அம்மா சமையல் செய்கிறாள் ‘அத்தை பணம் தருவாள்', ‘அக்கா கடிதம் எழுதினாள்', ‘தங்கை பள்ளிக்கூடம் போயிருக்கிறாள்' என்று சிலர் பேசுகின்றனர். ‘செவிகைப்பச் சொற்பொருத்தல்' என்பது இச்சொல் தொடர்களைக் கேட்டு பொறுத்தலே’ என்றார் ஒருவர்.

"இச்சொல் தொடர்களில் எழுவாய், பயனிலைப் பிழை ஒன்றும் இல்லை. அம்மை, அத்தை, தமக்கை, தங்கை, என்பவை உயர் திணைப் பெண்பாற் பெயர்கள். செய்கிறாள், தருவாள், எழுதினாள், போயிருக்கிறாள் என்பவை அந்த திணைப்பாலை குறிக்கும் வினை முற்றுக்கள். ஆதலால் இவற்றில் தவறு இல்லையே!'' என்றார் மற்றொருவர்.

"அய்யா! இலக்கணப் பிழை பற்றி இங்குப் பேச வேண்டாம். பொருளைக் காண்க. திணையோ பாலோ வேண்டாம். செய்கிறாள் என்றும், இவள் என்றும், வந்தாள் என்றும், செய்கிறாள் என்றும் பேசுவது நாகரிகமா?'' என்றார் முதலில் பேசியவர்.

"ஓ! அப்படியானால், ‘அம்மா சமையல் செய்கிறார்', செய்கிறார்கள் (செய்கிறாங்க)' முதலிய சொல் தொடர்களால் பேச வேண்டுமா? ‘ஆர்', ‘ஆர்' என்னும் விகுதிகளும், ‘கள்' என்னும் விகுதியும் சேர்ந்தால்தான் நாகரிகமும் மதிப்பும் உண்டு என்று கருதுகின்றீரா? வெறும்சொற்களால் -சில விகுதிகளால் - மதிக்கும் மதிப்புத்தானா சிறந்தது? இது தானா தமிழர் நாகரிகம்?'' என்று மற்றவர் கூறினார்.

முதலில் பேசியவர் அமைதி இழந்தார். தம்மை மறந்து பேசத் தொடங்கினார். "நன்று, நன்று; சொற்களால் மதிக்கும் மதிப்பு உங்களுக்கு வேண்டாமா? பெண்ணைக் குறிக்கும் போது மட்டும் இவ்வாறு பேசுகின்றீரே! ஆணைக் குறித்து உமது கருத்து என்ன? ‘அப்பா ஊருக்குப் போகிறான்’ ‘மாமன் பணம் தருவான்’ என்று பேசுகின்றீரா? இல்லையே. ‘அப்பா ஊருக்குப் போகிறார்' அல்லது ‘போகிறார்கள்,’ ‘மாமா பணம் தருவார்' அல்லது ‘தருவார்கள்' என்று பேசுகிறீர். ‘பாதர் வந்தார்' என்று பேசுகிறீர். ‘பாதர் வந்தார்' என்று ஆங்கில மதிப்புடன் சொல்லும் வாயால் ‘மதர் வந்தாள்' என்று சொல்லுகிறீர். ‘பிரதர் சொன்னார்' என்ற வாயால் ‘சிஸ்டர் சொன்னாள்' என்கிறீர். இந்த வேறுபாடு என்ன? விகுதிகளால் மதிக்கும் மதிப்பு உம்மிடம் இல்லையா?'' என்றார்.

உடனே, மற்றவர் பரபரப்புடன் சில கருத்துக்களைக் கூறத் தொடங்கினார். "அப்படியா, ‘தமக்கை வந்தாள்' என்று சொல்லுகின்ற முறை ஒரு வகையில் ஏற்புடையது ஆகும். ஆங்கில மொழியை பாருங்கள். ஒருவனையோ ஒருத்தியையோ அவர் என்று கூறும் வழக்கம் அம்மொழியில் இல்லை. ஆணை "ஹி' (he) என்றே கூறுவர்; பெண்ணை "ஷி' (she)' என்றே கூறுவர். அந்த முறை பகுத்தறிவுக்கு உகந்தது. எனவே, "தமக்கை வந்தாள்', ‘தங்கை போனாள்' என்று பேசுவது குற்றமாகாதே! ஆனால், ‘தமக்கை வந்தது' ‘தங்கை போனது' என்று பேசுகிறீரே! அது நாகரிகம்தானா?

உம்முடைய கண்ணுக்கு பெண் உயர்திணையாகத் தெரிவதில்லையா? ‘நாய் போனது' ‘பூனை வந்தது' என்பதைப் போல், பெண் ஒருத்தியைக் குறிக்கும்போது ‘போனது, வந்தது' என்று பேசுவது தகுமா? அன்றி, பெண் உயிரில்லாத பொருளா? மரம், கல் முதலியவற்றிற்கு ஒப்பாகக் கருதுகின்றீரா? அது போனதாம். இது வந்ததாம் நல்ல பேச்சு! தமக்கையையும், தங்கையையும் சுட்டிக்காட்டி பேசும்போது என்ன சொல்கின்றீர்? அது சொன்னது. இது கேட்டது என்கிறீர். தமக்கையும், தங்கையும் அதுவும் இதுவுமா? எண்ணிப் பார்த்தால் குறை தெரியும். ‘ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம்' காண வேண்டாமா?'' என்று பேசிக் கொண்டே போனார்.
அவர் பேச்சு முடிவு பெறவில்லை. அப்பேச்சு விளக்குவது என்ன? பிற்காலத் தமிழில் பெண் பெற்ற சிறுமையை விளக்குகின்றது. ஆணை மதித்து உயர்வாகக் கூறியவர் பெண்ணை உயர்த்தாமல் விட்டது தவறில்லையா? சொல் பொருள் அமைதியில் சிறந்தது தமிழ்மொழி. அத்துறையில் உலகில் வேறொரு மொழி இதற்கு இணையாக இல்லை. இது மொழியியல் ஆராய்ச்சியாளர் அனைவரும் அறிந்த உண்மை. பெண் உரிமையைப் போற்றும் அகப்பொருள் நுட்பங்களை இலக்கண நூல்களாகவும் இனிய சுவைப் பாட்டுக்களாகவும் எடுத்துச் சொல்லும் சிறப்புடையது இச்சிறப்பான மொழியே. இத்தகைய மொழியில் பேச்சு வழக்கில் நுழைந்து இடம் பெற்ற குறை இது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்பது உண்மையே. அப்படியெனில் ஒரு நாட்டு மக்களின் உயர்ந்த நாகரிகத்துக்கு இழிவைத் தரும் ஒன்று புதியதாய்ப் புகுவதும், சிறப்பைத் தரும் ஒன்று பழையதாய்க் கழிவதும் அழகோ?

ஆணை உயர்த்தப் புகுந்த மக்கள் பெண்ணை உயர்த்தாததோடு விட்டனர். நிற்காமல், பெண்ணைத் தாழ்த்தவும் தொடங்கினர்! உயர்திணையில் பெண்பாலாக இருந்த ஒருத்தி அக்றிணையில் ஒன்றன் பாலாக ஆனாள்! அவளும் இவளும் ‘அது' ‘இது' என்றும் ‘வந்தது' ‘சொன்னது' என்றும் ஆன இவை அறிவிப்பது என்ன? பகுத்தறிவில்லாத ஒன்றை அன்றோ அக்றிணை என்று இலக்கணம் கூறுகின்றது? பெண்ணுக்குப் பகுத்தறிவு இல்லையா?

தமிழில் இக்குறை பேச்சு வழக்கில் மட்டும் உள்ளது. இலக்கணமாக எழுதுகையில் இதற்கு இடமில்லை. ஆனால், தெலுங்கு, கோண்டு இருமொழிகளிலும் ஒருத்தியை உணர்த்தும் பெண்பால் இல்லை. ஒருத்தியைக் குறிக்க அக்றிணை ஒன்றன்பாலை வழங்குகின்றனர். ஒருத்தியைக் குறிக்கும் சுட்டுப்பெயர்களையும் வினைமுற்றுக்களையும் அக்றிணையாகவே அமைத்துள்ளனர். அரசியைக் குறிக்கும்போதும் ‘ஆதி' ‘இதி' (அது, இது) என்பர்; திருமகள், கலைமகள் முதலான பெண் தெய்வங்களைக் குறிக்கும்போதும் ‘ஆதி', ‘இதி' என்று சுட்டுதல் உண்டு. எத்துணை உயர்வு பெற்ற பெண்ணையும் அக்றிணை ஒருமையாகச் சுட்டுகின்றனர். தெலுங்கில் பெண்பாலைக் குறிக்கும் பழங்கால சொற்கள் சில உள்ளன. ஆனால் அவை அருகி வழங்குகின்றன.

ஆணை அவன் என்றும், அவன் வந்தான் என்றும் கூறும் இலக்கணம் பெண்ணை அது என்றும், அது
வந்தது என்றும் கூறுவது வியப்பன்றோ? பெண்பாற் பெயர்களை அக்றிணைப் பெயர்கள் (அமஹத்) என்றே தெலுங்கு மொழியின் இலக்கணம் கூறுகின்றது. தெலுங்கு பேசும் மக்கள் பலகோடிக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் இவ்வாறு பேசுகின்றனர்; ‘அவள்' என்று தமிழில் உள்ளது போலத் தெலுங்கில் ஒரு சொல் இல்லை; ஆயினும், பெண்டிர் பலரைக் குறிக்கும்போது அவைகள் என்று சொல்லாமல், அவர்கள் என்றே வழங்குகின்றனர்.

தூதுவரும் கோடரும், ஆணாயினும் பெண்ணாயினும் விலங்காயினும் கல்லாயினும் அது என்று திணைப்பாகுபாடு இன்றியே கூறுகின்றனர். அவர் சுட்டுக்களிலும் ஆண் பெண் வேறுபாடு இல்லை. அம்மொழிகளை ஆராய வேண்டாம்.
தமிழில் அமைந்துள்ள மொழியியல் சிறப்புகளுள் திணைப் பாகுபாடும் ஒன்று. அதனைக் குறித்துக் கால்டுவெல் என்னும் அறிஞர் கூறும் கருத்து போற்றுதலுக்கு உரியது.

"திராவிட மொழிகளின் திணைப்பாகுபாடு இந்தோ அய்ரோப்பிய மொழிகளிலும் செமிடிக் மொழிகளிலும் உள்ள பாகுபாடு போல கற்பனையால் ஆகியது அல்ல. அவற்றினும் சிறந்த தத்துவ உணர்வு மிக்கது ஆகும். பகுத்தறிவு உடையவை, பகுத்தறிவு இல்லாதவை என்ற பிரிவு சிறப்பும் இன்றியமையாமையும் உடையது தானே?''

"உயிருள்ளவற்றின் பெயர்களுக்கு ஒரு பன்மை விகுதியும், உயிரில்லாதவற்றின் பெயர்களுக்கு மற்றொரு பன்மை விகுதியும் சேர்த்து வழங்குவது பாரசீகமொழி ஒன்றே. அந்த மொழி ஒன்றே திராவிட மொழிகளோடு இவ்வகையில் ஒப்புமை உடையதாகும். ஆனால் அந்த ஒப்புமை மிகச் சிறிதே. எனவே, திராவிட மொழிகளின் திணை இலக்கணம் தனிச்சிறப்புடைய ஒன்றாகும். இது அறிவும் இலக்கணமும் வளர்ந்து மேம்பட்டதன் பயன் ஆகும்.''

இக்கருத்துக்கள் திராவிட மொழிகளின் திணையிலக்கணத்தைப் போற்றுகின்றன. இது திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும் உரிய ஒன்று. ஆயினும், பிறமொழிக் கலப்பால் கன்னடம், மலையாளம் முதலியன இத்திணையிலக்கணத்தை இழந்தன. தமிழும் தெலுங்குமே இவ்விலக்கணம் உடையவனாக விளங்குகின்றன. இவற்றிலும், தெலுங்கும், பெண்ணை உயர்திணை எனக் கூற மறந்து அக்றிணையாக்கி விட்டது; இலக்கணமும் எழுதிவிட்டது. தமிழோ பேச்சு வழக்கில் அந்நோய்க்கு இடம் தந்துள்ளது.
Pin It