ஒற்றை மய்ய உலக அரசியலில் போரும் சமாதானமும்

‘‘அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு, ரத்தமும் தசையுமாகப் பார்க்க முயல்கிறது. உலகப் போக்கை அதன் நிர்வாண கோலத்தில் அப்படியே சித்தரிக்க விரும்புகிறது. மேலும், அதன் அனைத்து உள்ளோட்டங்களையும் பார்க்க முனைகிறது. தத்துவத்தையும் நடைமுறையையும் சீர்தூக்கிப் பார்க்க விரும்பும் இவ்வாய்வு, உலகளாவிய ரீதியில் கற்பனைகளைக் கடந்து, எதார்த்தத்தைத் தோலுரித்துக் காட்ட முயல்கிறது.''

தலித் கிறித்துவர் விடுதலையில்...

‘‘1921ஆம் ஆண்டிலிருந்தே தலித் கிறித்துவர்கள் சட்டப்பூர்வமாக ஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற்று வருகின்றனர். சென்னை மாகாணம் பிரகடனப் படுத்திய வகுப்புவாரி உரிமை ஆணையில் - தலித் கிறித்துவர்களை உள்ளடக்கிய இந்திய கிறித்துவர், ஆங்கிலேய இந்திய கிறித்துவர் அரசியல் பிரதிநிதித்துவத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், 1950ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையின் மூன்றாவது பகுதி, தலித் மக்களுக்கு உள்ள உரிமைகளை முற்றாக மறுக்கிறது.''

கல்வி, உணவு உரிமை : விமர்சனம்

‘‘கல்வி, மருத்துவம், சுகாதாரம், உணவு, நிலம் என எல்லா சமூகத் தேவைகளும், தனியார் வசம் கையளிக்கப்பட்டுவிட்ட உலகமயச் சூழலில், இந்தியா போன்ற ஜனநாயகநாடு எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதைத் தம் அரசியல் கடமைகளுள் ஒன்றெனக் கொள்ளும் என நம்புவது வேடிக்கை. நம் வளமே நமக்கு இன்னொன்றாக விற்கப்படும் சூழல் இது. குடி தண்ணீரே அநியாய விலைக்கு விற்கப்படுகிறது என்றால், உணவும் கல்வியும் எப்படி? எளியவர் வாழ தகுதியற்ற நாடாகிவிட்டது.''

அம்பேத்கரின் பெண்ணியம்

‘‘சமத்துவமற்ற சமூக சூழலை ஆய்வு செய்து, ஆண் - பெண் சமத்துவமின்மையை நீடிக்கச் செய்யும் சாதியத்தின் வேரை சாடியதன் மூலம் - அக்கால தலித் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் அவர்கள் அன்றாடம் எதிர்கொண்ட பிரச்சினைகளின் பின்புலத்தில், எவற்றை தலித் பெண்களுக்கு கற்பித்தாரோ அதுவே ‘அம்பேத்கரின் பெண்ணியம்' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. முடிந்தவரையில் அம்பேத்கரின் போராட்ட வாழ்வு கால வரிசைப்படி கூறப்பட்டுள்ளது.''

தமிழ்நாட்டில் நிலமும் சாதியும்

‘‘நிலவுடைமையில் உள்ள ஏற்றத் தாழ்வை நீக்குவதற்கு, பல நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன. நில உச்சவரம்பு சட்டத்தினால் எதிர்பார்த்த அளவு உபரி நிலம் கிடைக்கவில்லை. இந்த நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் நிலமற்ற விவசாயக் கூலிவேலை செய்கின்ற தாழ்த்தப்பட்டோர், முழுமையாகப் பயன் பெறவில்லை. எனவே, இந்த ஒடுக்கபட்ட மக்கள் போதிய அளவு பயன்பெற நிலச் சீர்திருத்தச் சட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகும்.''

இருளருனா இளக்காரமா...

‘‘நவம்பர் 2009 முதல் இறுதிவரை, நடப்பாண்டில் சங்கத்திற்குத் தெரியவந்த 51 சம்பவங்களில் 48அய் இந்நூல் விவரிக்கிறது. 33 குற்றவியல் சம்பவங்களில் மூன்று இருளர்களுக்கிடையே நடந்தது. எட்டு சம்பவங்களில் இருளர்கள், தலித்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 22, சாதி வன்கொடுமைகளாகும். இதில் இரண்டில் பாதிக்கப்பட்டவர்கள் சமரசமானார்கள். எஞ்சிய 20 சம்பவங்களில் 10 இல் மட்டுமே வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989இன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.''

Pin It