‘ஆசியா, ஆசியர்களுக்கே' என்றொரு கோட்பாடு இருக்கிறது என்று பிரதமர் எப்போதும் சொல்லிக் கொண்டே வந்துள்ளார். ஆம், காலனி ஆதிக்கத்தைப் பொருத்தமட்டிலும் அந்தக் கோட்பாடு முற்றிலும் உண்மையானதே. ஆசியா ஆசியர்களுக்காகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அது போன்ற ஒரு நிலைமையையா இன்று நாம் எதிர்நோக்குகிறோம்? இன்று ஆசியா ஒன்றாக இருக்கிறதா? எந்தப் பொருளில்? ஆசியா பிரிந்து கிடக்கிறது. தற்பொழுது அது பிரிந்துபோன ஒன்றாக இருக்கிறது. ஆசியாவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதி கம்யூனிஸ்ட்டாக இருக்கிறது. அது வேறுபட்ட வாழ்க்கைக் கோட்பாட்டையும், வேறுபட்ட அரசுக் கோட்பாட்டையும் கடைப்பிடிக்கிறது. ஆசியர்களிடையில் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? "ஆசியா ஆசியர்களுக்கே' என்று கூறுவதால் என்ன பயன்? அத்தகையது எதுவும் இருக்க முடியாது. ஆசியா ஏற்கனவே ஆசியர்களுக்கு இடையிலான போரின் மற்றும் பூசலின் நிலைக்களனாகி வருகிறது. எனவே, நாம் சுதந்திரத்தில் நம்பிக்கை வைக்கி÷றாமென்றால், சுதந்திர நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளுடன் நாம் அணி சேர்வதுதான் நல்லது.

கோவாவைப் பற்றி ஒரு வார்த்தை. கோவாவிலிருந்து அன்னியரை வெளியேறச் செய்யும் கொள்கையைப் பிரதமர் கடைப்பிடித்து வருகிறார் என்பதில் அய்யமில்லை. அது மிகவும் சரியே. அது மிகவும் ஆரோக்கியமான ஒரு கொள்கை. ஒவ்வொருவரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். நானும் அவ்வாறு ஆதரவளிக்கிறேன். ஆனால் இது தொடர்பாக ஒரு கருத்தை நான் கூற விரும்புகிறேன். போர்த்துக்கீசியர்கள் கோவாவை விட்டு வெளியேறி, அதை இந்தியா வசம் ஒப்படைக்கும் பிரச்சினையை நான் சரியாக நினைவில் கொண்டிருக்கிறேன் என்றால், வெகு முன்னதாகவே, நமது சுதந்திரத்தை நாம் பெற்றவுடனேயே, அவருடைய கவனத்திற்குக் கொண்டு வந்தேன். ஒரு தூதுக் குழுவினால் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட சில குறிப்புகள் என்னிடத்தில் உள்ளன...

இந்த விஷயத்தில் பிரதமர் தொடக்கத்திலேயே செயலூக்கமான அக்கறை எடுத்திருந்தால், ஒரு சிறிய போலிஸ் நடவடிக்கையை இந்திய அரசு எடுத்திருந்தாலே, கோவாவை நம் வசமாக்கிக் கொள்வதற்குப் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் அவர்களுக்கு எதிராக, அவர் எப்பொழுதும் குரல் எழுப்புவது மட்டுமே செய்து வந்தார். கூக்குரல் போடுவது மட்டும்தான். செயல் ஒன்றுமில்லை. இதன் விளைவாக, போர்த்துக்கீசியர்கள் எனக்குத் தெரிந்தவரையிலும் – கோவாவைச் சுற்றிப் படைகளை நிறுத்திப் பாதுகாப்பை பலப்படுத்திக் கொண்டார்கள்.

இப்பொழுது விஷயம் இதுதான் : பார்வையாளர்கள் பற்றிய விவாதம் எந்த மதிப்புடையதுமல்ல. அதனால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்பது, என்னுடைய சொந்தக் கருத்தாகும். போர்த்துக்கீசியர்கள் கோவா மக்களை நன்றாக நடத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியானால் கோவா மீதான நமது உரிமையை நாம் விட்டுவிடப் போகிறோமா? நமக்குத் தெரிந்த வரையிலும், போர்த்துக்கீசியர்கள் அவர்களுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கக் கூடும். அவர்களை முழுமையான குடிமக்களாக ஆக்கக் கூடும். இருப்பினும் கோவா மீதான நமது உரிமையை நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. அது குறித்து எவ்வித சந்தேகமும் வேண்டாம். அது இந்தியாவின் ஒரு பகுதி.

எனவே, பார்வையாளர்கள் பற்றிப் பேசுவதெல்லாம் முக்கியமான விஷயத்திற்கு அப்பாற்பட்டதாகும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக போர்த்துக்கீசியர்களுடன் நாம் பேச வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் செய்தது போல, அதே முறையில் அவர்களுடைய இறையாண்மையை நம்மிடம் அவர்கள் சரணளிக்கத் தயாராக இருக்கிறார்களா? விவாதிக்கப்பட வேண்டிய ஒரே பிரச்சினை இது மட்டுமே என்று நான் நினைக்கிறேன். சில அறிவார்ந்த தேசங்கள் போர்த்துக்கீசியர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் கெடுவாய்ப்பானதாகத் தோன்றுகிறது. திரு. சர்ச்சில் போர்த்துக்கீசியர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வருவது குறித்து நான் வருந்துகிறேன். "படை பலத்தை பயன்படுத்த வேண்டாம்' என்று அவர்கள் நம்மிடம் கூறுகிறார்கள். ஏன்? பிரதமரின் முத்தத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் போய்விடுவார்களா? ஒரு குண்டும் வெடிக்கப்படாமல் அவர்கள் போகப் போகிறார்களா?

இதுபோன்றே பிரேசில். இது குறித்து அமெரிக்காவின் கண்ணோட்டம் என்ன என்பது எனக்குத் தெரியாது. அது பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை அவர்களும்கூட போர்ச்சுக்கல் விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்ளலாம். ஏன் இவ்வாறு விஷயங்கள் நடைபெறுகின்றன என்று நான் வியப்படைந்து வந்தேன்.

இந்த நாட்டு மக்களுக்கு விருப்பப்பூர்வமாக இறையாண்மையை விட்டுக் கொடுத்த இங்கிலாந்து, அதே நிலையில் இருந்து வரும் மற்றொரு நாட்டை, அதற்கு முரணாக நடந்து கொள்ளும்படி ஏன் கேட்க வேண்டும்? இதைப் புரிந்து கொள்ளுவது அசாத்தியமாகும். பிரதமர் என்னுடைய யோசனையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் நடுநிலைமைக்கு விலையிருக்கிறது என்று நமது பிரதமருக்கு அவர்கள் பாடம் கற்பிக்க முயல்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 15, பக்கம் : 879)