கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

(கடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது)

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எத்தகைய முன்னெடுப்புகளை செய்தால், ஈழத் தமிழர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

இன்றைக்கு இருக்கிற காலகட்டத்தில், ஈழத்தின் முகாம்களில் உள்ள முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் அவரவர் வாழ்விடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். 1950இலிருந்து குறிப்பாக, 70–க்குப் பிறகு தமிழர்களுக்கு வாழ்வாதாரங்களே இல்லை. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. நான்காம் ஈழப் போர் என்பது, பொருளாதார ரீதியான போர்; சமூக ரீதியான போர்; ராணுவ ரீதியான போர். எல்லா விதமான அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஓர் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர். இந்தப் போருக்குப் பிறகு உடனே மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இல்லை. இந்த மக்கள் வீடு திரும்பினால் கூட வாழ்வாதாரங்கள் வேண்டும். பிறகு வாழ்வாதாரங்களுக்குத் தேவையான தொழிற்கூடங்கள், விளை நிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். மிகக் கடினமான சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த நிலையிலிருந்து இவர்கள் மீள முடியுமா என்று தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக தமிழர்களுக்குச் சம உரிமை வேண்டும். இலங்கை நாட்டின் ஒற்றை அரசாங்கத்தில் சம உரிமை மற்றும் அவர்களது வாழ்க்கை நிலைகள் இதெல்லாம் ஒரு நீதி கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்குமா என்று நாம் பார்க்க வேண்டும். இல்லையென்றால் ஈழத் தமிழ் மக்களுக்காக, அவர்களுடைய சமூக உரிமைகளுக்காக மற்றும் சொல்லப் போனால், அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்காகவும், அவர்களுக்கான அடிப்படை வாழ்க்கை நிலைகளுக்காகவும் நாம் உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும். அது ஈழமாகவும் இருக்கலாம்; ஈழத்திற்கு அப்பாற்பட்டும் இருக்கலாம்.

ஈழத்துடனான தொப்புள் கொடி உறவு என்பது, தண்ணீரோடு கலந்த உறவு. அந்த தண்ணீர் கடலில் நிற்கும்போது எப்பவுமே அந்த உணர்வு எனக்கு இருக்கும். நாம் இந்தக் கரையில் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு இருக்கிறபோது, அந்தக் கரையில் நம்மை சார்ந்தவர்கள் இருப்பார்கள். அந்த மாதிரியான ஓர் உறவு நமக்கு. அந்த உறவுக்கு இன்றைக்கு தமிழ் நாட்டின் நிலையிலோ, இந்திய ஜனநாயகத்தின் நிலையிலோ பெரிய மாற்றங்கள் இருந்தாலும், அந்த மாற்றங்களை தமிழ்ச் சமுதாயம் குறிப்பாக இளைஞர் சமுதாயம் மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அவர்கள் என்ன மாதிரியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

குறிப்பாகச் சொல்வதென்றால், இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் சிந்தனைகளில் மாற்றம் வேண்டும். மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்திகள் தயாராக இல்லை. தமிழக அரசியலைப் பொருத்தவரையில் ஓய்ந்த நிலை அரசியல்தான்! திராவிட இயக்கம் தன்னுடைய தரை மட்டத்தைத் தொட்டுவிட்டது. அதன் அடிநிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் கீழே போக முடியாது. இந்த நிலையிலிருந்து போக வேண்டும் என்றால், ஒரே நிலை மேல் நோக்கித்தான் போக வேண்டும். அதற்கான புதிய சக்திகள் உருவாக வேண்டும். அது நிச்சயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், ஈழத்தில் நடந்த இந்த ஒரு பெரிய போராட்டம், ஈழ மக்களோட துயரம், இதை உட்படுத்திக் கொண்டுள்ள ஓர் இளைஞர் சமுதாயம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் சக்தியாக உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. இருக்கிற திராவிட கட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியாகத் தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பேசித்தான் ஓட்டு வங்கிகளை ஆதாரமாக்க முயல்கிறார்கள். இந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையாகவே இளைஞர் சமுதாயம் ஈழ மக்களுக்காகப் பேசும் போது, தமிழகம் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. தமிழகத்தில் மாறுதல் வந்தால், இந்திய அரசியல் நிலைப்பாட்டிலும் மாறுதல் வரும்.

குறிப்பாக ஈழம், திபெத், பர்மா இந்த மூன்று விஷயங்களில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களே?

இன்றைக்குக் கறுப்பு இன விடுதலைப் போராட்டம் ஒரு நிலைக்கு வந்துள்ளது. ஒரு சுதந்திர நிலைக்கு என்று சொல்லமுடியாவிட்டாலும், அவர்களுடைய உரிமைக்காகப் போராடக்கூடிய அமைப்புகளை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட மாறுதலுக்குப் பிறகு ஓரளவுக்கு மற்ற பகுதிகளுக்கு சிந்தனைப்பூர்வமாகவும் அரசியல் சார்ந்தும் பணி செய்யக் கூடிய வாய்ப்பு அமைந்தது. திபெத் வரலாற்றுப் பூர்வமாக நம் அண்டை நாடாக இருக்கிறது. 1960 களில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய இன ஒடுக்கல் மற்றும் தேசிய ஆக்கிரமிப்பால் திடீரென ஓர் அண்டை நாடு மறைந்து, அதற்கப்பால் ஒரு புதிய நாடு அண்டை நாடாகத் தோன்றும் போது, நிச்சயமாக நமக்கு சில சங்கடங்கள் உருவாகும்.

லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் வாழ்வின் அடையாளம், வரலாறு திடீரென்று புதைக்கப்படுகிறது. இது கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய விசயம். அண்டை நாடாகவும் பண்பாட்டு ரீதியாகவும் திபெத் என்னை ஈர்த்தது. பர்மாவைப் பொருத்தமட்டில், என்னுடைய வளரும் பருவத்தில் இருந்தே நான் முன்னொருமுறை கூறியபடி, என் குடும்பத்தினர் கடல்கடந்து திரும்பி வந்த ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் – அண்டை நாடுகளில் வாழும் மற்ற இந்தியர்கள், தமிழர்களைப் பற்றிய எண்ணம், சிந்தனை, ஆர்வம் எப்போதுமே எனக்கு உண்டு. 1966–க்குப் பிறகு 70 களில் பர்மாவில் இருந்து தமிழர்களும் வெகுவாக இந்தியர்களும் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர் அல்லது அங்கிருந்து செல்லவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு மக்களாட்சி கிடையாது. 1962 இலிருந்து அங்கு லூவின் ("நியுவே டு சோசலிசம்') ராணுவ ஆட்சிதான்.

இந்தியர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டார்கள். அத்தகைய தருணத்தில் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள். அதனால் அங்கு பெரிய முதலாளியாகவும் இருக்க முடியாது. பெரிய முதலாளிகளைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. அங்குள்ள சாதாரண மக்களைப் பற்றிதான் நான் பேசுகிறேன். அந்த சாதாரண மக்கள் அங்கு சுதந்திரமற்ற ஓர் அடையாளத்தோடு வாழவேண்டிய கட்டாய சூழ்நிலை உண்டாகிறது. அதனால் திரும்பி தாயகத்திற்கு, இந்தியாவிற்கே வரவேண்டியதாகிறது. அந்த ஒரு காலகட்டத்தில் நிறைய பேரை தமிழகத்தில் நான் சந்தித்திருக்கிறேன். பர்மாவில் இருந்து வந்தவர்கள், எனக்கு ஒரு பெரிய வியப்பாகவே இருந்தனர். எதற்காக பர்மாவிற்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள்? இந்தக் காலகட்டத்தில் வேலைக்குப் போனோம், சம்பாதித்து திரும்பி வந்தோம் என்றிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாங்க போனோம்; எங்கள் உரிமைகளையெல்லாம் இழந்தோம், வாழ்வாதாரங்கள் இல்லாமல் மறுபடியும் இந்தியாவுக்கு திரும்பி வந்தோம் என்றொரு நிலை இருந்தது.

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூலமாக பர்மாவில் இந்தியர்களின் சூழ்நிலையை மட்டும் பார்க்காமல், ஜனநாயக ரீதியாகவும் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் 1988க்குப் பிறகு கிடைத்தன. குறிப்பாக, "8.8.88' என்ற இயக்கத்திற்குப் பிறகுமாணவர் இயக்கம் பர்மாவில் ஏற்பட்டது. அந்த மாணவர் இயக்கத்தில் எல்லாருமே மிகவும் இளம் பருவத்திலேயே 16, 18 வயது மாணவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மிகவும் கொடுமையான சித்ரவதை அவர்களுக்கு இழைக்கப்பட்டது. அவர்களுடைய உரிமைகளை இழந்ததோடு மட்டுமில்லாமல், அந்தப் போராட்டக் காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பல பகுதிகளில் பர்மாவினுடைய கிழக்கு மேற்கு ஆகிய பகுதிகளில் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள். ஒருபுறம் அவர்களுடைய மனித உரிமை மீறல்கள்; மறுபுறம் அங்கே கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும் இருந்தது. பல இன மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறை, பெரும்பான்மை மக்களே ஜனநாயகத்திற்காகப் போராடினார்கள். ஆக, எல்லா வகை மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஜனநாயக ரீதியாகவும், சுதந்திர ரீதியாகவும் பர்மாவின் அரசியல் அமைப்பின் பின்னணி என்னவென்றால், வளமான ஒரு பூமி, செல்வம் கொழிக்கும் ஒரு நிலப்பகுதி, கனிமவளங்கள், ஆசியாவிலேயே மிக அதிகமாக அரிசி உற்பத்தி செய்யக்கூடிய ஒரு தானிய பூமி – இத்தனைச் செல்வங்களைக் கொண்ட ஒரு நாடு, இத்தனை ஒடுக்குமுறைகளை செய்யும்போது, இது ஏதோ ஒரு முதலாளித்துவம், தேசிய அளவிலான முதலாளித்துவம், உலகளாவிய முதலாளித்துவம் இணைந்து, இந்த ஒரு ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஜனநாயகப் போராட்டம் ஒரு முக்கியமான ஒரு போராட்டமாக மட்டுமில்லாமல், இந்த ஜனநாயகப் போராட்டத்தில் பங்கேற்கின்றவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு பர்மா மிகப்பெரியதொரு சாட்சியாக இருக்கிறது.அதனுடைய சாதாரண பாமர மக்கள் எல்லாரும் அடிமட்டத்தில் வேலை செய்கிறவர்கள். எல்லாருமே அரசாங்கத்தின் கண்காணிப்பிற்குள்ளாகிற மக்களாக இருந்தார்கள். பொதுமக்கள் அனைவருக்குமே சிறைக்குள் இருப்பதாக ஓர் உணர்வு. அவர்கள் தேசமே ஒரு சிறையாக இருப்பதான ஒரு நிலைமை, எப்படி ஈழத்தின் வடக்கு, கிழக்கைச் சொல்கிறோமோ, பர்மாவும் ஒரு ராணுவ பிடிக்குள் இருக்கிற திறந்தவெளி சிறைதான்.

எங்கெல்லாம் மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அவர்கள் என்ன மொழி, என்ன இனம், என்ன பண்பாடு என்பதைவிட என்ன உரிமைகள் பறிக்கப்படுகின்றன, எந்த உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும் என்றே பார்க்க வேண்டும். பாலஸ்தீனிய மக்கள் அவர்களது வீட்டை இழந்து, நாட்டை இழந்து, சொந்த பூமியை இழந்து அகதிகளாக மாறிய பொழுது, அவர்களுக்கும் அதே அடிப்படையில்தான் நாம் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.

1947க்குப் பிறகு குறிப்பாக இஸ்ரேல் நாடு அமைக்கப்பட்ட பிறகு, யூதர்களுக்கு எதிராகக் கூறப்படும் மிகப்பெரிய கருத்து என்னவெனில், இத்தனை துன்பங்களையும் அனுபவித்த யூதர்கள், யூதர்களுடைய அமைப்பு, அவர்களுடைய தேசியப் போராட்டம் அனைத்தும் எவ்வாறு இவ்வளவு கொடுமைகளைத் திருப்பி மற்றவர்கள் மேல் செலுத்தும் அளவுக்கு அவர்கள் உருவானார்கள் என்பதுதான். ஏனெனில் இவர்களுக்கு உரிமைகளைப்பற்றி பயரீதியான உணர்வு ஏற்படுகிறது. நம்மிடம் பறித்த ஓர் உரிமையை, நாம் திரும்பப் பெற்றபின் திரும்ப இந்த உரிமைகளை இழந்து விடுவோமோ என்று அவர்களுக்கு ஓர் அச்சம் உண்டாகிறது. ஆனால் அதே உரிமை நாம் ஜனநாயக ரீதியாகப் பார்க்கும் போது, நமக்கு கிடைத்த உரிமை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும். மற்றவர்களுக்கு கிடைக்காத உரிமைகள் நமக்கு அதிகமாக கிடைத்தால் அப்படியான ஒரு ஜனநாயகத்தை நாம் கொண்டாடவே முடியாது.

இப்பொழுது பர்மாவில் காலம்தான் எல்லாவற்றிற்கும் ஒரு சரியான பதிலைச் சொல்ல வேண்டும். அதன்படி பார்த்தால், ஒரு ராணுவ ஆட்சியில் நிர்வாகப் பதவியில் வீற்றிருக்கும் முக்கியமான அய்ந்து பேர் அடங்கிய குழுவினர் இன்று முதுமை அடைந்துள்ளனர். இயற்கையைச் சார்ந்து மட்டும் நான் அரசியல் பேசவில்லை. இந்த ராணுவ ஆட்சி நிலையை அவர்கள் அடுத்த காலகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு மத்திய மற்றும் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளிடம் பணிந்து, இணைந்து செயல்பட வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அவர்களால் இந்தச் சூழ்நிலையில், மாற்றங்களை உள்வாங்கி வரும் ஜனநாயப் போராட்டத்தை தொலை தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, வெகு நாட்களுக்கு ராணுவ ஆட்சி அரசியலைக் கொண்டு செல்ல முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி. அவர்களுடைய இந்தப் போக்கு இன்னும் நான்கு அல்லது அய்ந்து ஆண்டுகளுக்குள் பலத்த எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். அவர்களுடைய சர்வாதிகாரத்திற்கு இயற்கையிலேயே ஒரு விடை உண்டு.

இப்போதுள்ள ராணுவத் தலைமைக்குப் பின் ஏற்படும் குழப்பத்தில், புதியதாக மத்திய அளவில் உள்ள தலைவர்கள் அமர்ந்து, மறுபடியும் ராணுவ ஆட்சியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அத்தகைய சூழலில் ஜனநாயகப் போராட்டமானது மிக வலிமையான நிலையை எட்டும். இப்பொழுதும் பர்மாவில் ஜனநாயகப் போராட்டம் உண்மையிலேயே வலிமையான நிலையில்தான் உள்ளது. அதனுடைய வலிமையை ராணுவத்தின் வலிமையோடு ஒப்பிடுவோமேயானால், ஜனநாயகம் என்பது மக்கள் சக்தி; ராணுவத்தின் பலம் என்பது அதன் குண்டுகளிலும் அதனுடைய வன்முறைகளிலும்தான் இருக்கும். ராணுவத்தின் வன்முறைகள் அதிமாகும்போது அது நமக்குப் பலமாகத் தெரியும். ஆனால் ஒரு தெளிவான எண்ணப் பார்வை கொண்ட அரசியலுக்கான ஜனநாயகத்தைச் சார்ந்த மாறுதல் என்பது, அதற்கான ஒரு சில தடைக்கற்கள் விலகும்போது ஒரு பெரிய குதூகலம் போல் அந்த மாறுதல் அமையும். அத்தகைய மாற்றங்களை உருவாக்கக்கூடிய அமைப்புகள் பர்மாவில் இயங்கி வருகின்றன. அடுத்த ஆண்டில் பர்மாவில் நடைபெறப் போகும் தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக இருக்குமா என்பதிலும், அந்தத் தேர்தலை ஒட்டி அமைக்கப்படும் அரசோ, அமைப்போ மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதும் அய்யமே.

பர்மாவில் தற்போதுள்ள சூழலுக்குத் தேவையõன மாறுதல் என்னவெனில், அங்கு ஜனநாயக ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகப் போராடி, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சாங் சூயியை விடுதலை செய்ய வேண்டும். அவரை விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், அவர் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்க வேண்டும். அத்தகைய ஒரு சூழலில் அந்த தேர்தலுக்குப் பர்மிய மக்களிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். இவர்களும் மக்களும் தேர்தலுக்கு வரும் முன்னே அங்குள்ள சட்ட அமைப்புகளைக் குறித்து சில வினாக்களை எழுப்பி, குறிப்பாக அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்த பின்னர் தேவையான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய மாற்றங்கள் நிகழக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

"நேஷனல் லீக் டெமாக்ரசி' என்று அழைக்கப்படுகின்ற பர்மாவின் ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பே பல இன, மொழி, பண்பாட்டு, நிலப்பரப்புகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பாகும். இதில் பல மொழி பேசுகின்ற, பல இனத்தைச் சார்ந்த குறிப்பாக அரேன், அக்சின், ஷான் என்று அழைக்கப்படுகிற பல இனத்தைச் சார்ந்தவர்கள் இருந்தாலும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் சார்பில், இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறுகின்ற ஜனநாயகப் போராட்டத்தில் ராணுவ ஆட்சியை நீக்க வேண்டும் என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் – அடுத்து வருகின்ற ஜனநாயக ஆட்சியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்று ஓர் ஒருங்கிணைந்த தேசியப் பார்வையைக் கொண்டுவர வேண்டும். பர்மியர்களுக்கு எதிராக மற்ற இன மக்களும், பர்மியர்கள் மற்ற இன மக்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதும் அங்கு நிலவி வருகிறது. வரலாற்றுப்பூர்வமாக ஒரு பண்பாட்டு முரண்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது.

சந்திப்பு : அ.செந்தில் நாராயணன்

- பேட்டி அடுத்த இதழிலும்