதல் மணத்துக்காக இப்படி ஒரு வன்முறை வெறியாட்டம் தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்ததில்லை. இந்த கொடிய வரலாறை இப்போது தொடங்கி வைத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

சாதி மறுத்த காதல் திருமணங்களை எதிர்க்கும் போக்குக்கு அடிப்படை சாதி அகமண முறையில் உயிர்வாழ்கிறது என்பதே. சாதியை மீறவேண்டும் என்று நினைத்துக்கொண்டே ஓர் ஆணோ, பெண்ணோ காதல் புரிவதில்லை. என்றாலும் அவர்கள் தம்மை அறியாமலேயே ஒரு சமூகப் புரட்சியை, கலகத்தை நிகழ்த்துகின்றனர். அம்பேத்கரும், பெரியாரும் வலுவாய் பரிந்துரைத்த சாதி ஒழிப்பு நடவடிக்கையே கலப்பு மணம். ஆனால் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே தமிழகத்தில் நடக்கும் கலப்பு மணம் சாதியை ஒழிக்கும் பணியை அத்தனை தீவிரமாய் செய்துவிடுமென சொல்லிவிட முடியாது. தருமபுரி உள்ளிட்ட ஆண்டுகள் பலவாய் நடந்துவரும் வன்கொடுமைகளுக்கு காரணம் சாதிய வன்மம். சாதியை அதிகாரம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித மனம் இன்னொருவன் மீது அதிகாரம் செலுத்த எப்போதுமே விரும்புகிறது. தலித் மக்கள் பொருளாதார அடிப்படையில் பலவீனமானவர்களாயும், அரசியல் நோக்கில் திரண்டெழாத சக்தியாகவும் இருந்த காலம் போய்விட்டது. தலித் மக்கள் அரசியல் நோக்கில் ஒன்று திரண்டு தம்மீது இழைக்கப்படும் சாதி வன்கொடுமைகளுக்கு உடனடியாக எதிர்வினை புரிகிறார்கள். வன்கொடுமைகளை கேள்வி கேட்கவும், அம்பலப்படுத்தவும், சட்டத்தின் பிடியில் கொண்டுவரவும் முனைப்புடன் போராடுகிறார்கள். மாறிவரும் பொருளாதார சூழல்கள் நிலவுடைமை சமூகத்து ஆண்டான் அடிமை முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.

அண்மைக் காலத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 72 லட்சம் விவசாயத் தொழிலாளிகள் உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட வேறு துறைகளுக்கு மாறிவிட்டதாக பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தொழிலாளர்கள் எல்லோருமே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருபவர்கள். அதிலும் குறிப்பாக காலங்காலமாக வரும் சாதிய மரபுகளை ஏற்கவிரும்பாத இளம் வயதுக்காரர்கள். இவர்கள் ஆதிக்கச் சாதியினரின் வயல்களிலும், தோப்பு துரவுகளிலும் கைகட்டி வேலைக்கு எதிர்பார்த்திருக்க விரும்பாதவர்கள்.

தருமபுரியில் வன்முறை நடந்த பகுதிகளில் வாழும் தலித் ஆண்கள் திருப்பூரிலும், ஓசூரிலும், பெங்களூரிலும் போய் வேலை செய்து பொருளீட்டுபவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். தலித் மக்களிடம் உருவாகத் தொடங்கியிருக்கும் இந்தத் தற்சார்பையும், சுயமரியாதை உணர்வையும் ஆதிக்கச் சாதியினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உயிர்ச்சேதம் செய்தால் உடனே மீண்டெழுந்துவிடுவர். பொருட்சேதம் செய்தால் மீண்டெழ பல ஆண்டுகள் பிடிக்கும். பொருளின்மை தலித் மக்களை மனரீதியிலும் முடக்கிவிடும் என்ற எண்ணத்துடனேதான் வீடுகளை அழித்து, பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் புனியா, தருமபுரி வன்முறையால் ஏற்படுத்தப்பட்ட பொருளிழப்பை சுமார் ஏழு கோடி என மதிப்பிட்டுள்ளார்.

வேறு சாதி ஆண்களால் தம் சாதி பெண்கள் காதலிக்கப்படும்போது பறிபோகும் ஆண் அதிகார நிலை, சாதிமறுப்பு திருமணங்களால் சொத்துகள் வேறு சாதி ஆண்களுக்குப் போய்விடுமே என்ற கோபம் ஆகியவையும் இந்த வன்முறையில் ஒளிந்துள்ளன. காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஆதிக்கச் சாதி பெண்களை, பெற்றோர் முதலில் பாசத்தை காட்டி நைந்து பேசி மாற்ற முயல்கின்றனர். அதற்கு இணங்காமல் உறுதியாக நிற்கும் பெண்ணிடம் "சொத்தில் பங்கு கோர மாட்டேன்' என்று எழுதி வாங்கிக் கொள்கின்றனர். எனவே இங்கு தலித் மக்களின் பொருளாதார தற்சார்பும், இதனால் பறிபோகும் ஆதிக்க சாதியினரின் மேலாதிக்கமும், அதிகாரமும்தான் சிக்கலாக வந்து முன்னால் நிற்கிறது. இந்த உளவியலைத் தூண்டி, சாதி வெறியூட்டி மக்களை ஒன்று திரளச் செய்து அரசியலில் இழந்த தனது செல்வாக்கை திரும்பப் பெறலாம் என்று பா.ம.க. நினைத்து இவ்வன்முறைக்குப் பின்னால் தீவிரமாக செயல்பட்டிருக்கிறது. ஆனால், கிணற்றில் விழுந்தவன் பாம்பை பிடித்துக் கொண்டு தொங்கிய கதையாக மாறிவிட்டது அதன் நிலை.

2

                தருமபுரி வன்முறைக்கு காரணமானவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே என்பதுதான் ஊடகங்கள், மனித உரிமை அமைப்பினர், அரசியல் கட்சிகள், உண்மை அறியும் குழுக்கள் ஆகியவற்றின் உறுதியான கருத்து. இதில் தலித் மக்களை குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இதை ஓயாது சொல்லி வருகிறார்கள். ஆனால், பா.ம.க. அதை இன்றுவரை மறுத்து வருகிறது. அதை மட்டுமின்றி மரக்காணம் கலவரத்தில், ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினரின் கைதையொட்டி தமிழகம் முழுவதும் நடந்தேறிய வன்முறைகள் ஆகியவற்றையும் கூட அது மறுத்து வருகிறது.

தருமபுரி மற்றும் அதற்குப் பிறகான பா.ம.க. வினரின் செயல்பாடுகளை நாம் பட்டியலிட்டாலே ஓர் உண்மைச் சித்திரம் கிடைத்து விடும். தருமபுரி பகுதிகளுக்கு அரசியல் கூட்டங்களில் பேசவந்த குரு, வழக்கமான தனது சாதி வெறிப்பேச்சுகளை நிகழ்த்தியுள்ளார். தாக்குதலை முன்னின்று நடத்தியதாக பா.ம.க. நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊடகங்களில் இத்தாக்குதல் தொடர்பாகப் பேசிவரும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவருமே தாக்குதலை கண்டிக்கவும், அதில் தம் அமைப்புக்கு தொடர்பு இல்லை எனவும் சொல்வதேயில்லை. "தருமபுரி கலவரத்துக்கு பா.ம.க. காரணம் அல்ல' என்று அறிக்கை விட்ட ராமதாஸ், அந்த சாதி வெறித்தாக்குதலை ஓரிடத்திலும் கூட கண்டிக்கவேயில்லை. திவ்யாவின் தந்தை நாகராஜின் இறுதிச் சடங்குகளில் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டதாக எல்லா நாளேடுகளிலும் செய்திகள் வந்தன.

தருமபுரி தாக்குதலுக்குப் பிறகு ராமதாஸ் மிக வெளிப்படையாக தலித் மக்களை இழிவுபடுத்தி பேசத் தொடங்கினார். “தலித் இளைஞர்கள் டி சர்ட், ஜீன்ஸ் அணிந்து, கூலிங்கிளாசுடன் பிற சாதி பெண்களை மயக்கி ஏமாற்றி தம் வலையில் விழவைக்கிறார்கள். பிறகு தமது நாடகக் காதலை நடத்தி பணம் பிடுங்கிக்கொண்டு துரத்திவிடுகிறார்கள். இருபது வயது வரை பெண்ணை வளர்த்த பிறகு திடீரென்று ஒருவன் காதலித்து பெண்ணை கூட்டிச்சென்று விடுகிறான் என்றால் பார்த்துக்கொண்டு இருக்கச் சொல்கிறீர்களா?” என்று எல்லா கூட்டங்களிலும் பேசத் தொடங்கினார். அதோடு நிற்காமல் அனைத்து ஆதிக்கச் சாதியினரையும் (சுமார் 40க்கும் மேல். பெரும்பாலும் "லெட்டர் பேட்' அமைப்புகள்) கூட்டி ஊரூராக கூட்டம் போட்டார். இக்கூட்டங்களில் பேசியவர்களின் உரைகள் சில நாளேடுகளிலும், வார ஏடுகளிலும் பதிவாகியுள்ளன. அத்தனையும் நாகரிக சமூகத்துக்கு சிறிதும் ஒப்புவராத தரம் தாழ்ந்த இழிவான பேச்சுகள். ஆதிக்கச் சாதியினர் இணைந்த "அனைத்து சமூகப் பாதுகாப்பு கூட்டமைப்பின்' அடிப்படை தலித் மக்கள் மீது அவர்கள் கொண்டிருந்த சாதிய வெறுப்பே. "கடத்தல் நாடகத்தால் பெற்றோர் படும் வேதனை'யைக் குறித்து பா.ம.க. வினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் வடிவேல் ராவணன், கவிஞர் ஜெயபாஸ்கரன் போன்ற "அறிவுஜீவி'கள் பங்கேற்றனர்.

சமூக நீதியை இந்தியாவில் முதன்முதலில் முன்னெடுத்த தமிழகத்தில் தான் ராமதாசிஸ் தலைமையில் சமூக நீதிக்கு விரோதமான தலித் அல்லாதார் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மதவெறியை அரசியலாக்கி அதிகாரம் பெற நினைத்த கட்சிகள் இந்தியாவில் உண்டு. ஆனால் சாதியை எந்தக்கட்சியும் கையில் எடுத்ததில்லை. சாதிய தாக்குதல்களில் சில அமைப்புகளோ, சில குழுக்களோ, தனி நபர்களோ ஈடுபட்டாலும் ஓர் அரசியல் கட்சியே அதில் ஈடுபட்டதில்லை. அவ்வகையில் ராமதாஸ் நவீன வரலாற்றின் கருப்பு பக்கங்களில் இடம்பிடித்திருக்கிறார்.

ராமதாஸ் போடுவது தப்புக் கணக்கல்ல; அது கணக்கே அல்ல என்று வரலாறு அவருக்கு திருப்பிச் சொல்லத் தொடங்கியுள்ளது. சமபலம் கொண்டவனை எதிர்த்து மோதுவதுதான் போர்விதி. அவர் இப்போது போரிடுவதோ உயிரே அற்ற ஒரு கற்பனை எதிரியோடு. நாடகக்காதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்கின்ற ஊதிப்பெருக்கப்பட்ட எதிரியோடு. அவர் அரசியல் நடத்த மின்தடை, ஊழல், பண்பாட்டுச் சீரழிவு, ஈழம், மதுக்கடைகள், அழிந்துவரும் விவசாயம், சூழல் சீரழிவு என எத்தனையோ இருக்கின்றன. அவற்றை விடுத்து கண்ணுக்குத் தெரியாத சிக்கல்களை கையிலெடுத்திருப்பதிலிருந்து அவர் ரத்தமும் சதையும் உணர்வும் கொண்ட சகமனிதனை நம்பாமல் சாதியை நம்புகிறார் எனத் தெளிவாகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ராமதாஸ் வன்முறை கும்பல் என்றிருக்கிறார். 30.4.2013 அன்று ராமதாஸ் கைது செய்யப்பட்ட பிறகு பா.ம.க. வினரால் 16 லாரிகள் மற்றும் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 853 அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஓட்டுநர்களும் ஒரு பயணியும் பலியாகியுள்ளனர். சுமார் 165 மரங்கள் வெட்டி எரியூட்டப்பட்டுள்ளன. சுமார் ஒன்பது மாவட்டங்களில் 3,868 தடங்களின் பேருந்துகள் ஒரு வாரத்துக்கும் மேலாக இயக்கப்படவில்லை. கல்வீச்சு, வாகனங்களுக்குத் தீ வைத்தல், வழிமறிப்பு, தாக்குதல், பெட்ரோல் குண்டு வீச்சு, காயப்படுத்துதல், பாலத்தை தகர்த்தல், மரங்களை வெட்டுதல், உணவுக் கிடங்கு, நியாயவிலைக்கடை ஆகியவற்றுக்கு தீ வைத்தல், குடிநீர் குழாயை உடைத்தல், பேருந்துகளை தாக்குதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டதற்காக சுமார் 7,500 பா.ம.க. வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருபதற்கும் மேற்பட்டோர் மீது குண்டர், தேசிய பாதுகாப்பு சட்டங்கள் பாய்ந்துள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் முதல்வரால் சட்டமன்றத்தில் கூறப்பட்டவை. பா.ம.க. ஒவ்வொரு முறையும் வன்முறையை கையிலெடுக்கிறபோது தமிழ்நாடு அல்லாடுகிறது. இதற்கு மேலும் ராமதாஸ் பிற அமைப்புகளை வன்முறை கும்பல் என்று சொல்வாரா எனத் தெரியவில்லை. அப்படிச் சொல்வாராயின் அது முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது.

எங்கள் தொண்டர்கள் அறவழியில் போராடுகிறார்கள் என்று ராமதாசும், அன்பு மணியும் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர்களின் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவதற்கு துணிச்சலும் நேர்மையும் தேவைப்படுகிறது. அது நடந்து முடிந்த "போராட்டம்' எனப்படும் வன்முறைகளில் இருந்ததா? இருசக்கர வாகனங்களில் வந்து ஆளரவமற்ற இடத்தில் பேருந்துகளின் மீது கல்வீசிவிட்டு ஓடிவிடுவது. ஓடும் ரயிலில் பெட்ரோல் குண்டினை எறிவது. பேருந்துகளைப் பின் தொடர்ந்து வந்து தலித் மக்கள் வாழும் நிறுத்தங்களில் நிற்கும்போது கல்லெறிவது (பழியை விடுதலைச் சிறுத்தைகள் மீது போட வசதியாக) இது போலத்தான் இந்த வன்முறைகள் இருந்தன. இதுதான் அறவழி போராட்டம் என்றால் "அறம்' என்ற சொல்லின் பொருளை இனி மாற்றிவிட வேண்டும். ஓர் அரசியல் அமைப்பின் போராட்ட இலக்கு அரசு எனில், ஜனநாயக வழிகளில் தமது எதிர்ப்பை பதிவு செய்து உணர்த்த வேண்டும். தாமே துணிந்து அணியணியாய் சிறைபுக வேண்டும். இதுவே தொண்டர்களுக்கும், கட்சிக்கும் அழகு.

3

                தருமபுரி வெறியாட்டம் பொதுச் சமூகத்தில் மேலும் ஆழமான சாதியப் பிளவை உருவாக்கியுள்ளது. சில படித்த "அறிவீலிகள்' கூட இதை உணர்ச்சியோடு விமர்சித்து பா.ம.க.வுக்கு ஆதரவாகப் பேசுவது நடக்கிறது. எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று மவுனமாக வேடிக்கை பார்ப்பது போல இந்த கொடுமையையும் வேடிக்கை பார்க்கிற மக்கள் திரளால் நிறைந்திருக்கிறது தமிழ்நாடு. தலித் மக்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எதிராக பா.ம.க. நடத்தும் எதிர்ப்பிரச்சாரத்திற்கு சில அமைப்புகளும் மறைமுகமாக துணை போகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் பா.ம.க. வின் தலைமை குழுவினர் தொடர்ந்து சொல்லிவரும் பொய்ப்பிரச்சாரங்கள் சில உண்டு. திவ்யா கடத்தப்பட்டார். தலித் மக்கள் தாங்களே தங்களின் வீடுகளை கொளுத்திக் கொண்டனர். அரசு வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழங்கும் இழப்பீட்டைப் பெற இப்படி செய்தனர் என்பவை அவற்றுள் சில. இதை அப்படியே "சில' முன்னாள் புரட்சிகர தோழர்கள் இப்போது வடமாவட்டப்பகுதிகளில் சொல்லி வருகின்றனர்.

ஈழ மக்களுக்காக வீதிக்கு வந்தவர்களில் பத்து விழுக்காட்டினர் கூட இச்சாதி வெறியாட்டத்தை கண்டித்து வெளியே வரவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தாக்குதலை கண்டித்திருந்தனவே தவிர, அதை நிகழ்த்தியவர்களை கண்டிக்கவில்லை. ஆனால் பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் தலித் மக்களின் பின்னால் நின்றன. திராவிடர் கழகம் சாதி மறுப்பு இணையர்களின் மன்றல் விழாவை நடத்தியது; தருமபுரியில் சாதியொழிப்பு மாநாட்டை கூட்டியது. தந்தை பெரியார் திராவிடர் கழகமும், திராவிடர் விடுதலைக் கழகமும் காதலர் விழா, மநுஸ்மிருதி எரிப்பு மற்றும் சாதி மறுப்பு திருமண ஆதரவு மாநாடு என பல இடங்களில் நடத்தின. ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மநு சாஸ்திர எரிப்பு மாநாட்டில் ஜீன்ஸ் சீருடை அணிவகுப்பு நடந்தது. மார்க்சிய அமைப்புகள் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும், கண்டனப் பொதுக்கூட்டங்களையும் நடத்தின. படைப்பாளிகளும், சமூக ஆர்வலர்களும் தலித் மக்கள் பக்கம் நின்றனர்.

தமிழ்த் தேசியர்கள் வழக்கமாக இதை சகோதரச் சண்டை என்றனர். ஈழத்திற்காக அழுது கொண்டிருக்கும் அவர்களில் சிலரின் கண்களில் திரையிட்டிருக்கும் கண்ணீர் இந்த வன்முறையை பார்க்கமுடியாதபடி செய்துவிட்டது! சாதியம், தமிழ்த்தேசியத்தின் உள்ளே வளரும் புற்றுநோய் என்பதை அவர்களால் உணர முடியவில்லை.

தருமபுரியைத் தொடர்ந்து ஓயாமல் விவாதங்களில் ஈடுபட்ட தொலைக்காட்சி நிலையத்தினர் இரு கருத்து நிலையாளர்களையும் பேச வைத்தனர். கோடிக்கணக்கான பேர் பார்த்திருக்க அவ்விவாதங்களில் பங்கேற்ற எதிர் தரப்பினர் தலித் மக்களுக்கு எதிராகப் பேசி மானுடத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் எதிராகக் குற்றமிழைத்தனர். தமிழ்ச் செய்தியேடுகள் சில சாதி உணர்வாளர்களின் கருத்துகளை மட்டுமே பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. சாதி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றிய செய்திகளை அவை இருட்டடிப்பு செய்தன. "தினமணி' காந்தியமே தீர்வு என்றது தனது தலையங்கத்தில்.

தொலைக்காட்சி விவாதங்களில் தலித் மக்களுக்கு ஆதரவாகவும், சாதிவெறிக்கு எதிராகவும் சுப.வீரபாண்டியனும் மனுஷ்யபுத்திரனும் சலிக்காமல் பேசிக்கொண்டேயிருந்தனர். அவ்வப்போது காட்சி ஊடகங்களில் பங்கேற்ற ஞாநி, அ.மார்க்ஸ், ஓவியா, அருள்மொழி, கொளத்தூர் மணி எனப்பல சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் தலித் மக்களுக்கு ஆதரவான விவாதங்களை எழுப்பினர். இவ்விவாதங்களில் பங்கேற்ற மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் குரல் அழுத்தமாகவும், ஆழமாகவும் ஒலித்தது. தருமபுரி வன்முறை அதைத் தொடர்ந்த சாதி பரப்புரை ஆகியவற்றில் நேரடியாக குற்றம் சாட்டப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடும், திருமாவளவனின் அணுகுமுறையும் அரசியல் முதிர்ச்சியை தமிழகத்துக்கு உணர்த்தியது.

இலக்கியச் சிற்றிதழ்களும், மாற்று அரசியல் ஏடுகளும் தருமபுரி தாக்குதலை குறித்து பதிவு செய்ததில் மிகச் சரியான பங்கை ஆற்றியுள்ளன என்பதை சொல்ல வேண்டும். "ஆனந்த விகடன்', "இந்தியா டுடே' போன்ற வார ஏடுகள் மிகச்சிறப்பானதும் விரிவானதுமான கட்டுரைகளை வெளியிட்டன. "இந்து', "எக்ஸ்பிரஸ்' போன்ற ஆங்கில நாளேடுகள் தொடர்ச்சியாக இத்தாக்குதல் தொடர்பான செய்திகளையும் ஆய்வறிக்கைகளையும் வெளியிட்டபடியே இருந்தன.

4

                ஒரு சொட்டு நீர் கடலில் விழும்போது அது கடலுடன் கலக்கிறது. ஆனால் அதுபோல் சமூகத்தில் வாழ்கின்ற மனிதர்கள் சமுதாயத்தில் அய்க்கியமாவதில்லை என்றார் அம்பேத்கர். இது இந்தியச் சமூகத்தைப் பற்றிய அவரின் கூற்று. இதற்கு காரணமாக அம்பேத்கர் சாதியையே சொல்கிறார். மனிதர்களை ஒட்டும் பசையை கரைத்துவிடும் நீராக சாதி பன்னூறு ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

சாதியை இறுக்கும் கருவியாக இங்கு இந்துமதம் செயல்படுகிறது. அது உருவாக்கி வைத்திருக்கும் ஆதாரமில்லாத புராண கட்டுக் கதைகளை சாதி இந்துக்கள் தமது மேலாதிக்கத்துக்கு துணையாகப் பயன்படுத்துகிறார்கள். (சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியிலிருந்து தெறித்த நெருப்புத்துகளிலிருந்து தாங்கள் உருவானதாக வன்னியர்கள் சொல்லிக்கொள்கின்றனர். இது மாமல்லபுர மாநாட்டில் பேசப்பட்டது) இந்த கட்டுக்கதைகள் எல்லா சாதியினருக்குமே இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் என்ன ஆதாரம் என்று பகுத்தறிவுச் சிந்தனையோடும் அறியியல் நோக்கிலும் இந்து மத திளைப்பில் மூழ்கியிருக்கும் மனங்கள் கேட்பதேயில்லை. அவர்கள் நாவில் ராம நாமமும் கட்கத்தில் கூரிய வாளும் இருக்கின்றன. அவர்கள் முனிவர்களைப்போல பேசுகிறார்கள்; கசாப்புக் காரரைப்போல நடந்து கொள்கிறார்கள்.

சாதி என்பது ஒரு மனநிலை. அது படித்த, படிக்காத எல்லாரிடமும் ஒரு மனப்பிறழ்வு நோயாக மாறியிருக்கிறது. சகமனிதனின் உரிமையை ஏற்க மறுக்கிறது. அகமணம், கலந்துண்ணாமை, சேர்ந்து வாழாமை, வேலைப்பாகுபாடு ஆகியவற்றில் இன்னமும் சாதியம் உறுதியாக உயிர்வாழ்ந்து வருகிறது. இவற்றைத் தகர்ப்பது சாதியொழிப்பின் முதலும் அடிப்படையானதுமான வேலை. இங்கு ஒவ்வொரு சாதிக்காரனையும், மொழிபேசுபவனையும் தனித்தனி இனம் என்றும் சமுதாயமென்றும் அழைத்துக்கொள்கிற இழிவான போக்கு நிலவுகிறது. இனம் என்பது உலகமனைத்திலும் உள்ள மனித இனத்தையே குறிக்கும். அனைவரும் இணைந்து வாழும் மக்கள் திரளே சமுதாயம். சாதி தனித்தனி இனமல்ல. அது கலப்பால் உருவானது. ஆதிக்கத்தையும் பிரிவினையையும் நிலைநாட்ட உருவாக்கப்பட்டது.

மிகக் குறிப்பாக வாழ்முறையில் ஒன்று போலிருக்கும் தலித் மக்களும், வன்னியர்களும் காலனிய ஆட்சியின் போதும் அதற்கு முன்னரும் வட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடிமைகளாக இருந்துள்ளனர். பார்ப்பன நிலச்சுவான்தார்களிடம் பள்ளிகளும் (வன்னியர்)அடிமைகளாக இருந்ததாக வருண சிந்தாமணி, நில ஆவணங்கள் மற்றும் காலனிய ஆட்சியாளர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. (ஆதாரம் : "தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்', ஏ.கே. காளிமுத்து, 2012, பாரதிபதிப்பகம்) வரலாற்று நோக்கில் ஆண்ட பரம்பரை என்று சொல்லி பிறரை அடிமை செய்வதில் பொருளில்லை. காலனிய ஆட்சி, மராட்டிய ஆட்சி, முகலாயர் ஆட்சி ஆகியவை தமிழகத்தில் ஏற்படுத்திய நில கையகம் மற்றும் வினியோக நடைமுறைகள் தமிழகத்தின் நிலவுடைமை தன்மைகளில் பல பெரிய மாறுதல்களை கொண்டுவந்துள்ளன. அவற்றின் நீட்சி தான் இன்று தலித் மக்களின் நிலமற்ற நிலை.

சாதிய நடைமுறைகளும் அதன் நிலைமைகளும் முற்றிலுமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஆதிக்கச் சாதிகளின் சூழ்ச்சியே சாதி. மானுட நோக்கில் சாதிக்குப் பொருளில்லை. அது போலியானது. வரலாற்றின் பக்கங்களுக்கு மக்களைத் திருப்புகிற போது இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மக்களுக்காகப் பணியாற்றுவதாகச் சொல்லும் அமைப்புகள் முதலில் வரலாற்று ஆதாரத்துடன் கூடிய உண்மைகளை சமூகத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

“மூவேந்தர், நாலுவேந்தர், வெங்காய வேந்தர் எல்லாம் சாதி வளர்த்தவரே” என்றார் தந்தை பெரியார். சாதி ஒழிப்பு குறித்து பேசும் தமது உரையொன்றில் தான் “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார். இந்த கடவுள் சாதிகாப்பாற்றும் கடவுள்; இந்த மதம் சாதி காப்பாற்றும் மதம்; இந்த அரசு சாதி காப்பாற்றும் அரசு; இந்த இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம். இந்த மொழி சாதி காப்பாற்றும் மொழி என்று தோலுரித்தார் அவர். தலித் மக்கள் இந்து மதத்தில் இருக்கும் வரை “கழுதைக்கு வாழ்க்கை பட்டால் உதைக்கு பயப்படக்கூடாது” என்ற நிலைதான். இந்து மதத்திலிருந்து முற்றிலுமாக விலகும் வரை சாதி இழிவு தொடரும். அம்பேத்கரின் அந்தத் தீர்வு நிறைவு பெற நீண்டகாலம் ஆகும் என இன்றிருக்கும் தலித் மக்களின் கருத்து நிலையும் அரசியல் நிலையும் சொல்கின்றன. அந்நிலையை எட்டும் வரை சாதியம் தன் கொடும் பணிகளை செய்யும் புள்ளிகளை கவனமாக இனம் கண்டு, அவற்றைத் தீவிரமாக முறியடிக்க வேண்டியது தான் சாதியற்ற சமூகத்தை உருவாக்க விரும்புவோருக்கு முன்னாலிருக்கும் ஒரே வழி.

Pin It